கதை கேளு, கதை கேளு…

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக அறிமுகமானார். இதுவரை அவரோடு போனில் கூடப் பேசியதில்லை. நேற்று வரை அவர் குரல் கூட எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் அவர் எனக்கு செய்திருக்கும் உதவிகள் என்னால் பிரதியே செய்ய முடியாதவை. ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவுக்கு நான் எழுதும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்த வித்யா சுபாஷ்தான் அவர். எப்படியோ என் வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு முறையும் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவுக்குக் கடைசி நிமிடத்தில்தான் என் கட்டுரை தயாராகும். இரண்டு நாட்களில் கட்டுரை போக வேண்டும். லண்டனிலிருந்து வெளியாகும் சர்வதேசப் பத்திரிகை. ஆங்கிலம் பிரிட்டிஷ்காரர்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்க வேண்டும். இன்று அனுப்பினால் அநேகமாக 36 மணி நேரத்தில் கட்டுரை வந்து விடும். சமயங்களில் 24 மணி நேரத்தில் கூட வந்திருக்கிறது. உறக்கத்தை தியாகம் செய்திருந்தால்தான் அவ்வளவு சீக்கிரம் அனுப்ப முடியும். மற்றும், ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் சில தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். குறிப்பாக எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை.

நீங்கள் பெரிய அளவில் பேசப்படுவீர்கள் என்று வித்யாவிடம் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பேன். அதற்கான திறமையும் கடின உழைப்பும் எல்லாவற்றையும் விட அடக்க குணமும் அமையப் பெற்றவர். என்னுடைய ”எங்கே உன் கடவுள்?” என்ற புத்தகத்தை வித்யாவுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். வித்யா ஒரு கலா ரசிகை. இப்போது கதை வாசிப்பவராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். கதை வாசிப்பது கதை எழுதுவதை விட கடினமானது என்பது பல கதை வாசிப்பாளர்களின் performance-ஐப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக, கவிதை வெளியீட்டு விழாக்களில் கவிதை வாசிப்பு என்ற குரூர நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். தமிழ் அங்கே விதவிதமான முறையில் படுகொலை செய்யப்படும். அடுத்து, அந்தக் காலத்து வானொலி ஒலிச் சித்திரம். அந்தக் கொடுமையெல்லாம் கால் நூற்றாண்டோடு முடிந்து விட்டது. இப்போது கதை வாசிப்பு என்ற பெயரில் நடமாட்டம் தெரிகிறது. ஆனால் வித்யாவின் கதை வாசிப்பில் மேலே குறிப்பிட்ட எந்தக் குளறுபடியும் இல்லை. வாசிப்பு அபாரமாக இருக்கிறது. செயற்கைத்தன்மை இல்லாத ஏற்ற இறக்கம், குரல், உச்சரிப்பு எல்லாமே சுத்தம். எல்லாமே இயல்பு. ராம்ஜி அதிர்ஷ்டசாலி. வித்யாவின் குரலில் ஸீரோ டிகிரி நாவலின் கவிதைப் பக்கங்களைக் கேட்க ஆசைப்படுகிறேன்.

வித்யா சுபாஷ் எதைத் தொட்டாலும் அது சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

https://youtu.be/7zmcSNj_TBA?fbclid=IwAR3Tr4ju05oJ0SJ6FMlrpIzC3P-YmK0DcFV7Pdfvf1N71fGxjQtc4_ZQRSk