அப்படி இப்படி பூச்சி ஐம்பதை நெருங்கி விட்டோம். இப்போது ஒரு இலக்கியப் பிஸாது. நாகூர் பாஷையில் பிஸாது என்றால் கிசுகிசு. ஒரு அன்பர். அவர் எழுதிய சிறுகதைத் தொகுதியைக் கொடுத்தார். ஓ, அதற்கு முன் ஒரு விஷயம். ”சாரு கிசுகிசு எழுத லாயக்கில்லை; இன்னாரின் வீட்டு முகவரியைத் தவிர மற்ற எல்லா விபரங்களையும் கொடுத்து விடுகிறார்” என்பது மாதிரி ஜெயமோகன் முன்பு எழுதியிருந்தார். அதையே சவாலாக எடுத்துக் கொண்டு இதை எழுதுகிறேன். இப்போது சம்பந்தப்பட்ட ஆசாமிகளாலேயே இதைக் கண்டு பிடிக்க முடியாது பாருங்கள். தொகுதியைக் கொடுத்து அதைப் படித்து விடுங்கள் படித்து விடுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அது பரவாயில்லை. அந்தத் தொகுதி உங்களுக்குப் பிடிக்கும். உங்களுக்குத்தான் பிடிக்கும். ஏனென்றால், உங்களிடமிருந்துதான் நான் எழுதவே கற்றுக் கொண்டேன். நான் உங்களை சந்தித்ததில்லையே தவிர நான் உங்கள் பள்ளியைச் சேர்ந்தவன். ஆ. ஊ. ஆ. ஊ. இதை சீனியிடம் போய்ச் சொன்ன போது அவர் வழக்கம்போல் “அட போங்க சாரு, அவன் ஒரு ஜெயமோகன் ஆளு. உங்க கிட்ட வந்து சும்மா உடான்ஸ் வுட்டிருக்கான்” என்று புறங்கையால் தள்ளி விட்டார். நானும் சரிதான், சீனி ஒரு cynic தானே, அவர் வேறு எப்படிச் சொல்வார் என்று விட்டு விட்டேன். சீனி சொல்வது பூராவும் பின்னால் பலிக்கும் என்பது அனுபவம். ஆனால் அந்தச் சமயத்தில் சீனி ஒரு cynic என்று நினைப்பதுதான் எனக்கு வசதி என்பதால் அப்படியே நினைத்துக் கொள்வேன். கொஞ்ச நாள் கழித்துப் படித்தேன். சிறப்பாக இருந்தது. என்னுடைய எழுத்துச் சாயல் ஒன்றும் இல்லை. அந்தத் தொகுதியை ஒருவர் சாருவின் ஒரு எழுத்தைக் கூடப் படிக்காமலே எழுதி விட முடியும். சமீபத்தில் கொரோனா பற்றி அவர் எழுதிய பதிவு ஒன்றை மீண்டும் படிக்க வேண்டி முகநூல் பக்கத்தில் அவர் பதிவுகளைப் புரட்டினேன். என்ன ஒரு அதிர்ச்சி. ஒரு ஐம்பது பதிவுகளைப் படித்திருப்பேன். ஐம்பதில் நாற்பது பதிவுகளில் ஜெயமோகன் பற்றிய ஏதாவது ஒரு குறிப்பு. இன்று ஜெயமோகன் எழுதிய சிறுகதையில்… ஜெயமோகன் சொல்வது போல… நான் ஜெயமோகனோடு பேசிக் கொண்டிருந்த போது… அடப் பாவி. அப்புறம் ஏண்டா என்னிடம் வந்து ஏதோ நீ சாருவின் தற்கொலைப் படை மாதிரி பேசினாய்? உங்களிடமிருந்துதான் எழுதவே கற்றுக் கொண்டேன், ஆ, ஊ, ஆ, ஊ. என்னய்யா இது? இன்னும் ஆர்வம் அதிகமாக இன்னும் இன்னும் படித்தேன். ம்ஹும். ஒன்றில் கூட என் பெயரே கிடையாது. சாருவுக்கு என்ன ஒரு மலிவான புத்தி என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை. இங்கே கமல்ஹாசனே என்னைப் பற்றிப் பேசினாலும் அதிக பட்சம் 25000 பிரதிதான் விற்கும். எனவே யாருமே அறியாத இந்தச் சிறு பாலகன் என் பெயரைக் குறிப்பிட்டு எனக்கு என்ன ஆகப் போகிறது? ஆனால், வார்த்தைக்கு வார்த்தை ஜெயமோகனைக் குறிப்பிடும் இவர் என் பெயரை ஒருமுறை கூட இவர் வாழ்வில் குறிப்பிட்டிருப்பாரா? நிச்சயம் இல்லை. அப்புறம் ஏன் நேரில் பார்த்தால் அந்தப் பசப்பு வார்த்தைகள்? இதற்கிடையில் இன்னொரு அதிர்ச்சி. அந்த ஐம்பது பதிவுகளிலும் என் வலது கரமாய் விளங்கும் ஒரு நண்பர் லைக் போட்டிருக்கிறார். அடப் பாவிகளா. இந்த ஃபேஸ்புக் என்பதே மாபெரும் புதிர்வட்டப் பாதை போல் இருக்கிறதே! ஆக, என் வலது கரமே ஜெயமோகனின் ஸ்லீப்பர் செல்லா? ஓ, நானுமே ஜெயமோகனின் ஸ்லீப்பர் செல்லா? அப்படியும் இருக்கலாமோ? இல்லாவிட்டால் எப்படி அவர் ஏப்ரல் 20-ஆம் தேதி தியாகய்யரின் நனு பாலிம்ப எழுத நானும் ஒரு வாரம் கழித்து அதே நனு பாலிம்பவை எழுதுவேன்? அதுவும் அவர் எழுதிய கதையைப் படிக்காமலே? இன்னமும் படிக்கவில்லை. எல்லாம் ஏதோ மலையாள மாந்த்ரீகம் மாதிரி அல்லவா தெரிகிறது? எந்திரன் படத்தில் ரஜினி ஆயிரம் ரஜினியாகத் தெரிவது போல் இப்போது எனக்கு எல்லோருமே ஜெயமோகனாகத் தெரிகிறார்கள், நான் உட்பட! வேடிக்கையை விடுங்கள். எனக்கு செல்வேந்திரம் போன்ற நண்பர்களை மிகவும் பிடித்திருக்கிறது. அது போன்ற நண்பர்கள் தெளிவாக இருக்கிறார்கள். என் ரசனை ஜெயமோகனின் புனைவுலகம் சார்ந்ததுதான். சாருவின் புனைவுலகம் எனக்கு மிகவும் அந்நியமானது. ஆனால் அவர் கட்டுரைகள் பிடிக்கும். இது சரி. வெளிப்படையானது. அதை விட்டுவிட்டு “நீங்கள்தான் நான், நான் தான் நீங்கள்” என்று என்னிடம் நேரில் வசனம் பேசி விட்டு ஜெயமோகனின் வாசகராக இருக்கும் பொய்மைதான் எரிச்சலூட்டுகிறது.