ஒரு மலையாளத் திரைப்படமும் அறிவார்ந்த விவாதமும்

நிர்வத்திட மாண்டு நிராஷ்யம்
ஆரவாரமில்லாத ஒரு மலையாற்றங்கரையில் ஆரம்பிக்கிறது. காட்டு யானையை ரயிலில் அடித்ததால், விசாரணைக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு ரயில் டிரைவர், அவரது காதலி. இவர் இந்த ரயில் டிரைவரை இரண்டாவதாக திருமணம் செய்ய காத்துக்கொண்டு இருப்பவர். ரயில் டிரைவரின் முதல் மனைவியுடன் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்த மலையாற்றங்கரையில் இருந்து விவாகரத்து வழக்கிற்காகவும், யானையைக் கொன்ற வழக்கிற்காகவும் நகரத்துக்குப் போய் வருகிறார்கள்.
ரயில் ஓட்டுனர் யானையை அடித்தால் வழக்கு இல்லைதானே? ஏன் வழக்கு?
அங்குதான் சஸ்பென்ஸ் உடைந்து படம் சூடு பிடிக்கிறது.
கதையை நான் சொல்ல விரும்பவில்லை. இதற்குப் பிறகு மெதுவாகப் போகும் படமே வேகமாகப் போகிறது.
க்ளைமேக்ஸ் காட்சியில், என்னதான் கிராஃபிக்ஸ் என்றாலும் தீர்ப்பைக் கேட்க குட்டி யானை கோர்ட்டுக்கு வருவதும், விவாக ரத்து வழங்க இருக்கும் நீதிபதி டிரைவர் மேல் காதல் கொள்வதும் தமிழ்த் திரைப்படங்களில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
2 மணி நேரம் 18 நிமிடங்கள் ஒரு வித்தியாசமான அனுபவம்.

மேற்கண்ட திரை விமர்சனம் நேற்று இரவு 2.21க்கு அராத்து முகநூலில் பதிவிட்டது. அதற்கு அந்த நள்ளிரவிலேயே – அதாவது மூன்று மணிக்கு கருந்தேள் ராஜேஷ் எழுதிய காமெண்ட்:

ராஜேஷ்: இதை எடுத்தவர் எனக்குத் தெரிந்து பல ஆண்டுகள் திரைப்பாடம் படித்தவர். அவரைப் பற்றி சொல்லி சஸ்பென்ஸ் உடைக்க விரும்பவில்லை. பல நாடுகள் அலைந்து, பல யானைத் தண்ணி குடித்தவர் அல்லவோ. ஹெர்ஸாக் போல.

அராத்து: நீங்கள் முதலில் பெங்களூரில் இதன் இயக்குநர் “தோழியன் பரஞ்சயத்து இலையில் ” பற்றி பேசும்போது அசுவாரசியமாக இருந்தேன். இப்போது சாரு சொன்ன பிறகுதான் புரிந்தது.

கருந்தேள்: கண்டிப்பாக. சாரு இதன் அரசியலை விண்டு சொல்வார்தான். பக்காவாக விளக்குவார்.

அராத்து: ஜெயமோகனும் சாருவும் ஒத்துப்போகும் ஒருசில இடங்களில் இதுவும் ஒன்று.

கருந்தேள்: செம்ம. அதுதான் இந்தப் படத்தின் மையப்பொருள். இது நம் இருவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லாமல் புரிகிறது. ஆனால் பாருங்க… எஸ்.ரா. இதை எழுதவே இல்லை. என் நண்பர் எஸ்.ராவின் தோழர். அவரிடம், இதை எழுத மாட்டேன் என்றே சொல்லிவிட்டாராம்.

அராத்து: கலையின் அரசியல் நுட்பமாகப் பயணிக்கிறது ராஜேஷ். ஒரு கலைஞன் தனக்கான அரசியலை , எவ்விதமான கலையாகினும் கண்டு கொள்கிறான். அவன் அதில் ஆன்மாவையோ , மனிதத்தயோ தேடுவதில்லை. ஆனால் அந்த கலையில் தனக்கான அரசியல் இல்லையெனில் , அது தான் சொல்வதையே கொண்டாடுகிறது என்றாலும் , அந்தக் கலையை அவன் காலால் உதைக்கத்தான் முற்படுகிறான். இதுதான் காலம் ஆரம்பித்த அன்று முதற்கொண்டு கலையும் அரசியலும் இயங்கும் தளம். இதில் எப்படி எஸ்,ரா மட்டும் விதி விலக்காக இருக்க முடியும் ?

கருந்தேள்: நல்ல கருத்து. ஆனால் பாருங்கள். எஸ்.ராவின் கலைவிமர்சன திரைப்பட அரசியலுக்கு இது எதிராகப் பயணிக்கிறது அல்லவா? செர்பியன் ஃபிலிமையோ காலிகுலாவையோ இன்னும் எஸ்.ரா. விமர்சிக்க ஆரம்பிக்கவில்லையே? அவரது அரசியலின் கதவை இப்படிப்பட்ட படங்கள் பலமாகத் தட்டியும், அவர் எழுந்துவந்து கதவைத் திறக்கவில்லையே? மாறாக, புரண்டல்லவோ படுத்துக் கொள்கிறார்? கலைக்கும் அரசியலுக்குமான அந்த மெல்லிய கோட்டை அவர் புறந்தள்ளி, காலா உன்னைக் காலால் உதைப்பேன் என்று சொல்லி யானையால் உதைபட்ட பாரதியின் அரசியலைக் கைக்கொள்கிறாரோ? (இங்கேயும் யானை வந்துவிட்டது. இந்தப் பட யானை அரசியல் என் மனதை விட்டு அகலவே இல்லை என்பதன் உட்பொருள் இது.) பாரதியின் காலாவைக் கலை என்று நினைப்பதன் வெருட்சி இது.

அராத்து: உண்மை. காலா, உன்னைக் காலால் உதைப்பேன் என்று பாரதியார் உருவாக்கிய வார்த்தை விளையாட்டு மற்றும் உசுப்பேறிய ரொமாண்டிசைஷன் பாணியை பெரும்பாலான எழுத்தாளர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். இதில் இவர்கள் மறந்தது, கலையின் ஜீவனைத்தான். கலை, தர்க்கத்தை மீறியதுதான். ஆனாலும் தர்க்கத்தை மீறுவதற்கான தர்க்கம் இருக்க வேண்டும். கம்பர் முதற்கொண்டு, இதை ஆணித்தரமாக நிறுவி இருக்கிறார்கள். காலால் மட்டுமே உதைக்க முடியும், கையால் உதைக்க முடியாது என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். சங்க இலக்கியத்தில் இதைப்போன்ற வெட்டி வார்த்தை விரயங்கள் இருக்காது.

கருந்தேள்: மிகவும் உண்மை. நீங்கள் சொல்லிய கருத்து ஆழ சிந்திக்க வேண்டியது. ஆனால் அதில் பாருங்கள். சங்க இலக்கியத்தில் கையால் உதைக்க முடியாது என்பதைக்கூட, சுவெங்கடேச பறம்பனார் என்றவர் மாற்ற நினைத்து, இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களால் நின்றுகொண்டு கையால் உதைக்க முற்பட்டுள்ளார் என்பதை அவரது நவீனகாவியமாகிய வேள்பாரியில் இயற்ற நினைத்து அடி வாங்கிக்கொண்டுள்ளார். உங்கள் கருத்தில் இருக்கும் தருக்கம், மற்றும் தருக்கத்தை மீறிய தருக்கம் என்பவை உண்மையில் பல பாடல்களால் நிறுவவேண்டியவை. இந்த சிந்தனையையே அனைவரும் கைக்கொள்ளவேண்டுமாய் யானும் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்
கருந்தேள்: இரு அறிஞர்கள் யாமத்தின் இந்த இறுதி நாழிகைகளுக்கு மேல் ஒத்த கருத்தையே பேசினால், விடியும்போது புன்னாகவராளி வண்டுகள் மக்களின் மேல பாயும் என்பது ஆன்றோர் வழக்கு. இத்துடன் யான் முடித்துக் கொண்டு, விடிந்தபின் வருகிறேன்.
***
நான் சொன்னேன் இல்லையா, எங்கள் வாசகர் வட்டம் ஒரு ஹிப்பிக் கூட்டம் என்று. அதன் குணாதிசயங்களில் ஒன்று, irreverence. மேலே உள்ள கருமாந்திர விவாதத்தில் அதை நீங்கள் காணலாம். நள்ளிரவு இரண்டரை யிலிருந்து அதிகாலை நாலு மணி வரை நடந்த உரையாடல். எல்லாவற்றையும் விட காமெடி என்னவென்றால், அந்தக் குறிப்பிட்ட படம் – நிர்வத்திட மாண்டு நிராஷ்யம் நெட்ஃப்ளிக்ஸில் வருகிறதா அமேஸான் ப்ரைமில் வருகிறதா என்று ஒரு கூட்டமே தேடியிருக்கிறது. அதகளம்.