சில தினங்களுக்கு முன் செல்வேந்திரனின் பதிவு ஒன்றை இங்கே பகிர்ந்திருந்தேன். அவருடைய மூன்று புத்தகங்கள் ஒருசில மாதங்களிலேயே அமேஸான் கிண்டிலில் ஆயிரம் பிரதிகளைத் தாண்டி விற்றதை எழுதியிருந்தார். அமேஸான் கிண்டிலில் ஒரு புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு என் நண்பர் நிர்மலின் கீழ்வரும் பதிவே சாட்சி. ஆறு மாதங்களில் அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் கிண்டில் மூலம் வந்துள்ளது. அதுவும் அவ்வளவாகப் பிரபலம் ஆகாத புத்தகம். கிண்டிலில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது. பின்வருவது நிர்மல்:
இன்றுதான் கணக்கு பார்த்தேன். அமேஸான் கிண்டிலில் இருந்து “காணாமல் போன தேசங்கள்” புத்தகத்திற்கு வந்த ராயல்டி தொகை – 10810 ருபாய் !
உண்மையில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இதைப் போன்ற படைப்புகளை தொடர்ந்து உருவாக்க வேண்டும் எனும் ஆவலும் ஏற்படுகிறது.
மேலும், புத்தகம் கிண்டிலில் வெளியிட்டு 6 மாதங்கள் ஆகிறது…. இன்னும் தொடர்ந்து வாசிக்கப்பட்டும் வருகிறது. காணாமல் போன தேசங்கள் இலக்கிய பிரதி கிடையாது. வரலாற்று தகவல்களும் அரசியலும் கலந்த அடர்த்தி குறைவான புத்தகம். இப்படியான புத்தகங்களுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
கிண்டில் உலகம் உண்மையில் ஆச்சரியப்படுத்துகிறது. தொடர்ந்து விளம்பரங்கள் எதுவும் செய்யாமலே நம் புத்தகம் வாசகர்களுக்கு போய் சேர்ந்துக் கொண்டே இருக்கிறது. குறைந்தபட்சம் 30 பக்கங்கள் தினம் வாசிக்கப்படுகிறது. நம் எழுத்துக்கள் வாசிக்கப்படுகிறது என்பது தரும் கிக் ஒன்றே போதும்.
புத்தக அட்டை வடிவமைப்புக்கு 2500 ரூபாய் செலவழித்தேன். மேலும் pen to publish போட்டி நேரத்தில் 5000 ரூபாய் விளம்பரத்திற்காக தேவையின்றி செலவு செய்தேன். அதை தவிர்த்து இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. இன்னும் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருவதால் என்னைப் பொருத்தவரை “காணாமல் போன தேசங்கள்” கிண்டில் மூலம் பலரை அடைந்துள்ளது என உறுதியாக சொல்ல முடியும்.
இவை அனைத்தும் எந்த கொள்கை கூடாரத்துக்குள்ளும் சிக்காமல், அரசியல் குழுவாக பயணிக்காமல் தனி ஆளாக கிண்டிலில் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம்.
கூட்டமாக சேர்ந்தால் நிறைய பேர்களுக்கு புத்தகம் தெரிய வரும் போன்ற பிம்பங்கள் அனைத்தும் பொய். என்னைப் போன்ற சராசரி நபரின் புத்தகம் கூட இன்னும் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது என்றால் குழுவாக இயங்கும் சிண்டிகேட் முறையும் அதிகப்படியான விளம்பரங்களும் தேவையைற்றது. அது கூட்டமாக ஆள் சேர்த்து தங்கள் வேண்டியவர்களுக்கு பரிசு கிடைக்க செய்யும் scam என தெளிவாக புரிகிறது.
யாரிடமும் கெஞ்சி கூத்தாடாமல், கூட்டம் சேராமல் நம் புத்தகத்தை நாமே பதிப்பிக்க அமேஸான் நல்ல தளம்.
இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
காணாமல் போன தேசங்கள்: What makes and breaks a Nation? (Tamil Edition) eBook: Nirmal, நிர்மல்: Amazon.in: Kindle StoreAMAZON.INகாணாமல் போன தேசங்கள்: What makes and breaks a Nation? (Tamil Edition)