ஊரடங்கு, தனிமைப்படுத்தல் ஆகிய காரணங்களால் என்னுடைய இரண்டு நண்பர்கள் தங்கள் இளம்பிராயத்து நினைவுகளை அப்படியே நாஸ்டால்ஜியாவாக எழுத ஆரம்பித்தனர். இருவருமே நாவலெல்லாம் எழுதுவார்கள் என்று அவர்களே நம்பியதில்லை. கொரோனாவினால் உலகமே துயரத்தில் இருக்கிறது, அழிவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றாலும் ஒருசில நன்மைகளும் விளைந்திருக்கிறதுதானே? கங்கை நதி சுத்தமாகி விட்டது. எடுத்ததற்கெல்லாம் மருத்துவர்களிடம் ஓடிக் கொண்டிருந்த ஜனம் இப்போது அடங்கி இருக்கிறது. பச்சிலை, மூலிகை என்று பாரம்பரிய மருத்துவத்திடம் நம்பிக்கை வந்திருக்கிறது. வீட்டில் இருந்ததே இல்லை என்று இருந்தவர்களெல்லாம் இப்போது வீடே கதி என்று கிடக்கிறார்கள். வாயு மண்டலத்தில் இருந்த தூசுப் படலம் கொஞ்சம் மறைந்திருக்கிறது. ஏதோ ஹாலிவுட் படத்தில் வருவது போல அஸ்ஸாமில் நடுத்தெருவிலேயே காண்டாமிருகங்கள் நடந்து போகின்றன. பொருளாதார ரீதியாக எல்லோரும் பிரக்ஞையற்றுப் போய் விட்டாலும் ஒருசில துறைகள் பணத்தில் கொழிக்கின்றன. உ-ம்.நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ப்ரைம், ஹாட்ஸ்டார்.
இப்படியாக கொரோனாவினால் விளைந்த நன்மைகளுள் ஒன்று, நண்பர்கள் நாவல் எழுத ஆரம்பித்தது. ஆனால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று தெரியாததால் அத்தியாயங்களை முகநூலில் வெளியிட்டார்கள். அட நம்ம பையன், நம்ம ஊரப் பத்தி எழுதுறானே என்று உற்றம் சுற்றம் எல்லாம் படித்தது. நான் பூச்சியில் இருப்பதால் என்னால் படிக்க முடியவில்லை. இருவரில் ஒருவர் பெயர் ரத்தினம். அவர் நண்பர் கோபாலனும் அவ்வப்போது எங்களோடு பார்க்கில் இணைந்து கொள்வார். நாகேஸ்வர ராவ் பார்க். சமகால இலக்கியப் பரிச்சயம் கிடையாது என்றாலும் பழந்தமிழ் இலக்கியத்தில் மன்னன். பாகவதப் பிரியர். அவருக்குப் பிடித்த கதைசொல்லி விசாகா ஹரி. (எனக்குமே விசாகா ஹரியை ரொம்பவே பிடிக்கும், அது வேறு விஷயம்.) நேற்று கோபாலன் எனக்கு போன் செய்து ரத்தினத்தின் கதை பிரமாதமாகப் போகிறது என்றார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஏனென்றால், கோபாலன் பயங்கரமான மடிசஞ்சி. அவருக்கு எப்படி ரத்தினம் கதை பிடிக்கப் போயிற்று? உங்கள் சந்தேகம் புரிகிறது. நானோ ரத்தினத்தின் கதையைப் படித்ததில்லை. ரத்தினமும் கோபாலனுமோ ஒரே ஊர்க்காரர்கள். பள்ளிக்கூடத்திலிருந்தே நண்பர்கள். ரத்தினம் எழுதுவதோ ஊர்க் கதை. எப்படி அவருடைய பள்ளிக்கூட நண்பருக்கு அது பிடிக்காமல் போகும்? ம்ஹும். பிடிக்காமல்தான் போக வேண்டும். ஏனென்றால், ரத்தினத்தின் கதையில் எக்கச்சக்கமான sexual escapades உண்டு. அந்தக் கதையையெல்லாம் ரத்தினம் அவரது பால்ய நண்பர் கோபாலன் இல்லாத போதுதான் என்னிடம் சொல்வார். அப்படிப்பட்ட கதைகள் எப்படி ஒரு மடிசஞ்சிக்குப் பிடித்துப் போயிற்று? ஒரே ஒரு சம்பவம் சொல்கிறேன். கோபாலன் இருந்தால் நானே கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பேசுவேன். அப்படியும் ஒருநாள் வாய்மீறி ஒரு கெட்ட வார்த்தைப் பிரயோகம் செய்து விட்டேன். பொதுவாக நான் தென்னமெரிக்கர்களைப் போல் கெட்ட வார்த்தை போட்டுப் பேசுவது வழக்கம். அது என்னுடைய சமூகப் பின்னணியின் காரணமாக. ஆனாலும் பெண்கள் முன்னிலையில் அப்படிப் பேசுவதில்லை. என்னவோ போறாத காலம், கோபாலன் நிற்கையில் வந்து விட்டது. என்னுடைய எழுத்தாளன் இமேஜே அன்று அவரிடம் சரிந்து சின்னாபின்னமாகி விட்டது. அவரைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்றால் மா அமிர்தானந்த மயீ மாதிரி இருக்க வேண்டும். எவ்வளவோ பேசிப் பார்த்தேன். ஷேக்ஸ்பியர் காலத்து நாடகாசிரியரான கிறிஸ்டோஃபர் மார்லோ (Christopher Marlowe) எப்படி இருந்தார் என்று தெரியுமா? செப்டம்பர் 1589 மார்லோவும் அவரது நண்பர் தாமஸ் வாட்ஸனும் சேர்ந்து ஒரு லாட்ஜ் மேனேஜரோடு தகராறு செய்ததில் மேனேஜர் இறந்து விட்டார். இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பின்னர், 1593-இல் மார்லோ ஒரு நாத்திகர் என்று அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஒரு மதுபானக் கூடத்தில் நடந்த அடிதடி தகராறில் மார்லோ கொலையுண்டார். அப்போது அவர் வயது வெறும் 29. மார்லோ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரின் இடத்தை விட மேலே சென்றிருப்பார் என்பதற்கு மார்லோ எழுதிய நாடகங்களே சாட்சி. ஆனால் இன்னொரு யூகமும் இருக்கிறது. அதாவது, மார்லோவின் கடவுள் மறுப்புக் கொள்கையாலும் அவரது மற்ற கலகச் செயல்களாலும் வெறுப்புற்ற அரசன் அவரைக் கொல்லத் திட்டமிட்டு, மார்லோ அந்தக் கொலை முயற்சியிலிருந்து தப்பி, ஆனால் தான் இறந்து விட்டதாகவே சமூகத்தை நம்பச் செய்து விட்டு ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் பின்னர் வெளியே வந்தார் என்றும் சில வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அது நமக்கு முக்கியம் அல்ல. எழுத்தாளன் என்பவன் நீதி போதிப்பவன் அல்ல. இன்னொரு உதாரணம் சொல்கிறேன். தருண் தேஜ்பாலின் மீது என்ன குற்றம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அது அவர் மீதான அரசியல் சதி என்றுதான் அவர் மனைவியும், அவரது இரண்டு புதல்விகளும், நானும் நம்புகிறோம். இல்லை, அந்தக் குற்றம் உண்மை என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் விருப்பம். நான் சொல்ல வருவது அது அல்ல. எழுத்தாளனின் படைப்பும் அவனுடைய வாழ்க்கையும். தருணின் The Alchemy of Desire என்ற நாவல்தான் ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்தை எனக்கு செயல்முறையில் கற்பித்தது. 700 பக்கம் வரும் அந்த நாவலில் ஒரு முன்னூறு பக்கம் மரங்களைப் பற்றித்தான். அதிலும் குறிப்பாக தில்லியிலிருந்து சண்டிகர் போகும் வழியில் உள்ள காடுகள், பஞ்சாபின் உள்ளே இருக்கும் காடுகள். பாரதி மொழிபெயர்த்த வேத சாரம் (வசன கவிதை) வான் இனிது, கடல் இனிது – அதுவும் பிரத்தியட்சப்பட்டது அந்த நாவலின் மூலம்தான். தருண் ஒரு இயற்கை நேசிப்பாளர் என்பது அவரோடு பழகிய பிறகே எனக்குத் தெரியுமே தவிர தருணை அறியாதோருக்கு அவருக்கு இயற்கை பிடிக்குமா அல்லது அவர் ஒரு வன விரோதியா என்பதெல்லாம் தேவையே இல்லை. என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைப் பார்வையையே மாற்றியமைக்கக் கூடிய ஒரு பிரதியை உருவாக்கக் கூடியவன் தான் கலைஞன். அவன் கெட்ட வார்த்தை பேசினால் என்ன, நல்ல வார்த்தை பேசினால் என்ன. ஆனால் கோபாலன் ஒத்து கொள்ளவில்லை. எழுத்தாளனுக்கு ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது. அவன் கெட்ட வார்த்தை பேசக் கூடாது.
அதை விடுங்கள், நாம் ரத்தினம் எழுதிய நாவலுக்கு வருவோம். படு பயங்கரமான sexual escapades-ஐக் கொண்ட அவரது நாவலை கோபாலன் கொண்டாடுவதன் மர்மம் என்ன என்று ரத்தினத்திடம் கேட்டேன். அவர் சொன்னது எனக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. அவர் தன் ஊர்க் கதையில் அந்தப் பகுதிகளை எழுதவே இல்லையாம். உடனே ஒரு இலக்கியத் தீவிரவாதியான நான் பொங்கினேன்.
ஆனாலும் அவர் சொன்ன பதிலைக் கேட்ட பிறகு என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவருடைய அம்மா அப்பா மட்டும் இல்லை; பனிரண்டாம் வகுப்பு படிக்கும் அவர் மகள் உட்பட எல்லோரும் படிக்கிறார்களாம். எப்படி சார் அந்தக் கதையையெல்லாம் எழுத முடியும் என்றார். மேலும், எனக்கே அதையெல்லாம் எழுத ஒரு சௌகரியம் வரவில்லை என்றார். உங்களிடம் பேசும்போது இருக்கும் சுதந்திர உணர்வு மற்ற இடங்களில் வருவதில்லை என்றும் சேர்த்தார். அது சரி, எழுதுவது என்பது போகத்தில் ஈடுபடுவதைப் போன்ற ஒரு அந்தரங்கமான செயல். அதை எப்படி ஒரு performing art ஆக மாற்ற முடியும்? நாம் என்ன லைவ் ஷோவா காண்பிக்கிறோம்? அப்படியானால் எழுத்தை மட்டும் எல்லோரும் படிக்கிறார்களே என்று கேட்கலாம். குழந்தையைக் கூடத்தான் எல்லோரும் கொஞ்சுகிறார்கள், ஆனால் அதை உருவாக்குவதற்காக இரண்டு பேர் ஈடுபடும் காரியத்தை ஊரார் முன் செய்ய முடியுமா? எழுத்து என்பது நிகழ்த்துக் கலை அல்ல. அது மிக மிக அந்தரங்கமாகச் செய்ய வேண்டிய ஒரு பணி.
நீங்கள் மட்டும் வெளிப்படையாக உங்கள் இணைய தளத்தில் பூச்சி எழுதுகிறீர்களே? நான் அடிக்கடி சொல்வது போல, நான் ஒரு துறவி. எனக்கு உற்றம் சுற்றம் எதுவும் கிடையாது. அவந்திகா கூட என் எழுத்து வெளியில் வந்து தலை காட்டுவதில்லை. நீங்களே யோசித்துப் பாருங்கள். பூச்சியை அவந்திகா படித்தால் நான் இப்படி எழுத முடியுமா? வாய்ப்பே இல்லை.
தி. ஜானகிராமனை அவரது குடும்பம் திரஸ்கரித்தது. ஏன் என்று நீங்கள் அம்மா வந்தாள் நாவலைப் படித்தால் புரியும். அவருடைய எல்லா நாவல்களுமே சுயசரிதத்தன்மை வாய்ந்தது. முழுக் கற்பனையாக அவர் எழுதியதே இல்லை. அம்மா வந்தாள் நாவலில் ஊஞ்சல் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அம்மாவைப் பார்க்க வேத பாடசாலையிலிருந்து பல ஆண்டுகள் கழித்து வருகிறான் மகன். கூடத்து ஊஞ்சலில் அவன் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஒரு மாமா அமர்ந்திருக்கிறார். ஆனால் மீசை இல்லை என்ன மாமா மீசையை எடுத்துட்டேளா என்று கேட்கிறான். நான் ஒண்ணும் மாமா இல்லை. உன் தம்பி என்கிறான் அவன். கதை புரிகிறதா? இப்படி எழுதின தி. ஜானகிராமனை அவர் குடும்பம் எப்படித் திரஸ்கரிக்காமல் இருக்கும்? (அம்மா வந்தாள் சம்பவம் சரியாகச் சொல்லியிருக்கிறேனா, அல்லது உல்ட்டாவாக மாற்றி விட்டேனா?)
இதற்கு மாறாக சுந்தர ராமசாமியின் கதைகள் படு சைவமாக இருக்கும். இவரது பாத்திரங்களுக்கெல்லாம் ஜனனேந்திரியமே கிடையாதா என்று என் நண்பர்களிடம் கிண்டலடிப்பேன். அந்த மாதிரி நண்பரின் நாவலும் அம்மா நைனா கோஷ்டியால் ”புனிதமாக்கப்பட்டு” வந்திருப்பது இலக்கியம் எதிர்கொள்ளும் முக்கியமான ஒரு சவாலை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. எப்போதுமே இலக்கியம் என்பது சமூகத்தை ஊடறுப்பதுதான். அதாவது, சுய தணிக்கையோ சமூகத் தணிக்கையோ செய்யப்படாத எந்த எழுத்துமே அதனளவில் கலகச் செயல்பாடுதான்.
அவந்திகா ஒரு இலக்கிய வாசகியாக இல்லாமல் இருப்பதால் என்னால் சுதந்திரமாக எழுத முடிகிறது. இல்லாது போனால் என் எழுத்து இப்படி இருக்காது. The Alchemy of Desireஇலிருந்தே ஒரு உதாரணம். அது ஒரு சுயசரிதத்தன்மை கொண்ட coming of age நாவல். தருணின் காதல், கல்லூரிப் பருவம் எல்லாம் கொண்டது. காதலிக்காக எழுப்பப்பட்ட ஒரு காவியம். காதலிதான் மனைவியும். நாவலில் காதலி (மனைவி) ஒரு ஆய்வு மாணவி. அவளுடைய பேராசிரியர் ஒரு கள ஆய்வுப் பணி கொடுத்திருக்கிறார். மாணவர்களின் சுய மைதுனம் பற்றிய கள ஆய்வு. அது ஒரு வினாப் படிவம். நூறு கேள்விகள் இருக்கும். நிரப்பிக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். அவள் தன் காதலனிடம் “உன்னிடமிருந்தே ஆரம்பிக்கிறேன், அப்போதுதான் எனக்குக் கொஞ்சம் தைரியம் வரும்” என்கிறாள். ஐயோ வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும் கேளாமல் ஆரம்பித்து விடுகிறாள். இன்னொரு விஷயம். இரண்டு பேருமே செக்ஸில் தீவிர ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால் பகல் இரவு பாராமல் எப்போது பார்த்தாலும் அதில் ஈடுபடுகின்றவர்கள். இப்போது வினாப்படிவம். ஆனால் கதைசொல்லி குறுக்கிடுகிறான்.
”நீ இப்போது தெரிந்து கொள்ளும் உண்மைகளை வைத்து நம்முடைய வாழ்க்கையில் விளையாடக் கூடாது. இது உன்னுடைய ஆய்வுக்காக நான் உதவி செய்வது. இதை வைத்துக் கொண்டு நீ நம் வாழ்வைக் கெடுக்கக் கூடாது. சரியா?”
”என்ன நீ, சாதாரண விஷயத்துக்குப் போய் இந்த பில்டப் கொடுக்கிறாய்? நமக்குள்தான் எந்த ஒளிவு மறைவுமே இல்லையே? சரி, வினாப் பட்டியலில் முதல் கேள்விக்குப் போவோம். நீ சுய மைதுனம் செய்வது உண்டா?”
”என்ன மடத்தனமான கேள்வி இது? சுய மைதுனம் செய்யாதவன் ஒரு ஆண் மகனா?”
“நோ, காமெண்ட்டெல்லாம் அடிக்கக் கூடாது. பதில் மட்டும்தான் சொல்ல வேண்டும்.”
“சரி, செய்கிறேன்.”
பதிலைக் கேட்டவுடனேயே வினாப் பட்டியலைத் தூக்கிப் போட்டு விட்டு அதிர்ச்சியுடன் ”என்ன, செய்கிறாயா? நாள் பூராவும் இரவு பூராவும் செக்ஸில்தானேடா இருக்கிறோம்? சுய மைதுனம் வேறு செய்கிறாயா?” என்று அலறுகிறாள் காதலி.
“ஏய், ஏய், இதற்குத்தான் சொன்னேன், உன் ஆய்வுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உண்மையைச் சொன்னேன். நான் பொய் கூட சொல்லியிருக்கலாம் இல்லையா? நானே பொய் சொன்னால் அப்புறம் உன் ஆய்வு எப்படி நடக்கும்? அடுத்த கேள்விக்குப் போ…”
அவனைக் கடுமையாக முறைத்துக் கொண்டே அடுத்த கேள்வியைப் படிக்கிறாள். இரண்டு பேரின் துரதிர்ஷ்டம். அடுத்த கேள்வி “எப்போது சுய மைதுனம் செய்கிறாய்?” என்று வருகிறது.
கதைசொல்லியும் சீரியஸான முக பாவனையுடன் காலை நேரத்தில், விடிகாலை நேரத்தில் என்கிறான். கையில் இருந்த காகிதத்தைத் தூக்கிப் போட்டு வீட்டை விட்டுப் போய் விடுகிறாள். இரண்டு பேருமே இலக்கியமாக இருந்தால் இப்படித்தான் நடக்கும் என்பதற்காகச் சொன்னேன் நண்பர்களே!
எனவே, எழுத வரும் புதியவர்களே, இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நவீன பாகவதம் எழுதுவதாக இருந்தால் பிரச்சினையே இல்லை. ஆனால் இலக்கியத்தில் ஈடுபடுவதாக இருந்தால் அதை வெளிப்படையாக, ஊர் அறிய செய்ய முடியாது என்பது இதன் மூலம் அறியப்படுவது.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai