பூச்சி 58

இப்போது நான் சொல்லப் போவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்; ஒப்புக் கொள்ளவே முடியாததாக இருக்கலாம்; வக்கிரமான கருத்தாகத் தோன்றலாம்; உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கல்வியோ படித்த புத்தகங்களோ உங்களுக்குக் கற்பிக்காததாக இருக்கலாம்; சமூகமோ தலைவர்களோ ஆன்மீகவாதிகளோ நீதி நூல்களோ இதை உங்களுக்குச் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை.  எனவே நான் ஏதோ உளறுகிறேன் என்றோ சமூக விரோதமான கருத்து என்றோ தோன்றலாம்.  ஆனால் இதை நான் பல காலமாக என் கட்டுரைகளில் ஆங்காங்கே சொல்லிக்கொண்டுதான் வந்திருக்கிறேன்.  இன்று ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. 

இந்த ஊரடங்கு நாட்களில் விளிம்புநிலை மக்களின் பாட்டைப் பற்றி நாளொரு தினமும் செய்திகள் வந்து கொட்டிக் கொண்டே இருக்கின்றன.  பல இடதுசாரிகளும் சமூக ஆர்வலர்களும் கடும் கோபத்துடன் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.   எதிர்ப்பைத் தெரிவிப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.  விளிம்புநிலை மக்களுக்கு பட்டினியும் தண்டவாளத்தில் மரணமும்தான் இந்தியாவில் விதிக்கப்பட்டது.  ஆனால் இப்படி ஒரு எதிர்ப்பையும் கூடத் தெரிவிக்காவிட்டால் இந்தக் கொலைபாதகங்களை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவர்களாக வரலாற்றின் முன்னே குற்றவாளிகளாக நிற்போம்.  அதனால் முகநூலிலாவது நம்முடைய முணுமுணுப்பை ஒரு மாபெரும் புரட்சி கீதமாகப் பதிந்து வைப்போம்.  வேறு என்ன செய்ய முடியும்? 

இந்த விளிம்புநிலை மக்கள் கூட்டத்தின் வேதனைகளை எழுதவாவது பத்திரிகைகளும் சமூக ஆர்வலர்களும் இருக்கிறார்கள்.  ஆனால் வேறொரு இடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேதனைக் கதையை எழுத ஆள் இல்லை; பேச ஆள் இல்லை.  உணர்வதற்குக் கூட ஒரு ஆத்மா இல்லை.  ஏனென்றால், சம்பந்தப்பட்டவர்களால் பேச முடியாது.  ஒரு சமிக்ஞை கூட காட்ட முடியாது.  இப்படி ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  ஒரு மனிதன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.  அங்கே அந்த சிறைச்சாலையின் அதிகாரிதான் அவனுடைய சிறை வாழ்வைத் தீர்மானிப்பவர்.  அவனை சுட்டுக் கூட போட்டு விட்டு தப்பி ஓடும் போது சுட்டு விட்டோம் என்று சொல்லி விடலாம்.  அந்த சிறைச்சாலையை சோதனையிட சிறைத்துறைத் தலைவர் வருகிறார்.  வந்து சிறை அதிகாரியின் எதிரிலேயே கைதியிடம் ஏதாவது புகார் உண்டா உனக்கு என்று கேட்டால் அவன் என்ன சொல்லுவான்?  ஆஹா ஓஹோ என்றுதானே புகழ்வான்?  புகழாவிட்டால் அவனை மறுநாள் அதிகாரி லாடம் கட்டி விடுவாரே?  அந்த சிறைவாசியின் நிலையில்தான் பெரும்பாலான – அல்லது எல்லா திருமணமான பெண்களுமே இருக்கிறார்கள்.  அதாவது, அதிகாரத்தின் சாவிக் கொத்தைத் தங்கள் இடுப்பில் செருகிக் கொள்ளாத பெண்கள். 

ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட அஞ்சல்வழிக் கல்வியைப் போல் அவர் படிக்க வேண்டிய புத்தகங்கள், பார்க்க வேண்டிய உலகத் திரைப்படங்கள் எல்லாவற்றையும் மின்னஞ்சலாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  ஹவுஸ்வைஃப்.  இருந்தாலும் குருதட்சணை என்று சொல்லி மாதாமாதம் 500 ரூ அனுப்பி விடுவார்.  உங்களுக்கு ஏது பணம் என்றால், வீட்டுச் செலவில் மிச்சம் பிடித்தது.  அனுப்பாதீர்கள்.  வேண்டாம்.  அனுப்பியே தீருவேன்.  சரி.  இப்போது கடந்த இரண்டு மாதமாக ஒரு புத்தகமும் படிக்கவில்லை.  ஒரு படமும் பார்க்கவில்லை.  காரணம்?  ஒரு பெரிய ராமாயணமே சொன்னார்.  கணவர், கல்லூரியில் படிக்கும் மகன், மகள் ஆகிய மூன்று பேரின் வேலைக்காரியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.  புரிந்து கொள்ள முடியவில்லையே?  படம் பார்க்க என்ன தடை?  நான் அவருக்கு சிபாரிசு செய்யும் படங்களில் பாலியல் காட்சிகளோ, வன்முறைக் காட்சிகளோ இருக்காது.  எல்லாம் ஐரோப்பியப் படங்கள்.  அதில் என்ன பிரச்சினை?  ஆபாசக் காட்சிகள் நிறைந்த (சந்திரமுகி: வடிவேலு, ரஜினி காட்சிகள்) தமிழ்ப் படங்களையே குடும்பத்தோடு பார்க்கும் போது இந்தப் படங்களுக்கு என்ன?  பிரச்சினை நான் எதிர்பார்க்காதது.  மூன்று பேருமே நெட் பயன்படுத்துவதால் இவரால் எதையும் டவுன்லோடு செய்து படம் பார்க்க முடியவில்லை.  இவர் ஏதாவது டவுன்லோடு செய்ய ஆரம்பித்தாலே அவர்கள் கத்த ஆரம்பித்து விடுகிறார்களாம்.  நாள் பூராவும் சமையல் வேலை வேறு.  சாய்ங்காலம் நாலு மணிக்கு என்னங்க சமையல் வேலை?  அப்போதுதான் வந்து பஜ்ஜி பண்ணிக் கொடு, சொஜ்ஜி பண்ணிக் கொடு என்று கேட்கிறார்கள்.  சரி, பெண் குழந்தையாவது கொஞ்சம் ஒத்தாசையாக இருக்குமே?  போச்சு போங்க.  உங்களுக்கு இன்றைய பெண் குழந்தைகளைப் பற்றியே தெரியலிங்க.  இதுங்களுக்கு வரப் போறவனுங்கள்ளாம் ஒரே வாரத்துல தூக்குல தொங்கிருவானுங்க.  ஸ்டவ் பத்த வச்சு வெந்நீர் கூட வைக்கத் தெரியாது.  ஐயோ, ரொம்ப மோசமா வளர்க்கிறீங்களே.  ஏன் இதெல்லாம் கத்துக் குடுத்தா என்ன?  நீங்க வேறே.  அவ அப்பா என்னைக் கொன்னே போட்ருவாரு.  அவர்தான் அவளுக்குச் செல்லம் குடுத்துக் குடுத்துக் குட்டிச்சுவரா ஆக்கிட்டாரு. 

இந்த மாதிரி ஒன்றல்ல, இரண்டல்ல, நூறு கடிதங்கள்.  எந்தப் பெண்ணைக் கேட்டாலும் இந்த ஐம்பது நாட்களும் அவர்களின் வாழ்க்கையில் சமையல் நாட்களாகவே இருக்கின்றன.  பணிப்பெண்களையும் நிறுத்தி விட்டதால் பணிப்பெண்ணின் வேலையும் சேர்ந்து கொண்டது.  இந்த லட்சணத்தில் என்னய்யா புடலங்காய் அன்னையர் தினம்?  எனக்கு இது எப்படி இருக்கிறது என்றால், தில்லியில் ஒரு பெண்ணை ஐந்து பேர் வன்கலவி செய்து, சித்ரவதை செய்து கொன்றான்கள் இல்லையா, அந்தப் பெண்ணின் மரணத்தைக் கொண்டாடுவது போல் இருக்கிறது.  அந்தப் பெண்ணின் மரணத்துக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் இருக்கிறது.   இந்த அபத்தத்தில் பெண்கள்தான் முன்னணியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் வதைக்கப்படுவது பற்றிய பிரக்ஞையே அவர்களுக்கு இல்லை.  அதனால்தான் அவர்களின் விடுதலை இன்னும் ஐநூறு ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லையோ என்று தோன்றுகிறது. 

ஆண்கள் ஏன் தாய்களைக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா?  அம்மா என்றதும் ஏன் அவர்களின் கண்கள் கலங்குகின்றன?  காரணம், 25 வயது வரை அவர்கள் ட்ராகுலாவைப் போல், ரத்தக் காட்டேரியைப் போல் தங்கள் தாயின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்திருக்கிறான்கள்.  என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்.  25 வயது வரை என் துணியை நான் துவைத்துக் கொண்டதில்லை.  தெரியாது.  என் துணியை நான்தான் துவைக்க வேண்டும் என்று எனக்குக் கற்பிக்கப்படவில்லை.  குளத்தில் போய் குளித்தால் அம்மாவுக்குத் தெருக்குழாயிலிருந்து மற்ற பெண்களோடு அடித்துப் புரண்டு தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் துன்பம் இருந்திருக்காது.  எனக்குக் குளம் வரைக்கும் போக சோம்பேறித்தனம்.  பிராமணக் குடும்பமாக இருந்தால் அடுக்களையாவது தெரிந்திருக்கும்.  அதுவும் தெரியாது.  இப்படி ஒன்றுக்கும் உதவாத பிள்ளையாய் ஒரு வளர்ப்பு.  ராஜா வீட்டுக் குழந்தை போல் வளர்ந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.  கருவேல மரங்களை வெட்டி வீட்டுக்குக் கொண்டு வந்து பிறகு அதைத் துண்டு துண்டாக வெட்டிக் காய வைத்து விறகாகப் பயன்படுத்துவார்கள் அம்மா.  கூடவே ராட்டி.  அந்த ராட்டிக்கு சாணி வேண்டுமே?  ஊதாங்கோலால் மண் அடுப்பில் ஊதி ஊதித்தான் கருவேல மர விறகை எரிக்க வேண்டும்.  விறகுக் கடையில் விறகு வாங்கக் காசு இருக்காது.  கருவேல மரம் எரிந்தால் அதன் இன்னொரு பக்கத்திலிருந்து கரும்பழுப்பு நிறத்தில் ஒரு திரவம் கசியும்.  புகை மண்டும்.  கண்ணில் நெருப்புப் பட்டது போல் எரியும்.  அதை ஊதாங்கோலால் ஊதினால் சமயத்தில் நெருப்புப் பற்றி எரியும்.  அப்படி ஊதாங்கோலால் பூ பூ என்று ஊதிக் கொண்டிருக்கும் வேளையில் சன்னமாக அம்மாவின் காதில் ஒரு ஒலி வந்து விழும்.  விழுந்தடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடுவார்கள்.  பார்த்தால் மாடு சாணி போட்டிருக்கும்.  அதை மண்ணோடு தன் வலது காலை லேசாக வளைத்து பாதத்தால் ஒதுக்கி வைப்பார்கள் அம்மா.  அப்படிச் செய்து விட்டால் அது ரிஸர்வ்ட்.  யாரும் தொட முடியாது.  மாட்டுக்குச் சொந்தக்காரருக்கே அந்த உரிமை இல்லை.  அப்புறம் சமையல் வேலை முடிந்து போய் அந்த சாணியை எடுத்து வந்து கொல்லையில் சாணியோடு சாணியாகச் சேர்த்து அது ஓரளவு சேர்ந்த பிறகு அதில் வைக்கோலை சரியான அளவில் வெட்டிப் போட்டு அதன் மேல் பரதநாட்டியக் கலைஞர்கள் போல் தை தை என்று மிதித்தால் சாணியும் வைக்கோலும் கலந்து ஒரு பதத்துக்கு வரும்.  அதில்தான் சுவரில் றாட்டி (வறட்டி) தட்டுவது.  இந்த றாட்டியை விலைக்கும் விற்பார்கள் அம்மா.  இப்படி ஒரு ஐநூறு கதைகள் உண்டு.  தெய்வமே மனித உருக்கொண்டு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அம்மா. இது என் அம்மா மட்டும் அல்ல.  இந்திய கிராமத்து ஏழை அம்மாக்கள் எல்லாமே இப்படித்தான்.  இதை நினைத்து நான் உருக மாட்டேன்.  ஏனென்றால், இது எல்லாமே தன் பிள்ளைகளை வளர்ப்பதற்கான சுயநலம்.  பின்னாளில் அவந்திகாவை மணந்த பிறகு நானும் அவளும் என் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற போது ”என்ன ரவி, பாப்பாத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிய்க்கிறே?” என்று அவந்திகாவின் எதிரிலேயே கேட்டார்கள் அம்மா.  ஒரு பெண்ணுக்குப் பெண்ணே எதிரி.  எனக்காகத் தன் குடும்பத்தையே உதறி விட்டு வந்த ஒரு பெண்ணைப் பார்த்து அம்மாவுக்கு அன்பு பிறக்கவில்லை.  தன் பிள்ளையைத் தன்னிடமிருந்து தட்டிப் பறித்த பைசாசம் என்றே தோன்றியிருக்கும்.  அவந்திகா முதல் முறை சென்றதால் தன் சொற்ப சம்பளத்தில் அம்மாவுக்காக ஒரு பட்டுப் புடவை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தாள்.  அடுத்த முறை சென்ற போது, அந்தப் புடவையைக் கட்டினீர்களா, எப்படி இருந்தது என்று கேட்டபோது அந்தக் கலர் எனக்கு சரியாக இல்லை; வேலைக்காரியிடம் கொடுத்து விட்டேன் என்றார்கள் அம்மா.  தேநீர் கொடுக்கும் போது அவந்திகாவை மட்டும் விட்டு விடுவார்கள்.  இதையெல்லாம் பார்த்து ஏழு ஆண்டுகள் அம்மா நைனாவோடு பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்தேன்.  பிறகுதான் என் நண்பரின் பேச்சைக் கேட்டு மீண்டும் போனேன். 

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், வன்கலவி பலாத்காரங்கள் போன்றவை அதிக அளவில் நடப்பதற்கும் இந்த அம்மாக்கள் ஒரு காரணம் என்பது என் அவதானம்.  ஹைதராபாதில் ஒரு பெண்ணை மூன்று பேர் வன்கலவி செய்து எரித்துக் கொன்றான்கள் இல்லையா?  அந்த எண்ணம் அவர்களுக்குள் எப்படி உருவாகிறது?  கவனமாகக் கேளுங்கள்.  நான் ஒரு தோழியின் வீட்டுக்குப் போனேன்.  தோழி அப்போதுதான் வேலை முடிந்து களைப்பாக வீட்டுக்கு வந்து கதவைத் திறக்கிறார்.  நானும் அப்போதுதான் அங்கே போய்ச் சேர்ந்தேன்.  உள்ளே நுழைந்தால் ஹார்லிக்ஸ் தம்ளர் அப்படியே குடித்த படி வரவேற்பறை மேஜையில் கிடந்தது.  பால் தரையில் சிந்தியிருந்தது.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  பள்ளிக்கூடம் விட்டு வந்த மகன் ஹார்லிக்ஸ் குடித்து விட்டு அங்கேயே போட்டு விட்டுப் போய் விட்டான்.  வயது 16.  சரி, இதை யார் எடுத்து வைப்பது என்று கேட்டேன்.  நானோ அவன் தங்கையோ வந்துதான் எடுத்து வைக்க வேண்டும் என்றார் சிநேகிதி.  அது எனக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சி.  அந்தக் கலாச்சார அதிர்ச்சியிலிருந்து நான் இந்தக் கணம் வரை மீளவில்லை.  நான் அங்கே ஒரு தாயாகவோ தகப்பனாகவோ இருந்தால் என் மகனை அடிக்க மாட்டேன்; ஆனால் கிம்-கி டுக் படத்தில் துறவி தன் சீடனுக்குக் கொடுக்கும் தண்டனையைக் கொடுப்பேன். அதுதான் அவனை நல்வழிப் படுத்தும்.  ஸ்ப்ரிங், ஸம்மர், ஆட்டம்… படத்தில் வரும் பொடியன் தவளையின் காலில் கல்லைக் கட்டி அதைக் கொன்று விடுவான்.  சிறு பயல்.  துறவி அவனுடைய முதுகில் ஒரு கல்லைக் கட்டி விடுவார்.  ஒரு நாள் பூராவும் அந்தக் கல்லோடுதான் அலைவான் பொடியன்.  தூக்க முடியாமல் தூக்கி அவஸ்தைப் படுவான்.  அந்த மாதிரி என் மகனை ஒருநாள் எல்லா பாத்திரத்தையும் தேய்க்கச் சொல்வேன்.  ஒத்துவராவிட்டால் அவனை ஹாஸ்டலில் சேர்த்து விடுவேன்.  அங்கே ட்ரக் அடிக்டாக ஆகலாம்.  அல்லது, ஒழுக்கம் தெரிந்த பையனாக, அடுத்தவரைச் சுரண்டாத பையனாக மாறலாம்.  இதற்கும் ஹைதராபாத் சம்பவத்துக்கும் என்ன சம்பந்தம்?  உண்டு.  பெண்கள் என்றால் வேலைக்காரிகள்.  நம் வேலையைச் செய்பவர்கள் பெண்கள்.  நம் அடிமைகள்.  வீட்டுக்குள் இருப்பவர்களே அப்படி என்றால், வெளியில் இருப்பவர்களோடு ரத்த உறவு இல்லையே, அதனால் அவர்கள் நம் போகப் பொருட்கள்.  நமக்கு அவர்கள் மீது ஆசை வருகிறது.  புணர வேண்டும் என்று தோன்றுகிறது.  செய்.  அதில் என்ன தப்பு?   பெண்கள் நம் இஷ்டத்துக்கு அடி பணிய வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை ஒவ்வொரு ஆணிடமும் விதைப்பவர்கள் இந்த இந்திய அம்மாக்கள்.  இந்தத் தடிமாடுகளுக்கு என்ன கையா இல்லை?  இவன்கள் ஆறு அடி வளர்ந்த பிறகும் இந்தத் தடிமாடுகளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தால் இவர்கள் பெண்களை எப்படி மதிப்பார்கள்?  இதேபோல் நீயும் ஊட்டி விடு என்று மனைவியை டார்ச்சர் செய்வார்கள்.  பெண்களுக்குப் பெண்களே எப்படி எதிரிகளாக மாறுகிறார்கள் பாருங்கள்.  இப்படிப்பட்ட தறுதலைகள்தான் அம்மா அம்மா என்று கண்ணீர் விட்டு அன்னையர் தினம் கொண்டாடுகின்றன.  நேற்று என் மருமகளிடமிருந்து அவந்திகாவுக்கு போன். “அம்மா, நீங்கள் கார்த்திக்கை அடித்ததே இல்லையாம்.  திட்டியதே இல்லையாம்.  ஆனால் நான் திட்டுகிறேன் என்கிறான்.  உண்மையா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.  ஆமாம்.  உண்மைதான்.  பெருமையாக அவந்திகா என்னிடம் சொன்னாள்.  இருபத்து நாலு மணி நேரமும் அவந்திகாவுக்கு ஜால்ரா போடுவதையே என் தர்மமாக வைத்துக் கொண்டிருப்பவன் நான்.  சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதாவைப் போன்ற புரட்சிகரமான பெண் உலக சரித்திரத்திலேயே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.  அவள் அப்படிச் சொல்லும் போதெல்லாம் ”ஆமாம், அதில் என்ன சந்தேகம்?” என்று சீரியஸாக பதில் சொல்வேன்.  இப்போது கூட ”மோடி ஒரு அற்புதமான தலைவர்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.  “அதிலென்ன சந்தேகம்” என்பதே என் ரெடிமேட் பதில்.  அப்படிப்பட்ட நானே அன்று கொதித்து எழுந்து விட்டேன்.  “இதில் என்னம்மா பெரிய பெருமை?  என்னிடம் கேட்டால் கூடத்தான் நானும் இதையேதான் சொல்வேன்.  என் அம்மா என்னைத் திட்டியதே இல்லை.  அடித்ததே இல்லை  (ஆனால் இங்கே நான் என்ன பண்ணினாலும் திட்டு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.  வெளியில் சொல்லவில்லை)” என்றேன்.  ”ம்க்கும்.  நீ தலைச்சன்.  அதனால் திட்டியிருக்க மாட்டாங்க, அடிச்சுருக்க மாட்டாங்க” என்றாள்.  “இல்லை, எங்கள் ஆறு பேரையுமே அம்மா திட்டியதோ அடித்ததோ இல்லை” என்றேன். 

ஆக, பெண்களுக்கு எதிரான ஆண்களை உருவாக்கி விடுவதே அன்னையர்தான்.  நல்லவேளை, கார்த்திக்கை நான் அப்படி வளர்க்கவில்லை.  வீட்டில் என்னைப் போலவேதான் அவனும் இருப்பான்.  ஆண் வேலை, பெண் வேலை என்று எதுவும் இல்லை.  தன் வேலைக்காக யாரையும் ஏவ மாட்டான்.  இந்த ஐம்பது நாட்களும் இந்தியப் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் கணவன்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் வடித்துக் கொட்டிக் கொண்டு வேலைக்காரிகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.  ஊரடங்கு நீங்கினால்தான் அவர்களின் சிறைவாசம் நீங்கும்.  எனக்கு இப்படி நூறு பெண்களின் கண்ணீர்க் கடிதங்கள் வந்துள்ளன.  முக்கியமான விஷயம்.  அவர்கள் தங்கள் கணவரை வெறுக்கவில்லை.  குழந்தைகளை வெறுக்கவில்லை.  பிரியமாகத்தான் செய்கிறார்கள்.  ஆனால் அவர்களுக்காக செலவு செய்து கொள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் ஒரு நிமிடம் கூடக் கிடைப்பதில்லை.  ஒரு பெண் சொன்னார், தோசை போட்டுப் போட்டே ஓடாய்ப் போய் விடுவேன் போலிருக்கிறது என்று. 

தன் மகளுக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத ஒரு ஆள், தன் மகளை அவளுடைய இளம் வயதில் வீட்டை விட்டுத் துரத்தி அந்நியர் வீட்டில் புகலிடம் பெற வைத்த ஒரு ஆள் வயதான காலத்தில் Happy Womens’ Day வாழ்த்து அனுப்புவதெல்லாம் அயோக்கியத்தனம்.  ”ஏன், இத்தனை மூர்க்கமாக சிந்திக்கிறீர்கள்?  வயதான காலத்திலும் அவர் திருந்தி விட்டார் என்று நாம் நினைத்துக் கொள்ளலாகாதா?” என்றார் அந்தப் பெண்.  இல்லை; திருந்தியிருந்தால் இப்படி ஹாப்பி விமன்ஸ் டே வாழ்த்து அனுப்ப மாட்டார் என்றேன்.  ஆண்கள் கொண்டாடும் அன்னையர் தினம் எனக்கு எப்படி இருக்கிறது என்றால், பிணந்தின்னிக் கழுகுகள் எல்லாவற்றையும் தின்று விட்டு சந்தோஷ மிகுதியில் துள்ளிப் பறப்பதைப் போல்தான் இருக்கிறது.  இந்திய அன்னையரும் அவர்களைக் கொண்டாடும் ஆண்களும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது. 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai