பூச்சி 115

நேற்றைய கட்டுரையை பூச்சி 114 எனக் கொள்ளவும்.  அதற்கு முன்னால் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன்.  அந்தப் பதிவு மிகவும் மூர்க்கமாக இருப்பதாகவும், அப்படி எழுதுவதெல்லாம் ரொம்ப அதிகம், அதை நீக்கி விட வேண்டும் என்றும் ஒரு நண்பர் ஆலோசனை சொன்னார்.  அவரைப் புரிந்து கொள்கிறேன்.  நான் இப்போது இருக்கும் இடத்துக்கு அது பொருந்தாது.  எல்லாம் புரிகிறது.  ஆனால் தமிழ் எனக்கு தெய்வத்தைப் போல.  அதற்காகத்தானே இப்படி உழைத்துக் கொண்டிருக்கிறோம்?  க.நா.சு.வுக்கும், அசோகமித்திரனுக்கும் ஆங்கிலம் தமிழ் அளவுக்குத் தெரியுமே?  இருந்தும் அவர்கள் ஆங்கிலத்தில் கட்டுரை மட்டும் எழுதி விட்டு புனைகதைகளை தமிழில்தானே எழுதினார்கள்?  பாஷாபிமானம் கூடாது என்பவன் நான்.  மொழி, இனம், மதம், தேசம் ஆகியவற்றின் மீது வெறி இல்லாதவன் நான்.  ஆனாலும் தமிழ் ஒரு அற்புதமான மொழி என்பதில் யாருக்குச் சந்தேகம் இருக்க முடியும்?  எந்தெந்த மொழி இலக்கணம் சூக்ஷ்மங்களைக் கொண்டதாக இருக்கிறதோ, எந்தெந்த மொழி இலக்கணம் கடினமாக இருக்கிறதோ அந்த மொழியில்தான் நுணுக்கங்கள் அதிகம்.  ஆங்கிலமெல்லாம் ரொம்பவும் தட்டையான மொழி.  தமிழும் சம்ஸ்கிருதமும் நம்ப முடியாத அளவுக்கு இலக்கண நுணுக்கங்களைக் கொண்டவை.  அதிலும் தமிழை விட சம்ஸ்கிருத இலக்கணம் பல மடங்கு நுணுக்கமானது.  இலக்கணம் கடினமாக ஆகத்தான் இலக்கிய நயம் பெருகும்.  ஒரு இலக்கியப் படைப்பை நாம் ஏன் மீண்டும் மீண்டும் வாசிக்கிறோம்?  அதில் உள்ள நுணுக்கங்களுக்காக.  ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ப்ரேவ் நியூ வேர்ல்ட் நாவல் பற்றி ஹெரால்ட் ப்ளூம் எழுதிய கட்டுரையோடு கூடிய, அந்நாவல் பற்றிய பலரது கட்டுரைகளையும் தொகுத்த ப்ளூமின் நூலையும் படித்துப் பாருங்கள்.  Bloom’s Guides என்று இருக்கும்.  அந்த ஹக்ஸ்லி இந்தியா வந்த போது க.நா.சு.வை அவர் வீட்டில் வந்து சந்தித்திருக்கிறார் என்ற ஒரு தகவலும் இங்கே என் ஞாபகத்துக்கு வருகிறது.  இதைச் சொல்ல வந்த காரணம், ஆங்கிலம் போன்ற ஒரு தட்டையான மொழியில் ப்ரேவ் நியூ வேர்ல்ட் என்ற மகத்தான நவீன காவியத்தை ஹக்ஸ்லி படைத்தது இந்து மரபிலிருந்து அவர் கற்றுக் கொண்டதனால்தான்.  அது சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மரபு.   ஒரு மொழியின் சிறப்புக்கு இலக்கணத்தின் சிக்கலான வலைப்பின்னல் ஒரு முக்கியக் காரணம் என்பது பற்றி பிறகு நான் விரிவாக எழுகிறேன்.  அதற்கு இங்கே இடம் இல்லை.  இதையெல்லாம் சொல்வதன் பின்னணி, இத்தனை சிறப்பு மிக்க தமிழ் மொழியை ஏன் இப்படி மொழிபெயர்ப்பு என்று சொல்லி வதைக்கிறீர்கள் என்பதே என் கேள்வி.  யுவன் எத்தனையோ சிறுகதைத் தொகுதிகளும் நாவல்களும் எழுதியவர்.  எம். யுவன் என்ற பெயரில் அவரது கவிதைகளுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.  தமிழில் ஒரு மூத்த படைப்பாளி அவர்.  ஜெயமோகனின் அடா போடா நண்பர்.  அப்படிப்பட்டவர்களே இத்தனை மட்டமான காரியங்களைச் செய்யலாமா என்பதுதான் என் கோபத்துக்குக் காரணம்.

மேலும், இது பற்றி நான் ஒன்று இரண்டு கட்டுரையா எழுதியிருக்கிறேன்?  இருபது ஆண்டுகளாகப் புலம்பிக் கொண்டிருக்கிறேன்.  எனக்கே அலுத்து விட்டது.  திரும்பவும் சுருக்கமாகச் சொல்கிறேன்.  திரும்பத் திரும்ப மொழிபெயர்ப்பாளர்கள் ஒரே தவறையே செய்து கொண்டிருக்கிறார்கள்.  சுந்தர ராமசாமியை படு கேவலமான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தே காலி பண்ணினார்கள்.  அதேபோல் பல எழுத்தாளர்களைச் சொல்லலாம்.  நூற்றுக் கணக்கில் வெளிநாட்டு எழுத்தாளர்களைக் காலி செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஆங்கிலமே தெரியாதவர்கள் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.  மிக மிக நன்றாக ஆங்கிலம் தெரிந்த பேராசிரியர்களும் மொழிபெயர்த்துக் கொல்லுகிறார்கள்.  ஏனென்றால், அவர்களுக்குப் படைப்புரீதியான தமிழ் தெரியவில்லை.  சமகாலத் தமிழ் இலக்கியம் தெரியாமல் இங்கே ஒரு மொழிபெயர்ப்பும் செய்ய முடியாது.   தொடர்ந்து இந்தக் குழு தோண்டும் காரியம் 40 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  நான் கோபமாக எழுதுவேனா மாட்டேனா?  என் ஓட்டலில் நான் ஊசல் பண்டம்தான் போடுவேன் என்று ஒருத்தர் அடம் பிடித்தால் நாம் போராட்டம்தானே பண்ண வேண்டியிருக்கும்?  அதிலும் தமிழ் எழுத்தாளர்களே ஒரு வெளிநாட்டு சக எழுத்தாளருக்கு இந்த அவமரியாதை செய்யும் போது எப்படி சும்மா இருக்க முடியும்?

ஏன் இது போன்ற மட்ட ரகமான மொழிபெயர்ப்புகள் செய்யப்படுகின்றன என்றால், மொழிபெயர்ப்பாளர்களின் அறியாமையை விட ஆணவமும் அகங்காரமும்தான் காரணம் என்பேன்.  சில ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிறுவனத்தில் ஒரு இலக்கிய விழாவில் பேசிக் கொண்டிருந்தேன்.  பேச்சில் Michel Houellebecq பற்றிக் குறிப்பிட நேர்ந்தது.  மிஷல் வெல்பெக் என்றே குறிப்பிட்டேன்.  பேசி முடித்து நாற்காலியில் அமர்ந்ததும், என் பக்கத்தில் அமர்ந்திருந்த யுவன் சந்திரசேகர் – ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே – என்னிடம் நீங்கள் பேசும் போது குறிப்பிட்ட ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் பெயர் மிஷல் வெல்பெக் இல்லை, மிச்சல் ஔலேபெக் என்று சொன்னார்.  ஓ சாரி யுவன், அப்படியா, சரிங்க என்று கேட்டுக் கொண்டேன்.   இரண்டு விஷயங்கள் எனக்குப் புரிந்தன.  அவர் என்னுடைய ஒரு எழுத்தைக் கூடப் படித்திருக்கவில்லை என்பது.  படித்திருந்தால் ஃப்ரெஞ்சுக்கும் எனக்குமான தொடர்பு புரிந்திருக்கும்.  நான் கடந்த 45 ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் இலக்கியம், ஃப்ரெஞ்ச் தத்துவம், ஃப்ரெஞ்ச் சினிமா ஆகியவற்றோடு மிகத் தீவிரமான தொடர்பில் இருப்பவன்.  என் சுவாசமே ஃப்ரெஞ்ச் தான் என்ற அளவுக்கு.  ஆனால் ஃப்ரெஞ்ச் தெரியாது.  ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகளையும், இலக்கியத்தையும் படிக்க ஃப்ரெஞ்ச் தெரிந்திருக்கத் தேவையில்லையே?  ஆனால் 45 ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் கலாச்சாரத்தோடு தொடர்பில் இருக்கும் ஒருவருக்கு Michel Houellebecq ஐ எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரியாதா?  ஃப்ரெஞ்ச் இலக்கியமும் தத்துவமும் தமிழ் வாசகர்களைச் சென்றடைந்ததில் என் பங்கைத் தெரிந்து கொண்டால் ஃப்ரெஞ்ச் அரசு எனக்கு ஃப்ரான்ஸில் நிரந்தரக் குடியுரிமை தர வேண்டும்.  நான் அறிமுகப்படுத்தாத ஃப்ரெஞ்ச் தத்துவவாதியே கிடையாது.  அதேபோல் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள்.  உதாரணமாக, Colette (1873-1954)  பற்றி எழுதிய ஒரே இந்திய எழுத்தாளன் அடியேன் தான்.  நான் குறிப்பிடும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களை ஃப்ரெஞ்ச் பேராசிரியர்களே படித்திருப்பார்களா என்பது சந்தேகம்.  2000-ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ஒரு ஸோர்போன் தத்துவப் பேராசிரியரிடம் ஒரு இரவு பூராவும் ஜான் ஜெனேவுக்கும் லூயி ஃபெர்தினாந் செலினுக்குமான (Luis Ferdinand Celine) வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.  இதையெல்லாம் மற்றவர்கள் சொல்ல வேண்டும்.  நானே பயோடேட்டா மாதிரி சொல்லிக் கொள்ள லஜ்ஜையாக இருக்கிறது.  அப்படிப்பட்ட என்னிடம் வந்து வெல்பெக்கின் பெயரை ஔலேபெக் என்று சொல்ல வேண்டும் என்று ஒரு எழுத்தாளர் சொல்கிறார் என்றால், அங்கே செயல்படும் அகந்தையைப் பாருங்கள் என்று சுட்டிக் காட்டத்தான்.  அந்த அகந்தைதான் இப்போது மொழிபெயர்ப்பில் செயல்பட்டிருக்கிறது.  என்னால் ஒரு ஆக்ஸ்ஃபோர்டிலோ ஹார்வர்டிலோ ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி ஒரு comparative literature course பேராசிரியராகப் பணியாற்ற முடியும்.  நான் வாசிக்காத ஒரே ஃப்ரெஞ்ச் எழுத்தாளர், என்னைப் போலவே ஆட்டோஃபிக்‌ஷன் எழுதிய சேர்ஜ் துப்ரோவ்ஸ்கி மட்டும்தான்.  ஏனென்றால், அவருடைய நாவல்கள் எந்த மொழியிலும் மொழிபெயர்க்கப்பட முடியாதவை.  அவருடைய ஃப்ரெஞ்சில் நிறைய சிலேடை உண்டு.  உதாரணமாக, துப்ரோவ்ஸ்கியின் நாவல் ஒன்றின் பெயர் Fils.  இதற்கு மகன் என்றும் பையன் என்றும் இரண்டு அர்த்தம் உண்டு.  அதோடு Fil என்றால் நூல் என்று பொருள்.  துப்ரோவ்ஸ்கி ஒருமுறை என்னுடைய ஸீரோ டிகிரி நாவலைப் பற்றி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அவருடைய உறவுக்காரர் ஒருவருக்குத் தமிழ் தெரிந்திருந்ததால் அவர் துப்ரோவ்ஸ்கியிடம் ஒரு தமிழ் ஆள் உங்களைப் போலவே எழுதுகிறார் என்று சொல்லி, ஸீரோ டிகிரியை முடிந்த அளவுக்கு அவருக்கு மொழிபெயர்த்துச் சொல்லியிருக்கிறார்.  அப்போது ஸீரோ டிகிரி ஆங்கிலத்தில் வந்திருக்கவில்லை.

யாருக்கும் நம்முடைய அகந்தையின் காரணமாக அறிவுரை சொல்லக் கூடாது என்பதை நான் செய்த மடத்தனம் ஒன்றின் விளைவாகக் கற்றுக் கொண்டேன்.  பல ஆண்டுகளுக்கு முன், நான் இளைஞனாக இருக்கும்போது நடந்தது.  என்.எஸ். ஜெகந்நாதன் என்று ஒரு மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர்.  தில்லிக்காரர்.  தமிழர்.  என்னோடு நட்பு பாராட்டியவர்களில் ஒருத்தர்.  கணையாழியில் பத்தி எழுதுவார்.  அவரிடம் ஒருநாள் ஒன் மில்லியன் நேம்ஸ் ஆஃப் காட் கதையை எழுதியவர் ஆர்த்தர் ஸி. க்ளார்க் என்று எழுதியிருக்கிறீர்களே, அதை எழுதியது ஐஸக் அஸிமோவ் என்று சொல்லி விட்டேன்.  அப்போது ஏது கணினி?  அவர் புத்தகத்தில் பார்த்து விட்டு இல்லை, க்ளார்க் தான் என்று எழுதினார்.  மன்னிப்புக் கேட்டேன்.  அன்றோடு அந்தப் பழக்கத்தை விட்டு விட்டேன்.

நான் சொல்வது புரிகிறதா?  ஒரு மொழியே தெரியாமல் அந்த மொழியில் மொழிபெயர்க்க வேண்டுமானால் எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் கவலை.  தமிழ்நாட்டில் ஒரே ஒரு இனக்குழுவைச் சார்ந்தவர்களிடம்தான் நான் இந்த குணத்தைப் பார்க்கிறேன்.  எல்லோரும் அல்ல.  அப்படியெல்லாம் பொதுமைப்படுத்தும் ரேஸிஸ்ட் அல்ல நான்.  அதிலும் எத்தனையோ மகாத்மாக்கள் உள்ளனர்.  ஆனால் வெல்பெக்கை ஔலேபெக் என்று திருத்தும் பிறவிகள் எல்லொரும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.  அவ்வளவுதான்.  அடக்கம் வேண்டும்.  எல்லாத் தவறும் என்னுடையதே என்று சொல்லும் ஆண்டாளின் பணிவு வேண்டும். (வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக!) அடக்கத்தைக் கற்பிப்பதும் ஆண்டாள்தானே? 

மூன்று தினங்களுக்கு முன்பு வந்த ஒரு கடிதத்தைப் பகிர்கிறேன்.

அன்புள்ள சாரு,

நலம்தானே? தங்களுக்குக் கடிதம் எழுதி நீண்டநாள் ஆகிவிட்டது. 

இன்று பூச்சி-113 வாசித்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் மிக மிக விரும்பி வாசிக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் (அவரது மொழிபெயர்ப்புகளை வாசித்ததில்லை). அவரது நாவல் ‘பகடையாட்டம்’ வாசித்த பின்னர் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே மறுமொழியில் அவரது தொலைபேசி எண்ணை அளித்தார். மறுநாள் மிகவும் இனிமையாக உரையாடினார். 

ஆம், நீங்கள் சொல்வது போல அவர் காசுக்காக இலக்கியம் எழுதுபவர் அல்ல. ஆனால் இப்படி ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துவிட்டது வருத்தப்படவேண்டியது தான்.

நீங்கள் பல முறை இது மாதிரி மொழிபெயர்ப்புக் குளறுபடிகள் பற்றி எழுதியுள்ளீர்கள். நான் ஆங்கிலத்தில் மிக மிகக் குறைவாகவே வாசிப்பவன். தமிழ் மொழிபெயர்ப்புகள் வழியாகவே நான் பிறமொழி இலக்கியங்கள் வாசிக்க இயலும். ஆனால் நிலை இப்படி உள்ளது.

தற்போது தாகூரின் ‘கோரா’ நாவலை [கா.செல்லப்பன் மொழிபெயர்ப்பு (தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர்!)] ஆர்டர் செய்து வருகைக்காகக் காத்திருக்கிறேன். 

அதுதான் கொஞ்சம் பீதியாக உள்ளது!

தங்கள்

கிஷோர் குமார்.

கிஷோர் குமார் ஒரு டீன் ஏஜ் மாணவன்.  எங்கெங்கிருந்தெல்லாம் இலக்கியம் வாசிக்கிறார்கள் என்பதற்காக இந்தக் கடிதத்தைப் பகிர்ந்தேன்.  மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கு எத்தனை பொறுப்புணர்ச்சி வேண்டும் என்று இந்தக் கடிதத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். கடிதத்தின் கடைசி வரியை மிகவும் ரசித்தேன்.  பீதி கொள்ள வைக்கும் அளவுக்கு ஆகி விட்டது நிலை. 

தம்பி கிஷோர், நான் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாசிப்பதில்லை.  எல்லாம் ஆங்கிலத்தில்தான்.  ஆனால் இதில் பெரிய விஷயதாரிகள் எஸ்.ரா.வும் உங்கள் ஜெயமோகனும்தான்.  அவர்களைப் பிடித்தால் உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கும்.  இருவரும் தமிழில் வரும் பெரும்பாலான  மொழிபெயர்ப்புகளையும் படித்தவர்கள். 

ஆனாலும் ஆங்கிலம் கற்றுக் கொள்வது ஒன்றும் பெரிய சிரமம் இல்லை.  இன்றைய கூகிள் காலத்தில் அது ஊதித் தள்ளும் விஷயம்.  என்னை விட ஒரு உதாரணமே தேவையில்லை.  படித்துப் படித்தே தெரிந்து கொண்டேன். 

***

Mac air வாங்குவதற்கு ஓரிரு நண்பர்கள் உதவி செய்வதாக எழுதினர்.  நாலைந்து பேர் சேர்ந்தால் வாங்கி விடலாம்.  கணினிக்கு யுபிஎஸ் வாங்கியாயிற்று.  இன்றே மின்சாரம் பத்து முறை போய் போய் வந்தது.  யுபிஎஸ் இருந்ததால் தப்பினேன்.  Mac தேவைதான்.  யுஎஸ்ஸில் ஒரு லட்சம் ரூபாய் விலை என்றால் இந்தியாவில் ஒன்றரை லட்சம்.  அதனால் அங்கே வாங்குவதுதான் உசிதம்.  யாரேனும் நண்பர்கள் யு.எஸ்.ஸிலிருந்து சமீப காலத்தில் இங்கே வரும் திட்டம் இருக்கிறதா?  இருந்தால் எழுதுங்கள்.  அதேபோல் mac வாங்குவதற்கு உதவக் கூடிய நண்பர்களும் எழுதலாம்.  மற்றவர்களுக்கு பளு குறையும்.   மாதம் ஒருமுறை ஒரு இயக்குனர் பற்றி இரண்டு மணி நேரம் பேசலாம் என்று நினைக்கிறேன்.  அதற்கு இந்த முன்னோடிகள் மாதிரி பத்துப் பதினைந்து நாட்கள் செலவு செய்ய வேண்டியதில்லை.  வெர்னர் ஹெர்ஸாகின் அத்தனை படங்களும் பார்த்திருக்கிறேன்.  ஞாபகமும் உண்டு.  முதல் நிகழ்ச்சியில் ஹெர்ஸாக் பற்றி இரண்டு மணி நேரம் பேசலாம்.  தொமாஸ் அலெயா போன்ற கூப தேசத்து இயக்குனர்கள் பற்றி, ஸொல்த்தான் ஃபாப்ரி, இஸ்த்வான் ஸாபோ போன்ற ஐரோப்பிய இயக்குனர்கள் பற்றி இதுவரை தமிழில் அதிகமாகப் பேச்சு இல்லை.  அதையும் பேசலாம்.  படங்களைத் திரும்பக் கூட பார்க்க வேண்டியது இல்லை.  எல்லாம் மனப்பாடம்.  அதற்கும் mac தேவைப்படும். 

கோபி கிருஷ்ணனுக்குத் தயாராகி விட்டீர்களா?  ஸூமில்தான் பேசுகிறேன்.  29-ஆம் தேதி சனிக்கிழமை இரவு எட்டு மணி.  இந்திய நேரம். 

எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai