மற்றவர்களுக்கெல்லாம் இதோடு நாலு மாதம் லாக் டவுன் என்றால் எனக்கு ஐந்து மாதம். கொரோனாவுக்கு முன்பே ஸிஸ்ஸிக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்து விட்டதால் ஒரு மாத காலம் ஸிஸ்ஸியை வீட்டுக்குள்ளேயே வைத்துப் பாதுகாக்க வேண்டியதாகி விட்டது. கதவைத் திறந்தாலே வெளியே பாய்ந்து விடும். வெளியே போனால் காயத்தில் தொற்று ஏற்பட்டு சீழ் பிடித்து பெரிய ரணகளமாகி விடும். திரும்பத் திரும்ப தையல் போடுவது ஆபத்து.
நண்பர்களை சந்தித்தே ஐந்து மாதம் ஆகிறது. திடீரென்று இன்று சீனியை விடியோவில் பார்த்தால் ஏதோ ப்ரஸீலிய எழுத்தாளர் மாதிரி இருந்தார். ப்ரஸீலிய எழ்த்தாளர் அல்லது மெக்ஸிகன் மாஃபியா தலைவர். இரண்டு பேருமே ஒருமாதிரிதான் இருப்பார்கள். அப்படியே புகைப்படம் எடுத்து காயத்ரிக்கு அனுப்பினேன். யார் இது என்று கேட்டாள். சூப்பர். சீனி என்றதும் ஆ, அடையாளமே தெரியலியே, வெய்ட் போட்டுட்டார் போல இருக்கே என்றாள். அப்போதுதான் எனக்கே தெரிந்தது. ஏன் ப்ரஸீலிய எழுத்தாளர் அல்லது மெக்ஸிகன் மாஃபியா மாதிரி தெரிந்தார் என்பதற்கு அந்தக் குறுந்தாடியோடு உடம்பு போட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற சம்சயத்தில் அவரிடம் கேட்டேன். ஒன்றரை மாதம் வெளியூரில் இருந்ததால் தினம் சிக்கன் மட்டன், நீச்சல் இல்லை என்பது போன்ற காரணங்களால் வெய்ட் போட்டு விட்டது என்றார்.
எனக்குப் பொறாமையாக இருந்தது. இப்போதெல்லாம் எல்லோர் மீதும் பொறாமை வருகிறது. இங்கே என் வீட்டில் ஸ்விக்கிக்குத் தடை என்பதால் காலை ஆகாரம் பிஸ்கட்தான். பிறகு பதினொன்றரைக்கு அவந்திகா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடும் போது ஏதோ சாப்பிடுவேன். மதிய உணவு மூன்றரை. அந்த நேரத்தில் கால் வயிற்றுக்குத்தான் இறங்கும். இரவில் பழம். ஆக, எப்போதுமே அரை வயிறு கால் வயிறுதான். எடை எக்கச்சக்கமாகக் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்போம். பூனைகள் போய் விட்டன. இந்தக் காலக்குழப்பம் சரியாகிறதா என்று. ஸ்விக்கி தடை நீங்கட்டும், தினசரி ஸ்விக்கியில் ஆர்டர் பண்ணித் தின்றுத் தீர்த்து விடலாம் என்று இருக்கிறேன். ஆனால் நான் ஆர்டர் பண்ணும் கடைகளில் கொழுப்பு அதிகம் இருப்பது போல் இருக்காது. அதெல்லாம் கவனமாகத்தான் இருப்பேன். காசுதான் கொஞ்சம் அதிகம் ஆகும்.
எக்காரணத்தைக் கொண்டும் 45 வயதுக்கு மேல் தினசரி நடைப் பயிற்சியை விடக் கூடாது, இந்தியச் சாப்பாட்டு முறைக்கு அது நல்லதல்ல. ஒரு நாள் கூட விடக் கூடாது. பலரும் சொல்வார்கள் தாங்கள் வாக்கிங் போவதாக. அநேகமாக அதெல்லாம் ஒருவிதத்தில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கும். வாரத்தில் ஆறு நாட்களுக்குக் குறையாமல் நடந்தால்தான் அது நடைப் பயிற்சி. அதேபோல் முக்கால் மணி நேரத்துக்கு ஒரு நிமிடம் குறைவாக நடந்தாலும் அது நடையில் சேர்த்தி இல்லை. இந்த இரண்டையும் ஒருத்தர் பின்பற்றாமல் நடக்கிறேன் என்று சொன்னால் அது அவரையே ஏமாற்றிக் கொள்கிறார் என்றே பொருள்.
***
ஞாபகப்படுத்துகிறேன். 26-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை
இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு க.நா.சு. உரைக்குத் தயாராகுங்கள்.