இத்தனைக்கும் அந்த மக்கய்யங்கார் தி. ஜானகிராமனையெல்லாம் படித்திருக்கிறதுதான். படித்தும் இப்படி மக்காக இருப்பதுதான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவர் அண்ணனோ தம்பியை ஜீனியஸ் என்கிறார். எனக்கு என்னவோ அண்ணன்தான் புத்திசாலி என்று தோன்றுகிறது. அண்ணனோடு மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் சலிப்பே தோன்றாது. அடிக்கடி தனது நாத்திகக் கருத்துகளை உதிர்ப்பார். அதை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன். தியாகய்யர் தஞ்சாவூர் தெருக்களில் பிச்சை எடுத்தார் என்று சொல்லி இருந்தது அல்லவா, தி. ஜானகிராமன் மோகமுள்ளில் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
தந்தி ஒலிக்க, வாய் பாட, செம்பை ஏந்திப் பிட்சை ஏற்ற தியாகய்யர், தெருவிலா நடந்தார்? திக்கை நிறைத்த நாதத்தில் அலைந்த அவர், செம்பை ஏந்தியது அரிசிக்கா? அல்லது நாதவெள்ளத்தில் மொள்ளுவதற்கா?”
***
மனோ என்னுடைய கட்டுரையைப் பகிர்ந்த போது எழுத்தாளர் சாரு நிவேதிதா என்று என்னைக் குறிப்பிட்டிருந்தார். நான் உடனே நடிகர் கமல்ஹாசன் என்றா குறிப்பிடுவீர்கள் என்று கேட்டு ஒரு காமெண்ட் போட்டிருந்தேன். அதற்கு மனோவின் பதில்:
என்னுடைய நண்பர்கள் பட்டியலில் வாசிப்பு அனுபவம் இல்லாத பலருக்காக எழுதியது என்று விளக்கம் கொடுத்துள்ளார். பிறகு அந்த எழுத்தாளர் அடைமொழியை நீக்கி விட்டு பெயருக்குப் பின்னால் அவர்கள் சேர்த்து விட்டார். உலகில் தமிழில் மட்டும்தான் இந்தப் பைத்தியக்காரத்தனமும் நடந்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் குமரேசன், எழுத்தாளர் கந்தசாமி, எழுத்தாளர் முத்துசாமி. அது என்னய்யா எழுத்தாளர்? சல்மான் ருஷ்டியைக் குறிப்பிடும்போது எழுத்தாளர் சல்மான் ருஷ்டி என்றா குறிப்பிடுகிறீர்கள்? இதற்கு ஒரு விளக்கம் சொல்வார்கள். சல்மான் ருஷ்டி என்றாலே அவர் ஒருத்தர்தான் என்று. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், சாரு நிவேதிதா என்றே போடுங்கள். சாரு நிவேதிதா என்ன கார்ப்பொரேஷன் கமிஷனரா, சலூன் கடை ஓனரா, ஆட்டோ டிரைவரா, டாக்டரா என்று மற்றவர்கள் கண்டு பிடித்துக் கொள்ளட்டும் என்கிறேன். கண்டு பிடிக்க முடியாதவனுக்கு சாரு என்ன சொன்னாலும் புரியப் போவதில்லை. இனிமேல் தொழில் பெயரை அடைமொழியாகப் போடாதீர்கள். இன்னார் யார் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் புரிந்து கொள்ளாமலே போகட்டும். எழுத்தாளனை அவமானப்படுத்தாதீர்கள். இது ஒரு அவமானம் என்றே தெரியவில்லை என்பதையும் நான் புரிந்துதான் வைத்திருக்கிறேன். ஆனால் இது பற்றி நான் நூறு முறை எழுதிவிட்டேன் என்றபடியால் கொஞ்சம் காரம் கூட்டி எழுதியிருக்கிறேன். மேலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது ரொம்பப் பெரிய பிரச்சினை. நீங்கள் எழுத்தாளர் என்று என்னை அறிமுகம் செய்தால், எந்தப் படத்துக்கு எழுதியிருக்கிறார் என்று கேட்பான். ஐயா, திருவாளர் கமல்ஹாசனே எழுத்தாளர் என்றால் படத்துக்கு எழுதுபவன் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறார்? பிக்பாஸில் இயக்குனர் ஷங்கரை அறிமுகம் செய்யும் போது எழுத்தாளர் ஷங்கர் என்றுதானே அறிமுகம் செய்தார்? என்ன காரணம்? ஷங்கரின் படங்களுக்கு ஷங்கர்தான் முன்பு எழுதிக் கொண்டிருந்தார். அதனால் ஷங்கர் எழுத்தாளராகி விட்டார். அவ்மானமா இருக்கு. விட்ருங்க ப்ளீஸ்.
***
நேற்றைய கட்டுரையில் விடுபட்டவை. பாட்டி மடிசார் கட்டிக் கொண்டு எதிர்வீட்டு பாயம்மாவோடு பேசிக் கொண்டிருப்பார். அந்தக் கதையை எனக்குச் சொன்ன பிராமணப் பெண் சிறுமியாக இருந்த போது அவர்கள் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்ததும் ஒரு முஸ்லீம் பெண்தானாம். அவர்களையும் இவர்கள் பாயம்மா என்றுதான் குறிப்பிடுவார்களாம். இந்தக் காலத்தில் இதையெல்லாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
இன்னொரு பெண் சொன்ன சம்பவம் இது: அவர் ஒரு பிரபலமான பெண்கள் கல்லூரியில் ஃப்ரெஞ்ச் துறையில் பேராசிரியராக இருப்பவர். வகுப்பில் எழுபது மாணவிகள். அதில் ஐம்பத்தைந்து பேர் கிறிஸ்தவப் பெண்கள். ஆம், அது ஒரு கிறிஸ்தவக் கல்லூரி. (இதற்குப் பேசாமல் பெயரையே போட்டு விடலாம் என்கிறீர்களா? வேண்டாம். வம்பு வரும்.) மீதி பதினைந்தில் பதிமூணு இந்து, ரெண்டு முஸ்லீம். மாலைக் கல்லூரியில் இந்துப் பெண்கள் அதிகம் இருப்பர். ஒருநாள் வகுப்பு முடிந்து விட்டது. ஆனால் மணி அடிக்கவில்லை. இன்னும் பத்து நிமிடம் இருந்தது. அதனால் பேராசிரியை மாணவிகளோடு பொதுவாகப் பேச ஆரம்பிக்கிறார். பேச்சு தொலைக்காட்சி பற்றிப் போகிறது. பல மாணவிகளும் தங்கள் கருத்துக்களைச் சொல்கிறார்கள். அப்போது ஒரு முஸ்லீம் மாணவி எழுந்து, “இந்த இந்திய சேனல்களே சுத்த மோசம் மேம். நான் அல்-ஜஸீரா மட்டும்தான் பார்ப்பேன். நீங்களும் அல்-ஜஸீரா பாருங்கள்” என்றாளாம். அவள் சொல்லி முடித்ததும் வகுப்பே கப்சிப் என்று ஆகி விட்டது. கலகல என்று இருந்த வகுப்பில் திடீரென்று மயான அமைதி சூழ்ந்து விட்டது. எல்லோருக்குமே அவள் சொன்னது அதிர்ச்சியாகி விட்டது. கவனியுங்கள். அங்கே இருந்தது முக்கால்வாசி கிறிஸ்தவப் பெண்கள். இரண்டே இரண்டு முஸ்லிம் மாணவிகள்தான்.
இது பற்றி நான் எதுவும் எழுத வேண்டாம். இஸ்லாமிய சமுதாயம் எப்படி மைய நீரோட்டத்திலிருந்து விலகி அந்நியமாகிறது என்பதற்கான ஆதாரங்களாக இதையெல்லாம் சொன்னேன்.
***
இந்தப் பூச்சி தொடரில் அர்ஜுன் என்ற வாசகர் உங்களுக்குப் பரிச்சயமாகி இருக்கலாம். அவர் எழுதிய கடிதம் கீழே:
Dear Charu,
Hope your are doing good!
I’ve been a participant of both your lectures, obviously top notch coming from your mind, lucid and precise and on par with any world class lecture that I’ve listened to if not better.
From Alain Robbe-Grillet to Agastyar, Fifth seal and Bela Tarr. Gotta read காதுகள் and செம்பருத்தி.
I wanted to ask my questions to you in live, but was shy and hesitant, you have already spoken for two hours, din’t want to strain you more, and even if I want to ask questions I couldn’t choose one, because hundreds of questions are popping up in my mind, also I felt guilty of occupying others participants time with my questions and finally when I gather the strength to ask a question and unmuted the microphone that’s when your cat Lucky popped on the screen.
It was such a mesmering and lovely sight watching you being surrounded by cats, so rather than asking my question, I resorted to lean back and enjoy your interactions with the cats. I’m a huge admirer of cats not only cats but any animal belonging to Feline family tree.
My only request to you as an admirer is to write a book on cats. I’ve re-read your blog posts on cats hundreds of times and they are the Pinnacle of the “pleasure of the text”.
I would argue hands down that no one in the history of Tamil literature can write about cats like you did. (Exile is an example) Even cats would agree (meaow).
T.S. Eliot wrote a book of light verse called Old Possum’s Book of Practical Cats, a collection of 15 poems, dedicated to his godchildren, regarding the different personalities and eccentricities of cats.
Andrew Lloyd Webber’s long-running Broadway musical, Cats.
When I saw you being surrounded by cats in the zoom conference, I got reminded of this T.S. Elliot reading out the naming of cats in his own voice.
Hemingway was gifted a six-toed polydactyl cat he named Snowball. He created a small colony of felines that populated the World Today, some 40 to 50 six-toed descendants of Snowball are still allowed to roam around the house. Polydactyl felines are now called as “Hemingway Cats.”
William S. Burroughs penned an autobiographical novella, The Cat Inside, about the cats he owned throughout his life.
Even the final journal entry Burroughs wrote before he died referred to the pure love he had for his four pets:
“Only thing can resolve conflict is love, like I felt for Fletch and Ruski, Spooner, and Calico. Pure love. What I feel for my cats present and past. Love? What is it? Most natural painkiller what there is. LOVE.”
Samuel Johnson erected a statue for his cat.
All we need from you is a novel or novella on cats!!!!!!!!
Waiting eagerly for your reply!
Beloved Reader,
Arjun.
அர்ஜுனின் மேற்கண்ட கடிதத்தைப் படித்ததும் எனக்குத் தோன்றியது ஒரு பழமொழி. கற்றது கைம்மண் அளவு. ஏனென்றால், வில்லியம் பர்ரோஸ் பற்றி நிறையவே படித்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் பார்த்தால் அவர் வளர்த்த நான்கு பூனைகள், பூனைகள் பற்றி அவர் எழுதிய குறுநாவல் எல்லாம் அர்ஜுன் சொல்லித்தான் தெரிகிறது. படிக்க வேண்டும்.
