பூச்சி 55

காலை உணவு உண்ணாமல் நான் கணினியின் பக்கமே வர மாட்டேன்.  அது எனக்கு ஹராம்.  ஆனால் இன்று அந்த விதியை மீற வேண்டியிருக்கிறது.  அவந்திகாவும் நானும் அமெரிக்காவும் இந்தியாவும் மாதிரி, காலம் என்ற விஷயத்தைப் பொறுத்தவரை.  அவளுக்கு உறக்க நேரம் நள்ளிரவு ஒன்றிலிருந்து காலை எட்டரை வரை.  எழுந்தவுடன் வீடு சுத்தப்படுத்தல்.  காலை உணவு பதினொன்று பதினொன்றரை ஆகி விடும்.  நேற்று கூட காலை பதினொன்றரைக்குக் காலை உணவு சாப்பிடும் போது பேசாமல் அந்தக் கால பிராமணர்கள் மாதிரி பதினொன்றரை மணிக்கு நாம் தளிகையே சாப்பிட்டு விடலாமே என்று கிண்டல் பண்ணினேன்.  ஆனால் எனக்கு எட்டரைக்கு சாப்பிடாவிட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.  என்ன செய்யலாம்?  ஸ்விக்கிக்கு என் வீட்டில் தடை.  அது இருந்தால் பிரச்சினையே இல்லை.  வெளியேயும் போக முடியாது.  எதிர்சாரியில் அம்மா உணவகம்.  அங்கே போனால் நானே கொரோனாவாக மாறி விடுவேன் என்று எச்சரிக்கை செய்திருக்கிறாள் அவந்திகா.  எல்லா வழியும் மூடியாகி விட்டது.  இட்லி மாவு இருந்தால் ஜாலியாக இட்லி போட்டு சாப்பிடலாம்.  ஆனால் இட்லி மாவு கிடைக்கும் அப்பு முதலித் தெருவை அடைத்து விட்டார்கள்.  அங்கே ஒருத்தனுக்கு கொரோனா.  அவன் ஒரு பத்துப் பதினைந்து பேருக்குக் கொடுத்திருக்கிறானாம்.  அவன் துபாயிலிருந்து வந்தவனாம்.  அவன் வீட்டுக்கு எதிரேதான் மாவு கடை.  அப்பு முதலித் தெருவே அடைத்தாகி விட்டது.  ஆனால் இதெல்லாம் செய்திகளில் வராது.  இப்படி வராத செய்திகள் பல ஆயிரம்.  அப்பு முதலித் தெரு அடைப்பு மட்டும் வதந்தி அல்ல.  அரசாங்கம் வெளியே சொல்வது ஆயிரத்தில் ஒன்றுதானாம்.  வயதானவர்களுக்கு எல்லா விஷயத்திலும் முன்னுரிமை உண்டு.  உலகம் முழுவதும்.  ஆனால் இந்த பூமியில் தங்கியிருக்கும் விஷயத்தில் அவர்களை விட பாத்தியதைப் பட்டவர்கள் இளைஞர்களே என்பதால் கொரோனோ தொற்றோடு வரும் முதியோரை விட இளைஞர்களுக்கே முன்னுரிமை கொடுக்கும்படி அரசு வாய்மொழி உத்தரவு போட்டிருப்பதாக ஒருத்தர் சொன்னார்.  உண்மையோ பொய்யோ.  ஆனால் அப்படி உத்தரவு போட்டிருந்தால் அது முற்றிலும் நியாயமானதே.  முதியோரை விட பூமியில் தங்கியிருக்க அதிக உரிமை பெற்றவர் இளைஞர் சமுதாயமே.  நாம் மாவு விஷயத்துக்கு வருவோம்.  மாவும் இல்லை.  இட்லி தோசையும் இல்லை.  ஸ்விக்கிக்கும் தடை.  எல்லா வழியையும் அடைத்து விட்டால் என்ன செய்வது?  எத்தனை நாட்களுக்கு உப்புமாவையே செய்து சாப்பிடுவது?  அலுத்து விடாதா?  கஞ்சியோ எனக்குப் பிடிக்கவே இல்லை.  கொள்ளுக் கஞ்சி.  கோதுமைக் கஞ்சி.  என்னென்னவோ கஞ்சிகள்.  கண்றாவி.  பிரெட் இருந்தால் டோஸ்ட் பண்ணி வெண்ணெய் தடவி சாப்பிடலாம்.  வெண்ணெய் இருக்கிறது.  பிரெட்டும் கிடைக்கவில்லை.  கடை இல்லை.

