பூச்சி 56

ஈஷ்வரின் கடிதத்துக்கு பதில் எழுதிய போது “நீங்கள் ஃப்ரெஞ்ச் மாணவரா?” என்று கேட்டிருந்தேன்.  அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.  அவர் பெயரின் எழுத்துக்கள் Ichveur என்று இருந்தது.  உடனே தெரிந்து விட்டது.  எம்.ஏ. ஃப்ரெஞ்ச் படிக்கிறாராம்.  அப்போது தமிழ் எம்.ஏ. படிக்கும் மாணவர்களை மனதில் வைத்துக் கொண்டு ஆலன் ராப்-க்ரியேவின் எழுத்துக்களைப் படியுங்கள் என்று அறிவுரை சொல்லி, கடற்கரை கதையின் ஃப்ரெஞ்ச் லிங்கையும் அனுப்பியிருந்தேன்.  அதற்கு ஒரு செம பதில் கிடைத்தது எனக்கு.  நாக்-அவ்ட் பஞ்ச்.  அவருக்கு அந்தக் கதை சிலபஸிலேயே இருந்ததாம்.  அடக் கடவுளே, என் ஞாபக சக்தியை நொந்து கொண்டேன்.  ஏனென்றால், அதற்குக் கொஞ்சம் முன்னர்தான் காயத்ரியிடம் ஆலன் ராப்-கிரியே பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவளுடைய எம்.ஏ. சிலபஸில் ஆலன் ராப்-க்ரியே இருந்தார் என்று சொல்லியிருந்தாள்.   Nouveau roman (நியூ நாவல்) என்ற கோட்பாடு பற்றிப் படிக்கும்போது தவறவே தவறாமல் ஆலன் ராப்-க்ரியே இருப்பார்.  ஏனென்றால், அவர்தான் அந்தக் கோட்பாட்டையே உருவாக்கியவர்.  இன்று காலையில் அவள் சொன்னதை மதியமே மறந்து போனேன்.  அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் கல்விச் சூழல் பற்றிய நினைவுகள் என் மனதை ஆக்ரமித்துள்ளன.  அதாவது, கல்லூரிகளில் தமிழ்த் துறை என்று எடுத்துக் கொண்டால், அந்தப் பேராசிரியர்களுக்கு பாரதிக்குப் பிறகு யாரையுமே தெரியவில்லை.  புதுமைப்பித்தன் பெயரை வேண்டுமானால் கேள்விப்பட்டிருப்பார்கள்.  பா. வெங்கடேசனின் பெயரை ஒரு தமிழ்ப் பேராசிரியர் பேசி, விவாதிப்பதைக் கேட்டால் ஒருத்தருக்கு எப்படி இருக்கும்?  ஆனால் ஃப்ரெஞ்சில் நிலைமை அப்படி இல்லை.  ஆலன் ராப்-க்ரியே பாடத் திட்டத்திலேயே இருக்கிறார்.  இந்த விஷயம் தெரியாமல், தமிழ் படிக்கும் மாணவனுக்கு பா. வெங்கடேசனின் பெயரை சொல்லிக் கொடுப்பது போல் ஈஷ்வருக்கு La Plage (கடற்கரை) கதையின் ஃப்ரெஞ்ச் லிங்கை அனுப்பி படிக்கச் சொன்னேன்.  அதற்கு அவர் எழுதிய பதில் கீழே:

நிச்சயமாகப் படிக்கிறேன், சாரு. La Plage எங்களுக்குப் பாடமாகவே வந்தது. நேற்று நீங்கள் Zoom-ல் சொன்ன கருத்துகள் மிகவும் பிடித்திருந்தது. அவையில்லாமல், வேறு சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  

இதில் வரும் முதல் வரியே – incipit – இந்தக் கதையின் சுருக்கமாக இருக்கிறது. கதையில் என்ன நடக்கப் போகிறதோ அதை இந்த முதல் வரியே சொல்லிவிடுகிறது. (Three children are walking along a beach). 

Old narratives-ல் உள்ளது போல “நிகழ்வு” (Event) எதுவும் இல்லை. இதுவே நீங்கள் சொன்னதுபோல It simply is என்று நாம் சொல்வதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். 

Narrative-ன் நடுவில் எந்த விதமான dynamism-உம் இல்லை என்பதை நாம் பார்க்கலாம். Peter Brooks, இந்த டைனமிசத்தைக் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். ஒரு narrative ஆனது interior dynamismத்தால் கடத்தப்படுகிறது என்கிறார். இந்த டைனமிசமானது பல்வேறு “நிகழ்வுகளால்” ஆனது. “நிகழ்வுகள்” பெரும்பாலும் “ஆசைகளால்” இயங்குகின்றன.  அப்படி இல்லாத பட்சத்தில், ஒரு finality இருக்காது. 

ஆனால், இந்த Narrative-இன் உள்வடிவமே எந்தவிதமான ஆசைகளும் (desire) இன்றி இயங்குகிறது. தமிழில் ஆசைதானா என்று தெரியவில்லை. இந்த ஆசையற்ற ஒரு துறவு (renunciation) நிலை, narrative மூலமாகவே உணர்த்தப்பட்டுவிடுகிறது. உதாரணமாக, எந்தக் கதாபாத்திரத்துக்கும் எதையும் செய்துமுடிக்கும் “ஆசையில்லை”. நீங்கள் சொன்னதுபோல “They simply are”. இங்கே David Mamet சொன்னதுபோல – Stories happen because somebody wants something and has trouble getting it – அது நிகழவில்லை என்று நினைக்கிறேன். 

கடற்கரை கதையை ஆங்கிலத்திலும் ஃபிரெஞ்சிலும் படிக்கும்போது, எனக்கு ஃபிரெஞ்சு சலிப்பாக இல்லை சாரு. ஒருவேளை எனக்கு ஆங்கிலத்தில் படிக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லாததால் இருக்கலாம். 

Anthropomorphism பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் சொல்லிக்கொடுத்துதான் கற்றுக்கொண்டேன். மேலும், இவையெல்லாம் என்னுடைய கருத்துகள் மட்டுமல்ல. நாங்கள் வகுப்பில் விவாதித்தவை. 

உங்களுக்குத் தெரியாத எதையும் நான் சொல்லியிருக்கப் போவதில்லை. பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள். தவறுகளையும் சுட்டிக்காட்டுங்கள், உடனடியாக திருத்திக்கொள்கிறேன். 

மனமார்ந்த நன்றிகளுடன்,

ஈஷ்வர். 

***

சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டத்தின் சார்பாக நேற்று நடந்த பேச்சு, அதன் பிறகான உரையாடல் பற்றி ஏகப்பட்ட கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளன.  பெரிய வெற்றிதான் இது.  மீண்டும் மாயா இலக்கிய வட்டத்துக்கும், ரமா சுரேஷுக்கும் என் நன்றி.  நேற்றைய உரையாடலில் வேல்முருகன் இரண்டு கேள்விகள் கேட்டார்.  இரண்டுக்குமே நான் சரியான பதில் சொல்லவில்லை.  இப்போது சொல்கிறேன்.

திரு சாருவிற்கு,

உங்களிடம் நேற்று உன்னத சங்கீதம் கதையைப் பற்றிப் பேசினேன். பிறகு நான் கேட்ட கேள்விகள் இரண்டு:

ஒன்று: நீங்கள் கூறிய ட்யூரின் ஹார்ஸ் படத்தைக் காண உங்கள் உரையும் விளக்கமும் தேவைப்படுகிறது.  இது எப்படி சாத்தியம்?

இரண்டு: எந்த சமரசமும் செய்யாமல் எப்படி வாழ முடிகிறது? இது என்னுடைய நீண்ட நாள் கேள்வி.

வேல்முருகன்

சிங்கப்பூர்.

ட்யூரின் ஹார்ஸ் போன்ற படங்களுக்கு விளக்கங்களும் உரைகளும் தேவைதான்.  கலை நேரடியாகப் புரிந்து விட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை.  அதனால்தான் விமர்சகர்களின் தேவை ஏற்படுகிறது.  உதாரணமாக, Jodorowskyயின் படங்களுக்கு நிச்சயம் விளக்கக் கட்டுரைகள், அறிமுகங்கள் தேவைதான்.  ஆனால் தமிழில் ஆய்வுரீதியான விமர்சனம், ரசனை விமர்சனம் போன்றவை ரொம்பக் கம்மி.  முன்பாவது டி.கே.சி. போன்றவர்களால் ரசனை விமர்சனம் விமரிசையாக இருந்து வந்தது.  இப்போது அதுவும் இல்லை.  மேல்நாட்டில் அதற்கென்று பெரிய பெரிய ஜாம்பவான்களெல்லாம் இருந்தார்கள்.  இருக்கிறார்கள். 

சமரசம்.  என்ன பதில் சொல்வது என்று உண்மையிலேயே தெரியவில்லை.  ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்கள் என்று சொல்வது அவர்களைக் கொஞ்சம் கீழே இறக்குவது போல் ஆகாதா?  துறவியைப் போல் வாழ்பவர்களுக்கு இப்படிப்பட்ட வர்ணனைகள் தேவைப்படாது.  அதனால்தான் பிச்சைக்காரன், ஞானி, பைத்தியக்காரன் மூவரும் ஒரு வகையில் ஒன்று என்று.  இவர்கள் மூவரும் சமரசத்தைக் கடந்தவர்கள்.  சமரசம் செய்து கொள்ளாதவர் என்ற வார்த்தையே லௌகீகமானது.  மொரார்ஜி தேசாய் போன்ற ஒரு அரசியல்வாதியை சமரசமே செய்து கொள்ளாதவர் என்று சொல்லலாம்.  ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சொல்ல முடியுமா?  அவரெல்லாம் அதற்கு அப்பாற்பட்டவர்.  அப்படியானால் நீங்கள் அப்படியா என்று என்னை நோக்கிக் கேட்கலாம்.  நான் மட்டும் அல்ல.  தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளர்களுமே அப்படித்தான் என்கிறேன்.  ஏனென்றால், தமிழின் கலாச்சார நிலைமை அப்படி.  உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதிகளையும் படித்துப் பாருங்கள்.  அசோகமித்திரனைப் போன்ற ஒரு ஞானியை நான் கண்டதில்லை.  ஜெயமோகன் தன் வீட்டில் காந்தியின் படமும் அசோகமித்திரனின் படமும்தான் மாட்டியிருப்பதாக எழுதியது இங்கே எனக்கு ஞாபகம் வருகிறது.  என் இளம் வயதில் அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தபோது தமிழ் இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் சேர்ந்து ஒரு தமிழருக்குக் கிடைத்ததே என்று பாராட்டிக் கொண்டிருந்தபோது சுந்தர ராமசாமி எத்தனை துணிச்சல் இருந்தால் அகிலன் ஒரு மலக்கிடங்கு என்று எழுதியிருப்பார்?  அங்கேயிருந்து கற்றுக் கொண்டதுதான் சமரசமற்ற வாழ்வு.  நான் வாசகர்களிடம் பணம் கேட்பேன்,  என் எழுத்துக்கு சன்மானம் கொடுங்கள் என்று.  ஆனால் கோடியே கொடுத்தாலும் எனக்குப் பிடிக்காத ஒன்றைப் பாராட்ட மாட்டேன்.