அர்ஜுனின் கடிதத்தைத் தமிழில் மொழிபெயர்க்கத்தான் நினைத்தேன். ஆனால் நேரம் இல்லை. கடிதத்தில் உள்ள எல்லா விஷயங்களுமே எனக்குப் புதிதுதான். விரைவில் படிக்க வேண்டும். ஆனால் அர்ஜுன் குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயம் விரைவில் நடக்கும். பூனைகள் பற்றிய என் நாவலை விரைவில் முடித்து விடுவேன். அதற்கு ஊக்கம் கொடுத்தது இயக்குனர்-ஒளிப்பதிவாளர் செழியனும் அராத்துவும்தான். அவர்கள் சொல்லியிருக்காவிட்டால் இத்தனை சடுதியில் அதைச் செய்திருக்க மாட்டேன். அதற்காகத்தான் காஃப்காவின் மெட்டமார்ஃபஸிஸைப் படிக்க வேண்டியிருந்தது. நாவல் வந்து விட்டால் செழியனின் இயக்கத்தில் அது படமாக வந்தால் நான் அதிர்ஷ்டசாலி. முதலில் நாவலை முடிக்கிறேன்.
மாயா இலக்கிய வட்டம்/ஸூம் சந்திப்பில் நான் உரையாற்றிய போது மணி மூன்றரையிலிருந்து ஆறு மணி வரை – அந்த நேரம்தான் பூனைகளின் விளையாட்டு நேரம். ஐந்து பூனைகளும் அதகளம் செய்து கொண்டிருந்தன. ஸிஸ்ஸி தாய்ப் பூனை. லக்கி – காலிக்கோ. மற்ற மூன்றும் – பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி – வேறொரு பூனைக்குப் பிறந்தவை. ஸிஸ்ஸிதான் பால் கொடுத்து வளர்த்தது. லக்கியும் ஸிஸ்ஸியும் என் நாற்காலியின் மேல்பகுதியில் என் தலைக்கு மேலே ஓடிக் கொண்டும் நின்று கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தன. அது காணொலியில் தெளிவாகத் தெரிந்திருக்கும். உரைக்கும், உரையாடலுக்கு அது ஒன்றும் தொந்தரவாக இல்லை. அந்த வகையில் அந்தக் காணொலி மிக அபூர்வமான ஒன்றுதான். நேரில் வந்தால் நீங்கள் பார்க்கவே முடியாது. பூனை நாய் மாதிரி அல்ல; அந்நியர்களைக் கண்டால் பயந்து ஓடி விடும். பெர்ஷியன் பூனை மட்டும்தான் விதிவிலக்கு.
காயத்ரி சொன்ன இரண்டு சம்பவங்களை பெயரை மாற்றி ஏதாவது ஒரு நாவலில்தான் ஏற்றியிருக்க வேண்டும். அவ்வளவு அபூர்வமான சம்பவங்கள் அது. ரெண்டு மட்டும் அல்ல; ஒரு ஐம்பது இருக்கும். அந்த அம்பதையும் தொகுத்தாலே ஒரு ஆன்மீக cum மிஸ்ட்ரி நாவலாக வரும். நாவலில் சேர்க்காமல் இங்கே சொல்லக் காரணம் இருக்கிறது. படிக்கப் படிக்க உங்களுக்கே புரியும். இந்தக் கதையில் மூன்று பிராணிகள் வருகின்றன. ஒன்று, நமக்குப் பிடிக்காதது. இன்னொன்று, பலருக்கும் பிடிக்காதது, மிகச் சிலருக்குப் பிடித்தது. மூன்றாவதும், பலருக்கும் பிடிக்காதது, சிலருக்குப் பிடித்தது. ஒருநாள் காயத்ரி வீட்டின் குடும்ப நண்பர் பிரதீப் சொல்கிறார், காயத்ரி, நேற்று எங்கள் வீட்டில் பூரான் வந்தது. ரொம்ப பேஜாராப் போச்சு.
அது எப்டிப்பா, ஆச்சரியமா இருக்கே. நீங்க இருக்கிறது அபார்ட்மெண்ட். அங்கே எப்டி பூரான் வரும்? இங்கே பார், நாங்கள் இந்த அபார்ட்மெண்ட்ல பத்து வருஷமா இருக்கோம். ஒரு நாள் கூட பூரான் வந்ததில்ல.
காயத்ரி இதைச் சொல்லி அடுத்த நாள் சாப்பாட்டு மேஜை அருகே காலையில் ஒரு பூரான் ஓடியது.
இப்போது இரண்டாவது பிராணி. எலி. எலி என்றாலே நமக்கு நினைவு வருவது ப்ளேக். எலியை யாருக்கும் பிடிக்காது. ஆனால் வெள்ளெலியைப் பலரும் வளர்க்கிறார்கள். ஐரோப்பாவில் எலி வளர்க்கிறார்கள். இங்கேயும் சில மேட்டுக்குடி ஆட்கள் எலி வளர்க்கிறார்கள். கார்த்திக்கும் கொஞ்ச நாள் எலி வளர்த்தான். அதற்கென்று குட்டியாகத் தனி வீடு. அந்த வீட்டில் ஒரு ஊஞ்சல். இன்னும் பல விளையாட்டுப் பொருட்கள். எல்லாம். அதற்கென்று தனியாக உணவு. எல்லாம். ஆனால் இந்திய மத்திய வர்க்கத்தினரான நமக்கு எலி என்றால், சாக்கடையில் திரியும் பெருச்சாளி ஞாபகம்தானே வருகிறது? நாகூரில் எங்கள் வீட்டில் எலிப் பொறி என்பது ஒரு அத்தியாவசியப் பொருள். எலிப் பாஷாணம் வைத்துத்தான் எலி பிடிப்பார்கள். மனிதனைக் கடித்தால் உடனடியாக மரணம் சம்பவித்து விடக் கூடிய கொடிய விஷத்தைத் தன் வாயிலேயே வைத்திருக்கும் நல்ல பாம்பு வீட்டுக்குள் வந்து விட்டால் கூட போடா செல்லக்குட்டி, வீட்ல கொழந்தைங்களை பயமுறுத்தாதடா, உன் வீட்டுக்குப் போய்டு, இதோ அம்மா பாலும் முட்டையும் கொண்டாந்து வைக்கிறேன் என்று சொல்லி அதன் புற்றுக்குப் போய் பாலும் முட்டையும் வைக்கும் பழக்கம் உள்ள அம்மா எலி வந்தால் கடுப்பாகி விடுவார்கள். இத்தனைக்கும் பாம்பு சிவனுக்குப் பிரியமானதாக இருப்பதைப் போல் எலி பிள்ளையாரின் வாகனம்தானே? இருந்தாலும் யாருக்கும் எலி பிடிப்பதில்லை. ஆனால் மூஞ்சூர் பிரமாதமாக இருக்கும். மூஞ்சூர் குழந்தை மாதிரி. மூஞ்சூரை யாரும் அடிக்க மாட்டார்கள். ஆனால் எலி மாட்டினால் பின்னி எடுத்து விடுவார்கள். அது என்னமோ எலி வாங்கி வந்த வரம் அப்படி.
எலிப்பொறியில் கருவாட்டுத் துண்டை மாட்டி அதோடு எலிப் பாஷாணத்தை வைத்து விடுவார்கள். மாட்டிக் கொண்டு விடும். எலிப் பொறியில் இரண்டு விதம் உண்டு. ஒன்று, திறந்த வாக்கில் இருக்கும். பொறியில் கருவாட்டையோ தேங்காய்த் துண்டையோ வைத்தால் அதை எடுக்க வரும் எலி அதைப் பிய்க்கும் போது பொறி நகர்ந்து மேலே தூக்கிச் செருகப்பட்டுள்ள வளையம் பட்டென்று கீழே வரும். அதில் எலியின் தலை மாட்டி இறந்து விடும். இன்னொன்று, எலிப்பெட்டி. அதற்குள் உயிரோடு மாட்டிக் கொள்ளும். அது கொஞ்சம் வேலை வைக்கக் கூடியது. பெட்டியைக் குப்பைத் தொட்டிக்கு எடுத்துக் கொண்டு போய் கட்டையைத் திறந்தால் எலி ஓடி விடும். சாக அடிக்க முடியாது. எங்கள் வீட்டில் இருந்தது முன்னது. ஆனால் அத்ல் பெருச்சாளி மாட்டாது. பெருச்சாளிக்கு அந்தப் பொறி சாதாரணம். ஒரு இழுப்பில் தலையை வெளியே இழுத்து விடும். ஆனால் எலிப்பெட்டியில் மாட்டும். இருந்தாலும் பெருச்சாளியைப் பிடிப்பது கடினம்தான். பன்றியை விட அருவருப்பானது பெருச்சாளி. எப்போதும் சாக்கடையில்தான் கிடக்கும்.
ஒருமுறை அவந்திகாவுக்கு லெப்டோஸ்பைரோஸிஸ் என்ற எலி ஜுரம் வந்தது. ஆனால் வந்த புதிதில் அதை எல்லோரும் டைஃபாய்ட் என்றே நினைத்தனர். எல்லோரும் என்றால் டாக்டர். டெஸ்ட் எடுத்துப் பார்த்ததிலும் டைஃபி பாஸிடிவ் என்றே வந்தது. டைஃபாய்டுக்கே மருந்து கொடுத்தார்கள். நடந்து பதினான்கு வருடம் ஆகியிருக்கும். சின்மயா நகரிலிருந்து அப்போதுதான் மைலாப்பூருக்குக் குடி வந்தோம். அது ஒரு கதை. சின்மயா நகரில்தான் அவந்திகாவின் பெற்றோர் வீடு இருந்தது. அவர்கள் அவந்திகா ஒரு அபிராமணனைக் கல்யாணம் பண்ணி விட்டாள் என்ற வருத்தத்தில் இருந்தார்கள். அதுவும் நியாயமானதுதான். ஏனென்றால், வீட்டைப் பகைத்துக் கொண்டு பதினெட்டு வயதில் ஒரு அபிராமணனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாள் அவந்திகா. அவனோ ராட்சசனாக மாறினான். நிறைமாத கர்ப்பிணியை எட்டி உதைத்தான். காரணமே இருக்காது. திருமணமான ஒன்றரை ஆண்டில் – கார்த்திக் அப்போது ஆறு மாதக் குழந்தை – அவன் மூளைக் காய்ச்சல் வந்து மாண்டு போனான். அதன் காரணமாக அவந்திகாவின் வீட்டாருக்கு அபிராமணர் என்றாலே பயம். அதுவும் மீசை வைத்திருந்தால் ரொம்ப பயம். நான் அவந்திகாவைக் கேட்டேன், ஒரு புத்திசாலி அய்யங்கார் பெண்ணான நீ பதினெட்டே வயதில் ஒரு தறுதலைப் பயலை ஏன் கல்யாணம் பண்ணினாய். பார்க்க ஒன்றும் தறுதலை போல் தெரியவில்லை. ஒரு பிரபல கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தான். பாஸ்கட்பாலில் தமிழ்நாடு சார்பாக அகில இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் இதெல்லாம் காரணம் இல்லை. என் அப்பா என்னைத் தெருவில் இழுத்துப் போட்டு அடிப்பார். தேவ்டியா தேவ்டியா என்றும் இன்னும் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். என்னது, தெருவில் இழுத்துப் போட்டு அடிப்பாரா? ஆமாம், ஆஃபீஸிலிருந்து வந்து வீட்டுக்குள்ளேயே போயிருக்க மாட்டேன். அப்படியே தெருவிலேயே நிறுத்தி வைத்து நடு ரோட்டில் அடிப்பார். மாட்டை அடிப்பது போல் அடிப்பார். ஏன்? ஆஃபீஸ் முடிந்து இவ்வளவு நேரம் எவனோடு பொறுக்கிக் கொண்டிருந்தாய்? ஏன் இவ்வளவு லேட்? சரி, ஏன் அவ்வளவு தாமதமாகப் போவாய்? நீ வேற சாரு, சம்பளப் பணத்தையெல்லாம் பிடுங்கிக் கொள்வார். ஆஃபீஸிலிருந்து – ஆஃபீஸ் மவுண்ட் ரோட்டில் இருக்கும் – அங்கேயிருந்து சின்மயா நகருக்கு நடந்தே வர வேண்டும். நேரம் ஆகாதா? ரோட்டிலேயே அடி. அப்போது பார்த்து இளங்கோ என்னைக் கல்யாணம் செய்து கொள் என்றான். ஓடியே போய் விட்டேன். என் அப்பனின் அடியிலிருந்து தப்பிப்பதற்காகவே கல்யாணம் பண்ணிக் கொண்டேன். ஒரு கொலைகாரன் கேட்டிருந்தால் கூட ஓடியிருப்பேன். அது சரி, எப்படி பதினெட்டு வயதில் படிக்காமல் வேலைக்குப் போனாய் நீ? என் மார்க்குக்கு என்னென்னவோ கோர்ஸெல்லாம் கிடைத்தது. உன்னைப் படிக்க வைக்க மாட்டேன், வேலைக்குப் போ என்று சொல்லி விட்டார் அப்பா. அவரை மீறி வீட்டில் எதுவும் செய்ய முடியாது. அம்மாவோ முழுப் பைத்தியம். அவர்களுக்கு எதுவுமே புரியாது, தெரியாது. என்ன செய்ய முடியும்?
ஆனால் ரத்தம் சுண்டியதும் ஆள் சாத்வீகமாகி விட்டார். என் மாமனார். இவரா அவர் என்பது மாதிரி இருப்பார். உங்களை மாதிரி ஒரு மனுஷனைப் பார்த்ததே இல்லை என்று என்னைப் பார்க்கும் போதெல்லாம் சொல்வார். ஸீரோ டிகிரி நாவலை எந்தப் பதிப்பகமும் பதிப்பிக்க முன்வராமல் மறுத்து விட்டதால் நானேதான் பதிப்பிக்க வேண்டியிருந்தது. நானே தான் விற்கவும் வேண்டியிருந்தது. ஒரு தபால் இலாகா ஸ்டெனோ புத்தகம் போட்டு அதை எப்படி விற்பது? அவந்திகா தன் கைவளை, மோதிரம் எல்லாவற்றையும் விற்றுக் கொடுத்தாள். புத்தகத்தை அச்சடித்தாயிற்று. இப்போதைய தமிழினி பதிப்பகம் வசந்த குமார் அப்போது ஒரு அச்சகம் வைத்திருந்தார். அதில்தான் அவர் அடித்துக் கொடுத்தார். நான் கேட்ட மாதிரியே நல்ல முறையில் அடித்துக் கொடுத்தார். ஆனால் அவரே பிரசுரம் பண்ண மறுத்து விட்டார். ஒரு மாதிரி சிரித்துக் கொண்டே. அது போகட்டும். அப்படி மறுத்தவர் அநேகம் பேர். அச்சடித்தாயிற்று. எப்படி விற்பது? அந்த நேரம் பார்த்து தினமலர் ரமேஷ் வார மலரில் ஸீரோ டிகிரி பற்றி ஒரு பக்கம் எழுதி மூன்று பக்கத்தை அந்த நாவலிலிருந்து எடுத்துப் போட்டார். துணிச்சல்தான். சிறு பத்திரிகை ஆசாமிகளுக்கு வராத துணிச்சல் பெரும் பத்திரிகை நண்பருக்கு வந்தது. ஒரு அறுநூறு மணியார்டர் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக. ஆரம்பத்தில் ஐம்பது அறுபது என்று. பிறகு இருபது. பிறகு பத்து. ஒரு இரண்டு மாதத்தில் அறுநூறு மணியார்டர். உங்களுக்கு அந்தப் பிரச்சினை புரியவே புரியாது. மணியார்டரில் பணம் வாங்கி விட்டால் புத்தகத்தை எந்த விலாசத்துக்கு அனுப்புவது? மணியார்டர் ரசீதில் கீழே உள்ள பகுதியைக் கிழித்துக் கொடுப்பார்கள் இல்லையா, அதில் பணம் அனுப்பிய ஒருத்தர் கூட அவரது விலாசத்தை எழுத மாட்டார். ஒருத்தர் கூட. உடனே என் மாமனார் – அய்யங்கார் இல்லையா, உடனே அவருக்கு விஷயம் விளங்கி விட்டது – தபால்காரரை பேச்சில் மயக்கி விட்டார். அல்லது, நானும் தபால் இலாகாவில்தான் பணியில் இருக்கிறேன் என்று சொல்லியிருப்பார். எனக்கு வந்த அத்தனை மணியார்டரையும் மாமனாரிடம் கொடுத்து விட்டுப் போய் விடுவார் தபால்காரர். பிறகு சாலி கிராமம் டெலிவரியை முடித்து விட்டுத் திரும்பும் போது மீண்டும் மாமனார் வீட்டுக்கு வருவார். அதற்குள் இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். மாமனார் ஒரு பேப்பரில் அத்தனை பேர் விலாசத்தையும் தெளிவாக எழுதி வைத்து விடுவார். எங்கள் வீடும் அவர் வீடும் ஒரே தெருவில் நாலைந்து வீடு தள்ளி இருந்தது. நான் ஆபீஸ் விட்டு வந்து அவரிடம் பட்டியலை வாங்கி புத்தகங்களைப் பார்சல் செய்து அனுப்புவேன். ஆமாம், இதை எதற்குச் சொன்னேன்? ஆங், அவந்திகாவின் அப்பா என்னைப் பார்த்து என்னோடு பழகிய பின் என்னை ஒரு உத்தமன் என்று கண்டு கொண்டு விட்டார். அவர் மட்டுமல்ல; அவர்கள் எல்லோருமே.
அதனால் பெற்றோர் வீட்டுக்கருகே இருந்தால் அவந்திகாவுக்கு வசதியாக இருக்குமே என்பதால்தான் சின்மயா நகரில் வசிக்க சம்மதித்தேன். அங்கேயே ஒரு அபார்ட்மெண்ட் வீடும் குறைந்த விலையில் வாங்கினோம். அப்போதுதான் சென்னையில் பெருவெள்ளம் வந்தது. 2005. சின்மயா நகரில் இடுப்பளவு வெள்ளம் ஓடியது. அது பற்றி ராஸ லீலாவில் விரிவாக எழுதியிருக்கிறேன். வெள்ளம் முடிந்ததும் வீட்டை விற்று விடலாம் என்று சொல்லி விட்டாள் அவந்திகா. காரணம், நாங்கள் இருந்தது கூவம் அருகில். தண்ணீர் வடிய வழியில்லை. அது ஒரு முட்டுச் சந்து வேறு. அதெல்லாம் போக, வீட்டுச் சுவர்களில் எங்கே தொட்டாலும் ஷாக் அடித்தது. அதுவும் போக, கழிப்பறையில் மேல் சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது. வந்த விலைக்கு விற்று விட்டு மைலாப்பூருக்குக் குடி பெயர்ந்தோம். அப்போதெல்லாம் அவந்திகாவுக்கு வருடம் ஒரு முறை டைஃபாய்ட் வரும். நான் வெளிநாட்டில் இருக்கும் போது கூட உடனே கிளம்பி வா என்று தந்தி போல் போன் வரும். வந்து பார்த்தால் ஒரு பத்து நாட்களாக படுத்த படுக்கையில் கிடப்பாள். டைஃபாய்ட். அப்படிப்பட்டவள் உணவு விஷயத்தில் எப்படி இருக்க வேண்டும்? மைலாப்பூர் வந்து இறங்கியதும் உடனடியாக சாமான்களை எடுத்து வைத்து வீட்டை முறைப்படுத்தும் காரியத்தில் இறங்கினாள். நான் சொன்னேன், கொஞ்சம் கொஞ்சமாகச் செய்வோம். ஏனென்றால், நாள் பூராவும் இந்த ஒழுங்குபடுத்தலில் போய் விடுவதால் சமைக்க நேரம் இல்லை. அதனால் வெளியிலிருந்து வாங்கி சாப்பிட வேண்டியிருக்கிறது. உனக்கோ வெளிச்சாப்பாடு ஒத்துக் கொள்ளாது. எனவே… ம்ஹும். இப்போதே இதையெல்லாம் ஏறக் கட்டியே ஆக வேண்டும். வீட்டை முறைப்படுத்தும் வேலையில் முழுமூச்சாக இறங்கினாள். சாப்பாடு வெளியில். எந்த அய்ட்டத்திலோ எலி மூத்திரம் பட்டிருந்தது போல. எலிக் காய்ச்சல். ஆனால் மருத்துவர்கள் மாற்றி மாற்றி டைஃபாய்டுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று மாதம் ஆயிற்று, உடம்பு தேறவில்லை. ஆஃபீஸுக்கும் போகவில்லை. சம்பளம் இல்லாத விடுப்பு. டாக்டரை மாற்றினோம். சாயி ரமணன். அவர்தான் அவந்திகாவைப் பிழைக்க வைத்தவர். அவர்தான் முதல் முதலில் எதற்கும் லெப்டோவும் எடுத்து விடுவோம் என்றார். பார்த்தால் லெப்டோ அளவு உச்சத்தில் இருந்தது. அந்த அளவைப் பார்த்தவர்களெல்லாம் எப்படி நடமாடுகிறீர்கள் என்றார்கள். படுத்த படுக்கையாகி விடுவார்களாம். காலையில் ஒரு ஊசி. மாலையில் ஒரு ஊசி. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊசியின் விலை ஆயிரம் ரூபாயோ என்னவோ. இப்போது அந்த ஊசி நூறு ரூபாய்க்கும் கம்மி. அப்போது என் போறாத காலம். அப்படி விலை. பதினைந்து நாள் இரண்டு வேளை ஊசி, அப்புறம் ஒரு வேளை. சில பல லட்சங்கள் செலவாயிற்று. கணக்குப் பார்க்கக் கூடாது. பிழைத்ததே மறு பிழைப்பு. ஒரு கட்டத்தில் போய் விடுவாள் என்றே நினைத்து அழுது விட்டேன். பிழைத்து விட்டாள். ஆனால் இன்றளவும் செரிமானம் போய் விட்டது. எது சாப்பிட்டாலும் ஒத்துக் கொள்ளாது. பழம், மோர் சாதம், மிதமான ரசம். இவ்வளவுதான். அதனால் என்னதான் ஜீவகாருண்யம் என்றாலும் எனக்கு எலி என்றால் பயம்தான். ஆனால் இந்த பயம் நானே சாக்கடை எலியாக வாழ்ந்த போது வரவில்லை. பயம் எப்போது வரும்? அறிஞர் கார்ல் மார்க்ஸ் சொன்னது போல இழப்பதற்கு ஏதோ ஒன்று இருந்தால்தானே பயம் வரும்? சாக்கடை எலியாக வாழ்ந்தால் இழப்பதற்கு என்ன மயிரா இருக்கிறது? ஒரு பயமும் இல்லை. ஏன் சொல்கிறேன் என்றால், ஒருமுறை நான் கிட்டத்தட்ட நூறு எலிகளோடு வாழ்ந்தேன். இருக்கும். நூறே கம்மி. அவந்திகாவை சந்திப்பதற்கு முந்தி தனியாக மைலாப்பூர் சாயிபாபா கோவிலுக்குப் பின்னால் உள்ள வி.பி. கார்டன் தெருவில் வசித்த போது அழுகல் தக்காளிகளை உட்கொண்டு உயிர் வாழ்ந்து வந்தேன். பட்டினி என்றால் அந்தப் பட்டினி இந்தப் பட்டினி இல்லை. மனித நரகலை மென்று தின்னும் நாயும் நானும் ஒன்றாகவே பனகல் பார்க்கில் படுத்துக் கிடந்திருக்கிறோம். அழுகல் தக்காளி அப்போது அமிர்தம். அப்போது நான் குடியிருந்த பொந்து வீட்டில்தான் நூறு எலிகள் இருந்தன. எல்லாம் சின்ன சின்ன எலிகள். நம் மேலே எல்லாம் குதித்துக் குதித்து ஓடும். செம ஜாலியாக இருக்கும். அப்போதும் மத்திய காலகட்டத்தில் ஐரோப்பாவில் வந்த ப்ளேக் நோயும் ஐரோப்பாவில் பாதி ஜனத்தொகை அந்த ப்ளேகினால் அழிந்து போனதும் தெரியும். ஆனால் பயமில்லை. லெப்டோஸ்பைரோஸிஸை நேரில் பார்த்த பிறகு பயம் வந்து விட்டது.
சென்ற வாரம் காயத்ரி சொன்னாள், எங்கள் வீட்டில் மூன்று எலிகள் வந்திருக்கின்றன என்று. அதன் வால்கள் மட்டும் வரிசையாகத் தெரிந்தனவாம். மூன்று வால்கள். என்னடா இது அக்கிரமம். பூனைதான் வளர்க்க வேண்டும் சாரு என்றாள். அய்யய்யோ. பூனை வளர்த்து நான் படும் பாடு போதாதா? ஒரு நாளில் இருபத்து நாலு மணி நேரம். எனக்கோ எழுதுவதற்கு நாலு மணி நேரம்தான் கிடைக்கிறது. இன்றுதான் ஜெகாவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன்.
ஓமானிலிருந்து வந்து விட்டானாம். குவாரண்டைனில் இருக்கிறான். நுங்கம்பாக்கத்தில் ஏதோ ஒரு ஓட்டலில். தங்க, திங்க, வரி எல்லாம் சேர்த்து 1500 ரூ. பதினாலு நாள் அறைக்குள்ளேயே கிடக்கணும். மூணு விதமான ஆப்ஷன் கொடுத்தார்களாம். அவன் வார்த்தைகளிலேயே பார்க்கலாம். ஒன்று, தமிழக அரசு ஏற்பாடு செய்த காலேஜ் ஹாஸ்டல் (இப்ப வந்தவைங்க வரைக்கும் வண்டலூர்ல இருக்குற VIT காம்பஸ் ஹாஸ்டல்ல வச்சிருக்காங்க. இவங்களுக்கு தங்கறதுக்கு, உணவுக்கு என எந்தவிதமான கட்டணமும் கிடையாது. 2. ஓயோ & நடுத்தரமான ஹோட்டல்ஸ்ல தங்க வைக்கிறாங்க. தனி ரூம் வித் அட்டாச்ட் டாய்லெட், வைஃபை, டிவி, ரூம்சர்வீஸ், உணவு. கட்டணம் நாள் ஒண்ணுக்கு 1,500. 3) ஹில்ட்டன் ஹோட்டல். 2,500. அது 5* ஹோட்டல் என்றாலும் இப்போதைக்கு ரூம்ல இருக்குற வசதிகளை மட்டும் உபயோகிக்கலாம். இவங்களுக்கு ஹில்ட்டன் கிச்சன்லயே உணவு தயார் பண்ணி குடுக்குறாங்க
உணவு சரவணபவன்ல இருந்து Packed ஆ வந்துருது. சரவணபவன் உணவும் தரமா இருக்கு. எனக்கு போதும். ஆனா நல்லா சாப்புடுறவங்களுக்கு பத்தாது.
வேற எந்த விதமான சலுகைங்களும் வசதிங்களும் யாருக்குமே கிடையாது. ரூம விட்டு வெளிய போக அனுமதி இல்ல. விசிட்டர்ஸும் அனுமதி இல்ல. இந்த ஹோட்டல்லயே இருக்குற ஒருத்தருக்கு இங்க பக்கம் ஒரு கிலோமீட்டர்லயேதான் வீடு, ஆனா அவங்கள போகவும் விடல, வீட்ல இருந்து பார்க்க வந்தவங்கள அனுமதிக்கவும் இல்ல.
”டேய் தம்பி, சரக்குடா?” என்றேன். ”என்ன வெளாட்றிங்களா?” என்று கோபித்தான். வாய்ப்பே இல்லை. புத்தகங்கள் இருக்குல்ல? எக்கச்சக்கமா இருக்கு என்றான். தீர்ந்துட்டா கேளு, ஸாஃப்ட் காப்பி அனுப்புறேன் என்றேன். இதை எதற்கு இந்த எலிக் கதை பூனைக் கதையில் சேர்த்தேன் என்றால், எனக்கு அவனைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. இந்த மாதிரியேதான் ஐம்பது நாட்களாக வீட்டில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்திருக்கிறான். டேய் டேய் என்னை இப்படி விட்டால் ரெண்டு மூணு நாவலை முடிச்சுடுவேண்டா, இருபத்து நாலு மணி நேரத்தில் எழுதுவதற்கு நாலே நாலு மணி நேரம்தாண்டா கிடைக்குது என்று புலம்பினேன்.
எல்லாம் பூனைதான். இன்று காலையில் நான் போக மாட்டேன் போ என்று சொல்லி விட்டேன் அவந்திகாவிடம். காலையில் கீழே போய் பூனைகளுக்கு உணவிடுவதில் அரை மணி நேரம் போய் விடும். பட்டினி கிடந்தால் கிடக்கட்டும். நான் இரவு போய் போடுகிறேன். நல்லவேளை, அவளே போய்க் கொடுத்து விட்டாள். அவள் போயிருக்காவிட்டால் நான் ஒரு பனிரண்டு மணிக்குப் போய் விடுவேன், அது வேறு விஷயம். மனசு கேட்காது. காயத்ரி பூனை வளர்க்க வேண்டும் என்றதும் எனக்குப் பகீர் என்றது. ஒரு ஐநூறு பக்க நாவலே என் கண் முன்னே ஓடியது போங்கள். ஐயோ, அது பெரிய ராமாயணமாப் போய்டுமேம்மா என்றேன். ”என்ன செய்வது சாரு, இந்த எலிகளை எப்படி விரட்டுவது? எலிப் பொறி வைத்தால் ’உனக்கு இரக்கமே இல்லை. ஒரு உயிரைப் போய் கொல்லத் துணிகிறாயே?’ என்று திட்டுகிறான் ஆதி. அதனால்தான் பூனை வளர்க்கலாம் என்று இருக்கிறேன். உங்களிடம் இருந்தால் கொடுங்கள்” என்றாள் காயத்ரி. என்னிடம் உள்ள லக்கியைக் கொடுக்க முடியாது. அந்த ஐந்தும் ஒரு குடும்பம். குடும்பத்தைப் பிரிக்க முடியாது. இல்லை, உங்களிடம் உள்ளதைக் கேட்கவில்லை. ”யாரிடமாவது இருந்தால் கேட்டுப் பார்க்கலாம் என்றேன்” என்றாள். ”சரி, ஃபேஸ்புக்கில் போடு” என்று ஆலோசனை சொன்னேன்.
மறுநாள் அவர்கள் குடியிருப்பின் கீழே கார் நிற்கும் இடத்தில் காரின் பானெட்டில் மாட்டிக் கொண்டு ஒரு பூனை கத்தியிருக்கிறது. இவள் போய் காப்பாற்றியிருக்கிறாள். இப்போது அந்தப் பூனையின் பெயர் டாட்டூ. காயத்ரி குடும்பத்தில் டாட்டூ ஒரு ஆள் இப்போது. சொல்லி அடுத்த நாள். டாட்டூவின் முழுக் கதையையும் என் பூனை நாவலில் எழுதலாம் என்று இருக்கிறேன். இப்போதைக்கு இது மனிதர்களின் கதை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் காயத்ரியிடம் சொன்னேன். இப்படி ஐம்பது விஷயங்கள் ஆகி விட்டன. சொன்னால் சொன்ன விஷயம் அடுத்த நாளே நடந்து விடுகிறது. அதனால் ப்ளீஸ் காயத்ரி, என்னைப் பற்றியும் வலுவாக நினைத்துக் கொள்ளேன். மக்யாநாளே நடக்க வேண்டும் என்று நான் பேராசைப்படாவிட்டாலும் ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடத்திலாவது நடக்கிறாற்போல் உடனடியாக ஏதாவது என்னைப் பற்றி நினை.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai