பூச்சி 60

இப்போதெல்லாம் ஒரு புதிய வழக்கம் உண்டாகி இருக்கிறது.  ஆனால் அதற்கு முன்னால் வேறொரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.  என் நண்பரின் மகன் – அவன் எனக்கும் நண்பன் தான் – அங்கிள், தமிழ்ல எத்தனை ரைட்டர்ஸ் இருப்பிங்க என்று கேட்டான்.  வாஸ்தவத்தில் அவன் என்னைக் கேட்ட கேள்விகளையெல்லாம் மறந்து விடாமல் தொகுத்திருந்தால் அராத்துவின் ஆழி கதைகளைப் போல் கேஷவின் கேள்விகள் என்று ஒரு புத்தகமே கொண்டு வந்திருப்பேன்.  தோன்றாமல் போயிற்று.  அத்தனை கேள்விகள் கேட்டிருக்கிறான்.  அவனுடைய நண்பனும் அவனை மாதிரியேதான்.  அவன் ஒருமுறை கேட்டான். 

அங்கிள், எப்டி எழுதுவிங்க?

கம்ப்யூட்டர்ல எழுதுவேன்.

ம்ச.  அதச் சொல்லல அங்கிள்.  எப்டி எழுதுவிங்கன்னு கேக்கறேன்.

ம்ம்ம்.  எப்டி எழுதுவிங்கன்னா?  புரிலியே?  கம்ப்யூட்டர்லதான் எழுதுவேன்.  வேணும்னா டைப் பண்ணுவேன்னு சொல்லலாம்.  பேப்பர்ல எழுதுனாதானே எழுதுறேன்னு சொல்லலாம்.

ம்ச.  அதச் சொல்லல அங்கிள்.  எப்டி எழுதுவிங்கன்னா… எப்டி எழுதுவிங்கன்னா… அதான்.  எப்டி எழுதுவிங்க? 

அதேதான்.  கம்ப்…

ம்ச.  அங்கிள்.  தோ பாருங்க.  ஒரு ஸ்டோரிய எடுக்குறீங்க. 

இல்ல, எடுக்கல.  அதுவா வரும்.

ஆங்.  அதத்தான் கேக்குறேன்.  எப்டி வரும்?  எங்கேர்ந்து வரும்?  அதுக்கு என்னா பண்ணுவீங்க? 

இப்போ நீயே இருக்கெ.  நீ ஒண்ணு ஏங்கிட்ட சொல்றெ.  அத எழுதுவேன்.

அப்போ அது ப்ளேஜியரிஸம்ல?  (பயல் புத்திசாலி)

ஆமா. 

அப்போ நீங்க ப்ளேஜியரிஸ்டா?

ஆமா.

போங்க அங்கிள்.  என்ன நீங்க லூசுன்னு நினைக்கிறீங்க.  அம்மா கேட்டா இப்டி பதில் சொல்லுவீங்களா? 

மாட்டேன்.

ஏன்?

லேடீஸ்கிட்டேல்லாம் உண்மை பேச மாட்டேன்.

டேய் கேஷவ், என்னடா என் தலை உருள்றது?

இல்லம்மா, அங்கிள் என்னையும் உன்னையும் லூசுன்னு சொல்றாரு.

அவர் அப்டி சொல்லலேன்னாதானே ஆச்சரியம். 

அதே கேஷவ்தான் கேட்டான், தமிழ்ல எத்தன ரைட்டர்ஸ் இருப்பிங்க?

நம்ம மெட்றாஸ்ல எத்தன தெருநாய் இருக்கும்?  அத்தன ரைட்டர்ஸ்.

எதற்காகச் சொன்னேன் என்றால், நான் கடவுள் படத்தில் வரும் பிச்சைக்காரக் கூட்டத்தைப் போன்ற தமிழ் எழுத்தாளர் கூட்டத்தில் சிலர் புகுந்து அவர்கள் எழுதிய புத்தகங்களை இலவசமாகக் கொடுப்பது கூட அல்லாமல், விற்கவும் செய்கிறார்களாம்.  ராஸ லீலாவின் விலை 49 ரூ.  பிச்சைக்காரக் கூட்டம் என்றால் என் சக எழுத்தாளர்களுக்கே என் மேல் கோபம் வருகிறது.  அவர்களுக்கு வர வேண்டிய கோபம் சமூகத்தின் மீது.  ஆனால் என் மீது கோபம் கொள்கிறார்கள்.  அடப் பைத்தியங்களா என்றுதான் வருந்த வேண்டியிருக்கிறது.  அசோகமித்திரனின் வீட்டுக்கு எதிரே ஒரு சினிமாக்காரரின் வீடு இருக்கிறது.  அசோகமித்திரனின் வீடு என்றா சொன்னேன்?  அதுவே பெரிய தப்பு.  அது அசோகமித்திரனின் மகன் வீடு.  அசோகமித்திரன் வீடு அல்ல; அசோகமித்திரனுக்கென்று தனியாக வீடு இல்லை.  வீடு இல்லாததால் புத்தகங்களும் இல்லை.  அவரிடம் இருந்திருக்கக் கூடிய பெரிய நூலகமே இல்லை.  அந்தப் புத்தகங்களையெல்லாம் எல்லா நண்பர்களிடமும் கொடுத்து விட்டார்.  மகன் வீட்டில் ஒரு சிறிய அறைதான் அவருடையது.  அவரைத் தவிர இன்னொரு ஆள் உட்காரலாம்.  உங்கள் புத்தகங்களெல்லாம் எங்கே சார் என்று கேட்டபோது அவருக்கே உரிய கைப்புப் பார்வை இன்னும் சற்று கூட  தன் முகத்தை நிதானமாம ஒரு அரை வட்டம் சுழற்றி “இந்த அறையில வச்சுக்க முடியுமா?” என்று கேட்டார்.  அவரே மீண்டும் “எல்லாம் குடுத்துட்டேன் அப்பொப்போ, ஃப்ரண்ட்ஸ் கிட்டே” என்றார்.  அவர் மகன் என்ன கோடீஸ்வரரா?  தி.நகரில் அப்படி ஒரு ஃப்ளாட் வைத்திருப்பதே பெரிய விஷயம்.  அசோகமித்திரனின் வீட்டெதிரே ஒரு சினிமாக்காரரின் வீடு என்று சொன்னதும் தப்புதான்.  இன்றைக்கு என்னவோ தப்புத் தப்பாக வருகிறது.  அது வீடு அல்ல; அரண்மனை.  ஷாஜஹான், அக்பர் போன்ற பேரரசர்களின் அரண்மனைதான் அப்படி இருந்திருக்கும்.  இதை எழுதும் போது எனக்கு பாப்லோ நெரூதாவின் வீடுகள் ஞாபகம் வருகின்றன.  மூன்று வீடுகள்.  அதெல்லாம் அரண்மனைகள் கூட இல்லை.  பெரிய ம்யூசியம்.  அவர் இறந்த பிறகு அவர் நினைவில் மியூசியம் ஆக்கவில்லை.  அவர் வாழ்ந்ததே அப்படி இருந்தது.  உலகில் உள்ள பெருந்தலைகள் எல்லாம் அவருக்குப் பரிசுப் பொருட்களைக் குவித்தார்கள்.  அதையெல்லாம் அவர் வீட்டில் வைத்தார்.  அதை மீண்டும் மீண்டும் வீடு என்றே சொல்கிறேன்.  தப்பு.  ஒரு கடற்கரை.  பாறைகள் சூழ்ந்த கடற்கரை.  பாறைகளின் மேலே ஒரு கோட்டை.  அந்தக் கோட்டைதான் பாப்லோவின் வீடு.  புரிகிறதா?

எழுத்தாளன் என்றால் இப்படி சொகுசாக வாழ்ந்தால்தான் உண்டு, ஆடம்பர வாழ்வுதான் எழுத்தாளனுடையது என்று நான் சொல்வதாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.  ஜென்ரல் பினோசெத் டாக்டர் அயெந்தேவைக் கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்ததும் பாப்லோ நெரூதாவை மருத்துவர்கள் மூலம் விஷம் கொடுத்துக் கொன்றான்.  பினோசெத் டாக்டர் அயெந்தேவைக் கொன்று ஆட்சிக்கு வந்தது 11 செப் 1973.  பாப்லோ இறந்தது 23 செப்டம்பர்.  பனிரண்டே நாட்களில் விஷ ஊசி மூலம் சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டார் பாப்லோ.  பிரேதப் பரிசோதனையில் அது கொலை என்று தெரியாத அளவுக்குச் சிறுகச் சிறுக விஷம் செலுத்தப்பட்டது பினோசெத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தெரிய வந்தது. 

இங்கே ஒரு முக்கியமான விஷயம்.  என் மீது பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் கொண்ட சில கீழ்மக்கள் நான் எப்போதடா தப்பு செய்வேன் என்று ஒவ்வொரு வாக்கியமாகப் படித்து தப்பு செய்த இடத்தைக் கண்டு பிடித்து அதற்கு ஒரு பதினைந்து பக்கம் கட்டுரை எழுதி என்னைத் திட்டித் தீர்க்கிறார்கள்.  மேலே உள்ள பத்தியில் அப்படி ஒரு தப்பு உள்ளது.  உடனே அதைச் சுட்டிக் காட்டி, நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளிலிருந்து மேற்கோள்களை எடுத்து – எத்தனை பாடுபடுகிறார்கள் என்றால், 1973 வருடத்திய பத்திரிகைகளையெல்லாம் எடுத்துப் போட்டு, பினோசெத் டாக்டர் அயெந்தேவைக் கொல்லவில்லை, இந்த ஆள் பொய் சொல்லுகிறான்.  இருங்கள், அவர்கள் எழுதும் பாணியிலேயே எழுதுகிறேன்.

சாரு நிவேதிதா என்று ஒரு சாக்கடை சென்னையில் ஓடிக் கொண்டிருக்கிறது.  அது ஒரு பாதாள சாக்கடை என்று தெரியாமல் பல இளவட்டங்கள் அதில் பன்றிகளைப் போல் குளித்துக் கொண்டிருக்கின்றன. அந்த சாக்கடை ஒரு வடிகட்டின மூட ஜென்மம்.  அது அந்த முண்டத்துக்கே தெரியும்.  ஆனாலும் அதன் ரசிகக் குஞ்சுகள் அந்த சாக்கடையைத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கின்றன.  டாக்டர் அயெண்டேயை பினோசெத் கொல்லவில்லை என்பது சிறுபிள்ளைக்கே தெரியும்.  ஆனால் இந்த மலப் பிண்டத்துக்கு, மட்டி முண்டத்துக்குத் தெரியவில்லை.  டேய் நீயெல்லாம் ஒரு எழுத்தாளனாடா, கூகிளில் போய்ப் பார்த்தால் கூடத் தெரியுமே,  இந்த முண்டத்துக்கெல்லாம் என்ன திமிர் தெரியுமா?  கேட்டால் நான் ஞானி, நான் ரமணர் என்று சொல்லிக் கொண்டு அலைகிறது.  டேய் நீ மலப்புழுடா.  சரி, அந்தத் தெருநாய் எப்படிப் போனால் நமக்கென்ன?  அது உளறிக் கொட்டி வைத்திருப்பதை மட்டும் நாம் பார்ப்போம்.  பினோசெத்தின் ராணுவம் மொனேடா மாளிகையைக் குண்டு வைத்துத் தகர்த்தபோது டாக்டர் அயெண்டே தன் பிஸ்டலால் சுட்டுக் கொண்டார் என்பதுதான் வரலாறு.  ஆனால் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் இந்தப் பித்தலாட்டப் பேர்வழி டாக்டர் அயெண்டேவை பினோசெத் கொன்றார் என்கிறான். 

(சாந்த்தியாகோ தெ சீலே) மொனேதா மாளிகை

இப்படிப் போகும் கட்டுரை.  இப்படி எழுதுபவர்களெல்லாம் ஐ.ஐ.டி.யில் கணிதப் பேராசிரியராக வேலை பார்ப்பவர்கள்.  மூன்று மாதத்துக்கு ஒருமுறை சர்வதேசக் கருத்தரங்குகளில் கணித ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் அறிஞர்கள்.  சர்வதேசக் கணித ஆய்வுப் பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுபவர்கள்.  ஆனால் உள்ளுக்குள் எப்படி இருக்கிறார்கள் என்று மேலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  நீங்கள் ஹோலோகாஸ்ட் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?  நாஜி அதிகாரி மின்சார ஒயரை யூதனின் பிறப்புறுப்பில் வைத்து வதை செய்வான்.  அப்போது பார்த்து அவனுக்கு வீட்டிலிருந்து போன் வரும் .  எடுத்துப் பேசுவான்.  மனைவி.  சீக்கிரம் வந்து விடு ஹனி.  குழந்தை உங்களிடம் பேச வேண்டும் என்கிறான்.  கொடு அன்பே.  டார்லிங் பேபி.  டாடி சீக்கிரமே வந்து விடுகிறேன்.  என்ன?  கரடி பொம்மை வேண்டுமா?  நிச்சயம் வாங்கி வருகிறேன் கண்ணே.  சத்தமா?  அது ஒன்றுமில்லை கண்ணே.  இங்கே யாரோ எதற்கோ சத்தம் போடுகிறார்கள்.  அப்பாவுக்கு ஒன்றுமில்லை டார்லிங்.   

அப்படித்தான் என்னைப் பற்றி மேலே உள்ளவாறு எழுதுபவர்களுக்கும் மனைவி இருப்பாள், அன்பான குழந்தை இருக்கும்.  எல்லாம் இருந்தும் சாரு நிவேதிதா என்ற பெயரைக் கேட்டவுடன் ட்ராகுலாவாக, சைக்கோவாக மாறி விடுகிறார்கள்.  சீலேயின் வரலாறு தெரிந்தவர்களுக்கு டாக்டர் அயெந்தே எப்படி இறந்தார் என்பது கூடவா தெரியாது?  பினோசெத் டாக்டர் அயெந்தேவைக் கொன்ற போது என்றால் என்ன பொருள்?  இதில் ஸ்பானியப் பெயர்களை சரியாக உச்சரிக்கக் கூடத் துப்பில்லை.  அயெண்டாவாம் அயெண்டே.  ஸ்பானிஷில் ட, ட்ட என்ற உச்சரிப்புகள் இல்லை என்பது கூட அந்தப் பேராசிரியர்களுக்குத் தெரியவில்லை.  அதிபர் மாளிகையில் குண்டு போட்டாயிற்று.  மேலே விமானப் படை மூலமாகவும் சுற்றி வளைத்தாயிற்று.  அயெந்தே சரணடைய வேண்டும் என்பதே பினோசெத்தின் ஆசை.  சே குவேராவின் கைகளில் விலங்கு மாட்டி தெருவில் இழுத்துப் போவது போல என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அப்படித்தான் ஆசைப்பட்டான் பினோசெத்.  டாக்டர் அயெந்தேவுக்கு இருந்த புகழை அழிக்க நினைத்தான்.  அந்த மாமனிதனை சிறுமைப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டான்.  அயெந்தே அதற்கு இடம் கொடுக்காமல் சுட்டுக் கொண்டார்.  உடனே இந்தத் தமிழ்க் குஞ்சுகளுக்குப் பொறுக்கவில்லை.  ஆ, சாரு தப்பு செய்து விட்டான்.  பிடி அவனை.  எத்தனை சாக்கடை பாருங்கள்.  விஷயம் என்னவென்றால், என்னைத் திட்ட வேண்டும்.  நம் கூட இருந்தவன், ஒன்றுந் தெரியாதவன், சூத்திர நாய், கடைந்தெடுத்த முட்டாள் இவ்வளவு பெரிய ஆளாகி விட்டானே, நமக்கோ எல்லாமே தெரியும், ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட், ஏன் நாம் புகழ் அடையவில்லை?  இந்த நினைப்பால்தான் சைக்கோ ஆகி விடுகிறார்கள்.  ஒருத்தர் அல்ல, பலர்.  ஆனால் நேரில் பார்த்தால் குழைகிற குழை இருக்கிறதே, நாய் தோற்றது போங்கள்.  இதனால்தான் உருப்படாமல் இருக்கிறீர்கள் என்கிறேன்.  ஒருத்தனைப் பிடிக்கவில்லையா?  அதை அவன் முகத்துக்கு நேரே சொல்.  அதுதான் நீ புகழ் பெறுவதற்கு முதல் அடி.  மீண்டும் சொல்கிறேன், ஐஐடி கோல்ட் மெடல் வாங்கினவர் எல்லாம் அந்த ஒரு தகுதியினாலேயே என்னோடு பேசி விட முடியாது.  அவர்கள் உண்மையில் என் பேனாவுக்கு மை போடுவதற்குக் கூட லாயக்கு இல்லாதவர்கள். 

நேரில் பார்த்து விட்டுத்தான் சொல்கிறேன்.  நாகேஸ்வர ராவ் பூங்காவில் இப்படி ஒரு கோல்ட் மெடல் அலைகிறது.  அவரை நான் பாதாள சாக்கடை எலி என்றே நினைப்பது வழக்கம்.  ராகவனிடம் அறிமுகம் செய்து கொண்ட போதே நான் கரக்பூர் ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட் என்றுதான் அறிமுகம் செய்து கொண்டது.  அப்போதே அடி.  மனிதப் பிறவி என்றே அது தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளக் கூடாது.  உன்னை யார் என்று ராகவன் கேட்டாரா?  நீ எந்த மயிராக இருந்தால் எங்களுக்கு என்ன?  அதோடு நிற்காது அந்த ஜென்மம்.  ராகவனிடம் நீங்க சார்? என்கும்.  இவர் நான் ராகவன் சார் என்பார்.  எங்கே வொர்க் பண்ணேள்?   போஸ்டல் டிபார்ட்மெண்ட் சார் என்பார் ராகவன்.  ராகவனிடம் அய்யங்கார் கொனஷ்டை கொஞ்சம் உண்டு.  அதனால் போட்டு வாங்குவது அப்படி.  பொதுவாக எங்கே வொர்க் பண்ணேள் என்று கேட்டால், போஸ்டல் டிபார்ட்மெண்ட்ல கிளார்க் சார் என்பார்.  ஏனென்றால், வெறுமனே போஸ்டல் டிபார்ட்மெண்ட் என்றால், அடுத்த கேள்வி வரும்.  அங்கே என்னவா இருந்தேள்?  அந்தக் கேள்விக்கே இடம் கொடுக்காமல் வல்லீர் நீங்கள், நானேதான் ஆயிடுக என்ற கேஸ் அவர்.  அதனால் அவராகவே கிளார்க் என்று சொல்லி விடுவார்.  ஆனால் அந்த கோல்ட் மெடலிஸ்டிடம் அப்படிச் சொல்லாமல் கொக்கி போட்டு இழுத்தார்.  உடனடியாகப் பாய்ந்தது கோல்ட் மெடல்.  போஸ்டல்ல என்னவா இருந்தேள்?  அதற்கு மேல் ராகவன் கொட்டி விட்டார்.  வல்லீர் நீவிர்.  நான் ஆரெம்மெஸ் கிளார்க் சார்.  போஸ்டலை விட ஆரெம்மெஸ் மட்டம். 

ஒரு வீடு பார்க்கப் போனாராம் ராகவன்.  எங்கே வொர்க் பண்றேள்?

போஸ்டல் டிபார்ட்மெண்ட் சார்.

போஸ்டல்னா என்ன போஸ்டல்?  போஸ்டலா டெலகிராஃபா?  ரெண்டு இருக்கோல்யோ? 

(ஏனென்றால், P&T –இல் டெலிகிராஃப் உசத்தி.  போஸ்டல் மட்டம்.  ஜெயமோகனுக்கு அதிலும் அதிர்ஷ்டம்தான்.  அவர் டெலகிராஃப்.  நான் போஸ்டல்!)

நான் போஸ்டல் சார்.

போஸ்டல்னா?  அதுலே எது?  வெறும் போஸ்டலா ஆரெம்மெஸ்ஸா?  ஆரெம்மெஸ்ஸுன்னா கண்ட நேரத்துக்குப் போவேள், வருவேள்.  மத்யானம் ரெண்டு மணிக்கு ஆஃபீஸ் போய்ட்டு ராத்திரி பதினோரு மணிக்கு வருவேள்.  நான் தான் கேட்டை மூடணும்.  என்ன சொல்லுங்கோ?  போஸ்டலா, ஆரெம்மெஸ்ஸா?

ஆரெம்மெஸ் சார்.

அப்போ கெளம்புங்கோ.  நமஸ்காரம். 

கோல்ட் மெடல் ஒருநாள் ஏதோ புத்தகத்தைப் பற்றிப் பேசியது.  அப்போது பதிலுக்கு ஏதோ ஒன்றைச் சொன்னார் ராகவன்.  அவரும் அந்தப் புத்தகத்தைப் படித்திருந்தார்.  அப்போது கோல்ட் மெடல் சொன்னது.  “வாட் ராகவன், நீங்க அந்தப் புஸ்தகத்தைப் படிச்சிருக்கேளா?  ஆச்சரியமான்னா இருக்கு.  வெரி குட், வெரி குட்…”

இது பாராட்டா?  அவமானமா?  ராகவன் உடனே சொல்லி விட்டார்.  இது பாராட்டு இல்லை சார்.  அவமானப்படுத்தறேள்.  ஒரு ஆரெம்மெஸ்காரப் பயல் எப்படிப் புஸ்தகம் படிக்கிறான்.  அட ஆச்சரியமான்னா இருக்கு! 

இதே மனோபாவம்தான் நான் குறிப்பிட்ட ஐஐடி கோல்ட் மெடலிடமும் செயல்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.  நான் ஒருத்தரைச் சொல்லவில்லை.  பல பேர் இப்படி என்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  எனவே நண்பர்களே, விஷயத்தை அதன் ஆழத்தில் புரிந்து கொள்ளுங்கள். 

சரி, நாம் ஆரம்பித்த இடத்துக்கு வருவோம்.  பாப்லோ நெரூதாவின் கோட்டைகள்.  மூன்று கோட்டைகள்.  அதில் உள்ள பரிசுப் பொருட்களுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பாப்லோ பிக்காஸோ நெரூதாவுக்கென்றே பிரத்தியேகமாக ஒரு ஓவியத்தை வரைந்து அதில் நெரூதாவின் பெயரைப் போட்டு பரிசளித்திருக்கிறார்.  இப்படி நெரூதாவின் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பரிசுப் பொருட்கள் உள்ளன.  ஒரு வீட்டில் முதல் முதலாகத் தயாரிக்கப்பட்ட நீராவி எஞ்சின் நின்று கொண்டிருக்கிறது.  ஏதோ ஒரு தேசத்தின் அதிபர் பரிசளித்திருக்கிறார். 

நான் சொல்வதை கவனமாகப் பாருங்கள்.  ஒரு அதிபர் அவரைக் கொல்கிறார்.  பல அதிபர்கள் அவருக்குப் பரிசுப் பொருள் அனுப்புகிறார்கள்.  நெரூதா பல நாடுகளில் சீலேயின் தூதராக இருந்தவர்.  இங்கே தமிழ் எழுத்தாளர்களுக்கு அவ்விதமான அங்கீகாரம் இருக்கிறதா?  என் எழுத்துக்களால் இந்த சமூகத்தில் ஒரு சிறு சலனமாவது ஏற்பட்டிருக்கிறதா?  ஆஃப்டர் ஆல் ஒரு நடிகர், கோவிலுக்குச் செய்கிறீர்கள், அதை ஏழைகளின் படிப்புக்கும் செய்யலாமே என்று சொன்னால் உடனே தமிழகமே கொந்தளித்து எதிர்வினை ஆற்றுகிறது.  அதைத்தான் சொல்கிறேன் அங்கீகாரம் என்று.  அப்படிப்பட்ட இருபது ஸ்டேட்மெண்டுகளை நான் தினந்தோறும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நாற்பது ஸ்டேட்மெண்டுகளை ஜெயமோகன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.  எதற்குமே கவலையில்லை.  காரணம், writers don’t exist.  ஆனால் நடிகர்கள் தும்மினால் செய்தி.  இருமினால் செய்தி. 

இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.  தியாகய்யருக்குப் பரிசுப் பொருட்களை அனுப்பி தஞ்சாவூர் சர்ஃபோஜி மகாராஜா தன் அரண்மனைக்கு வரவழைத்துத் தன்னைப் பற்றிப் பாடுமாறு கேட்டு தூதனை அனுப்பினார்.  தியாகய்யர் அதை மறுத்து விட்டார்.  சரி.  என்னை இந்த நாட்டின் முதல் மந்திரிக்குத் தெரியுமா?  தியாகய்யரின் பெருமை தெரிந்தவராக இருந்தார் சர்ஃபோஜி மகாராஜா.  அதனால்தான் என்னைப் பற்றிப் பாடுங்கள், பரிசு தருகிறேன் என்றார்.  தமிழக முதல்வருக்கு என்னைத் தெரியுமா?  ஏன், புத்தகங்கள் படிக்கின்ற, என்னைத் தெரிந்த ரஜினிக்கும் கமலுக்கும் முன்னாலே கூட நான் கைகட்டித்தானே ஐயா நிற்க வேண்டியிருக்கிறது? (நான் நிற்க மாட்டேன்; நிலைமையைச் சொல்கிறேன்.)  தியாகய்யரிடம் சர்ஃபோஜி மகாராஜா பணிந்து வந்து கேட்டாரே?  ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மேடையில் பத்து மூத்த எழுத்தாளர்கள் இருந்தோம்.  என்னை விடவும் மூத்தவரான சா. கந்தசாமியும் மேடையில் இருந்தார்.  அப்போது கூட்டத்துக்குத் தாமதமாக வந்த நடிகர் சிவகுமார் மேடை ஏறிய போது மேடையில் இருந்த அத்தனை மூத்த எழுத்தாளர்களும் சா. கந்தசாமி உட்பட அனைவரும் எழுந்து நின்றார்களே?  தேசிய கீதமே சிவகுமார் வடிவத்தில் வந்ததா என்ன?  நான் மட்டும்தான் அந்த மேடையில் எழுந்து கொள்ளாமல் அமர்ந்தே இருந்தேன்.  பார்க்கவே அசிங்கமாக இருந்திருக்கும்தான்.  ஆனாலும் நான் எழுந்து கொள்ளவில்லை.  ஏனென்றால், அப்படி எழுந்து கொள்வதுதான் அவமானம்.  என் வீட்டுக்கு சிவகுமார் எத்தனையோ முறை வந்திருக்கிறார்.  அப்போது எழுந்து நின்று வரவேற்று மோர் கொடுப்பேன்.  அது வேறு விஷயம்.  ஒரு இலக்கிய மேடையில் யாராவது தாமதமாக வந்து மேடை ஏறினால் அதற்காக யாரும் எழுந்து நிற்பது வழக்கமே இல்லை.  ஆனால் அன்றைய தினம் அப்படி நடந்தது.  நேராக சிவகுமார் என் அருகே வந்து கை கொடுத்த போது எழுந்து நின்று கை கொடுத்தேன்.  அவ்வளவுதான். 

La Moneda palace bombed September 11- 1973

இன்னொரு உதாரணம்.  அராத்து என்னைப் பற்றிய அவரது கருத்துக்களை ஒரு நீண்ட கட்டுரையாக முகநூலில் எழுதியிருந்தார்.  என்னைப் பற்றிய ஒரு அந்தரங்கமான டயரிக் குறிப்புகள் என்றால் அதைச் சொல்லலாம்.  அதற்கு ஒரு ஐம்பது பேர் லைக் போட்டு பத்து பேர் பகிர்ந்து இருந்தார்கள்.  சமீபத்தில் நண்பர் செல்வேந்திரன் இயக்குனர் மிஷ்கின் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.  ஆயிரத்துக்கும் மேல் லைக்குகள்.  முன்னூறுக்கும் மேற்பட்ட பகிர்தல்கள்.  மிக நன்றாக ஒரு சிறுகதையைப் போல் எழுதியிருந்தார் செல்வேந்திரன், அது வேறு விஷயம்.  ஆனால் சினிமாக்காரர் என்றால் அத்தனை லைக்.  எழுத்தாளன் என்றால், வெறும் நூறுதான்.  இதுதான் நிலவரம்.  இதுதான் சூழல். 

இத்தனையையும் ஏன் சொன்னேன் என்றால், இப்போது இந்த அத்தியாயத்தின் முதல் வாக்கியத்தைப் பாருங்கள்.  இப்போது ஒரு வழக்கம் உண்டாகியிருக்கிறது.  எழுத்தாளர்களின் நாவல்களை இணையத்தில் இலவசமாக உலவ விடுவது தவிர இப்போது அதை விற்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.   இது பற்றி கடைசிக் காலத்தில் பாலகுமாரன் பெரும் சாபமே விட்டிருக்கிறார்.  பாலாவின் மகன் சூர்யாவும் வயிறு எரிந்து எழுதியிருக்கிறார்.  பலராலும் பகிரப்பட்ட அந்தப் பதிவை நான் பகிரவில்லை.  காரணம், சூர்யாவின் பதிவில் பல இலக்கணப் பிழைகள் இருந்தன.    ரொம்பத் தப்பு.

எனக்குத் தெரிந்த பல எழுத்தாளர்கள் இது பற்றி வயிறெரிந்து எழுதியிருக்கிறார்கள்.  எனக்கும் பலர் கடிதம் எழுதினார்கள், ஏதாவது எழுதுங்கள் என்று சொல்லி.  என்ன எழுதுவது? அறம் கதையில் வரும் எழுத்தாளனைப் போல் சாபம் விடலாம், அறம் பாடலாம்.  அதெல்லாம் இந்தக் கலிகாலத்தில் பலிக்குமோ?   அப்படியே பலித்தாலும் நமக்கு அதனால் என்ன லாபம்?  நான் இது பற்றியெல்லாம் எள்ளளவும் கவலைப்படுவதில்லை.  ஏனென்றால், ராயல்டி என்று வரும் தொகையே இந்தியாவில் ஒரு பிச்சைக்காரனின் மாத வருமானத்தை விடக் கம்மியாக இருக்கிறது.  ஒரு பிச்சைக்காரனுக்கு இந்தியாவில் குறைந்த பட்சம் 500 ரூ. கிடைக்கும்.  அந்த ஐநூறுமே அவனுக்கு மூலதனம்தான்.  ஏனென்றால், சாப்பாடு அம்மா உணவகத்தில் ஓசியில் கிடைத்து விடும்.  கொரோனா இல்லாத நாளாக இருந்தாலும் அஞ்சு ரூபாய்தானே ஒரு சாப்பாடு?  ஆக, 500 X 30 = 15000.  இது ஆகக் குறைந்த பட்சத் தொகை.  ஆண்டு வருமானம்: 180000.  தமிழின் ஒரு முன்னணி எழுத்தாளனான என்னுடைய ராயல்டி தொகையும் கிட்டத்தட்ட இவ்வளவுதான்.  இத்தனைக்கும் என்னுடைய 60 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.  தெருவோரத்து லாண்ட்ரி கடையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளியின் சம்பளம் 20,000 ரூ.  இந்த நிலையில் என்னுடைய புத்தகங்களை எவனோ ஒருத்தன் அல்லது பல திருடர்கள் இணையத்தில் பணத்துக்கு விற்று அவன் கோடீஸ்வரனாகப் போகிறானா என்ன?  இதில் பதிப்பகத்தின் நிலையைக் கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள்.  ஒரு புத்தகம் போட்டால் கிடைக்கும் லாபம் எழுத்தாளருக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையை விடக் கம்மி.  எல்லா லாபமும் புத்தக விற்பனையாளருக்குப் போய் விடுகிறது.  விலையில் 55 சதவிகிதம் அவருக்குக் கொடுக்க வேண்டும்.  ஆகா, அப்படியானால் அவர் பெரிய கோடீஸ்வரர் ஆகியிருக்க வேண்டுமே என்றால், அவர் கதையும் பெரிய கதை.  ஒவ்வொரு ஊராக தன் பிரதிநிதியை அனுப்பி புத்தகக் கடைக்காரரிடமிருந்து பணம் வசூலிக்க வேண்டும்.  அந்தப் பிரதிநிதி அந்த ஊரில் தங்க வேண்டும்.  பயணம் செய்ய வேண்டும்.  புத்தகங்களை வைக்க கொடவ்ன் வேண்டும்.  கொடவ்ன் வாடகை.  புத்தகங்களை திடீரென்று கரையான் அரித்து விடும்.  முதலுக்கே மோசம்.  மழை வந்தால் வெள்ளத்தில் சிக்கி விடும். லட்சக் கணக்கில் நட்டம்.  இப்படி பதிப்பாளரின் கதை, விற்பனையாளரின் கதையெல்லாம் ரொம்ப.  இதற்கெல்லாம் தீர்வே இல்லையா என்றால், பிரமாதமாக இருக்கிறது.  புத்தகங்கள் நிறைய எண்ணிக்கையில் விற்க வேண்டும்.  விற்றால் எல்லோருக்கும் லாபம் கிடைக்கும்.  அப்போது கவலைப்படுவேன், அடடா, நம் புத்தகங்களை எவனோ ஒரு திருட்டுப் பயல் காசுக்கு விற்கிறானே என்று.  இங்கே நடப்பதோ பெட்டிக்கடை யாவாரம்.  இதில் எவன் விற்றால் எவனுக்கென்ன?  இதில் பதிப்பகக்காரராவது நடவடிக்கை எடுக்கலாமே என்றால், அதுவும் வீண்.  ஏனென்றால், அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்த அளவு லாபத்தில் இந்தப் போலீஸ் கோர்ட் என்று வேறு அலைந்து கொண்டிருக்க முடியுமா? 

எனவே யார் வேண்டுமானாலும் திருடிக் கொண்டு போகட்டும், கவலையில்லை என்ற மனநிலையில்தான் இருக்கிறேன்.  இன்னொரு விஷயம்.  டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ் போன்ற மிக முக்கியமான நூல்களெல்லாம் தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ள போதும் அது போன்ற வேறு பல புத்தகங்கள் தமிழில் வரவில்லை.  காரணம், அந்தந்த எழுத்தாளர்களின் இலக்கிய ஏஜெண்டுகள் சொல்லும் விலை தமிழ்ப் பதிப்பாளர்களால் நினைத்தும் பார்க்க முடியாதபடி இருக்கிறது.  உதாரணமாக, ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் குறிப்பிட்ட நாவல் ஒன்று தமிழில் வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  அவர் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரோடு அது பற்றிப் பேசினேன்.  அவரோடு பேசி முடித்த பிறகு பதிப்பாளரை அணுகலாம் என்பது என் எண்ணம்.  அவர் சொன்னதைக் கேட்டு அந்த எண்ணத்தையே கை விட்டு விட்டேன்.  ஏனென்றால், நான் சொன்னது அவருக்குப் புரியவே இல்லை.  அவர் சொன்னதை என் பதிப்பாளரிடம் சொன்னால் என்னைக் கொன்றே போடுவார்.  அவர் சொன்னது, ”புத்தகத்தைப் பதிப்பித்த பிறகு அது குறித்து உங்கள் நாட்டில் ஒரு promotional tour ஒன்று செய்ய வேண்டும்; அது பற்றியும் பதிப்பாளரிடம் பேசி விடுங்கள்.”   நான் சொன்னேன், ”அதெல்லாம் இங்கே கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.  பிரதிகளே இங்கு ஆரம்பத்தில் 200 தான் போடுவார்கள்.”  அவரால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  நம்மை வைத்து தமிழ்நாட்டுப் பதிப்பாளர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகப் பார்க்கிறார் என்றுதான் அவர் நினைத்திருப்பார்.  அப்படியே அந்த யோசனையைக் கைவிட்டு விட்டேன்.  இதனாலேயே பலப் பல ஐரோப்பிய எழுத்தாளர்களின் முக்கியமான நூல்களெல்லாம் தமிழில் வர முடியாமல் இருக்கின்றன.  உதாரணமாக, தமிழ்நாடு பூராவும் கடந்த முப்பது ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வரும் மிலன் குந்தேரா ஏன் தமிழில் வரவில்லை என்றால் காரணம் இதுதான்.  லட்சக்கணக்கில் பணம் கேட்கிறார்கள். 

பணத்துக்கும் எனக்குமான உறவு பற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன். 4000 வருட தமிழ் எழுத்தாளப் பாரம்பரியத்தில் முதல் முதலாகப் பணம் பற்றிய போராட்டத்தை ஆரம்பித்தவன் அடியேன் தான் என்பதை நான் இங்கே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.  தெருவில் நின்று கோஷம் போடும் போராட்டம் அல்ல.  ஒருசில உதாரணங்களைத் தருகிறேன்.  அவர் ஒரு மலையாள இயக்குனர்.  தேசிய விருது பெற்றவர்.  அவர் படத்துக்கு என்னை வசனம் எழுதச் சொன்னார்.  பிரமாதமான கதை.  வசனம் பத்து காட்சிகளுக்கு எழுதினேன்.  மகாபலிபுரத்தில் அறை போட்டுக் கொடுத்தார்.  சீனியர் என்பதால் மோகன் லாலே அவரிடம் ஆசிரியரிடம் பேசுவது போல்தான் பேசினார்.  பணம் பற்றிய பேச்சே இல்லை.  நான் பணத்தை மதிப்பதில்லை.  பணத்துக்கு என் வாழ்வில் முக்கியத்துவமே கொடுப்பதில்லை.  அதை வைத்து யாரையும் எடை போட்டதும் இல்லை.  சுருக்கமாகச் சொன்னால், பணம் என் சிந்தனையில் இல்லை.  அதற்காக, ஓட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் வர முடியுமா?  அதிலும் லௌகீக வாழ்வில் ஒழுங்கைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் நான்?  இயக்குனரிடம் பணம் பற்றிய பேச்செடுத்தேன்.  தட்டிக் கழித்தார்.  நேரடியாக எதுவும் சொல்லவில்லை.  தருகிறேன் என்றும் சொல்லவில்லை.  அவர் எடுத்த முந்தைய படம் தேசிய விருது பெற்றிருந்ததால் அதற்கு வசனம் எழுதிய என் நண்பரை போனில் பிடித்துக் கேட்டேன்.  ஐயோ, அவரா?  அவரிடமிருந்து நயாபைசா பெயராதே?  எனக்கு ஒரு சல்லிக் காசு கொடுக்கவில்லை என்று கன்னாபின்னா என்று திட்டினார்.  நான் இயக்குனரிடம் இது லோ பட்ஜெட் படம் என்பதால் குறைந்த பட்ச ஊதியமாவது வேண்டும் என்று தீர்மானமான குரலில் சொன்னேன்.  அந்தக் குரலில் அவரிடம் அதுவரை யாரும் பேசியதில்லை போல.  மறுநாளே கேரளா திரும்பிப் போய் விட்டார்.  நானும் சென்னை வந்து விட்டேன்.  படமும் வரவில்லை.  நான் மட்டும் சமரசம் செய்து கொண்டு ஓசியில் எழுதிக் கொடுத்திருந்தால் அதுவும் தேசிய விருது பெற்றிருக்கும்.  நானும் நாலு படத்துக்கு எழுதி பணம் சம்பாதித்திருக்கலாம்.  செய்ய மாட்டேன்.  செய்யவே மாட்டேன். இது நடந்து பத்து வருடம் இருக்கும்.  35 வருடம் இலவசமாக எழுதியாகி விட்டது.  இனி நம் வாழ்வில் இலவசம் கிடையாது என்று முடிவெடுத்து விட்டேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி நீயா நானாவில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தேன்.  அதில் எனக்கு ஒரு முழுநாள் வீணாகிக் கொண்டிருந்தது.  ஐந்தாயிரம் கொடுங்கள் என்று கேட்டேன்.  கொபிநாத்துக்கு அப்போது லட்சங்களில் சம்பளம்.  விளம்பரங்களில் கோடி கோடியாய்க் கொட்டிக் கொண்டிருந்தது.  உங்களுக்கு இலவச விளம்பரம் தருகிறோமே என்றார்கள்.  இலவச விளம்பரத்தால் எனக்கு என்ன லாபம்?  என் புத்தகம் எதுவும் விற்கப் போகிறதா என்ன?  தினந்தோறும் வந்தால் கூட புத்தகம் என்றால் வாங்க மாட்டார்கள்.  மேலும், அப்படி நீயா நானா மூலம் விளம்பரம் தேடி புத்தகம் விற்க வேண்டும் என்ற அவசியமும் எனக்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு ஐந்தாயிரம் இல்லை என்றால் நான் கலந்து கொள்வது சிரமம் என்றேன்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஐந்தாயிரத்துக்கு அலைக்கழித்தார்கள்.  விகடனில் எழுதினேன்.  பணம் வந்தது.  கூடவே பத்து ஆண்டுகளாக விஜய் டிவியில் என்னை ‘ப்ளாக்’ செய்து விட்டார்கள். ரொம்ப நல்லது. 

விண் டிவியில் உலக சினிமாவை வாராவாரம் அறிமுகம் செய்து பேசிக் கொண்டிருந்தேன்.  அதற்காக நான் இரண்டரை தினங்கள் செலவு செய்தேன்.  இரண்டு நாள் படிப்பு, திரைப்படம் பார்த்தல்.  அரை நாள் படப்படிப்பு.  சில சமயம் இது முழுப் பகலும் நீளும்.  சுமார் 25 வாரங்கள் சென்றன.  நூறு வாரங்கள் செய்யலாம் என்பது என் எண்ணம்.  எனக்கு மிக மிகப் பிடித்திருந்தது.  25 வாரங்கள் சென்று பணம் பற்றிப் பிரஸ்தாபித்தேன்.  ஐயோ என்றார்கள்.  முதலாளியிடம் பேசுகிறோம் என்றார்கள்.  பணம் பற்றி யாரும் கேள்விப்பட்டதே இல்லை போல.  அப்படியானால் உங்கள் டிவி நிலையத்தில் தினந்தோறும் ஒரு ஆயா பெருக்கித் துடைக்கிறார்களே அவர்களும் இலவசமாகத்தான் செய்கிறார்களா என்று கேட்டேன்.  சரி, எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.  25000 என்றேன்.  எதிராளிக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  மறுவாரமும் பேச்சு வார்த்தை நடந்தது.  அவ்வளவு இயலாது என்றார்கள்.  சரி, 5000 என்றேன்.  கேட்டுப் பார்க்கிறோம்.  பணம் பற்றித் தெரியும் வரை படப்பிடிப்பு வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.  கடைசியில் 500 ரூ. தருகிறேன் என்றார்கள்.  நன்றி என்று கடையை மூடி விட்டேன்.  என்னுடைய இந்த நிகழ்ச்சிக்கு உலகம் பூராவும் பார்வையாளர்கள் இருந்தார்கள். 

இன்னொரு மிகப் பிரபலமான தொலைக்காட்சியில் காலை ஏழு மணிக்கு செய்தி அலசல் நிகழ்ச்சி செய்ய அழைத்தார்கள்.  ஒரு நாள் அல்ல; ஒரு மாதம்.  என் வீட்டிலிருந்து ஒரு மணி தூரத்தில் உள்ளது அந்த அலுவலகம்.  ஏழு மணி என்றால், அங்கே ஆறு மணிக்கே போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.  அப்போதுதான் அன்றைய செய்தித்தாள்களைப் புரட்டியிருக்க முடியும்.  வீட்டிலிருந்து ஐந்துக்குக் கிளம்ப வேண்டும்.  அப்படியானால் நாலு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும்.  ஏழிலிருந்து ஏழரை நிகழ்ச்சி.  வீட்டுக்கு ஒன்பது மணிக்கு வரலாம்.  கிட்டத்தட்ட ஒரு அலுவலகப் பணிதான்.  எவ்வளவு சம்பளம் என்று கேட்டதும் எதிராளி மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.  என்னது சம்பளமா, சா…………………ர் என்றார்.  ஏனென்றால், இதையெல்லாம் இலவசமாகத்தான் செய்து தருகிறார்கள் போல.  அடக் கேடுகெட்ட மண்டைங்களா, ஒரு செக்ஸ் ஒர்க்கரை விட மட்டமாக நடத்துகிறீர்களேடா என்று நினைத்துக் கொண்டு ஆளை விடுங்கள் என்று சொல்லி விட்டேன்.

உங்கள் எல்லோருக்கும் இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.  ஆனால் அவர்களெல்லாம் யார் தெரியுமா?  இப்படி ஆச்சரியப்படும் நாமேதான்.  உதாரணமாக, மாயா இலக்கிய வட்டத்தில் ஒரு வாரம் பேசினேன்.  குறுநாவல் பற்றி.  அவர்கள் என் நண்பர்கள்.  குடும்பம் மாதிரி.  நெருக்கமான நண்பர்கள்.  ஒரு வாரம் குறுநாவல்கள் குறித்துப் பேசினேன்.  ஆனால் இன்னொரு வாரமும் பேசலாம் என்று தோன்றியது.  அத்தனை பேர் கலந்து கொண்டார்கள்.  மிகவும் உற்சாகமாக இருந்தது எனக்கு.  கலந்து கொண்டவர்களுக்கும்தான்.  கொரோனா காலம் இல்லையா?  தனிமையில் இருப்பதும் ஒரு காரணம்.  ஒன்றரை நாள் பரீட்சைக்குப் படிப்பது போல் படிக்க வேண்டியிருந்தது.  வீட்டு எடுபிடி வேலையையும் நிறுத்தி விட்டேன்.  எல்லாவற்றையும் அவந்திகாவேதான் செய்தாள்.  ஒன்றரை நாள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.  அடுத்த வாரம், நானாகவேதான் பேசினேன்.  முந்தின வாரத்தை விட அதிகமாகப் படித்தேன்.  படம் பார்த்தேன்.  சுமார் 20 மணி நேரத் தயாரிப்பு.  மூன்று மணி நேரம் பேச்சு, உரையாடல் எல்லாம்.  திடீரென்று இதற்கான ஊதியம் என்ற நினைவு வந்தது.  நூறு பேர் கலந்து கொண்டார்கள்.  கட்டணப் பேச்செல்லாம் இல்லை.  இருந்தாலும் நூறு பேருக்குமா பொருளாதாரம் பற்றிய நினைப்பே எழாது?  இலக்கிய வட்ட நண்பர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள்.  அவர்களால் பணத்துக்கும் ஏற்பாடு செய்ய முடியாது.  மேலும், இதெல்லாம் பணத்துக்காக செய்யும் வேலை இல்லையே?  எல்லாமே இலக்கியச் செயல்பாடுகள்.  அதனால் நான் யாரையும் எதையும் குறையாகச் சொல்லவில்லை.  இனியும் இதுபோல் மாதம் ஒருமுறை ஸூம் மூலம் பேச வேண்டும் என்றுதான் என் விருப்பமாக இருக்கிறது.  ஆனால் ஊதியம் என்று ஒன்று வேண்டுமே என்றும் தோன்றுகிறது.  அது தவறு இல்லை என்று ஒத்துக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.  பின்னர் அன்றைய தினமே அராத்து இந்தப் பண விஷயம் பற்றி முகநூலில் ஒரு சிறு குறிப்பை எழுதினார்.  அதை நான் என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்.  உடனடியாக மூன்று நண்பர்கள் பணம்  அனுப்பினார்கள்.   மூவருமே ஸூம் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள். 

அமெரிக்க வாசகர்களுக்காகவும் மாதம் ஒரு ஸூம் சந்திப்பை ஏற்பாடு செய்யலாம்.  காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை பேசலாம்.  கட்டண உரை அல்ல.  விருப்பப்பட்டவர்கள் எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.  அவ்வளவுதான்.  இன்னொன்று, பணம் ஒரு அடிப்படையான விஷயமும் அல்ல.  அதற்கு நாம் அதிக முக்கியத்துவமும் தர வேண்டாம்.  ஆனால் அராத்து என்ன சொல்கிறார் என்றால், நூறு பேர் கலந்து கொண்டால் நூறு பேருமே பணத்துக்கு முக்கியத்துவம் தராமல் எழுந்து போய் விடுகிறார்களே என்பதுதான்.   இந்திய நேரம் காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி பரவாயில்லையா? அப்போது அமெரிக்காவில் மாலையாக இருக்கும்.  இந்த மாதக் கடைசியில் ஒரு ஞாயிறு பார்க்கலாம்.  உங்கள் ஆலோசனை தேவை.  இதில் ஏன் ஆர்வமாக இருக்கிறேன் என்றால், இந்த உரையாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.  உற்சாகமாக இருக்கிறது.  எதைப் பற்றிப் பேசலாம் என்றும் உங்கள் கருத்துக்களை எழுதலாம்.  நானும் யோசிக்கிறேன்.  என் ஆர்வத்துக்கு இன்னொரு காரணம், மொத்தம் நூறு பேர்தான் ஸூமில் கலந்து கொள்ளலாமாம்.  ஆனால் இன்னும் ஒரு ஐம்பது பேர் கலந்து கொள்ள வந்திருக்கிறார்கள்.  நூறு பேர் ஏற்கனவே வந்து விட்டதால் பலரால் நேரடியாகக் கலந்து கொள்ள இயலவில்லை.  மறுநாள் யூட்யூபில் பார்த்திருக்கிறார்கள்.  இது ஒரு மிகப் பெரிய வெற்றி என்று நினைக்கிறேன். இதுதான் இன்னும் தொடர்ந்து ஸூமில் சந்திக்க ஆர்வம் கொண்டதற்குக் காரணம்.    

கேங் ஆஃப் ஃபோர் பற்றி எழுதினேன் அல்லவா?  துரதிர்ஷ்டம் என்னவென்றால், கேங் ஆஃப் ஃபோர் பற்றின வரலாற்று முக்கியத்துவம் என்னுடைய கேங் ஆஃப் ஃபோருக்கே தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.  அதுதான் என் நிலைமை.  இன்னொரு நாள் சொல்கிறேன்.  இப்போது அந்த கேங் ஆஃப் ஃபோரில் ஒருவரான ஸ்ரீராம் என்னிடம் கேட்டார், சாரு, நான் உங்களுக்குப் பணமே கொடுத்ததில்லையே? 

சரி, எனக்கு நான் என்ன கொடுத்துக் கொள்கிறேன்? 

ம்ஹும், புரியவில்லை.

எனக்கு நான் என்ன கொடுக்கிறேன்?  என்ன கொடுப்பதால் உயிர் வாழ்கிறேன்?

ஓ, சுவாசம்.

அப்படித்தான் நீங்கள்.  சுவாசமாக இருப்பவர்கள் அதை மட்டும் கொடுத்தால் போதும்.  பணம் வேண்டாம். 

தாயே புவி, சுவாசம் அளவுக்கு முக்கியம் எரிபொருள்.  அன்னம்.  அவந்திகாவுக்கு அடுத்தபடி நீங்கள்தான் என் அன்னபூரணி.  அதனால் உங்கள் முக்கியத்துவம் என்றைக்கும் அப்படியே நிலைக்கும். 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai