பூச்சி – 48

சென்ற ஆண்டு நான் வெப்சீரீஸிலேயே மூழ்கிக் கிடந்த போது மெஸையா என்ற ஒரு தொடரைப் பார்த்தேன்.  அது பற்றி யாரும் குறிப்பிடாதது எனக்கு ஒரு ஆச்சரியம்.  அந்தத் தொடரைப் பார்த்தவர்களால் அதை மறக்கவே இயலாது.  அதன் கதை அப்படி.  இயேசு கிறிஸ்து இப்போது மீண்டும் தோன்றினால் எப்படி இருக்கும் என்பதே கதை.  என்ன ஒரு கற்பனை! அதற்காகவே இந்தத் தொடரைப் பார்க்கலாம்.   அரபியில் மெஸ்ஸி மெஸ்ஸி என்றே அழைக்கிறார்கள்.  மெஸ்ஸி என்பது மெஸையா போல.  யேசுவின் அற்புதங்களையெல்லாம் கதைகளாகத்தானே படிக்கிறோம்.  ஆனால் இவர் இந்தத் தொடரில் தினமும் ஒரு அற்புதம் செய்கிறார்.  அமெரிக்க ஆட்சி அதிகார மாளிகையின் முன்னே உள்ள நீர்நிலையின் மீது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடந்து செல்கிறார்.  செத்தவர்களைப் பிழைக்க வைக்கிறார்.  அமெரிக்க அரசு இவரை இஸ்லாமியத் தீவிரவாதி என்று சிறையில் அடைத்து கொல்லப் பார்க்கிறது.  ஆனால் இவர் யேசுவைப் போல் அதையெல்லாம் தியாக உள்ளத்துடன் ஏற்றுக் கொள்வதில்லை.  சுலபமாகத் தப்பி விடுகிறார்.  அதே சமயம் மிக மிக மிக unpredictable-ஆகவும் இருக்கிறார்.  ஒரு சீஸன் தான் முடிந்திருக்கிறது.  இந்த ஆண்டு எந்த வெப்சீரீஸும் பார்க்கக் கூடாது என்று இருக்கிறேன்.  மெஸையா மட்டும் இரண்டாவது சீஸன் வந்தால் பார்க்க வேண்டும்.   

அதேபோல் The Hunters என்ற சீரீஸ்.  அமேஸான் ப்ரைம்.  பொதுவாக நான் நெட்ஃப்ளிக்ஸை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்.  ஏனென்றால், இது எல்லாமே கடல் மாதிரி.  உள்ளே இறங்கினால் இழுத்துக் கொண்டு போய் விடும். ஒரு வாசக நண்பர் நான் வெப்சீரீஸ் பற்றி எழுதுவதைப் பார்த்து விட்டு இதை சிபாரிசு செய்தார்.  பொதுவாக இப்படிப்பட்ட சிபாரிசுகள் என் ரசனைக்கு ஒத்து இருப்பதில்லை.  (கேம் ஆஃப் கார்ட்ஸ் அப்படித்தான் ஆனது) ஆனால் தெ ஹண்ட்டர்ஸ் அபாரம்.  பல சமயங்களில் கேங்வார் மாதிரி இருந்தாலும் அதில் வரும் யூதப் பிரச்சினை இதை ஒரு மறக்க முடியாத தொடராக ஆக்கி விடுகிறது.   

மற்றபடி பல நண்பர்கள் இதை அவசியம் பாருங்கள் என்று சிபாரிசு செய்யும் தொடர்களை பத்து நிமிடம் கூடப் பார்க்க முடியவில்லை.  என் ரசனை அப்படி.  ஆனால் அவ்வப்போது உலக சினிமா பார்க்க வேண்டும் என்று ஆர்வப்படுகிறேன்.  இந்த Mubi தளத்தில் சேர வேண்டும்.  சேர்ந்தால் உலக சினிமா பார்க்கலாம்.  முன்னால் ஒரு மாதம் சேர்ந்து பார்த்தேன் போல.  என் மின்னஞ்சல் முகவரி அதில் பதிந்துள்ளதால் அவ்வாறு யூகிக்க வேண்டியுள்ளது.  மீண்டும் சேர ஆவன செய்ய வேண்டும்.

”நீங்களாவது மற்றவரைப் பார்த்து நடப்பதாவது, உலகமே அழிந்து விடும்” என்றாள் காயத்ரி.  ஓரளவு சரிதான் அது.  ஸெலிகுக்கும் எனக்கும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது.  அடிப்படை வித்தியாசம்.  ஸெலிக் இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளோடு சேர்ந்து கொண்டு நாஜியாகவே மாறி விடுவான்.  அதுவரை ஜெர்மன் மொழியில் அக்ஷரம் கூடத் தெரியாதவன் படு சரளமாக ஜெர்மன் பேசுவான்.  சொன்னேனே, யாரோடு பழகுகிறானோ அவருடைய குணாதிசயங்களைப் பெற்றுக் கொள்வான்.  இங்கே விருப்பம் (desire) என்ற விஷயமும் இருக்கிறது.  என்னுடைய விருப்பம் எதிராளியை மீறிச் செல்வதல்லவா?  எனவே என்னைச் சுற்றி வியாபித்துள்ள மைலாப்பூர் அமீத் ஷாக்களோடு சேர்ந்து சுற்றுவேனே தவிர நானும் ஒரு அமீத் ஷாவாக மாறவே மாட்டேன். 

இந்தக் ’கனிந்து விட்டேன்’ விஷயத்தில் ராம்ஜியைப் பின்பற்றுவதற்கு இன்னொரு காரணம், எதிராளி எத்தனை எரிச்சலூட்டக் கூடிய விதத்தில் பேசினாலும் கனிந்து, தணிந்து பேசுவதன் காரணமாக ராம்ஜி பல நண்பர்களை வென்றெடுத்து வெற்றிப் பாதையை நோக்கிப் போவதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.  அதே சமயம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் நான் தோல்வி அடைவதோடு மன உளைச்சலும் அடைந்து, அதற்கும் ஆதரவு நாடி ராம்ஜியையே அணுகுவதையும் பார்த்து நானே நொந்து போய், என் கண் முன்னே ஒருத்தர் மனிதர்களை வென்றெடுப்பது எப்படி என்று நடத்திக் காட்டிக் கொண்டிருக்கும் போது நாம் ஏன் இப்படி வீணாய்ப் போகிறோம் என்று நினைத்து எடுத்த முடிவுதான் இந்தக் கனிந்து போதல்.  மட்டுமல்லாமல் பெண்கள் மத்தியில் வேறு கொடி கட்டிப் பறக்கிறார்.  அடிப்படைக் கல்வி இதுதான்.  அவர் கற்றுக் கொடுக்காமலேயே நானாக அவரிடம் படித்துக் கொண்டது.  ஒரு பெண் தன் புகைப்படத்தை முகநூலில் போடுவார்.  உடனே லாக் டவுன் முடிந்தது என்று சொன்னதும் டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடும் மெண்ட்டல்களைப் போல் தொள்ளாயிரத்துச் சொச்சம் பேர் வந்து லைக் போட்டு காமெண்ட்டுகள் போட்டு அதகளம் செய்வார்கள் இல்லையா, உடனே நான் “நீ இருக்கும் இடம் என்ன?  உனக்கெல்லாம் இது எதற்கு?” என்று திட்டுவேன்.  உடனே அந்தப் பெண்ணுக்கு எரிச்சலும் கோபமும் வரும்.  ஊரே பாராட்டுகிறது.  இந்த ஆளுக்குப் பார், பொறாமை வயித்தெரிச்சல் என்று.  ராம்ஜியோ அவர் பங்குக்கு ஒரு லைக் போட்டு விட்டு கூலாக நழுவி விடுவார்.  பிறகு எப்படியும் நாங்கள் பேசும்போது அந்த மங்கையரில் மாணிக்கத்தின் தலையை உருட்டாமலா இருக்கப் போகிறோம்?  ”என்ன ராம்ஜி இது, இப்படி அக்கிரமத்துக்கெல்லாம் லைக் போட்டுட்டு இருக்கீங்க?  நீங்களே இதுபோன்ற லூசுத்தனத்தை வளர்த்து விடலாமா?” என்று கேட்டால், ”நமக்கென்ன சார்?  நாம் லைக் போடறதைத்தானே அவங்க விரும்பறாங்க?  அவங்க விரும்பறதை செய்வோமே?” என்பார். 

”ஓகே, ஆனா இது தப்பில்லையா?”

“எது, லைக் போட்றதா, போட்டோ போட்றதா?”

“லைக் போட்றதுக்குத்தான காரணம் சொல்லிட்டீங்களே, போட்டோ போட்றது…”

“சார், அது ஒரு லூசுன்னா நீங்களும் ஒரு லூசு சார்.  இதைப் பத்தியெல்லாம் இவ்ளோ சீரியஸா எடுத்துக்கலாமா?” என்று ஆரம்பித்து பாலியல் குறித்த இந்தியர்களின் உளவியல் பற்றியும் voyeurism பற்றியும் அரை மணி நேரம் பேசுவார். 

”இத்தனை பேசுகிற நீங்கள் லைக் போடும்போது மட்டும் தவறாமல் ஆஜராகி விடுகிறீர்களே?” 

”சார், லூசுங்க கிட்ட லூசுங்க மாதிரிதானே நடந்துக்கணும்?”

ஆனால் அம்மணிகள் பேசும்போது ராம்ஜியின் முகபாவத்தைப் பார்க்க வேண்டுமே.  ஏதோ சாக்ரடீஸ், ஃபூக்கோ, ஜெயமோகன் எல்லாம் பேசும்போது அவர்களின் மாணாக்கர்கள் கேட்பார்களே அந்த மாதிரி கண்கள் பூக்கக் கேட்டுக் கொண்டிருப்பார்.  இப்போது சொல்லுங்கள், நான் ராம்ஜியைப் பின்பற்ற வேண்டுமா வேண்டாமா? 

ஐயோ, இதற்கு எனக்கு ராம்ஜியிடமிருந்தும் அம்மணிகளிடமிருந்தும் எத்தனை பாட்டு கிடைக்கப் போகிறதோ? 

***

என்னை அசத்தும் அளவுக்கான ஒரு மாணவரை இது வரை நான் சந்தித்ததில்லை.  பல விஷயங்களில் என்னை பிரமிக்க வைக்கும் சீனிவாசன், புவனேஸ்வரி, ஸ்ரீராம் போன்றவர்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.  சிறந்த மாணாக்கர் என்றால், நேற்று நான் கொடுத்த ஏழெட்டு இணைப்புகளில் தியாகராஜரின் நனு பாலிம்ப நடசி வாசிதிவோ கீர்த்தனையைக் கேட்டு அதில் ஆகச் சிறந்த வாசிப்பு எது என்று எனக்கு எழுதியிருக்க வேண்டும்.  ஒருவேளை முன்பே கேட்டிருக்கலாம்.  எனக்கு என்னவோ அத்தனை பேரில் மகாராஜபுரமும் பாலமுரளியும்தான் ஈடு இணையில்லாததாகத் தெரிந்தது.  அந்த ஏழெட்டு பேரின் பாடலையும் இரண்டு மூன்று முறை கேட்ட பிறகே இணைப்பைக் கொடுத்தேன்.  அந்தப் பட்டியலில் இருந்த சுதா ரகுநாதனின் பெயரை நீக்கி விட்டேன்.  எம்.எஸ்.ஸின் பெயரையும் நீக்கலாமா என யோசித்தேன்.  அவர் சிருங்கார ரசத்தையும் பக்தி ரசத்தோடு பாடுபவர்.  எனக்கு அது பிடிக்காது.  சங்கீதம் என்று வந்து விட்டால் அது எல்லா எல்லைகளையும் மீறினதாக, தகர்த்தெறிவதாக இருக்க வேண்டும்.  ஆனாலும் பிரமிக்கத்தக்க குரலினிமை கொண்டவர் எம்.எஸ்.  அதனால் அவரைச் சேர்த்தேன். 

சரி, சங்கீதத்தை விடுங்கள்.  இந்நாளைய சினிமா உலகில் ஸெலிக் என்று ஒரு படத்தைக் குறிப்பிட்டேன் அல்லவா?  உடனே நேற்று இரவே ஸெலிக்கைப் பார்த்து விட்டு எனக்கு எழுதியிருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட மாணவர் ஒருவரையே என் வாழ்நாள் பூராவும் தேடிக் கொண்டிருக்கிறேன்.  அதெல்லாம் அதிக பட்சம்.  ஸெலிக்காவது நேற்று இரவு எழுதியது.  பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு படம்.  ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது அது பற்றிக் குறிப்பிட்டும் எழுதுவேன்.  இப்போது இந்தப் பூச்சி தொடரில் கூட குறிப்பிட்டேன்.  அதைப் பார்த்தால்தான் மனிதர்கள் குறித்த என் அவநம்பிக்கையை, அசூயையைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் சொல்லி விட்டேன்.  ம்ஹும்.  யாரும் அசைவதாக இல்லை.  லூயிஸ் புனுவெல் இயக்கிய விரிதியானா (Viridiana).  சரி, அதை விடுங்கள்.  இந்த ப்ளாட்ஃபார்ம் என்ற படம் நம் கை முன்னே நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.  அதைப் பார்த்தால் என் மானுட வெறுப்பைப் புரிந்து கொள்ளலாம்.  அடப் போய்யா, லொல்லு பண்ணிக்கிட்டு.  நீயே பாத்து நீயே சொல்லு.  கேட்டுக்குவம்.  எல்லாம் ஃபாஸ்ட் ஃபூட் காலம்.  இதையெல்லாம் உடனுக்குடன் பார்த்து என்னோடு விவாதிக்கக் கூடிய ஒரு ஆத்மாவைக் கூட இதுகாறும் நான் கண்டதில்லை.  ஆனால் நான் வாழ்நாள் பூராவும் என் ஆசிரியர்களுக்கு இப்படிப்பட்ட ஐடியல் மாணவனாகவே இருந்திருக்கிறேன்.  எதையாவது குறிப்பிட்டால் அன்று இரவே அதை முடித்து விட்டு மறுநாள் பேசும்போது சொல்லி விடுவேன்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை அவர்கள் பாராட்டியதே இல்லை.  மாறாக, இவன் என்ன நம்மை மிஞ்சப் பார்க்கிறான் என்ற வன்மத்தோடேதான் பார்ப்பார்கள். 

போகட்டும்.  விரிதியானா, ப்ளாட்ஃபார்ம்.  இரண்டு படங்கள்.  விரிதியானா நிச்சயமாக ஒரு க்ளாஸிக்.  படம் எடுத்தவர் அப்படிப்பட்டவர்.  ஆனால் இரண்டுமே பேசுவது ஒரே பொருள்.  அந்தப் பொருள் என்ன என்று இப்போது பார்க்கப் போகிறோம்.  ராம் பற்றி எழுதியிருக்கிறேன்.  மகாத்மா.  அது போன்ற ஒருசில மகாத்மாக்கள் இந்த மைலாப்பூரில் உண்டு.  அவர் இரண்டு தினங்களுக்கு முன்பு காலை நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்த போது ஒரு கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் முன்பு ஒரு கூட்டம் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார்.  என்னடா இது, லாக்டவுன் சமயத்தில் இத்தனை பெரிய கூட்டம் என நினைத்து அவர்களிடம் கேட்கிறார். பார்த்தாலே தெரிகிறது, எல்லோரும் வட இந்தியர்.  எல்லோரும் ஒரிஸா.  கட்டிடத் தொழிலாளர்கள்.  அவர்கள் நின்று கொண்டிருக்கும் கட்டிடத்தில்தான் வேலை செய்கிறார்கள்.  இப்பொது லாக் டவுன் சமயத்தில் வேலை இல்லை.  பட்டினி கிடக்கிறோம்.  என்ன இது, முப்பது நாட்களாக பட்டினியா?  அம்மா உணவகத்தில் போய் சாப்பிடலாமே என்று கேட்கிறார்.  நாங்கள் மொத்தம் பதினெட்டு பேர்.  எப்படி சார் இத்தனை பேர் போய் சாப்பிடுவது?  ஒவ்வொருத்தருக்கும் பத்து ரூபாய் என்றாலும் ஒரு வேளைக்கு 180 ரூ. ஆயிற்றே?  அப்படியா, அம்மா உணவகத்தில் உணவு இலவசம் என்று கேள்விப்பட்டேனே?  இல்லை சார்.  ஓட்டலை விட ரொம்ப மலிவு.  காலை உணவு அஞ்சே ரூபா.  மதிய உணவு பத்து ரூபா.  ஆனால் அஞ்சு பத்து என்றாலும் பதினெட்டு பேருக்கு பெரிய தொகை வருமே?  ஒரு மாதமாக வேலையே இல்லை.  ஏன், உங்கள் பில்டர் உங்களுக்கு உதவி ஒன்றும் செய்யவில்லையா?  நல்ல மனிதர்தான் சார்.  ஆனாலும் அவருக்கும் என்ன கஷ்டமோ தெரியவில்லையே?  அவருக்கே வேலை இல்லாமல் எங்களுக்கு எப்படி உதவி செய்வார்? சரி, நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள்?  ரொட்டியா, சாவலா?  நாங்கள் ஒரிஸாதான் சார்.  உங்களைப் போல் சாவல்தான் சார்.  சாவலும் டாலும் இருந்தாலே போதும் சார். 

உடனே ராமும் நண்பரும் போய் ஒரு மூட்டை அரிசியும் பத்து கிலோ துவரம் பருப்பும் அஞ்சு கிலோ தக்காளியும் உப்பும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்.  ராமுக்கு 1500 ரூ. செலவு.  இதைக் கேள்விப்பட்ட போது அந்த பில்டர் பெயர் என்ன என்று கேட்டேன்.  தென் சென்னையின் பிரபலமான நிறுவனம்.  அந்த நிறுவனத் தலைவர் என் வாசகர்.   அவருக்கு போன் போட்டுக் கேட்டேன்.  கடந்த இரண்டு மாதமாக ஒரு பைசா குறைக்காமல் முழுச் சம்பளமும் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், அடுத்த மாதம் வேலை ஆரம்பித்து விடும் என்றும், தேவைப்பட்டால் வீட்டின் மதிப்பில் இதைச் சேர்த்தாலும் சேர்ப்பேனே தவிர தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்க மாட்டேன் என்றும் சொன்னார்.   அது நான் எதிர்பார்த்ததுதான்.  அவரே ஒரு philanthropist.  பிறகு அம்மா உணவகம் பற்றியும் விசாரித்தேன்.  ஊரடங்கு அமலில் உள்ள மே 17 வரை அம்மா உணவகங்களில் உணவு இலவசம்தான்.  இலவசம் என்பதால் தரம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக அதிகாரிகளும் முதல் மந்திரியும் திடீர் திடீரென்று வந்து சோதனையிடுகிறார்கள்.  என் வீட்டுக்கு எதிரிலேயே ஒரு அம்மா உணவகம் உள்ளது.  ஆக, அந்தத் தொழிலாளர்கள் இரண்டு பொய்களைச் சொல்லியிருக்கிறார்கள்.  சரி, பணமாகக் கொடுக்காத வரை நல்லதுதான்.  ஆனால் பில்டர் பணமாகத்தான் கொடுக்கிறார்.  கார்ல் மார்க்ஸ் தோல்வியுற்ற இடம் இது.  என்னுடைய இந்தக் கருத்தை விமர்சிக்க விரும்பும் நண்பர்கள் தயவுசெய்து நான் மேலே குறிப்பிட்ட இரண்டு படங்களையும் பார்த்து விட்டு செய்யவும்.  இல்லையேல் அவர்களோடு நான் விவாதிக்க மாட்டேன்.

எங்கள் குடியிருப்பில் மூன்று வாட்ச்மேன்களும் ஒரு மேனேஜரும் உண்டு.  அவர்களில் ஒருவர் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வருபவர் என்பதால் அவருக்குக் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் உணவு கொடுப்பது அவந்திகாவின் வழக்கம்.  இது தவிர காலையும் மாலையும் தேநீர்.  சிற்றுண்டிச் சாலைகள் மூடியிருப்பதால் இந்த ஏற்பாடு.  அவந்திகாவின் அடிப்படையே தவறு.   நானாக இருந்தால் தர மாட்டேன்.  ஏனென்றால், வீட்டுக்கு எதிரிலேயே அம்மா உணவகம் உள்ளது.  சரி, தானத்திலேயே சிறந்தது அன்ன தானம் என்பார்கள்.  ஆனால் அதற்கான காலமெல்லாம் காலாவதியாகி விட்டது என்பது என் கட்சி.  இப்படியெல்லாம் எழுதுகிறேனே தவிர நடைமுறை வேறு.  எப்போதும் இரவு உணவு எனக்கு ஒரே ஒரு ஆப்பிள்தான்.  அதை மீறிப் பசித்தால் அரை டம்ளர் பசும்பால்.  அதிகம் குடித்தால் வயிற்று வலி வரும்.  ஆனால் நேற்று சாம்பாரும், ரசமும் எனக்குப் பிடித்த மாதிரி இருந்ததால் இரவு உணவுக்கு சோறும் சாம்பாரும் சாப்பிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.  போய்ப் பார்த்தபோது சோறு இல்லை.  கீழே வாட்ச்மேனுக்குக் கொடுத்தாகி விட்டது.  அவந்திகா பதற்றமடைந்தாள்.  சே சே, அடுத்தவரின் பசி ஆற்றுவதுதான் முதல் கடமை என்று சொல்லி விட்டு வழக்கம் போல் ஆப்பிளை சாப்பிட்டேன்.  ஆனால் நாம் ஒரு சின்ன உதவி – அதுவும் நமக்காக இல்லை, பூனைகளுக்காகக் கேட்டால் அதை அளிக்க மறுக்கிறார்கள். 

ஆம், அந்த சிந்தாதிரிப்பேட்டை வாட்ச்மேனிடம் அவந்திகாவும் நானும் ஒரே ஒரு உதவி கேட்டோம்.  அவருக்கு எந்த வேலையும் இல்லை.  கேட் திறக்கும் வேலை கூட இல்லை.  யாரும் உள்ளே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  எப்போதும் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதுதான் வேலை.  நான் இரண்டு வேளை கீழே போய் பூனைகளுக்கு சாப்பாடு போடுகிறேன்.  ஒருநாள் அங்கே இருந்த தண்ணீர்ப் பாத்திரத்தை எட்டிப் பார்த்து விட்டு ஒரு பூனை பயந்தடித்துக் கொண்டு ஓடியது.  பார்த்தால் ஒரே பாசி.  இலை தழை.  தெருப்பூனைகள் கூட அதைக் குடிக்க பயந்தன.  அந்தப் பார்த்திரத்தில் தினமும் தண்ணீர் மாற்றுங்கள் என்பதுதான் நானும் அவந்திகாவும் கேட்ட உதவி.  இன்றைய நாள் வரை ஒரு நாள் கூட அதில் அந்த வாட்ச்மேன் தண்ணீர் மாற்றியது இல்லை.  அவந்திகாதான் கீழே இறங்கி இறங்கிப் போய் தண்ணீர் மாற்றுகிறாள்.  இத்தனைக்கும் கீழேயே தண்ணீர்க் குழாயும் இருக்கிறது.  ஐம்பது முறை சொல்லியாகி விட்டது.  இது மட்டும் அல்ல.  நாம் எது சொன்னாலும் கேட்பதில்லை.  ஆனால் அந்த மனிதரை ஏய் வாட்ச்மேன் என்று மிரட்டும் மற்ற வீட்டுக்காரர்களைக் கண்டால் ஒரே குரலுக்குக் குழைந்து குழைந்து ஓடுகிறார்.  ஒருநாள் என்னைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்தார்.  அவர் கலெக்டராகப் பணி புரிகிறார்.  மகாத்மா.  ஆதலால், சிவப்பு விளக்குக் காரில் வராமல் சாதா காரில் வந்திருக்கிறார்.  இந்த வாட்ச்மேன் அவர் காரை வாசலிலேயே மறித்து காரை எங்கேயாவது வெளியே நிறுத்தி விட்டு நடந்து வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.  என் பெயரைச் சொல்லியும் இந்த மரியாதை.  என் பக்கத்து வீட்டுக்காரரின் பெயரைச் சொல்லியிருந்தால் காரை உள்ளே விட்டிருப்பார்.  இல்லையென்றால், பக்கத்து வீட்டுக்காரர் இவரை ஓத்தாம் பாட்டு விட்டிருப்பார்.  இது எனக்கு எப்படித் தெரியும் என்றால், நண்பர் என்னிடம் சொல்லவில்லை.  காரை எங்கே விட்டீர்கள் என்று நானாகக் கேட்டேன்.  என்ன பிரச்சினை என்றால், இவர்களையெல்லாம் சமமாகக் கருதி தோள் மேல் கை போட்டால் டேய் ங்கோத்தா நீ நம்ம ஆள்தானேடா, உனக்கு என்ன சுன்னிக்குடா மரியாதை என்கிறார்கள்.  அவ்வளவுதான் பிரச்சினை.  முதலில் அவந்திகாவை வா போ என்று அழைத்தார்கள்.  அவள் ஒரு பாட்டு விட்டதும்தான் மரியாதைக்கு மாறியது.  நான் எப்படியென்றால், பேசவே மாட்டேன்.  வாயையே திறக்க மாட்டேன்.  திறந்தால்தானே பிரச்சினை?

ராகவன் ஆட்டோக்காரர் போன்றவர்களையெல்லாம் ஒருமையிலேயே விளிப்பார்.  இது உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் பிராமணீயம் அது இது என்று திட்டித் திட்டி அப்புறம் அதை அவர் விட்டு விட்டார்.  விட்டதும் அவருக்குக் கிடைத்த முதல் மரியாதை என்ன தெரியுமா?  அவர்களின்  குடியிருப்பு வாட்ச்மேனை ஆரம்பத்திலிருந்து வாங்க போங்க என்றே அழைத்திருக்கிறார்.  ஏய் வாட்ச்மேன் எல்லாம் இல்லை.  பெயர்தான்.  அந்த வாட்ச்மேனும் முதியவர்.  ஒருநாள் ராகவனும் குடும்பமும் வெளியூர் போய் விட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.  காலையில் வாக்கிங் செல்லும் போது ராகவனின் எதிரே வந்த வாட்ச்மேனிடம், “ஏங்க, எனக்குத் தபால் ஏதாவது வந்துதா?” என்று கேட்க, அதற்கு அந்த வாட்ச்மேன் எகத்தாளமான குரலில் “ஒனக்கு எந்தப் போஸ்டாபீஸ்ல காலங்காத்தால ஆர்ற மணிக்கு தொறந்து வச்சிக்கிறான்?” என்றாராம்.  உடனே ராகவன், “நேத்து முந்தாநேத்தெல்லாம் வந்துதான்னு கேட்டேன்” என்று சொல்ல, ”இருந்தா சொல்ல மாட்டனா?” என்று இன்னொரு எகத்தாள பதில்.    இதுவே ‘ஏய் வாட்ச்மேன்’ என்று அழைப்பவர்களிடம் இந்த பதில் வராது.  ஒன்னும் வர்ல சார் என்ற பதில்தான் வரும்.   

இதற்காகத்தான் நான் உங்களை விரிதியானா, ப்ளாட்ஃபார்ம் ஆகிய இரண்டு படங்களையும் பார்க்கச் சொல்கிறேன்.  ஆனால் நான் என்ன கத்தினாலும் கேட்காத நண்பர்கள் இருந்தாலும் முகம் தெரியாத வாசகர்கள் பலர் படு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.  நேற்று இரவு பனிரண்டு மணிக்கு எழுதி பதிவேற்றம் செய்த கட்டுரைக்கு சரியாக அரை மணி நேரத்தில் பதில் வந்துள்ளது.  அதுவும் மொழிபெயர்ப்போடு.  பெயர் தெரியவில்லை.  ஃபேக் ஐடி என்று அவரே குறிப்பிடுகிறார்.  பெண்ணாக இருக்க வேண்டும்.  பெண்கள்தான் அதிகம் ஃபேக் ஐடி பயன்படுத்துகிறார்கள்.  மொழிபெயர்ப்புக்குள் போகும் முன்னே அந்தக் கீர்த்தனையை இன்னும் ஒருமுறை பார்த்துக் கொள்வோம்.

  பல்லவி

நனு பாலிம்ப நடசி வச்சிதிவோ நா ப்ராணநாத

அனுபல்லவி

வனஜ நயன மோமுனு ஜூசுட ஜீவனமனி

நெனருன மனசு மர்மமு தெலிசி

சரணம்

சுரபதி  நீல  மணினிப  தனுவுதோ                                                    உரமுன  முத்யபு  சருல  சயமுதோ 
கரமுன  சர  கோதண்ட  காந்திதோ                                                  தரணி  தனயதோ  த்யாகராஜார்ச்சித

மொழிபெயர்ப்பு:

என்னைக் காப்பாற்றவா இத்தனை தூரம் நடந்து வந்தாய்?

எனது ஆன்மாவில் உறைந்திருக்கும் நாதனே…

தாமரைக் கண்ணா… உன் முகம் பார்த்துக்கொண்டே இருப்பதுதான் என் வாழ்க்கை என்பது மட்டுமே என் மனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பது உனக்கா தெரியாது…

இந்த்ர நீலக்கல்லின் ஒளியைப் போன்ற தேஜஸ் உடலெங்கும் உடையவனே… (சுரபதி என்றால் இந்த்ரன்தானே?  சுரர் என்பது தேவர்தான். அ சுரர் என்பது அவர்களின் எதிரி. சைவம்… அ-சைவம் போல. அசைவத்துக்கு நேரடிப் பெயர் இல்லை பாருங்கள். இதேதான் சுரர். அசுரர். அப்படியென்றால் வெஜ், வெண்மை, கடவுள், இதற்கெல்லாம்தான் நேரடிப் பெயர்களா என்றெல்லாம் தோன்றுகிறது. உங்களைப்போல் சஞ்சாரம் செய்ய விரும்பவில்லை…)

முத்துக்களால் கோர்க்கப்பட்ட பல மாலைகளை மார்பில் அணிந்திருப்பவனே…

கையில் விளங்கும் கோதண்டத்தின் பிரகாசத்துடன் இருப்பவனே…

இந்தத் தரணியின் புதல்வி உன்னுடன் இருக்க… (சீதை)

என்னைக் காப்பாற்றவா இத்தனை தூரம் நடந்து வந்தாய்? 

இன்னொரு நண்பரின் மொழிபெயர்ப்பு.  வெங்கடேசன்.  தஞ்சாவூர்.  புரோகிதராக இருக்கிறார். 

அண்ணா நலமா?

வெகுநாட்கள் கழித்து தொடர்பு கொள்கிறேன். தினமும் உங்களது எழுத்துக்களை படித்து கொண்டுதான் இருக்கிறேன். குறிப்பாக “பூச்சி”யை.

த்யாகராஜ கீர்த்தனை பொருள் இந்த அல்பனின் ஞானத்திற்குத் தெரிந்த வகையில்.

பல்லவி

எனை ஆட்கொள்ள வந்தாயோ என் உயிர்நாதா

அனுபல்லவி

தாமரைக் கண்களைக் கொண்ட முகத்தைக் காண்பதே வாழ்க்கையென்று

என் மனதில் இருக்கும் மர்மத்தை உணர்ந்து

சரணம்

தேவர்களின் தலைவா நீலமணி போன்ற உடலுடன்

மார்பில் திகழும் முத்துமாலையுடன்

கைகளில் திகழும் கோதண்ட ஒளிர்வுடன்

பூமி புத்ரிகையுடன் 

த்யாகராஜனால் அர்ச்சிக்கப்பட்ட

***

பாலகிருஷ்ணனின் கடிதம் கீழே.  மிக சுவாரசியமான கடிதம். 

அன்பு மகள் சீதாலட்சுமி மணமகளாகத் தலைகுனிந்த வண்ணம் நிற்கிறாள்.  மாப்பிள்ளையாக திரு குப்புஸ்வாமி ஐயர்.

தன் மகளை மிகவும் பாசமாக வளர்த்து வந்த

தந்தை கண்கலங்க நிற்கிறார்.  அவரது முதல் மனைவி பார்வதி

ஐந்து வருடங்கள்தான் அவருடன் வாழ்ந்திருக்கிறார்.  பின் இரண்டாம் தாரமாக முதல் மனைவியின் தங்கை கமலாம்பாள் அவரைக் கைப்பிடித்தாள்.  அவளது மகள்தான் இந்த சீதாலட்சுமி. சரி,  யார் மணமகளின் தந்தை எனத் தெரிந்ததா?  அவர்தான் நாதோபாசன ஸ்ரீ தியாகபிரும்மம் என்று போற்றப்படும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள்.

மகள் சீதாலட்சுமி திருமணத்திற்குப் பல இசைக் கலைஞர்களும் சுற்றத்தாரும் வந்திருக்கின்றனர்.  பலர் திருமணப் பரிசாகப் பல பொருட்களைத் தருகின்றனர்.  மணமகளின் தந்தையோ எல்லா பொருட்களையும் ஸ்ரீராமருக்கே அர்ப்பிக்கின்றார்.

அந்த நேரத்தில் மிக வேகமாக தியாகராஜரின் சீடர் மண்டபத்துக்குள் நுழைகிறார். அவர் கையில் மிகப் பெரிய படம் ஒன்று இருக்கிறது.

“வாருங்கள்  வெங்கட்ரமணா?  ஏன் இப்படி மிகவும் களைப்புடன்  வந்திருக்கிறீர்கள்?”

திரு வெங்கட்ரமணர் தன்னிடமிருந்த அழகான படத்தைத் திருமணப் பரிசாக அவரிடம் கொடுத்தபடியே

“சுவாமி.  நான் வாலாஜாப்பேட்டையிலிருந்து நடந்தே வருகிறேன். நம்ம சீதாலட்சுமி 

கல்யாணம் இல்லையா? அதைப் பார்க்கவே ஓடோடி வந்தேன்” என்றபடியே கைகளைக் கூப்புகிறார்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் அந்தப் பரிசைப் பிரிக்கிறார்.  உள்ளே மிக அழகான கோதண்ட ராமரின் படம் அவர் மனதைக் கொள்ளை கொள்கிறது, அதை அப்படியே தன் இதயத்தோடு அணைத்துக்கொள்கிறார்.

“என் சுந்தர ராமனல்லவா நீ.   பத்மலோசனனே மார்பில் முத்துமாலை அசைய

உன் கையிலே இருக்கும் கோதணடம்தான் என்ன அழகு” என்று சொல்லியபடியே தன்னையே மறக்கிறார்.  அங்கே இசை  பிறக்கிறது. தென்றல் போல் வீசத் தொடங்குகிறது.

மோகன ராகம் அப்படியே பிரவாகமாய் வர உற்சாகம் மிக அங்கு ஒரு கீர்த்தனை பக்திப் பெருக்குடன் வருகிறது

“நனு பாலிம்ப நடசி வச்சிதிவோ

நா பிராண நாதா”

என்னைப் பரிபாலிக்க நடந்து வந்தாயா? என் பிராண நாதனே !

“வனஜ  நயனா  மோமுனு ஜூசுடஜி

வனமநி நெனருன மனஸு மர்மமுதெலிஸி

ஸுரபதி  நீலமணி நிபதனுவுதோ

உரமுந முத்யபுஸருல சயமுதோ

சுரமுன ஸ்ர கோதணட காம்திதோ

தரணி தநயதோ தியாக ராஜார்சித  {நனு பாலிம்ப}

எனக்குத்தெரிந்த வரை இதனது பொருளை எழுத

முயல்கிறேன்.

தாமரைக்கண்களை உடைய ராமா!  உன் திருமுகத்தைப் பார்த்திருப்பதே என் வாழ்க்கை என நினைத்திருக்கிறேன் அந்த ரகஸியத்தைத் தெரிந்துகொண்டு  என்னை ரக்ஷிக்க நடந்தே வந்தனையோ என் பிராண நாதா.

இந்திர நீலமணியைப்போல்  உன் சரீரம் பிரகாசிக்க 

உன் கையில் பெரிய வில்லும்

அதனுடன் அம்புகளும் உன் அழகை அதிகரிக்க 

உன் திருமார்பில் முத்துமாலைகள் அசைந்தாட

தரணியின் புதல்வியான சீதாதேவியுடன்

என்னைக் காப்பாற்ற நடந்து வந்தனையோ

ஹே பிராண நாதா!”

பின் குறிப்பு:

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பாடிய பல கீர்த்தனைகள் சம்பவங்களுடன் ஒட்டி வருகின்றன.  என் சகோதரன் திரு.வெங்கட் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பற்றி வொர்க் ஷாப் நடத்தி

வருகிறார். அதில் பல சுவையான சம்பவங்களும்

தெரிய வருகின்றன. மஹாராஷ்ட்ராவில் மும்பையிலும் வேறு பல இடங்களிலும்  இதை நடத்துவதால்  மக்களுக்கு  இவரைப் போன்ற இசைமேதைகளைப்பற்றி அறிய வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது காலம் சென்ற திருமதி டி கே பட்டம்மாளைப் பற்றி workshop ஆரம்பித்திருக்கிறார்.  மேனாட்டு இசை ஹிந்துஸ்தானி இசை கர்நாடக இசை என்று மூன்றிலும் தேர்ச்சி பெற்று இதிலும்   workshop சுமார் 500க்கும் மேல் நடத்தி விட்டார்.  எனக்கும் அதைப்பார்க்கும் சம்பவம் கிடைத்து. அதனால்தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். என் சகோதரனுக்கு நன்றி.

பாலகிருஷ்ணன்

இன்னொரு மொழிபெயர்ப்பு:

பல்லவி
நனு பாலிம்ப நட3சி வச்சிதிவோ
நா ப்ராண 1நாத2

அனுபல்லவி
வனஜ நயன 2மோமுனு ஜூசுட
ஜீவனமனி நெனருன மனஸு மர்மமு தெலிஸி (நனு)

சரணம்
3ஸுர பதி நீல மணி நிப4 தனுவுதோ
உரமுன முத்யபு ஸருல சயமுதோ
கரமுன ஸ1ர கோத3ண்ட3 காந்திதோ
4ரணி தனயதோ த்யாக3ராஜார்சித (நனு)



பொருள்சுருக்கம்
எனதுயிர்த் தலைவா! தியாகராசனால் தொழப் பெற்றோனே!

  • என்னைப் பேணுதற்கென நடந்து வந்தனையோ?
  • கமலக் கண்களுடைய (உனது) வதனத்தினைக் காண்பதே பிழைப்பெனும், எனதுள்ளத்தின் மருமத்தினைத் தெரிந்து, கனிவுடன், என்னைப் பேணுதற்கென நடந்து வந்தனையோ?
  • இந்திர நீலமணி நிகர் உடலுடனும்,
  • மார்பில் முத்துச் சரத் திரள்களுடனும்,
  • கரங்களில் அம்புகள் மற்றும் கோதண்டத்தின் ஒளியுடனும்,
  • புவிமகளுடனும்,
  • என்னைப் பேணுதற்கென நடந்து வந்தனையோ?


பதம் பிரித்தல்பொருள்
பல்லவி
நனு/ பாலிம்ப/ நட3சி/ வச்சிதிவோ/
என்னை/ பேணுதற்கென/ நடந்து/ வந்தனையோ/

நா/ ப்ராண/ நாத2/
எனது/ உயிர்/ தலைவா/



அனுபல்லவி
வனஜ/ நயன/ மோமுனு/ ஜூசுட/
கமல/ கண்களுடைய/ (உனது) வதனத்தினை/ காண்பதே/

ஜீவனமு/-அனி/ நெனருன/ மனஸு/ மர்மமு/ தெலிஸி/ (நனு)
பிழைப்பு/ எனும்/ கனிவுடன்/ (எனது) உள்ளத்தின்/ மருமத்தினை/ தெரிந்து/ என்னை…



சரணம்
ஸுர/ பதி/ நீல/ மணி/ நிப4/ தனுவுதோ/
வானோர்/ தலைவன் (இந்திர)/ நீல/ மணி/ நிகர்/ உடலுடனும்/

உரமுன/ முத்யபு/ ஸருல/ சயமுதோ/
மார்பில்/ முத்து/ சர/ திரள்களுடனும்/

கரமுன/ ஸ1ர/ கோத3ண்ட3/ காந்திதோ/
கரங்களில்/ அம்புகள்/ (மற்றும்) கோதண்டத்தின்/ ஒளியுடனும்/

4ரணி/ தனயதோ/ த்யாக3ராஜ/-அர்சித/ (நனு)
புவி/ மகளுடனும்/ தியாகராசனால்/ தொழப் பெற்றோனே/ என்னை..


அந்த சம்பவத்தைத் திரும்ப உங்கள் மனதில் நிகழ்த்திப் பாருங்கள்.  தியாகராஜரின் மகள் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.  பிரதம சிஷ்யனைக் காணோம்.  தேடிக் கொண்டிருக்கும்போதே விரைந்து வருகிறார் வேங்கட ரமணர்.  கையில் பெரிய படம்.  கோதண்ட ராமனின் படம்.  ஏன் தாமதம் எனக் கேட்க, வாலாஜாபேட்டையிலிருந்து நடந்து வருவதாக பதில்.  வாலாஜாபேட்டையிலிருந்து திருவையாறு. அப்படியானால் தியாகப் பிரம்மத்துக்குத் தன் பிராண நாதன் ஸ்ரீராமனே இத்தனை தூரம் நடந்து வந்ததாகத்தானே அர்த்தம்?  உடனே பிறந்தது கீர்த்தனை. 

அன்றைய தினம் அது மட்டும் நடக்கவில்லை.  வேங்கட ரமணரை தியாகய்யர் அதுவரை பாகவதர் என அழைத்ததில்லை.  ஆனால் அன்றிலிருந்து அவர பாகவதரே என அழைக்க ஆரம்பிக்கிறார்.  என்ன நடந்தது என்றால், இவர் வேங்கட ரமணரைத் தேடிக் கொண்டிருக்கும் போதே ஒரு சிறுவன் ஓடி வந்து இவரிடம் “வேங்கட ரமண பாகவதர் வாலாஜா பேட்டையிலிருந்து நடந்து வந்து கொண்டிருக்கிறார்.  இதோ கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டிருக்கிறான்.  அந்தப் பையனை அவர் திருவையாற்றில் பார்த்ததே இல்லை.  மட்டுமல்லாமல் வேங்கட ரமணன் நடந்து வரும் விஷயம் அவனுக்கு எப்படித் தெரியும்?  வேங்கட ரமணர் வந்து நடந்து வந்ததைச் சொன்னதும் தியாகப் பிரம்மத்துக்கு வந்தது யார் எனப் புரிந்து விட்டது.  “என்ன ஸ்வாமி, இதுவரை என்னை பாகவதர் என்று தாங்கள் அழைத்ததே இல்லையே, இன்று எப்படி?” என்று வேங்கட ரமணர் கேட்ட போது தியாகய்யர் சொன்னார், “உம்முடைய பிராண நாதன் கிருஷ்ணன் தான் சிறுவன் ரூபத்தில் வந்து பாகவதர் வருகிறார் என்று சொன்னான்.  கிருஷ்ண பரமாத்மாவே உம்மை பாகவதர் என்று சொன்ன பிறகு நான் சொல்லாமல் இருக்கலாமா?”

தியாகராஜர் அவர் காலத்தில் ஒரு பெரும் கலகக்காரராகவே இருந்திருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.  அவர் நினைத்தால் ரொம்ப சௌகர்யமாக வாழ்ந்திருக்கலாம்.  அப்போதெல்லாம் பிராமணர்களுக்கு மன்னர்கள் நிலங்களை வழங்கினர்.  அவை பிரம்மதேயம் என்று வழங்கப்பட்டன.  (பிரம்ம-பிராமணர்; தேயம் – நிலம்) பல நூறு வேலிகளை பிராமணர்களுக்கு வழங்கினர் மன்னர்.  தியாகப் பிரம்மம் சரஃபோஜி மன்னரின் அரண்மனையில் பாடியிருந்தால் அவருக்கும் பிரம்மதேயம் கிடைத்திருக்கும்.  ஆனால் அதைப் புறக்கணித்து விட்டு உஞ்சவிருத்தி செய்து ராம சேவை செய்து வந்தார் தியாகய்யர்.  இது கலகமா இல்லையா?  இதற்குப் பெயர் பிச்சையா? 

நடிகரின் குரலில்தான் என்ன ஒரு ஏளனம், நக்கல்?  நான் என்ன தியாகய்யர் மாதிரி தஞ்சாவூர் தெருக்களில் பாடி பிச்சையா எடுத்துக் கொண்டிருக்கிறேன்?  இதே போல் இவர் மொஸார்ட் பற்றிப் பேச முடியுமா?  பேசுவாரா?  அல்லது, மேற்கத்திய நாடுகளில் ஒரு புத்திஜீவி இப்படிப் பேசுவானா?  அங்கே மொஸார்ட் என்பவன் வழிபாட்டுக்குரிய இசை மேதை.  ஒரு ஆள் கூட மொஸார்ட்டை இப்படிப் பேசி விட்டு அங்கே நடமாட முடியாது.  ஆனால் இங்கே உள்ள சங்கீத விற்பன்னர்க, பிராமணர்கள் கமலின் இந்த ஆணவப் பேச்சைக் கண்டு கொள்ளவே இல்லை.  காரணம், அவர்களுக்கே தியாகய்யர் பெயர் தெரியாது.  அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இசை ஞானியின் பெயர்.  அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? 

போகட்டும்.  சரஃபோஜி மன்னரையே பகைத்துக் கொண்ட தன் தம்பியின் செயல் தியாகய்யரின் மூத்த சகோதரருக்குப் பிடிக்கவில்லை.  பிதுரார்ஜிதமாக வந்த வீட்டையே பாகம் பிரித்துக் கொண்டு போய் விட்டார்.  தன் கொள்கைகளின் காரணமாக, தியாகய்யர் தன் ராஜ்ஜியத்தின் மன்னரையே பகைத்துக் கொண்டது மட்டும் அல்லாமல் தன் சொந்த அண்ணனையும் பகைத்துக் கொண்டார்.  ஆனாலும் தான் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை.  அப்படி என்ன கொள்கை?  ராமனை மட்டுமே பாடுவேன்.  அவர் என்ன சினிமாவுக்கா பாட்டு எழுதிக் கொண்டிருந்தார்?  அல்லது, அவர் காலத்திய ட்ராமாக்களுக்கு எழுதினாரா?  சங்கீதத்தில் மேற்கத்திய மேதைகள் செய்த அதே அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.   துளிக்கூட சமரசங்கள் இல்லாமல் வாழ்ந்தார்.  தன் காலத்திய பிராமணர்களின் ஆஷாடபூதித்தனங்களை வெறுத்தார்.  (அண்ணனே உதாரணம்).  அவருடைய தெலுங்குக் கீர்த்தனைகள் மிகச் சாதாரண மனிதனின் மொழியில் அமைந்திருந்தன.  மகா பெரிய உண்மைகளை மிகச் சாதாரண வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.  அதனால்தான் அவர் தெருக்களிலே பாடினார்.  கிட்டத்தட்ட தெருப்பாடகராகவே இருந்திருக்கிறார் என்று சொல்லலாம்.  எளிய மக்கள் கொடுக்கும் தானத்தைக் கையேந்திப் பெற்றார்.  இதெல்லாம் அவர் காலத்திய திருவையாறு பிராமணர்களுக்கு உவப்பானதாக இல்லை.  உதாரணமாக, பிராமணர்களின் ஜோதிடப் பைத்தியத்தை நிராகரித்தார். 

அவரது இந்தக் கீர்த்தனையைப் பாருங்கள்:

கிரஹ பலமு ஏமி ஸ்ரீ

ராமானுக்ரஹ பலமே பலமு

க்ரஹ பலமு ஏமி தேஜோ மய

விக்ரஹமுனு த்யானிஞ்சு வாரிகி நவக்ரஹ

க்ரஹ பீடல பஞ்ச பாபமுலனா

க்ரஹமுலு கல காமாதிரிபுல

நிக்ரஹமு ஜேயு ஹரினி பஜிஞ்சு

த்யாகராஜுனிகி ரஸிகாக்ரேஸருலகு க்ரஹ

பொருள்:

கிரகங்கள் என்ன செய்யும்

ஸ்ரீராமனின் அனுக்ரஹமே பலம்

கிரஹங்களின் ஏது வலிமை? ஒளிமயமான

ராமனின் திருவுருவத்தைத் தியானிப்போருக்கு ஒன்பது

கிரஹங்களின் வலிமை எம்மாத்திரம்?

கிரஹங்களின் பீடைகளை, பஞ்ச பாதகங்களை

விட்டகலாத, காமம் க்ரோதம் முதலான உட்பகைவர்களை

அழியச் செய்யும் ஹரியினைத் தொழும்

இந்தத் தியாகராஜனையும் ரசிகரில் சிறந்தோரையும்

கிரஹங்கள் என்ன செய்யும்?

ஸ்ரீராமனின் அனுக்ரஹமே அவர்களுக்கு பலம்.  

இப்படியெல்லாம் பாடியவரை மற்ற பிராமணர்களுக்கு எப்படிப் பிடித்திருக்கும்?  அநேகமாக தியாகய்யர் இந்தக் கீர்த்தனையைத் தன் அண்ணனை நோக்கித்தான் பாடியிருப்பார் என்று நினைக்கிறேன்.  ராஜா சர்ஃபோஜியே உன்னை அழைத்தும் போகாமல் இப்படித் தெருக்களில் பிச்சை எடுத்துத் திரிகிறாயே, உனக்கு ஏதோ கிரஹம் சரியில்லை என்று சொன்ன அண்ணனுக்காகத்தான் இந்தக் கீர்த்தனை. 

தஞ்சாவூர் சரஃபோஜி மன்னரின் சேவகர்கள் பெரும் பரிசுப் பொருட்களுடன் திருவையாறு வந்துள்ளார்கள்.  தியாகய்யரிடம் மன்னரைப் பற்றி தஞ்சை அரண்மனைக்கு வந்து பாட வேண்டுமெனவும் இந்தப் பரிசுப் பொருட்களை ஏற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கின்றனர்.  அப்போது தியாகய்யர் தன் மனதைப் பார்த்து வினவுகிறார்.

செல்வம் சுகம் தருமோ அன்றி

ராமனின் சன்னிதி சேவை சுகமோ

உண்மையைச் சொல் மனமே!

தயிரும் பாலும் வெண்ணையும் ருசியோ

அல்லது

தாசரதியின் தியானம் பஜனையென்னும் அமுதம் ருசியோ

செல்வம் சுகம் தருமோ அன்றி

ராமனின் சன்னிதி சேவை சுகமோ

உண்மையைச் சொல் மனமே!

மனவொடுக்கம் மன அமைதி எனும் கங்கா ஸ்நானம் சுகமோ

அருவருப்பான துர்விஷயங்களெனும் கிணற்று நீராடல் சுகமோ

மமதையில் கட்டுண்ட மனிதர்களைப் புகழ்வது சுகமோ

தூய சிந்தையுள்ள தியாகராஜனால் போற்றப்படுபவனின் கீர்த்தனை சுகமோ

செல்வம் சுகம் தருமோ அன்றி

ராமனின் சன்னிதி சேவை சுகமோ

உண்மையைச் சொல் மனமே!

(தூய சிந்தை என்று மொழிபெயர்த்த வார்த்தையின் மூலம்: சுமதி.  சு-மதி.  தூய்மையான மனம்)

இந்தக் கீர்த்தனையை கல்யாணி ராகத்தில் பாடியிருக்கிறார் தியாகய்யர்.  காரணம், கல்யாணி ராகம்தான் அச்சத்தைப் போக்குவது.  மாமன்னனின் சேவகன் தன் முன்னே நின்று கொண்டிருக்கிறான்.  மாபெரும் அதிகாரத்தை மறுதலிக்க வேண்டும்.  அதை விட பயங்கரம், செல்வம்.  மனதைக் கேட்கிறார், உண்மையைச் சொல் மனமே, செல்வம் சுகமா?  ராமநாமம் சுகமா?  அதுவும் எந்த நிலையிலிருந்து கேட்கிறார்?  அன்றைன்றைக்கு உஞ்ச விருத்தி செய்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும்.  ஒவ்வொரு நாளும் ராம பஜனை செய்து கொண்டே தெருக்களில் பிச்சை எடுத்து வர வேண்டும்.  நாளைக்கென்று எதுவுமே சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது.  அப்படிப்பட்ட நிலையில் ஒரு ராஜாவின் பரிசுப் பொருட்களையே மறுதலிக்கிறார்.  மனதைப் பார்த்துக் கேட்கிறார்.  சொல் மனமே, செல்வம் சுகமா, தியானம் சுகமா?  எப்பேர்ப்பட்ட தருணம்!

அச்சத்தை நீக்கக் கூடிய கல்யாணி ராகத்தைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்த போது பாபநாசம் சிவனின் சிதம்பரம் என மனம் கனிந்து என்ற பாடல் நினைவு வந்தது.  ஜனன மரண பயம் ஒழிந்திடும் என்று பாட சிவன் கல்யாணி ராகத்தைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.  இந்தப் பாடலை ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடியிருக்கும் இணைப்பைக் கீழே கொடுத்திருக்கிறேன்.  தமிழ்நாட்டின் சேரிக் குழந்தைகளுக்குக் கர்னாடக இசை கற்பித்துப் பிரபலமாகும் சிலரை விட ராமகிருஷ்ணன் மூர்த்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறார்.   

சிதம்பரம் என மனம் கனிந்திட

ஜபம் செய்யக் கொடிய ஜனன மரண பயம் ஒழிந்திடும் சிவ

பதஞ்சலியும் புலிப்பதம் திகழ் முனியும்

நிதம் பரவ அருள் நிறைந்த

உருவோடு கதம்ப மலரணி குழலோடு திகழ்

சிவகாமி மருவும் ஸ்வாமியை எனது கனகசபேசனை நடேசனை தொழுது சிவ

சரணம்

மோகாந்தகரம் அதில் முழுகி எழுந்தின்னாளும் மோசம் போகாதே என்றும்

இந்தப் பாடலை முழுவதுமாகக் கொடுக்கலாம் என்று இணையத்தில் தேடிய போது தமிழில் இந்த அற்புதமான பாடலே கிடைக்கவில்லை என்பது எத்தனை பெரிய துரதிர்ஷ்டம்.  தமிழ் வளர்க்கிறார்களாம்.  இந்தப் பாடலை யாரோ ஒரு புண்ணியவான் ஆங்கில லிபியில் கொடுத்திருக்கிறார்.  அந்த வகையில் அவரைப் பாராட்டத்தான் வேண்டும்,  குறைந்த பட்சம் அதையாவது செய்திருக்கிறாரே என்று.  யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai