22. முன்னோடிகள்: கோபி கிருஷ்ணன் சந்திப்பு தொடர்கிறது…

நேற்று (29.8.2020) முன்னிரவு எட்டு மணியிலிருந்து பதினோரு மணி வரை கோபி கிருஷ்ணனின் கதைகளுக்குள் நுழையும் முன் மனப்பிறழ்வு பற்றிப் பேசினேன்.  பதினோரு மணி ஆகி விட்டதால் அதற்கு மேல் கேள்வி பதில் நேரம் ஆகி விட்டது.  கோபியின் கதைகளுக்குள் செல்ல முடியவில்லை.  ஆனால் அந்த மூன்று மணி நேரமும் ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றிய ஓர் அறிமுகம் கிடைத்திருக்கும்.  அது பற்றி வந்த சில எதிர்வினைகளை இங்கே தொகுத்துக் கொள்ளலாம்.  இந்த எதிர்வினைகள் எனக்கு மிகவும் முக்கியம்.  ஏனென்றால், மூன்று மணி நேரம் பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஃப்ரெஞ்ச் இலக்கியவாதிகளைப் பற்றிப் பேசி விட்டு அது எல்லோரையும் சென்றடைந்ததா இல்லையா என்று குழம்பினேன்.  அந்த இலக்கியவாதிகளைப் பற்றி ஃப்ரெஞ்ச் பேராசிரியர்களே இப்போது கவலைப்படுவதில்லை.  ஆனால் அந்த உரையை நண்பர்கள் அத்தனை பேரும் மிக நன்றாக உள்வாங்கிக் கொண்டார்கள், ரசித்தார்கள் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது. 

அன்புள்ள சாரு,

தமிழில் இணையத்தில் எழுதமுடியும் என்ற வசதி வந்தபோது ஆரம்பத்தில் அது கேளிக்கையாகவே பயன்படுத்தப்பட்டது

இணையத் தமிழ் எழுத்துக்கு ஒரு மரியாதையைப் பெற்றுத் தந்தது  உங்கள் வருகைதான்.

இலக்கியம், இணையம் என அனைத்திலும் டிரெண்ட்செட்டராக இருக்கும் நீங்கள் ஜும் மீட்டிங்கிலும் தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரை ஒரு டிரெண்ட்செட்டர்தான்

கோபிகிருஷ்ணன் குறித்த உங்களது அறிமுக உரை ஒரு மேஜிக்கல் ரியலிசத் தன்மையுடன் இருந்தது

ஆழமான அடர்த்தியான விஷயங்களை சரளமாக விளக்கினீர்கள்.  புகழ்மிகு ஐரோப்பியப் பல்கலை ஒன்றில் ஒரு பேராசியரின் வகுப்பறையில் அமர்ந்திருப்பதான உணர்வு.  நடுநிசிவரை நீண்ட அற்புதம் அது. காலையில் எழுந்தால் அது ஒரு கனவு அனுபவம்போல மனதில் பதிந்திருந்தது

வழக்கமாக கோபி கிருஷ்ணன் எழுத்தின்மீது வைக்கப்படும் பார்வைக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு பார்வையில் நீங்கள் அவரைப் பார்க்கிறீர்கள்.   ஏன் அந்த மாறுபட்ட பார்வை தேவையாய் இருக்கிறது எனப் புரிந்துகொள்ள வேண்டுமானால் சில அடிப்படைகளைப் பற்றிய புரிதல் தேவை. அதற்காக பிரெஞ்ச் இலக்கியவாதிகளின் எழுத்து , வாழ்க்கை , வரலாறு , அந்த வரலாறு எப்படி நம்மை வந்தடைகிறது என்ற அவதானிப்பு என தமிழின் உச்சகட்ட உரை ஒன்றை நிகழ்த்தினீர்கள்

உண்மையில் இந்த உரைக்குப்பின் மற்ற எழுத்தாளர்களை அணுகுவது குறித்தான ஒரு புரிதலும் நிகழ்ந்துள்ளது

உதாரணமாக அசோகமித்திரன் கோபி இருவரையும் ஒப்பிட்டுப் பேசியது அசோகமித்திரனைப் பற்றிய புரிதலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது

உங்கள் எழுத்துகளை பல ஆண்டுகளாக படிக்கிறோம் ,  உரைகளை பல காலமாகக் கேட்கிறோம்.  ஆனால் இன்றைக்கும் எங்களுக்குப் புதிதாக கூற உங்களிடம் விஷயங்கள் இருக்கின்றன.  ஆழமான இலக்கிய ஞானத்தை சுவாரஸ்யமாப் படைத்து  இலக்கிய மாணவனை நடுநிசிவரை உங்கள் பேச்சைக் கேட்க வைக்க முடிகிறது . அதற்குக் காரணம் கட்சி , இசங்கள் என எந்தச் சிறையிலும் சிக்கிக் கொள்ளாமல் இடைவிடாத தேடலில் இருக்கும் உங்கள் இயல்பு

உங்களுடன் பயணத்தைத் தொடங்கிய பலர் தேடலின் முனை கூர் மழுங்கி இனி கற்கவேண்டாம் என ஆங்காங்கு தேங்கி நின்றுவிடுவதைப் பார்க்கிறோம். காசு , பதவி , புகழ் என பல விஷயங்கள் பலருக்கு நிறைவளித்துவிடுகின்றன.  சிலருக்கு லைக்குகளேகூட நிறைவளிக்கின்றன.  தேங்கிவிடுகிறார்கள்

நீங்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்.  அந்தப் பயணத்தில் உங்களுடன் சேர்ந்து ஓடிவர ஒரு இளைஞர் படை ஒவ்வொருகாலகட்டத்திலும் புதிது புதிதாக எழுந்து வருவது மிகப்பெரிய ஆச்சர்யம்

கோபி கிருஷ்ணனைப் புரிந்து கொள்ளத் தேவையான முதல்கட்ட உரை முடிந்த நிலையில் அடுத்த உரைக்கு ஒரு மாதம் காத்திருப்பது கஷ்டம்தான்.  ஆனால் நீங்கள் கொடுத்துள்ள ஹோம்வொர்க்குகளை முடிக்க ஒரு மாதம் போதாது.

அன்புடன்

பிச்சைக்காரன்.

சென்ற பத்து தினங்களில் நான் படித்த அளவு என் வாழ்நாளில் படித்திருப்பேனா என்பது சந்தேகம்.  அந்த அளவு படித்தேன்.  ஆனால் எதுவுமே புதிதாக இல்லை.  எல்லாம் என் நண்பர்களிடம் அவ்வப்போது நான் சொல்லி வந்தவைதான்.  உதாரணமாக ஒரு விஷயம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஸ லீலா நாவலை நான் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்தபோது நான் உதவி செய்கிறேன் என்று வந்தாள் அவந்திகா.  சரி என்றேன்.  ஒரே பக்கம்தான்.  ஐயோ, உன் புத்தகங்களைப் படித்தால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும் என்று சொல்லியபடி ஓடியே போய் விட்டாள்.  அப்போது அவளிடம் சொன்னேன்: ”என் புத்தகங்களை புத்தி சுவாதீனம் உள்ளவர்கள் படித்தால் பைத்தியம் பிடித்து விடும்;  பைத்தியம் பிடித்திருப்பவர்கள் படித்தால் குணமாகி விடும்.” இதே வார்த்தைகளை இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜெரார் தெ நெர்வால் எழுதியிருக்கிறான்.  சும்மா ஜோக்காகச் சொன்னதல்ல.  ஒரு ஆள் நன்றாகத்தான் இருந்தார்.  உன்னத சங்கீதம் என்ற என் கதையை 2001-இல் படித்தார்.  அது வ்ளதிமீர் நொபக்கோவ் எழுதிய லொலிதா நாவலைத் தலைகீழாய்ப் புரட்டி அதற்கு எதிர்வினையாக எழுதிய கதை.  அதெல்லாம் அந்தக் காமன்மேனுக்கு எங்கே புரியும்?  அதைப் படித்ததிலிருந்தே அவர் என்னை பீடஃபைல் என்று நினைத்துக் கொண்டு சாரு பீடஃபைல் சாரு பீடஃபைல் என்று கதறிக் கதறி கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்.  அந்தக் கதைக்காக கிறித்தவ மத அடிப்படைவாதிகள் எனக்கு தண்டனை கொடுக்கலாம்.  அதை நான் புரிந்து கொள்வேன்.  ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முந்தி வரை இருந்த இந்து மதத்தைப் போலவே கிறித்தவம் மிகுந்த சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்ற காரணத்தாலும், என் கதை அவ்வளவு பிரபலமாகவில்லை என்பதாலும் எனக்கு பெருமாள் முருகனைப் போன்ற நல்லதிர்ஷ்டம் கிடைக்கவில்லை.  ஆனால் அந்தக் காமன்மேன் மட்டும் மாதம் ஒரு கட்டுரை எழுதாமல் விடுவதில்லை.  19 ஆண்டு மனநோய் முற்றி இப்போது அவருக்கு எந்த எழுத்தாளரைப் பார்த்தாலும் பீடஃபைல் என்றே தோன்றுகிறது.  சாதாரணமாக ஒரு தந்தை தன் பதின்மூன்று வயது மகள் மீது கை போட்டபடி நடந்து சென்றால் கூட அவர் பதறித் துடித்து கோபாவேசப்படும் அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது.  என்ன செய்வேன்?  இதற்கு நான் வ்ளதிமீர் நொபக்கோவைத்தான் நொந்து கொள்ள வேண்டும்.  அவர் ஏன் லொலிதா எழுதினார்?  இல்லாதிருந்தாலும் நானும் அப்படி ஒரு மாற்றுக் கதையை எழுதாமல் இருந்திருப்பேன்.   

எதற்குச் சொன்னேன் என்றால், என்னை காமன்மேன் படித்தால் பைத்தியம் பிடித்து விடும்.  நெர்வால் சொன்னது.  நானும் சொன்னது.

நேற்றைய மூன்று மணி நேர உரை முடிந்ததும் இரண்டு மூன்று நிமிடம் எந்த எதிர்வினையும் இல்லை.  பயந்து போனேன்.  அப்புறம்தான் ஒவ்வொருவராக எழுத ஆரம்பித்தார்கள்.  மகிழ்ச்சி.

நேற்றைய உரையைக் கேட்பவர்களுக்கு எழுத்தாளன் பற்றிய புதிய புரிதல் உண்டாகும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. 

மேலும் சில கடிதங்கள்:

வணக்கம் சாரு,

நேற்றைய நிகழ்வில், சற்று தாமதமாகவே கலந்து கொள்ள முடிந்தது. பிரெஞ்சு வகுப்பு இருந்ததால் ஒன்பது மணிக்குப் பின்னரே கலந்து கொண்டேன். ஆனால் கடைசிவரை இருந்தேன்.

தங்களின் உரையை முழுவதும் கேட்க ஆவலாக உள்ளது. Google pay மூலம் பணம் அனுப்பி உள்ளேன். வீடியோ லிங்கை அனுப்பவும் நன்றி.

தங்களின் கடந்த மாத க.நா.சு உரையைக் கேட்டுவிட்டு, சாகித்திய அகாதெமி வெளியிட்ட க.நா.சு.வின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பை வாங்கி, சில கதைகளைப் படித்து உள்ளேன், அதில் “ஒரு கடிதம்” “ஆடரங்கு” முதலிய கதைகள் எனக்கு பிடித்திருந்தன.

இந்த மாதம், கோபி கிருஷ்ணனின் சில கதைகளையும் படித்தேன். பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டில், தாங்கள் கோபி கிருஷ்ணன் பற்றிய எழுதிய அனைத்து கட்டுரைகளையும் படித்தேன். கோபி கிருஷ்ணன் பற்றித் தெரிந்து கொள்ள, மிகவும் உதவியாக இருந்தது.

நன்றி.

கணேஷ்.

Dear Charu

Thanks. It was a tough subject, which didn’t look so as long as we were listening to you….A recollection, when you asked that question made us MAD!!

In my research, I have experienced like this many times and made my students feel the same, a few times!

Though this evening time is very convenient for most of us, I have a feeling that for you, the morning time is more comfortable. 

anbudan

Krishna

Dr.D.Krishnamurthy

நீங்கள் சொல்வது உண்மைதான் கிருஷ்ணா.  மிகச் சரியாக யூகித்திருக்கிறீர்கள்.  என்னைப் பொறுத்தவரை காலை நான்கு மணியிலிருந்து பதினோரு மணி வரை உச்சபட்ச உற்சாக காலம்.  அப்போதுதான் நான் உச்சத்தில் இருப்பேன்.  எல்லாவற்றிலும்.  பிறகு பதினொன்றிலிருந்து மாலை ஐந்து வரை மத்திம நேரம்.  கொஞ்சம் மந்தம்.  ஐந்திலிருந்து அரை உறக்க நேரம்.  கொட்டாவி கொட்டாவியாக வரும் நேரம்.  சமயங்களில் ஒன்பது மணிக்கே உறங்குவதற்கு ஓடி விடுவேன்.  ஆனாலும் முடிவு செய்து விட்டேன்.  நீங்கள் சொல்வது போல், இந்த சனிக்கிழமை மாலைதான் என் நண்பர்கள் அத்தனை பேருக்கும், வாசகர்கள் பலருக்கும் சௌகரியமாக இருக்கிறது. ஒரே ஒரு விஷயம்தான்.  இடையில் ஒரு இரண்டு நிமிட இடைவெளி எனக்குத் தேவை.  இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை நான் சிறுநீர் கழிக்க வேண்டும்.  மாலையிலிருந்து காலை வரை அது ஒரு பழக்கம்.  பகலில் அந்தப் பிரச்சினை இல்லை.  உரையில் நான் சோர்ந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு நீண்ட தியானத்துக்குப் பிறகுதான் உரையாற்ற வந்தேன். 

வாசகர் வட்ட சந்திப்புகளில் இந்தப் பிரச்சினை இருக்காது.  மாலை ஐந்து மணியிலிருந்து காலை ஐந்து வரை ஓடும்.  காரணம், பக்கத்திலேயே ஒரு கிளாஸ் வைன் இருக்கும்.  சுள்ளாப்பாக இருக்கும்.  வீட்டில் அது சாத்தியம் இல்லை.  அவந்திகாவுக்குத் தெரிந்தால் அவளுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்.  என்னை அவள் பாரதி போல் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.  வாரம் ஒருமுறையாவது அப்படி ஒப்பிடுவாள். நான் கூட சமயாசமயங்களில் ”பாரதி கஞ்சா அடிப்பார்மா” என்று சொல்லி விடலாமா என்று நினைப்பேன்.  பிறகு பாரதியை எண்ணி விசனப்பட்டு சொல்லாமல் விட்டு விடுவேன்.  செத்த ஒருவரது ஆவியைத் துன்புறுத்தக் கூடாது.  அவள் மனதில் இருக்கும் மரியாதை அப்படியே இருக்கட்டும்.    

சென்ற வாரம் நடந்தது இது:  ”அம்மு, நம் பணக்கஷ்டம் தீரப் போகிறது” என்றேன். 

“என்ன உளறுகிறாய்?  நமக்கு ஏது பணக் கஷ்டம்?”

“அடப் பாவி, நீ ஒருத்தியே போதும் போலிருக்கிறதே?  எனக்கு MacAir வாங்க வேண்டும்.  இருபது முப்பது காகங்களுக்கு உணவிட வேண்டும்.  முடிந்தால் ஒரு வீடு வாங்க வேண்டும்.”

“ரொம்ப மாறிட்டே சாரு நீ.  எப்போ நீ இப்டி மாறினே?  நமக்கு எதுக்கு வீடு?  எளிமையா வாழக் கத்துக்க மாட்டியா நீ?”

“MacAir என் எழுத்துக்குத் தேவைப்படுது.  இதுக்கும் எளிமைக்கும் என்ன சம்பந்தம்?  புதுசா ஜட்டி கூட வாங்காம நான் எளிமையாத்தானே வாழறேன்?”

”இப்டி பால்கனில வந்து நின்னுக்கிட்டு உன்னை யாரு ஆபாசமாப் பேசச் சொன்னா?  சரி, என்ன அது பணக் கஷ்டம் தீரப் போறதுன்னே?”

அந்த இயக்குனரின் பெயரைச் சொல்லி அவர் என்னை ஒரு மிக வித்தியாசமான ரோலில் நடிக்க அழைக்கிறார் என்றேன்.  என்னை மேலும் கீழும் துச்சமான ஒரு பார்வை பார்த்து, ”ம்… பாரதி சினிமாவுல நடிப்பாரா?  உன் புத்தி ஏன் இப்டிப் போவுது?” என்றாள். ஏற்கனவே நான் எனக்கு மிகவும் பிடித்த அந்த இயக்குனரிடம் என் மறுப்பைத் தெரிவித்து விட்டாலும் எதற்கும் இருக்கட்டும் என்றுதான் அவளிடம் சொன்னேன்.  வந்த பதில் அது.  அதனால் வைன் என்ற பேச்சே பஞ்சமா பாதகம்.  மேலும், அந்தப் பேச்செல்லாம் எடுத்தால் சீனிக்குத்தான் கெட்ட பேர் சேரும்.  என்னைப் போன்ற ஒரு நல்லவனை அவர்தான் கெடுக்கிறார்.  பாவம், அவரை நான் பார்த்தே ஒன்பது மாதம் இருக்கும். 

ஆக, இனிமேல் முன்னிரவு எட்டு மணிக்கே நம் உரை.  இடையில் ஒரு இரண்டு நிமிடம் எனக்கு வேண்டும்.  அவ்வளவுதான்.  வரும் செப்டம்பர் மாதம் 26—ஆம் தேதி முன்னிரவு எட்டு மணிக்கு.  கோபி கிருஷ்ணன் படைப்புகள்.  நேரம் இருப்பின் எஸ். சம்பத். 

என் உரை பதினொன்றரை மணிக்கு முடிந்ததும் ஒரே மணி நேரத்தில் வந்த இன்னொரு கடிதம்:

அன்புள்ள சாரு,

உங்கள் ‘கோபி கிருஷ்ணன் உரை’யில் பங்கேற்றேன். இதுதான் நான் பங்கேற்கும் முதல் கூட்டம். 

மிகவும் அருமையாக இருந்தது. ஒரு பேராசிரியரைப் போல் வார்த்தை வார்த்தையாக விளக்கினீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு பிரெஞ்சு இலக்கியம் மீதுள்ள passion அவ்வுரையை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றது.

(பொதுவாக பேராசிரியர்களிடம் உள்ள குறை என்பது இந்த passion இல்லாமைதான்.)

நான் இவ்வுரையை ஒருவாறு தொகுத்துக்கொண்டேன்.

அதிகாரம் மனப்பிறழ்வுக்கு எதிராக இருக்கிறது.  இலக்கியம் சமூகத்தின் நோய்மையை எதிர்க்கிறது.  எனவே அதிகாரம் இலக்கியத்துக்கும் எதிரானதாக இருக்கிறது.

இலக்கியம் மனப்பிறழ்வின் பக்கம் போகப் போக, அது பொது வாசகர்களுக்கு மிகவும் அதிருப்தி அளிப்பதாக ஆகி விடுகிறது.  இலக்கியம் சமூகக் கட்டமைப்புகளுக்கு எதிரானதாக மட்டும் அல்லாமல் தனிமனித அதிகாரத்தையும் எதிர்க்கிறது.

மனப்பிறழ்வு கொண்டவனுக்கும் சாதாரண மனிதனுக்குமான வித்தியாசம் மொழிதான்.  சாதா மனிதனின் மொழி தர்க்கத்தையும் Reasonஐயும் கொண்டிருக்க, அந்த இரண்டும் மனப்பிறழ்வு கொண்டவனிடம் இருப்பதில்லை.  எனவே மனப்பிறழ்வு கொண்டவனே பேசுவதற்கு முன்னுரிமை பெற்றவனாகிறான்.  நம்மைச் சுற்றியுள்ள பௌதிக உலகம் நம் மனதை Reason என்பதன் மூலம் பூட்டி வைத்திருப்பதன் காரணமாக, மனப்பிறழ்வு கொண்டவன் தன்னுடைய பிரத்தியேக “மொழி”யின் மூலம் இதுவரை மனிதர்கள் பார்த்திராத உலகங்களின் எல்லையற்ற வெளிகளுக்கான கதவுகளைத் திறக்கிறான். 

ஏதோ புரிந்தவரை பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன். 

நான் உங்கள் அ-புனைவுகளின் ரசிகன். உங்கள் நாவல்களைப் பலமுறை படிக்க முயற்சி செய்து தோற்றுள்ளேன் (0 degree, தேகம்). அதை என்னால் செரித்துக்கொள்ள முடியவில்லை. “ஏன் இவ்வளவு கீழ்மை?” என்றுதான் நினைப்பேன். (ஆனால் எழுத்து நடையின் சுவாரஸ்யம் அதை கீழே வைக்க விடாது.)

இப்போது உங்கள் உரைக்குப் பிறகு ஒன்று புரிகிறது.

” உலகம் முழுக்க இவ்வாறு எழுதுபவர்கள் உண்டு. அவர்களின் நோக்கம் “ஏன் என் எழுத்தை உன் மனம் கீழ்மை என நினைக்கிறது? அப்படியென்றால் உன் மனம் எதற்கோ கட்டுப்பட்டுள்ளது. அது என்ன? அது எவரால் சமைத்து உனக்கு அளிக்கப்பட்டுள்ளது ? அவர்(கள்) சொல்வது உண்மையா? வேறு உண்மைகள் ஏதும் இல்லையா? ” என்று பல்வேறு கேள்விகளை வாசகனின் மனதில் எழுப்புவதாகத்தான் உள்ளது.

நான் சரியாக பெற்றுக்கொண்டேனா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நல்ல திறப்பாக உங்கள் உரை அமைந்தது.

நன்றி.

தங்கள்,

கிஷோர் குமார்.

இன்றைய உரையின் தாக்கத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் குறிப்பிட்ட ஒவ்வொருவரின் மனப்பிறழ்வையும் உணர முடிந்தது. ஒரு கட்டத்தில் கணினியை மூடி வைத்துவிட்டு ஓடிவிடலாமா என்று தோன்றியது. இதுவரை உங்கள் எழுத்தை வாசிக்கும்போது கிடைத்த அனுபவத்தை இன்றைய பேச்சின் வழியாகக் கடத்திவிட்டீர்கள். காலையிலிருந்து சாப்பிடவில்லை. பசி தாகம் மறந்து ரசித்த பேச்சு.

வளன் அரசு நியூட்டன் வில்லியம்ராஜ்.

பாஸ்டனில் வசிக்கும் வளனுக்கு அப்போது காலை நேரம் என்பதால் காலை முதல் மதியம் வரை சோறு தண்ணி இல்லாமல் கேட்டிருக்கிறான் போலிருக்கிறது.

***

நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு நிறைந்திருந்தது.  கேட்கும்போது உங்கள் அன்பைத் தாங்க முடியாமல் சப்தம் போட்டு அழத் தோன்றியது.  ஆனால் அழ முடியவில்லை.  மூன்று மணி நேரப் பேச்சில் ஒருமுறை கூட உங்கள் குரலில் தடையில்லாமல் இருந்தது பெரிய ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.

பாக்யராஜ்.

***

அழகிய சிங்கர் ஒரு யோசனை சொன்னார்.  இந்த மூன்றரை மணி நேர பேச்சை இரண்டு தினங்களில் பிரித்துச் செய்தால் என்ன என்று.  ஒருநாள் இரண்டு மணி நேரம்.  அடுத்த நாளே இரண்டு மணி நேரம்.  இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்த கோபி கிருஷ்ணன் உரை தேவை என்றால், நீங்களே நிர்ணயிக்கும் ஒரு கட்டணத்தோடு எழுதுங்கள்.  அனுப்பி வைக்கிறேன்.  மாணவர்களும், சந்தா/நன்கொடை அனுப்பும் நண்பர்களும் கட்டணம் அனுப்ப வேண்டாம்.  ஒரு வரி எழுதினால் அனுப்பி வைப்பேன்.  சி.சு. செல்லப்பா, நகுலன், க.நா.சு. உரைகள் தேவை என்றாலும் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai