சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இன்னும் ஒருசில விஷயங்கள். வெகுளியாக இருந்து கொண்டு நாம் செய்யும் சில காரியங்கள் உண்மையில் அடுத்தவரை மிகவும் பாதிக்கக் கூடியதாக, அடுத்தவரின் வெளியில் அத்துமீறுவதாக இருந்து விடுகிறது. சுருக்கமாகச் சொன்னால், rudeness. சீனியுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் இந்த வெளிச்சம் எனக்குக் கிடைத்தது. ஒரு இளம் எழுத்தாளர் சீனியைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்த போது அவர் எழுதிய புத்தகம் ஒன்றைப் படிக்கச் சொல்லி சொல்லியிருக்கிறார். இதில் என்ன தப்பு என்றுதான் உங்களுக்கும் எனக்கும் தோன்றும். இதைத்தான் rudeness என்கிறேன். சீனி சென்னை பாஷையில் சொன்னதை நான் இங்கே மொழிபெயர்க்கிறேன். “நான் இதுவரை இருபது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒன்றைக் கூட இவர் படித்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது. இவரை நான் அதையெல்லாம் படியுங்கள் என்று ஒரு வார்த்தை சொன்னதில்லை. இவர் இதுவரை எழுதியிருக்கும் ஒரே ஒரு புத்தகத்தை நான் படிக்க வேண்டும் என்கிறார். எப்படி இருக்கிறது பாருங்கள்!”
இதைத்தான் அராஜகம் என்கிறேன். நான் அசோகமித்திரன் வீட்டுக்கும் முத்துசாமி வீட்டுக்கும் பலமுறை சென்றிருக்கிறேன். அதுவும் அசோகமித்திரன் வீட்டுக்கு அடிக்கடி. ஒரு முறை கூட என் நாவல்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டதில்லை. புத்தகங்களையும் எடுத்துச் சென்று கொடுத்ததில்லை. அப்படிச் செய்வது அவரது அந்தரங்க வெளியில் நான் அத்துமீறுவதாகும் என்றே நினைக்கிறேன். அதனால் என் எழுத்து பற்றியோ, புத்தகங்கள் பற்றியோ நான் பிரஸ்தாபித்ததே இல்லை. ஆனால் ஒரு பிரபலஸ்தர் தன்னுடைய புத்தகத்தை அவருக்கு அனுப்பி டார்ச்சர் கொடுப்பதாக அவர் என்னிடம் புலம்பியிருக்கிறார். வாரம் ஒருமுறை போன் செய்து படித்து விட்டீர்களா என்று வேறு கேட்கிறாராம். எத்தனை முறை இல்லை என்றே பதில் சொல்வது. அதனால் அதைப் படித்துத் தொலைத்தேன். (அந்தக் கருமத்தை என்று சொன்னாரோ?) அவர் மேஜையிலேயே அவர் குறிப்பிடும் புத்தகம் அதை எழுதியவரின் பெரீய படத்துடன் இருந்தது. சிறுகதைத் தொகுதி. பிரபலமாக விளங்குபவர்களுக்கு இப்படியெல்லாம் விபரீத ஆசை ஏற்படும் இல்லையா? சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை ஏற்பட்டு, நயன் தாராவை ஹீரோயினாக மடக்க முயற்சிக்க, நயன் தாரா எங்கோ க்ரீன்லாந்துக்குத் தப்பி ஓட என்னென்னவோ கதையெல்லாம் நடந்ததே, அந்த மாதிரி அந்தப் பிரபலத்துக்கும் சிறுகதை எழுத ஆசை வந்து விட்டது போல, நண்பர் கமல்ஹாசனே கவிதை எழுதும் போது நாம் சிறுகதை எழுதினால் என்ன என்று தோன்றியிருக்கலாம். அதை அசோகமித்திரனுக்கு அனுப்பித்தான் இந்த டார்ச்சர். அசோகமித்திரனின் இடத்தில் புதுமைப்பித்தனோ சுந்தர ராமசாமியோ இருந்திருந்தால் நடப்பதே வேறு. அசோகமித்திரன் பாவம், ஏழைப் பிள்ளையார் கோவில் குருக்கள் மாதிரி. பிரபலத்தின் டார்ச்சர் தாங்க முடியாமல் படித்திருக்கிறார். இந்த இடம் வந்ததும் நிறுத்தி விட்டார். கேட்டுக் கொண்டிருந்த எனக்குத் தாங்க முடியாத ஆர்வம். ஏனென்றால், பிரபலமும் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அசடும் இல்லை. நவீன இலக்கியத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறது. அதனுடைய துறையில் சாதனை படைத்ததும் கூட. அசோகமித்திரனோ கதையை அதோடு நிறுத்தி விட்டார். என்னுடைய ஆர்வத்தைக் கண்டு கொள்ளவே இல்லை. நான் வாங்கிக் கொண்டு போயிருந்த மிளகாய் பஜ்ஜியைக் கடித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்த அழகிய சிங்கரின் முகத்தில் புன்னகை. அவருக்குக் கதையின் முடிவு ஏற்கனவே தெரியும் போல. அப்புறம் சார் என்றேன். என்ன அப்புறம் என்றார் ஒன்றும் தெரியாதது போல.
”கதையைப் படிச்சிங்க. அப்புறம்?”
“நீங்க வேற ரவி. நம்ம தலையெழுத்தையெல்லாம் பிட்டுப் பிட்டுச் சொல்லணுமா. அந்தக் கண்றாவிக் கதையெல்லாம் நன்னா இருந்ததுன்னு சொல்லி வைச்சேன். வேறெ என்ன பண்றது சொல்லுங்கோ?”
“கரெக்ட்தான் சார்.”
இப்போது கதை சொல்வதில் அசோகமித்திரனுக்கு ஆர்வம் வந்து விட்டது.
“அப்றம் என்ன ஆச்சு தெரியுமோ?”
நான் ஆர்வத்துடன் பார்த்தேன். அழகிய சிங்கரின் முகத்தில் அதே புன்சிரிப்பு.
”அவர் விகடன்ல எழுதினார். இன்ன மாதிரி அசோகமித்திரனே என் கதைகளைப் படிச்சிட்டு இன்ன மாதிரி பாராட்டினார், அது இது… கஷ்டகாலம். இவர் இருக்கற உசரத்துக்கு நம்ம பாராட்டெல்லாம் எதுக்கு?”
“எங்களுக்கெல்லாம் நீங்கதானே உசரம். அதனால இருக்கலாம்.”
“என்ன உசரமோ கிசரமோ போ. நீதான் சொல்றே. அப்றம் நீ எழுதின அந்த எக்ஸைலோ கிக்ஸைலோ அதைப் படிச்சேன். ஆமா. என்னப்பா இது. அதைத் தூக்கித் தூக்கி கையே சுளுக்கிண்டுடுத்து. ஒனக்கு ஜெயமோகனுக்கெல்லாம் என்ன பழக்கம் இது. தலகாணி தலகாணியா எழுதறேள். ஒனக்கும் அவனுக்கும்தான் தாயாதிச் சண்டை இல்லியா? ஆனா இதுல மட்டும் ஒன்னாயிட்றேள். அவன் ஆயிரம்னா நீ இந்தா பிடி ஆயிரத்தைந்நூறுங்க்கிறேன். ஆனா அவன் இப்போ வெண்முரசுலே லட்சத்தைத் தொட்ருவான் போல்ருக்கே. ஐயோ, எப்படித்தான் எழுதறேளோ. ம்… என்னமோ…”
மற்றபடி எப்படி இருந்தது அது இது என்ற பேச்சே கிடையாது. அப்படியே கேட்டாலும் தஞ்சாவூர் பிராணனிடமிருந்து எப்படி வருமோ அப்படித்தான் வரும். அசோகமித்திரனின் பூர்வீகம் பலருக்கும் தெரியாது. தஞ்சாவூர் மாவட்டம். அந்த ஊரை நினைத்தாலே கசப்புதான் மிஞ்சுகிறது என்றார் ஒருமுறை. சிறுவயதில் அந்த ஊரில் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்.
அடடா, எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து விட்டோம். சமீபத்தில் செல்வேந்திரனிடம் இந்த நல்ல குணத்தைக் கண்டேன். அவருடைய ஒரு புத்தகத்தை எனக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். வெறுமனே சாரு நிவாதிதாவுக்கு என்று போடாமல் அவர் எழுதியிருந்த ஒரு குறிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இதற்கு முன்பும் இரண்டு மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார் போல. அதில் ஒன்று பயணப் புத்தகம். அதன் ஒரு பகுதிகளை முகநூலில் படித்து விட்டு அதைக் கிண்டிலில் வாங்கினேன். இல்லாவிட்டாலும் வாங்கியிருப்பேன். பயணப் புத்தகம் என்றால் யார் எழுதியதாக இருந்தாலும் வாங்கி விடுவேன். இந்த நிலையில் எனக்கு சமர்ப்பணம் செய்திருக்கும் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று செல்வேந்திரனிடம் கேட்டேன். அப்போது அவர், “நான் உங்களுக்கு அனுப்பாததற்குக் காரணம், உங்கள் நேரத்தை இதற்கெல்லாம் செலவு செய்யச் சொல்லிக் கேட்கக் கூடாது என்பதனால்தான்” என்றார். அப்போது செல்வேந்திரனிடம் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். நான் ஏற்கனவே அந்த விஷயத்தை நடைமுறையில் வைத்திருக்கிறேன் என்றாலும் கூட, ஒரு கருத்து என்ற அளவில் மிக விளக்கமாக அவர் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டேன். மூத்தோரிடம் அடக்கம் வேண்டும். இதுகாறும் என் பழக்கத்தினால் செய்து வந்து கொண்டிருந்த ஒரு விஷயத்துக்கு தத்துவார்த்தரீதியாக விளக்கம் கிடைத்தது.
அதற்காக யாருக்கும் யாரும் புத்தகம் கொடுக்கக் கூடாது என்று சொல்வதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இதில் இருக்கும் சாராம்சமான விஷயம் புரிய வேண்டும். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னால் லக்ஷ்மி சரவணகுமார் என் வீட்டுக்கு வந்து அவருடைய உப்பு நாய்கள் புத்தகத்தைக் கொடுத்தார். படித்து விட்டுத் திட்டினேன். இத்தனை நல்ல புத்தகத்தை எழுதிய நீங்கள் இது வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் ஏன் என்னிடம் கொடுக்கவில்லை என்று திட்டினேன். உங்களுக்கே தெரிந்திருக்கும் என்று நினைத்தேன் சாரு என்றார். பிறகு கானகன், கொமோரா, ரூஹ் எல்லாம் கொடுத்தார். கானகன் படித்து விட்டேன். கொமோரா இன்னும் படிக்கவில்லை. படித்தவை பற்றி கூட்டங்களிலும் பேசினேன். இப்படி நடக்கலாம். அல்லாமல், ஏதோ ஒரு விழாவில் பார்த்து என் புத்தகத்தைப் படீங்க என்பது, ஊருக்குப் போயிருக்கும் போது தன் புத்தகங்களைக் கொடுப்பது எல்லாம் பயங்கரம். அத்தனை புத்தகங்களை வயதான ஒரு எழுத்தாளர் பொதி சுமப்பது போல் சுமந்து கொண்டு வர வேண்டும். உலக மகா அராஜகம் என்றால் அதுதான். அதை விட அந்த எழுத்தாளரின் வீட்டுக்கே நீங்கள் தபாலில் அனுப்பி வைக்கலாம். உதாரணமாக, நான் பாரிஸ் போகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பாரிஸில் உள்ள பத்து எழுத்தாளர்களும் தங்களுடைய இரண்டு இரண்டு புத்தகங்களை என்னிடம் கொடுத்தால் அந்த இருபது புத்தகங்களையும் நான் தூக்கிக் கொண்டு சென்னை வர வேண்டும். என்னதான் இழுக்கும் பெட்டி என்றாலும் தூக்குவதும் இறக்குவதும் சிரமம்தான் இல்லையா? ஒருமுறை ஒரு கப்பலின் மேல் தளத்தில் ஏற வேண்டியிருந்த போது என்னால் என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஏணியில் ஏற முடியாமல் போனது. பெட்டியைத் திறந்து அதில் இருந்த பத்து இருபது புத்தகங்களைத் தூக்கிக் கடலில் எறிந்தேன். புத்தகம் கொடுத்தவர்களின் வயது 30. என் வயது அப்போது 60.
இவ்வளவு எழுதுகிறேனே தவிர நானும் ஒன்றும் புத்திசாலி இல்லை. என் 25 ஆண்டுக் கால நண்பர் ஒருவர். (நான் தான் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறேன்; அவர் அப்படி நினைக்கவில்லை என்று பிற்பாடு தெரிந்தது.) அவரை வெளிநாட்டில் நடந்த ஒரு இலக்கியச் சந்திப்பில் சந்தித்தேன். மிக அன்பாகப் பேசிக் கொண்டிருந்தார். (எல்லா எழுத்தாளர்களுமே அப்படித்தான்; நேரில் மிக அன்பாகப் பேசுவார்கள் என்பதை அப்போது மறந்து போனேன்.) பேச்சினூடே அவர் என்னுடைய நாவல்களில் ஒன்றைக் கூட படித்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அப்போது எனக்குத் தெரியாதது, அவர் அப்படிப் படிக்காதது அவரது தெரிவு என்பது. அவரது அன்பில் திளைத்த நான் “ஊருக்குத் திரும்பியதும் என் நாவல்களை அனுப்பி வைக்கிறேன்” என்றேன். அவரும் ‘அதைப் படிப்பதை விட எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்?’ என்ற தொனியுடனும் உடல் மொழியுடனும் “ஆஹா, உடனே அனுப்பி வையுங்கள்” என்றார். வந்த கையுடன் ராஸ லீலா, ஸீரோ டிகிரி, எக்ஸைல் ஆகிய மூன்றையும் பார்சல் செய்து அனுப்பி வைத்தேன். ஒரு வாரம் ஆயிற்று. எந்த சத்தமும் இல்லை. இன்னொரு வாரமும் பார்த்து விட்டு, தயக்கத்துடன் போன் செய்து, புத்தக பார்சல் வந்ததா? மெதுவாகப் படியுங்கள், அதற்காக போன் செய்யவில்லை, பார்சல் வந்ததா என்று தெரிந்து கொள்ளவே போன் பண்ணினேன் என்றேன். ஓ, வந்தது சாரூ என்று அட்டகாசமான குரலில் சொன்னார். மூன்றே வார்த்தைகள்தான். அதற்கு மேல் இல்லை. அப்புறம் இன்று வரை ஒரு போன் இல்லை. நான்கு ஆண்டுகள் ஆயிற்று. அநேகமாக இன்னொரு முறை வெளிநாட்டில் நடக்கும் இலக்கியச் சந்திப்பில் சந்தித்துக் கொள்வோம். என்னைப் பார்ப்பதற்காகவே தவம் கிடந்தது போன்ற அன்பான குரலில் பேசுவார். நிச்சயமாக நான் அவர் பக்கமே மூஞ்சியைக் கூடத் திருப்ப மாட்டேன். அவரைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ள மாட்டேன். படிக்கவெல்லாம் வேண்டாம். ஒரு அடிப்படை நாகரிகம் தெரிய வேண்டாமா? பார்சல் கிடைத்தது என்று கூடவா ஒரு போன் பண்ணக் கூடாது? விஷயம் என்னவென்றால், என்னை ஒரு எழுத்தாளன் என்றே கருதாத ஒரு எழுத்தாளர் கூட்டம் தமிழில் இருக்கிறது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் அவர் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. ஏனென்றால், இணையத்தில் ஏதோ ஒரு இடத்தில் என்னைத் திட்டி அவர் ஆறு ஏழு பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதியிருப்பதை சமீபத்தில்தான் படித்தேன். அக்கட்டுரையில் என்ன உள்ளது, நம்மிடம் ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளாலாமே, கற்றுக் கொள்ளலாமே என்று ஆர்வமாகப் படித்தேன். கடைசியில் பார்த்தால், எல்லாம் வசை. கெட்ட வார்த்தை வசை என்றால் வெளிப்படையாகத் தெரிந்து விடும் என்று, ஜாலக்மாலக்காக திட்டு. இவருக்கு என்னா தெரியும்? இதுதான் கட்டுரையின் சாரமே. எனக்கு ஒன்றும் தெரியாது என்றுதான் எனக்கே தெரியுமே ஐயா. அதற்காக ஒரு கட்டுரையா எழுதி நிரூபிக்க வேண்டும்? என்னிடம் கேட்டிருந்தால் நானே சொல்லியிருப்பேனே, எனக்கு ஒன்றும் தெரியாது என்று? ”நம்ம கூட இருந்தவன் இவ்ளோ ஒசரம் போய்ட்டானே” என்ற அரிப்பைத் தவிர அந்தக் கட்டுரையில் வேறு எதுவுமே இல்லை. இவர்களெல்லாம் “உயரம்” என்று எதைச் சொல்கிறார்கள் என்று வேறு புரியவில்லை. பிராபல்யம்தான் உயரமா? அப்படிப் பார்த்தால் நம்முடைய விபரீத ராஜ யோகக்காரர் பெருமாள் முருகனைத்தான் சொல்ல வேண்டும்.
தஸ்தயேவ்ஸ்கி எழுதிய A Nasty Story என்ற கதையைப் படித்தீர்களானால் நாம் எப்படி வெகுளியாக, நல்ல பிள்ளையாக, ரொம்ப சாதாரணமாக, மரியாதையின் நிமித்தம் செய்யும் ஒரு காரியம் மற்றவர்களுக்கு உயிர் ஹானியாக மாறிப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதையெல்லாம் சுட்டிக் காட்டினால் நான்தான் வக்கிரம் பிடித்த ஆள் என்ற பட்டத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
***
நான் அடிக்கடி புலம்பிக் கொண்டிருந்தேன் இல்லையா, நான் எதைப் பற்றியாவது குறிப்பு கொடுத்தால் அதைப் படியுங்கள், பாருங்கள் என்று சொன்னால் யாருமே அதைப் பின்பற்றிச் செல்வதில்லை என்று. அப்படியெல்லாம் இல்லை என்று லக்ஷ்மி சரவணகுமார் எழுதியிருக்கிறார். அவரது முகநூல் பதிவில் விரிதியானா (Viridiana) படம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் – யதார்த்தம் நாம் நம்ப மறுத்தாலும் குரூரமானதே என்ற குறிப்புடன். இதெல்லாம் ஏன் என் முகநூல் பக்கத்தில் தெரிய மாட்டேன் என்கிறது என்று முகநூல் எக்ஸ்பெர்ட்டான என் வலது கை நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர் அப்பொப்பொ நீங்க லைக் போடணும் என்றார். அப்படியானால் வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டேன். விரிதியானா பற்றி அடிக்கடி குறிப்பிடக் காரணம், எல்லா எழுத்தாளர்களையும் போல் நான் ஏழைகளின் அன்பன் அல்லன். எப்படி நான் பெண்களின் சார்பானவனோ ஆண்களின் சார்பானவனோ அல்லன் என்பதைப் போலத்தான் இதுவும். அதனால்தான் ஏழைகள் நல்லவர்கள், பணக்காரர்கள் அயோக்கியர்கள் என்று சொன்ன அங்காடித் தெரு எனக்குக் குமட்டல் எடுப்பது போல் இருந்தது.
இன்றும் ஒரு காட்சியைப் பார்த்தேன். கீழே பூனைகளுக்கும் காகங்களுக்கும் உணவு எடுத்துக் கொண்டு போனேன். பூனைகளுக்குத் தண்ணீர் இல்லை என்று நேற்று இரவே அவந்திகாவிடம் சொல்லியிருந்தேன். தண்ணீர்ப் பாத்திரமே பச்சையாக பாசி படர்ந்து கிடந்தது. வாட்ச்மேன் தாமஸிடம் எத்தனை தடவை சொல்லியும் வேலை நடக்கவில்லை. இரண்டு நிமிடம் கூட ஆகாத காரியம். கீழேயே குழாய் இருக்கிறது. அதில் தண்ணீரைப் பிடித்து வைக்க வேண்டியதுதான். எங்கள் வீட்டில் பணிப்பெண் யாரும் இல்லாமல் நாங்களே நோன்பு நோர்த்துக் கொண்டு இருப்பதால் ரொம்பக் கஷ்டம். என்ன கஷ்டம் என்பதை பல பக்கங்கள் விவரித்து விட்டேன். இருந்தாலும் குழந்தைகளுக்குத் தண்ணீர் இல்லையே என்று ஒரு பக்கெட்டில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள். தாமஸ் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கடுப்பாகி விட்டாள். என்னடா இது, மூன்று வேளை சாப்பாடும் இரண்டு வேளை டீயும் கொடுத்து கவனிக்கிறோம். ஒரு சின்ன வேலை சொன்னால் இப்படி டபாய்க்கிறாரே.
”என்ன தாமஸ் இது, தண்ணி வைக்க சொன்னா வைக்க மாட்டேன்றீங்க?”
“நேத்துதான் மேடம் வச்சேன்.”
பொய். பாத்திரம் நேற்றிலிருந்து காலி. “சும்மா சொல்லாதீங்க, இனிமே இதையும் நானே பண்ணிட்றேன்.”
பிறகு பதினோரு மணி தேநீர் போட்டு தாமஸைக் கூப்பிட்டாள். தாமஸ் எனக்கு டீ வேண்டாம் மேடம் என்றாரே பார்க்கலாம். எப்படி? நான் சும்மா உட்கார்ந்திருந்தாலும் இருப்பேன், யாருக்கும் எதுவும் உதவி செய்ய மாட்டேன். ”அதெல்லாம் பரவால்ல வாங்க. எல்லாம் அப்டித்தான் இருக்கும். வந்து வாங்கிட்டுப் போங்க” என்று அவந்திகா அதட்டலாகச் சொன்னதும் சிணுங்கியபடி வந்து டீயை வாங்கிக் கொண்டு போனார். நாளையிலிருந்து தண்ணீர் வைப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? நீங்கள் அவசியம் விரிதியானா பார்த்தால் அந்த முடிவுக்கு வர மாட்டீர்கள்.
என் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த வினித் என்ற நண்பர் ஆதங்கப்பட்டிருக்கிறார் இப்படி:
நீங்கள் சொல்கின்ற அனைத்தையும் உடனே செய்கிறேனோ இல்லையோ நாளடைவில் செய்துவிடுவேன் அல்லது சூழ்நிலை அதனைச் செய்ய உந்தும். ஏதோ ஒரு இலக்கியப் பேச்சில் முராகாமியின் ஒரு சிறு கதையில் மண வாழ்வில் இரு சந்தோஷமான தம்பதிகள் வெவ்வேறு இடங்களில் வசிப்பார்கள். எதேச்சையாக ஜோடிகளில் ஒரு ஆணும், பெண்ணும் சந்தித்து வேறோர் உறவு கொள்வார்கள். அத்தோடு அவர்கள் கதை முடிந்தது. இதனை அறிந்த துணைவர்கள், இப்படிப்பட்ட நீ என் வாழ்வில் தேவையில்லை, போ, வீட்டை விட்டு வெளியேறு, உனக்காகவே வாழ்ந்தேனே, I gave up my career for you, you bitch, கண்ட நாய் கூட படுத்துட்டு வர… கத்தி கூப்பாடு போட்டு, தேரை இழுத்துத் தெருவில் விட்டுவிட்டு, விவாகரத்துக்குப் போய்விடுவார்கள்… இந்தக் களேபரத்தில் குற்றம் சொல்லப்பட்டிருப்பவர்களின் கதறல் இது…
”இல்ல, கண்டிப்பா நான் உன்னதான் லவ் பண்றேன், உன்னை மட்டும் தான், ஒரு காபியைப் பகிர்ந்துகொள்வது போல் உடலைப் பகிர்ந்து கொண்டோமே தவிர, எனக்கு நீதான் வேண்டும்…”
கொண்டாடப்பட்ட, நல்ல இலக்கியத்தரமான படமென்றால் அது Blue is the warmest color, ஸ்பீல்பெர்க் சிபாரிசு செய்து, கான் விழாவில் விருது பெற்றது. லெஸ்பியன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் கதை. ஒருத்தி ஆர்டிஸ்ட், இன்னொருத்தி கல்லூரி மாணவி, மழலைப் பள்ளி ஆசிரியையாக வேண்டும் என்பவள். தலைமுடி கலைந்த, எப்போதம் அழுது வடியும், மூக்கு உறுஞ்சும், யாரும் தீர்த்திராத தனிமையுணர்வும் கொண்ட தேவதை. இரு பெண்களுக்குமான கலவிக் காட்சிகள் முழுமையாகக் காட்டப்படும். நாட்கள் ஒட ஒட, டாம்பாய் ஆர்டிஸ்டுக்கு தொழிலின் மேல் ஈர்ப்பு அதிகமாகி, இவள் மேல் ஈர்ப்பு குறையும். ஆனால், காதல் உண்டு. மீண்டும் தனிமை. பள்ளியில் வேலை பார்ப்பவனுடன் செக்ஸ். விஷயம் டாம்பாய்க்கு தெரிகிறது அவ்வளவு தான்.
முராகாமியின் அதே வசை, அதே பதில். அது எழுத்து, இது நிகழ் கதை.
நீங்கள் அந்தக் கதையைப் பற்றி சிலாகித்து எழுதியதின் சாரம்…We just shared the bodies like a coffee but my love is only for you and I love you.
உங்கள் எழுத்தைப் படித்த பிறகுதான் இதையெல்லாம் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. சூப்பர் டீலக்ஸின் சமந்தா பகுதி உங்கள் கருத்தை வலுப்படுத்துவதாக இருந்தது. நீங்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுதியிருக்கவில்லையெனில் ஒரு முடிவுக்கே வந்திருக்க முடியாது. இதுபோல நான் உங்களிடம் சொல்லாதது ஏராளம் சாரு. Blue is the warmest color பார்த்து முடித்த பொழுது விடியற்காலை மணி ஐந்து. மசமச என்று விடிந்தது. போய் கோல் சாய் டீ கடையில் ஒரு நாட்டுச்சக்கரை டீ.
நடந்து போகையில், உங்களிடம் இதையெல்லாம் சொல்லலாமென்று நினைத்தாலும் சோம்பேறித்தனம்.
கர்நாடக சங்கீதமெல்லாம் இதில் சேர்க்க முடியாத அளவுக்கு பெரிய பெரிய கதைகள். உங்களின் எழுத்து வழிதான் கர்நாடக சங்கீதமே அறிமுகம். எனக்கும் மகாராஜபுரம், பாலமுரளி போல பழைய ஆட்கள் தான் பிடிக்கும்.
மருகேளரா ஓ ராகவா…. பாடலை சந்தானம், BMK, TMK, GNB…. பாடி கேட்டு லயித்த எத்தனை நாட்கள்…. ச ச ச ச ச…….
அது வேறு உலகம்…..
இரண்டு மாதத்துக்கு முன் Messiah பற்றி காயத்ரி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். பார்க்க நினைத்து வேறு படங்களிலும் சீரீஸ்களிலும் நேரம் போய்விட்டது. பிரைமில் Mother! இருக்கிறது. செமத்தியான படம்.
நாளைக்கு கர்நாடக இசை பற்றி எழுதுகிறேன்..,
வினித்குமார்
நான் சொல்வதை யாருமே கேட்பதில்லை என்ற என்னுடைய புலம்பலுக்கு வந்த கடிதம் இது. ஆனால் இதை நான் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன். ஏனென்றால், வினித், அர்ஜுன் எல்லாம் விதிவிலக்கு. இருவரையும் பெயர் குறிப்பிட்டே இந்தப் பக்கங்களில் எழுதியிருக்கிறேனே? மற்றபடி வினித், அர்ஜுன் போல் பலர் இருக்கிறார்கள். ஆனால் நான் குறிப்பிட்டது என் உள்வட்டத்தைச் சேர்ந்த gang of four நான் சொல்லும் எதையும் கேட்பதாகத் தெரியவில்லை!
***
முடியுமானால் நண்பர்கள்/வாசகர்கள் நன்கொடை/சந்தா அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai