பூச்சி 109

அன்பு சாரு சார்,

முதலில் உங்களிடம் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய பூச்சி கட்டுரை படித்தவுடன் ஒருவித குற்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. அரூ இதழில் வெளிவந்த தங்களின் நேர்காணல் பற்றி எதிர்வினை வரவில்லை என்று எழுதியதுதான் அந்த குற்ற உணர்விற்குக் காரணம். நான் படித்தவுடனே உங்களுக்கு நன்றி தெரிவித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நள்ளிரவில்  வாசித்துமுடித்ததால் எழுதமுடியவில்லை. அதை அப்படியே மறந்தும் போய்விட்டேன். இன்று பூச்சி கட்டுரையில் குறிப்பிட்டவுடன் குட்டுவிழுந்தது போல் முழிப்புவந்து எழுதுகிறேன். அந்த இதழ் வெளிவந்தவுடனே முதலில் நான் படித்தது உங்கள் நேர்காணல்தான். தொடக்கநிலையில் இருக்கும் என் போன்ற இலக்கிய வாசகர்களுக்கு இந்த நேர்காணல் அமுதசுரபி போன்று. ஒவ்வொரு கேள்விக்கான பதிலிலும் நிறைய புதிய விஷயங்களை தெரிவித்து இருந்தீர்கள். நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் செல்ல வேண்டிய தூரம் மலைப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் உங்கள் வழிகாட்டுதல் மூலம் படிப்படியாக முன்னேறி வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒவ்வொரு எழுத்தாளரின் நேர்காணல் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமாக இருக்கும். சமீபத்தில் நான் வாசித்த நேர்காணலில் அதிகப்படியான புதிய எழுத்தாளர்களையும், படைப்புகளையும் அறிமுகப்படுத்தியது உங்கள் நேர்காணல், அ. முத்துலிங்கம் மற்றும் ஜி. குப்புசாமி அவர்களின் நேர்காணலாகும். 

நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள் படைப்புகளை தனியே குறித்துவைத்துள்ளேன் சார். இனி ஒவ்வொருவராக வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரே நேர்காணலில் இவ்வளவு தகவல்களை கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

ரா. பாலசுந்தர்

17.7.2020.

அன்புள்ள பாலசுந்தர்,

கடந்த ஒரு பத்து தினங்களாக எனக்கு வரும் அஞ்சல்களுக்கு பதில் எழுத முடியவில்லை.  கிடைக்கும் நேரம் அவ்வளவையும் இரண்டு முக்கியமான பணிகள் எடுத்துக் கொள்கின்றன.  ஒன்று, ஒரு நாவலின் எடிட்டிங் வேலை.  இன்னொன்று, என்னுடைய நாவல் வேலை. ஆனால் ஒவ்வொரு மாதமும் கடைசி எட்டு தினங்களை அந்த மாத ஸூம் உரைக்காக ஒதுக்கி விடுகிறேன்.  முழுமையாக அந்த எழுத்தாளரின் படைப்புகளில் மூழ்கி விடுகிறேன்.  இதெல்லாம் ஒன்றுமே இல்லை.  எட்டு நாள் என்பதெல்லாம் வெறுமனே ஒரு தங்கச் சுரங்கத்தை எட்டிப் பார்ப்பது போலத்தான்.  அந்த எட்டிப் பார்த்த அனுபவத்தைத்தான் உங்களுக்கு மூன்றரை மணி நேரத்தில் கொடுக்கிறேன்.

என் நண்பர் ஒருவர் சென்னையை அடுத்த ஒரு சிறிய வனத்தில் ஒரு பர்ண சாலையைக் கட்டி வெறுமனே போட்டிருக்கிறார்.  கண்ணுக்கெட்டிய தூரம் மரங்கள்தான்.  உள்ளே போனால் இரவா பகலா என்றே தெரியாது.  அந்தக் குடிசையில் யாரும் தங்குவதில்லை.  நல்லவேளையாக இண்டர்நெட் வசதி இருக்கிறது.  பார்க்கத்தான் குடிசையே தவிர உள்ளே அதிநவீனமாக இருக்கும்.  சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஒரு பணியாள்.  வேறு ஒரு பாதுகாவலர்.  இங்கே வந்து எத்தனைக் காலம் வேண்டுமானாலும் தங்கி எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார் நண்பர்.  சொல்லியே ஒரு வருடம் ஆகிறது.  இங்கே வீட்டிலிருந்து இன்னும் பரோல் கிடைக்கவில்லை.  அப்படியே கிடைத்தாலும் பதினைந்து நாள்தான் அதிக பட்சம் கிடைக்கும். இடையில் கொரோனா. அப்படிப்பட்ட வனாந்தர இடத்தில் அமர்ந்தால் இந்த நாவலை ஒரே மாதத்தில் முடித்து விடுவேன்.  இன்னொரு இடம் ஏற்காடு. அது ஒரு சொர்க்கம்.  பரோல் பிரச்சினைதான். 

அரூ நேர்காணல் படித்ததை எனக்குத் தெரிவிக்காதது பற்றி நீங்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை.  என் சிஷ்யையிடம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.  சுமார் பதினைந்து தினங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், படித்து விட்டாயா என்று.  அவளும் இதோ இன்றைக்குப் படித்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.  அடுத்து இன்னொரு நண்பரைக் கேட்கலாம் என்று நினைத்தேன், இதே மாதிரி பதில் வந்தால் என்ன செய்வது என்று நினைத்து பயந்து விட்டு விட்டேன்.  போங்கப்பா, நீங்க பாட்டுக்கு எழுதிக் குவிக்கிறீங்க, எங்கே படிக்கிறது என்று ஒருநாள் பதில் வந்தது சிஷ்யையிடமிருந்து.  அந்த சந்தோஷத்தில் அப்படி எழுதி விட்டேனே தவிர உங்களைப் போல் பலரும் படித்திருப்பார்கள்.  அதில் சந்தேகமே இல்லை.

***

கபாலி தெப்பக்குளத்துக்கு எதிரில் உள்ள தெற்கு மாடவீதியின் மூலையில் உள்ள (மட் ரோடும் தெற்கு மாடவீதியும் தொடும் இடம்) சங்கீதா ஓட்டலில் காலையில் நானும் ராகவனும் ராமசேஷனும் சுடச் சுட இட்லியும் மிளகாய்ப் பொடியும் நல்லெண்ணையும் கார சட்னியும் சாப்பிட்டு ஐந்து மாதங்கள் இருக்கும். இந்த இடத்தில் கிடைப்பது போன்ற மல்லிப்பூ இட்லியும் மிளகாய்ப் பொடியும் கார சட்னியும் இது எல்லாவற்றையும் விட அபாரமான காஃபியும் சென்னையில் வேறு எந்த உணவு விடுதியில் கிடைக்கவில்லை.  இது பல ஆண்டுகளாகத் தேடிக் கண்டுபிடித்த விஷயம்.  இப்போது அந்த ஓட்டலில் இட்லி மாவு விற்றுக் கொண்டிருப்பதாகக் கேள்வி.  எப்போது மறுபடியும் போய் இட்லியை வெட்டலாம் என்று இருக்கிறது.  சாம்பாரில் சின்ன வெங்காயம் போட்டிருப்பான்.  ஆஹா.  ஆஹா. 

***

ஆதித்யா ஸ்ரீராம் நான்கு தினங்களுக்கு முன்பே பதில் எழுதியிருந்தான்.  எனக்குத்தான் நேரம் இல்லை.

Dear Charu,

I saw your blog and read poochi-105.Thank you very much for answering my questions.Normally we can get many information from Google. The reason I wanted to ask you is because of your great knowledge and experience.I read your “kadavulum nanum” ,”enakku kuzhaindhaigalai pidikkathu” and of course your one of the best “Zero degree”.My father is a cool guy.He does know I read your books.Once again, I thank you for considering my email and answering my questions.I read that you go for daily walks in Nagendra rao park in Mylapore.May be one day I will personally meet you.Lots of love and respect.

Yours sincerely

Aditya Sriram

இது போன்ற தனிப்பட்ட கடிதங்களுக்கு நானும் தனிப்பட்ட முறையில்தான் பதில் எழுதுவது வழக்கம்.  அந்த வழக்கத்தை மீறி இங்கே இதையெல்லாம் உங்களுக்கும் வாசிக்கத் தருவதற்குக் காரணம், இன்றைய காலகட்டத்தின் இளைஞர்களைப் பற்றி நான் எத்தனையோ மனக்கசப்புடன் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.  இருந்தாலும் அர்ஜுன் மோகன், ஈஷ்வர் போன்றவர்களாவது கல்லூரி மாணவர்கள், இதோ இந்தக் குட்டி ஆதித்யா பள்ளி இறுதி முடித்தவன். பெருமையாக இருக்கிறது.  கவனியுங்கள்.  இவனுக்கு நான் பள்ளிக்கூடத்திலிருந்து அறிமுகம் ஆகவில்லை.  Cool guyஆன தந்தையிடமிருந்து அறிமுகம் ஆகியிருக்கிறேன்.  இந்தச் சூழலையும் நம்மிடையே கொஞ்சம் பதிவு செய்து கொள்ளத்தான் இது போன்ற கடிதங்களையும் அவ்வப்போது உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.  ஆதித்யாவுக்கு ஆட்சேபணை இருக்காது என நினைக்கிறேன்.

ஆதித்யாவுக்கு விளக்கம்.  என்னதான் எனக்கு அனுபவம் இருந்தாலும் கல்வியாளர்களின் லௌகீக அனுபவம் வேறு, அது முறைசார் கல்வி.  என்னுடையது கல்வி நிலையங்களுக்கு வெளியே ஆனது.  இந்தப் பதின்பருவத்தில் ஒருவன்/ஒருத்தி தன் கல்வியறிவை ஸ்தாபனரீதியாகவும் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.  அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது அடுத்த விஷயம்.  மேலும், பல இளைஞர்கள் என்னிடம் சில அடிப்படையான விஷயங்களுக்கெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.  அதைத்தான் என் கடிதத்தில் குறிப்பிட்டேன். 

***

கநாசு புத்தகங்கள் கிண்டிலில் கிடைக்கின்றன.  அதையும் தேடிப் பாருங்கள்.  நான் கொடுத்த லிங்க் காகிதப் புத்தகங்களுக்கு ஆனது போல் இருக்கிறது.  அதற்கு அடுத்த பக்கத்திலேயே கிண்டில் லிங்க் கிடைக்கும்.  மேலும் க.நா.சு. பற்றிப் படிக்க விஷயங்கள் இணையத்திலேயே வண்டி வண்டியாகக் கொட்டிக் கிடக்கின்றன.  க.நா.சு. என்று பட்டனைத் தட்ட வேண்டும்.  அவ்வளவுதான். 26-இல் சந்திப்போம்.  உரை கொண்டாட்டமாக இருக்கும்.  அத்தனை விஷயங்கள் இருக்கின்றன.  நோட்ஸே இதுவரை 40 பக்கம் வந்து விட்டது!

***

அன்பிற்குரிய சாரு,

அரூ இதழுக்கு நீங்கள் அளித்திருந்த பேட்டி முழுவதும் படித்தேன். உலக இலக்கியம், தமிழ் இலக்கிய முன்னோடிகள், தற்கால இலக்கிய உலகம், சிந்தனை, சினிமா, பயணம், சமூகம், இலக்கிய உலகில் பெண்கள் எனப் பல்வேறு கூறுகள் குறித்து விரிவானப் பேசியிருந்தீர்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் வாசித்திருக்கிறேன், மேலும் சாரு ஆன்லைன் தளத்திலும் மேற்கொண்டவைக் குறித்து நீங்கள் ஏற்கனவே நீங்கள் நிறைய எழுதிக் குவித்திருக்கின்றார்கள். இருப்பினும், உங்கள் தீவிர வாசகர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்த விதம் மேலும் ஒரு புதிய அனுபவத்தை தந்துள்ளது.  

“யாரும் என்னுடைய அரூ பேட்டியைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.  ஒரு எதிர்வினை கூட இல்லை.  60 பக்கம் என்பதால் ஒத்திப் போட்டு விட்டார்கள்” என பூச்சி 104இல் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த பதிவைப் படித்த பின்னர்தான் நீங்கள் பேட்டி அளித்த விவரத்தையே  நான் தெரிந்துகொண்டேன். தொடர்ந்த சாரு ஆன்லைனை வாசித்துவரும் நிலையில், இந்த பேட்டியை எப்படி கவனிக்காமல் விட்டேன் எனத் தெரியவில்லை. தற்போது மனம் கொத்திப் பறவை கட்டுரைத் தொகுப்பை வாசித்துவருகிறேன். ‘உலகின் 10 சிறப்பான வீரிய ஊக்கிகளில் முக்கியமானது காண்டாமிருகத்தின் கொம்பு. ஆனால் முதன்மையானது மரியாதை! காதல் ஜோடியில் ஒருவர் மீது ஒருவர் காட்டும் மரியாதைதான் காமத்திற்கான முதல் ஈர்ப்பு’ என்ற உங்கள் வரிகளை படிக்கும்போது நான் அப்படியே சொக்கிவிட்டேன். இதுதான் சாரூஸ் டச் என்று தோன்றியது.  Constantin Pilavios இன் What is That திரைப்படம் குறித்த பகுதியை வாசிக்கும்போதும் நெகிழ்ச்சியாக இருந்தது. மனம் கொத்திப் பறவை முடித்தவுடன் திருடன் மணியன் பிள்ளை வாசிக்கலாம் என்றிருக்கிறேன். வாசிப்பு அனுபவம் குறித்து கடிதம் எழுதுகிறேன்.

அன்புடன் உங்கள் மாணவன்
கண்ணன் வ.

21.7.2020.   

***

கீழ்வரும் லிங்கில் உள்ள நூல்களை அமெரிக்காவில் உள்ளவர்கள் வாங்க முடியாது போல. அமேஸான் டாட் இன் என்று உள்ளது.

https://www.amazon.in/Books-Subramanyam/s?rh=n%3A976389031%2Cp_27%3AKa+Naa+Subramanyam