இடைச் செருகல்.  இதை எழுதிக் கொண்டிருந்த போது மணி ஒன்பதே முக்கால்.  எட்டரை மணிக்கே ஒரு வெங்காயம், மூன்று தக்காளி, ஒரு குடை மிளகாய் மூன்றையும் நறுக்கி உப்புப் போட்டு எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டேன்.  ஆனாலும் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது கொலைப்பசி.  அந்த நேரம் பார்த்து அவந்திகா வந்து தாய்ப்பூனை கொலைப்பசியில் அழுகிறது சாரு, கொஞ்சம் நீ போய்க் கொடுக்க முடியுமா என்று கெஞ்சினாள்.  அவளால் முடியாது.  இன்னும் வீடு சுத்தம் முடியவில்லை.  செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும்.  கடும் கோடையில் செடிகள் வாடி விடும்.  எல்லாமே அபூர்வமான மூலிகைச் செடிகள்.  ”என்னம்மா இது, நானே கொலைப்பசியில் டைப் பண்ணிக்கிட்டு இருக்கேன்.  நீ வேற பூனைக்கு சாப்பாடு போடச் சொல்றே?  நான் எல்லா உயிருக்கும் சாப்பாடு போட்றேன்.  ஆனா எனக்கு சாப்பாடு கொடுக்க மாட்டேங்கிறார் பெருமாள்” என்று சத்தமாகச் சொன்னபடி எழுந்து பூனை உணவை எடுத்துக் கொண்டு கீழே போனேன்.  தாய்ப் பூனைக்கு ஏன் அந்தப் பெயர் என்றால், அது மாற்றி மாற்றி குட்டி போட்டபடியே இருக்கும்.  இப்போது சமீபத்தில்தான் குட்டி போட்டிருக்கிறது.  மாடிப்படி இறங்குகின்ற இடத்திலேயே அத்துமீறி உள்ளே வந்து நின்று கொண்டு பசியில் கதறிக் கொண்டிருந்தது.  இரவு பத்து மணிக்குத்தானே போட்டேன்?  ம்ஹும்.  தாய்ப்பூனைகள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கிறபடியால் நாலு வேளை சாப்பிட வேண்டியிருக்கும்.  ஆனால் பெருமாள் ஒருவேளைதான் படி அளப்பார்.  அவர் என்ன செய்வார்?  அவராலும் சமாளிக்க முடியவில்லை.  என்னைப் போன்றவர்கள்தான் ஒருசிலர் அவருடைய சுமையைக் குறைக்கிறோம்.  நான் ரெண்டு வேளை கீழே இறங்குவேன்.  தாய்ப்பூனை மட்டும்தான் இருந்தது.  அடுத்து நான் எழுதப் போகும் வாக்கியத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் ட்யூரின் ஹார்ஸ் படத்தைப் பார்த்திருக்க வேண்டும்.  அதில் வரும் கிழவனும் அவனுடைய மகளும் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள்.  ஆகா, இந்த வரியே புரியாதே?  நமக்கு கிராமம் என்றால் இந்திய கிராமம் அல்லவா ஞாபகம் வரும்?  அங்கே ஹங்கெரியில் கிராமம் என்றால், அந்தக் கிழவனின் ஒரே ஒரு வீடுதான்.  அடுத்த வீடு நாலு மைல் தூரத்தில் இருக்கும்.  கடுங்குளிர் காலம்.  சூறைக்காற்று வீசுகிறது.  கவனியுங்கள்.  ஏன் நான் நேற்றைய பேச்சின் போது இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வரச் சொன்னேன் என்றால், இந்தப் படத்தில் வரும் பொட்டல் வெளியும்,  கிணறும்,  காற்றும், வீட்டின் உட்புறமும்தான் கதையை நடத்தும் ஊடகங்கள்.  ப்ரொட்டொகனிஸ்ட் என்று சொல்லப்படும் கதைசொல்லி அந்தக் கிழவன் வளர்க்கும் கிழட்டுக் குதிரை.  படத்தில் வரும் கிழவனும் அவன் மகளும் செட் ப்ராபர்ட்டி என்று வேண்டுமானால் சொல்லலாம்.  அதனால்தான் ஆலன் ராப்-க்ரியேவின் (Alain Robbe-Grillet) கடற்கரை என்ற கதையையும் படித்து வரச் சொன்னேன்.  கடற்கரை கதையில் மூன்று சிறுவர்கள் ஒரு கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.  வலது பக்கம் கடல்.  இடதுபுறம் செங்குத்துப் பாறைகள்.  சிறுவர்களில் வலது ஓரம் – அதாவது கடலுக்கு அருகே இருப்பது சிறுமி.  நடுவில் செல்லும் பையன் மூவரிலும் சற்றே குள்ளம்.  இடது ஓரம் செல்பவன் மூவரிலும் சிறிது உயரம்.  மூவருமே சூரிய ஒளியின் நிறம்.  மூவரின் நிழலும் விழவில்லை.  சூரியன் மேலே உச்சியில் நிற்கிறது.  மூவருக்கும் பனிரண்டு வயது இருக்கும்.  மூவரின் காலடிச் சுவடுகளை கடல் அலைகள் அழிக்கின்றன.  முழுதாக அழிக்கவில்லை.  அழிக்க முடியவில்லை.  அவர்களின் வலது பக்கம் – அதாவது கடல் மணலில் கடல் பறவைகள் அவர்களுடனேயே தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றன.  அப்போது ஒரு மணி அடிக்கிறது.  மணி அடிக்கிறது என்கிறான் ஒருத்தன்.  முதல் மணி என்கிறான்.  முதல் மணியா என்பது சந்தேகம்தான்.  இதற்கு முன் அடித்த மணி நமக்குக் கேட்காமல் இருந்திருக்கலாம் இல்லையா என்கிறான் இன்னொருத்தன்.  இப்படியே ஆறு பக்கங்கள்.  கதையில் எதுவுமே நடப்பதில்லை.  அந்தச் சிறுவர்கள் ஏன் அங்கே வந்தார்கள்?  எங்கே போகிறார்கள்?  அவர்கள் யார்?  எதுவுமே சொல்லப்படவில்லை.  4000 ஆண்டு கதை சொல்லும் வரலாற்றில் ஆலன் ராப்-க்ரியே செய்தது ஒரு புரட்சி.  அவர் anthropomorphism என்ற விஷயத்தை மனித சிந்தனை வரலாற்றிலிருந்து வெளியே அகற்றினார்.  மனிதனை முதன்மைப்படுத்திக் கதை சொல்லும் முறை – இயற்கைப் பொருள்கள், விலங்குகள், பிராணிகள் போன்றவற்றுக்கும் மனிதத் தன்மைகளை ஏற்றுதல்.  இதுதான் Anthropomorphism.  மனிதனை மையப்படுத்துதல்.  சில சினிமாப் படங்களில் குழந்தைகள் பெரியவர்களைப் போல் பேசுவார்கள் இல்லையா, இதற்கும் மனிதனை மையப்படுத்தி கதை சொல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை.  மனிதனிடம் கதை சொல்லும் அதிகாரம் இருப்பதால், இயற்கை தன்னுடைய ஏவலில் இருக்கிறது என்று மனிதன் நம்புவதாலும் மனிதன் கதை சொல்லல் என்ற செயல்பாட்டின் மையத்தில் போய் நின்று கொள்கிறான்.  அவனை மையப்படுத்தியே சூரிய சந்திர நட்சத்திரங்களெல்லாம் நகர்கின்றன, சுழல்கின்றன.  வண்ணதாசனை இம்மாதிரி கதை சொல்லல் முறையின் பிரதிநிதி என்று சொல்லலாம்.  வண்ணதாசனின் வண்ணத்துப் பூச்சியும் வண்ணதாசனாக மாறி விடும்.  இது ஒருவகையான ஃபாஸிஸம்.  இஸ்லாமியரிடம் போய் ஒரு இந்து நீயும் நானும் ஒண்ணு என்று சொல்வதைப் போன்றது இது.  எனவே கடற்கரை கதைக்கும் ட்யூரின் ஹார்ஸுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.  இரண்டிலும் மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள்.  ட்யூரின் ஹார்ஸில் பசி, பட்டினி என்ற ஒரு ஆதி உணர்வு பிரதானமாக படம் முழுவதும் இருந்து கொண்டிருந்தாலும் படத்தில் மனிதர்கள் முக்கியமானதாக இல்லை.  ஆனால் கடற்கரை anthropomorphic அணுகுமுறைக்கு அப்பழுக்கு இல்லாத ஒரு உதாரணம். 

இப்போது மேலே நான் குறிப்பிட்ட ”அடுத்த வாக்கிய”த்துக்கு வருகிறேன்.  கதையை எங்கே விட்டோம்?  நான் கீழே இறங்கினேன்.  தாய்ப்பூனை இருந்தது.  நான் உணவை வைத்ததும் அது எப்படி சாப்பிட்டது என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் ட்யூரின் ஹார்ஸ் பார்த்திருக்க வேண்டும்.  ஐரோப்பாவில் உருளைக் கிழங்கு என்ற வஸ்து மட்டும் இருந்திராவிட்டால் இன்று ஐரோப்பா மனிதர்கள் இல்லாத பனிப் பிரதேசமாக இருந்திருக்கும்.  அத்தனை பஞ்சம்.  அத்தனை கொள்ளை நோய்.  அத்தனை போர்கள்.  எல்லாவற்றுக்கும் மனித இனம் உயிரோடு தப்பித்திருக்க உதவியது உருளைக் கிழங்கு மட்டும்தான்.ஒரே ஒரு உருளைக் கிழங்கை சுட்டு உப்புப் போட்டு மொத்த குடும்பமுமே சாப்பிடும்.  ஒரு நாளைக்கான உணவு அதுதான்.  ஆளுக்கு ஒரு உருளை கிடைத்தால் அதிர்ஷ்டம்.  ட்யூரின் ஹார்ஸ் படத்தில் அந்தக் கிழவன் அவித்த உருளைக் கிழங்கை ஆவி பறக்க பறக்க சாப்பிடுவான்.  நாக்கு பொசுங்கி விடும்.  ஆ ஊ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அடுத்த வாயை எடுத்துப் போட்டுக் கொள்வான்.  வீட்டில் இருப்பது ஒருசில உருளைக் கிழங்குகள்தான்.  கதை நடப்பது ஆறு நாட்கள்.  மூன்றாம் நாள் கிணற்றில் தண்ணீரும் வற்றி விடும்.  உருளைக் கிழங்கை அவிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லை.  சுட்டு சாப்பிடுவார்கள்.  தாகத்துக்குக் குடிக்க பிராந்தி. 

கீழே போய் உணவை வைத்ததும் ட்யூரின் ஹார்ஸ் கிழவன் உருளைக் கிழங்கை சாப்பிடுவது போல் சாப்பிட்டது தாய்ப்பூனை.  சாப்பிட்ட உணவெல்லாம் குட்டிகளுக்குப் பாலாகப் போய் விட்டது போல.  என் கண்கள் கலங்கி விட்டன.  இந்தப் பசித்த உயிருக்கு உணவிடுவதை விட எழுத்து கூட முக்கியம் இல்லை என்று அந்தக் கணம் எனக்குத் தோன்றியது. அங்கேயே நின்று அது சாப்பிட்டு முடித்த பிறகே மேலே வந்தேன்.  மேலே வந்த போது அவந்திகா கோதுமை உப்புமா தயார் செய்திருந்தாள்.   மணி சரியாகப் பத்தரை. 

இதை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால், அகஸ்மாத்தாக கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த மின்னஞ்சலைப் பார்த்தேன்.

திரு சாருவிற்கு,

உங்களுக்கும் திரு ஜெயமோகன் அவர்களுக்கும் ஒரு விதமான ஒத்திசைவு (synchronization or neural network) இருக்கிறது என சொல்ல வேண்டும். நேற்று நான் உங்களிடம் கேட்ட கேள்விக்கு அவரின் கடைசி பதிவு ஒரு விதமான விளக்கமாக எடுத்து கொள்ளலாமோ என தோன்றுகிறது.

நன்றி,

வேல்முருகன்.

நண்பர் வேல்முருகனின் மேற்கண்ட கடிதத்தைப் படித்ததும் உடனடியாக ஜெயமோகனின் இணைப்பில் அவர் எழுதியிருந்த எஸ்ஸெம்மெஸைப் படித்தேன்.  ஜெ.வின் கட்டுரைகள் பொதுவாக முப்பது பக்கம் இருக்கும் என்பதால் இந்த இரண்டு பக்க கட்டுரையை எஸ்ஸெம்மெஸ் என்றுதானே சொல்ல வேண்டும்?  அதனால் அப்படிச் சொன்னேன். 

உடனடியாக செல்வேந்திரனை அழைத்து விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடலாமா என்றுதான் யோசித்தேன்.  அப்படி ஒரு கட்டுரை.  இதை, இதே வார்த்தைகளில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் – எமினெம் பற்றிய கட்டுரையில் – கலையும் உன்மத்தமும் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.  ஆனால் அவை எதுவும் என் வார்த்தைகள் அல்ல.  எமினெம்மின் வார்த்தைகள்.  ம்ஹும்.  இல்லை.  எமினெம்மின் வார்த்தைகள் யாவும் தியாகய்யர் சொன்ன வார்த்தைகள்.  அவர் சொன்ன வார்த்தைகளெல்லாம் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மொஸார்ட் என்பவர் தன் வாழ்வில் சொன்ன வார்த்தைகள்.  அதையேதான் நானும் சொன்னேன்.  அதையேதான் ஜெயமோகனும் சொல்லியிருக்கிறார்.  உலகில் உள்ள உண்மையான கலைஞர்கள் யாவரும் தன்னுடைய உன்மத்தத்தையே கலையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  எந்த இடத்தில் ஜெயமோகனிடமிருந்து நேர் எதிராக நான் முரண்படுகிறேன் என்றால், நான் நேர்வாழ்வில் கடுமையான ஒழுங்கைக் கடைப்பிடிப்பவன்.  ஒருநாள் கூட பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததில்லை.  எப்போதும் முதல் மதிப்பெண்.  அல்லது கிட்டத்தட்ட முதல் மதிப்பெண்.  ஏழைகளுடன் சேர்ந்ததே இல்லை.  எப்போதுமே பணக்கார சகவாசம்தான்.  அப்போதைய நெருங்கிய நண்பன் ஊரிலேயே பிரபலமாக இருந்த ஈ.எம்.ஹனிஃபாவின் மகன்.  எப்போதுமே dandy மாதிரிதான் திரிவேன்.  கையில் கிதார்.  அலங்காரமான சட்டை.  வாசனைத் திரவியம்.  இன்று வரை எல்லாமே ஒழுங்கமைவுக்குள்தான் இருக்கிறது.  எதுவுமே ஒழுங்கைத் தவறுவதில்லை.  பத்து மணிக்கு உறங்கச் செல்லுதல்.  காலை நாலு மணிக்கு எழுந்து தியானம், பிராணாயாமம்.  குடித்தாலும் ரெமி மார்ட்டின்.  (அப்போது)  தொட்டுக் கொள்ள ஆலிவ் காய்.  பயணம் விமானத்தில்தான்.  இப்படி ஒரு ராணுவ ஒழுங்குக்கு உட்பட்ட வாழ்க்கை.  எந்த ஒரு எழுத்தாளனும் இப்படி ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து நான் பார்த்ததில்லை.  ஆனாலும் உன்மத்தம் எப்படி சாத்தியம்?  அது அகம் சம்பந்தப்பட்டது என்று நினைக்கிறேன்.  அல்லது, சீனி அதற்கு நல்ல பதில் சொல்லலாம். 

ஜெயமோகன் அளவுக்கு அக, புற ஒழுங்கின்மை அல்லது பித்தநிலை கொண்டவர்கள் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கேரளத்தில் – ஊர் பெயர் ஞாபகம் இல்லை – ஏதோ ஒரு கள்ளுக்கடையில் ஆறு கலயம் கள்ளைக் குடித்து விட்டு ஜெயமோகனுக்கு போன் போட்டு, நீங்கள் ஏன் குடிப்பதில்லை என்று கடும்போதையில் கேட்ட போது, எனக்குக் குடிக்காமலேயே போதையாகத்தான் இருக்கிறது சாரு என்று சொன்னது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.  எனக்குக் குடித்தாலும் போதை வருவதில்லை.  குடித்தால் இன்னும் அதிக ஒழுங்கைக் கடைப்பிடிப்பவனாகிறேன்.  மீதியை சீனிதான் சொல்ல வேண்டும். 

நேற்று வேல்முருகன் என்ன கேள்வி கேட்டார் என்று ஞாபகம் இல்லை. 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai