மாணவர்கள் பணம் அனுப்ப வேண்டாம் என்று சொல்லியும் சில மாணவர்கள் மாதம் ஐநூறும் முன்னூறும் அனுப்புகிறார்கள். ஆனால் அதை விட ஆச்சரியம் என்னவென்றால் – இங்கே ஆச்சரியம் என்ற வார்த்தைப் பிரயோகம் அபத்தம், ஆனால் வேறு வார்த்தை போட்டால் பணம் அனுப்பும் அந்த நண்பர்களுக்கு மரியாதை இல்லை, உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது நம் மரபு, அதனால் ஆச்சரியம் என்றே வாசியுங்கள் – பத்துப் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்களெல்லாம் மாதம் முன்னூறு ரூபாய் அனுப்புகிறார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை. அப்பாவுக்குச் செய்ய மாட்டோமா? கீழே அராத்துவின் ஒரு முகநூல் பதிவைப் பாருங்கள்:
”நல்ல சுவையான புரிதலுடன் கூடிய உரையாடல்கள். படித்துப் பாருங்கள். சாரு தொடர்ந்து 300 ரூபாய் கூட அனுப்புங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதனால் 10,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் பெரும்பாலானோர் 300 ரூ. அனுப்புவதாகத் தெரிகிறது.
குறைந்த பட்சம் என்று அவர் சொல்வதைத் தூக்கிக்கொண்டு திரிவதாகப் படுகிறது. 10,000 ரூ. ஊதியம் வாங்குபவர்கள் 300 ரூ. அனுப்புவதெல்லாம் அளவில்லா அன்பு மற்றும் மிகவும் சென்ஸிபிளான ஆட்கள்.
ஒரு கோடி அனுப்ப தமிழகத்தில் ஒரு தகுதியான ஆள் கூடவா இல்லை? அவர் என்ன சொத்து சேர்க்கவா கேட்கிறார்? சரி, ஒரு கோடி வேண்டாம், ஒரு பத்து லட்சம் ? அஞ்சு லட்சம் ? கோடி கோடியாகச் சம்பாதிக்கும் ஆட்களெல்லாம் அனுப்பினால் ஏன் இந்த 10,000 மாதச் சம்பளம் வாங்குபவர்கள் 300 ரூ. அனுப்பி அவதிப்பட வேண்டும்? அவ்வளவு மண்ணாந்தை முட்டாள்களா இந்தத் தமிழக கோடீஸ்வரர்கள்?”
ஒரு மிக நல்ல பகடியாகத்தான் மேற்கண்ட பதிவை எடுத்துக் கொண்டேன். கோடீஸ்வரர்கள் இலக்கியம் படிப்பதில்லை என்று சொல்ல மாட்டேன். கோடீஸ்வரர்களின் ஒரே அறம், ஒரே மதிப்பீடு பணம்தான். உங்களிடம் பணம் இல்லையா. அது உங்கள் விதி. அதில் நான் குறுக்கிடுவது இறைவனின் திட்டத்தில் குறுக்கிட்டு இறை சக்தியை அவமதிப்பதாகும். இப்படித்தான் எல்லா கோடீஸ்வரர்களும் நினைக்கிறார்கள். ஆனால் இதே ஆட்கள் ஐம்பது ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கிறார்கள். அது புண்ணியம். ஒரு வயதான ஆசாமி. தன்னுடைய நிலம் நீச்சையெல்லாம் விற்று சூர்யாவின் கல்வி அறக்கட்டளைக்கு எழுதி வைக்கிறார். சொத்து ஒரு கோடி பெறும். ஆனால் சூர்யாவின் சம்பளமே அஞ்சு கோடி இருக்கும்.
அது தவிர, சாமியார்களிடம் கொண்டு போய் கொட்டுகிறார்கள். அதுவும் எப்படி? பத்து லட்சம் அம்பது லட்சம் என்று கொட்டுகிறார்கள். எனக்கு ஒரு எழுத்தாளரைத் தெரியும். ரொம்ப நல்ல மனிதர். ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். எழுத்தாளர் மட்டுமல்லாமல் ஆன்மீகவாதியும் கூட. கொஞ்சம் சித்து வேலையும் தெரிந்தவர். ஏமாற்று சித்து அல்ல. நிஜ சித்து. அவரிடம் வரும் கோடீஸ்வரர்கள், பஸ் கம்பெனி முதலாளிகள், கல்லூரி முதலாளிகள், நகைக்கடை முதலாளிகள் போன்றவர்களின் கைகளில் ஒரு மஞ்சள் பை இருக்கும். சாஷ்டாங்கமாய் எழுத்தாளரின் கால்களில் விழுந்து எழுந்து அந்த மஞ்சள் பையை அவரிடம் மிக மிக பவ்யமாக காண்பிப்பார்கள். அதன் உள்ளே இரண்டு செங்கற்கள் இருப்பது போல் தெரியும். ஆனால் செங்கல்லை ஏன் கொண்டு வந்து கொடுக்கிறார்கள் இத்தனை பவ்யமாக? அதுவும் செங்கல்லாக இருந்தால் கனம் தெரியுமே? இது அப்படித் தெரியவில்லையே? அவர் லேசான ஒரு கண்ணசைவில் பக்கவாட்டில் இருக்கும் சித்தர் படத்தைக் காண்பிப்பார். பெரிய சித்தர் படம் இருக்கும். சித்தர் பீடம் என்றே சொல்லலாம். படத்தின் கீழே சகல பழங்களும் இருக்கும். எப்போதும் ஊதுவத்தி எரிந்து கொண்டிருக்கும். மஞ்சள் பை தொழிலதிபர் கையிலிருந்து படத்தின் கீழே இடம் மாறும். பிறகு அந்த மஞ்சள் பையை அங்கேயே வைத்து விட்டுத் தொழிலதிபரும் கிளம்பிப் போய் விடுவார். இப்படி பல மஞ்சள் பைகள் வந்தவண்ணம் இருக்கும்.
எனக்கு இது நீண்ட நாள் குழப்பமாக இருந்தது. மஞ்சள் பைக்குள் இருப்பது ஏதோ ஒரு பொருள். அதை எழுத்தாளர் கம் சித்தரின் கை தொட்டுக் கொடுத்தால் காரியம் விளங்கும் என்று எடுத்து வருகிறார்கள். ஆனால் அதை இங்கேயே வைத்து விட்டுப் போனால் எப்படி?
பிற்பாடுதான் தெரிந்தது, அந்த செங்கல் எல்லாம் பணக் கத்தை என்று. இப்படி ஆன்மீகத்தில் இறங்கினால் கத்தை கத்தையாகப் பணம் கிடைக்கும். எனக்கு இந்த சித்தர் படமோ சித்து வேலையோ எதுவும் வேண்டாம். ஏன், நீண்ட தாடி கூட தேவையில்லை. இப்போது இருக்கும் இந்த ஃப்ரெஞ்ச் தாடியே போதும். போஸ்ட்மாடர்ன் சாமியாரெல்லாம் இப்படித்தான் என்று சொல்லி விடலாம். சாமியார்களெல்லாம் ஆசையை ஒழி என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நம் ஜக்கி அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்லவில்லையா? காவி என்பது எளிமையின் சின்னமாக இருக்க, ஜக்கி அவர்களின் apparels ஃபிலிப்பைன்ஸின் இமெல்டா மார்க்கோஸின் அப்பேரல்ஸையே தோற்கடித்து விடவில்லையா? உங்களுக்கெல்லாம் ஜக்கியின் ஆன்மீகம் பிடிக்கும் என்றால் நான் அவரது ஆடை அலங்காரங்களின் தீவிர ரசிகன். இந்த வயதிலும் ஆள் என்னமாய் உடுத்துகிறார்! என் வாழ்நாளில் இப்படி ஒரு Dandyயைக் கண்டதில்லை. ஹாலிவுட் ஆட்கள் கூட இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். கிண்டலாகவோ விமர்சனமாகவோ எழுதவில்லை. முன் சீட்டில் பாபா ராம்தேவை உட்கார வைத்துக் கொண்டு ஜக்கி சைக்கிளை மிதித்துக் கொண்டு போகும் ஸ்டைல் இருக்கிறதே அடடா. ஆனால் ஒரு சந்தேகம். இப்போதெல்லாம் எனக்கு நனவு போலவே கனவும் வந்து கொண்டிருப்பதால் இந்த டபுள்ஸ் சைக்கில் சம்பவம் உண்மையில் நடந்ததா, அல்லது என் கனவா? எப்படியோ போகட்டும். நான் ஒரு போஸ்ட்மாடர்ன் சாமியாராக மாறினால் பணம் கொட்டும். கோடீஸ்வரர்கள் சாமியார்களுக்குத்தான் பணம் கொடுக்கிறார்களே ஒழிய எழுத்தாளர்களுக்கு அல்ல.
கோடீஸ்வரர்கள் இலக்கியம் வாசிக்கிறார்கள். வீடு தேடி வந்து அவர்கள் கொண்டு வந்த என் புத்தகங்களில் என் கையெழுத்தை வாங்கிக் கொண்டு, என்னிடம் ஒரு மணி நேரம் பேசி விட்டு கையை வீசிக் கொண்டு போகிறார்கள். ஒருநாள் அப்படி வந்த ஒரு தொழிலதிபருக்கு ஊரில் ஏழெட்டு சினிமா அரங்கங்களும் ஒரு பஸ் கம்பெனியும் இருந்தன. அவருக்கு செலவழித்த என்னுடைய ஒரு மணி நேரத்தின் விலை? கோடீஸ்வரர்கள் நம் வீடு தேடி வருவதே ஒரு எழுத்தாளனின் பாக்கியம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். பாரதி இங்கே சென்னையில் வாழ்ந்த போது அவருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் நண்பர். ஹைகோர்ட் ஜட்ஜ் நண்பர். ஆனல் அவர் மனைவிக்கு உலை வைக்க அரிசி இல்லாமல் பக்கத்து வீட்டில்தான் அரிசி கடன் வாங்க வேண்டியிருந்தது.
கோடீஸ்வரர்கள் இப்படி என்றால், தினசரி வேலை செய்தால்தான் ஊதியம் என்று இருக்கும் தச்சர், ஆட்டோ டிரைவர், உதவித் தொகையில் படிக்கும் பல்கலைக்கழக மாணவர், எந்த வருமானமும் இல்லாத ஹவுஸ்வைஃப் இப்படிப்பட்டவர்கள்தான் எனக்கு மாதம் முன்னூறும் ஐநூறும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி குழந்தைகளின் படிப்பு, பெற்றோரைக் காப்பாற்றும் பொறுப்பு, வீட்டுக் கடன் என்று அல்லாடும் மத்தியதர வர்க்கத்தினரும் படிக்கிறார்கள். முடிந்த அளவு சந்தா அனுப்புகிறார்கள். மேல்தட்டு வர்க்கம்தான் பெருத்த மௌனம். MacAirதானே, நான் வாங்கித் தருகிறேன் என்று சொல்ல ஒரு மேல்தட்டு ஆள் இல்லை. எண்ணி நாலே பேர் உதவ முன்வந்தார்கள். ஒரு நண்பர் 7500 ரூ. மாதாமாதம் சந்தா அனுப்பும் இன்னொரு நெருங்கிய நண்பர் நூறு டாலர். மற்றும் இரண்டு நண்பர்கள். தேவைப்படுவதோ 1300 டாலர். அந்த இரண்டு பேரில் ஒருவர் போன் செய்து எத்தனை பேர் இது பற்றி எழுதினார்கள், ஒரு ஐடியா கிடைத்தால் நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெரியும் என்று கேட்ட போது, இருநூறு டாலர் வந்துள்ளது என்று சொல்ல லஜ்ஜையாக இருந்ததால், முடிந்ததை அனுப்புங்கள், மீதியை நான் புரட்டிக் கொள்கிறேன் என்று மட்டுமே சொல்ல முடிந்தது.
மேக் ஏர் இருந்தால் இதை விட இன்னும் இரண்டு மடங்கு எழுத முடியும். சினிமா தொடர்பான பல விஷயங்களை உங்களுக்குத் தர முடியும். அவ்வளவுதான்.
இந்தப் பண நெருக்கடியும் இப்படியான வாழ்க்கையும் என் மீது திணிக்கப்பட்டதல்ல. நான் தேர்ந்தெடுத்துக் கொண்டது. இதை நான் கோபி கிருஷ்ணன் உரையில் பேசி விட்டேன். அதைக் கேட்டவர்களுக்கு இது இரண்டாவது முறையாக இருக்கும். க்ஷமிக்கவும். நண்பர்கள் போன் செய்தால் போனை எடுக்காமல் திங்கள் பேசுகிறேன், செவ்வாய் பேசுகிறேன் என்று மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் எனக்கு அதிமுக்கியமானவர் ராம்ஜி. ஏனென்றால், எனக்கு என் உயிரை விட முக்கியமான என் எழுத்துக்களை உங்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்தவர். சென்ற வாரம் போன் செய்து – அவர் போனை எடுத்து விட்டேன் – ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் புதிய இணைய தளத்தில் உங்கள் புத்தகங்கள் அனைத்தும் ஒரே க்ளிக்கில் கிடைக்கின்றன. அந்த இணைய தளத்தின் லிங்க்கை உங்கள் ப்ளாகில் போடுங்கள் என்றார். இது அவர் வேலையா என்ன. என்னுடைய புத்தகங்கள். திங்கள்கிழமை செய்கிறேன் ராம்ஜி என்றேன். இதோ திங்கள் கிழமை வந்து விட்டது. காலை நான்கு மணியிலிருந்து என் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இடையில் அதை நிறுத்தி விட்டு இந்தப் பதிவு. இத்தனை கடுமையான வேலைச் சுமைக்கு இடையில் நடிக்க வேண்டுமா? நடித்தால் பணம் கொட்டும். சந்தேகமே இல்லை. ஐயோ, எனக்கு நடிக்கத் தெரியாதே என்றும் சொல்லிப் பார்த்தேன். கை காலை அசைக்கவே தெரியாத மரக்கட்டைகளையெல்லாம் ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு நடிக்க வைத்தவர் அவர். என்ன பிரச்சினை என்றால், ஒரு படத்தில் நடித்தால் வாய்ப்பு வந்து கொண்டே இருக்கும். நடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். பணம் கொட்டும். (மிஷ்கின் படத்தில் விரலைக் காண்பித்ததற்கே ஒரு லட்சம் கிடைத்தது.) ஆனால் அங்கே போய் விட்டால் பிறகு MacAir தேவைப்படாது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜி கே. குமார் விடியும் முன் என்ற படத்தில் வில்லன் பாத்திரத்தை செய்யச் சொன்னார். அவர் என் வாசகராக அறிமுகமானவர். ஹாலிவுட்டில் சில படங்கள் செய்து விருதும் பெற்றவர். மிகவும் வற்புறுத்தினார். நான் மறுத்து விட்டேன். பின்னர் என்னுடைய தோற்றம், உடல் மொழியையே கொண்ட இன்னொருவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். எனக்குத் தொழில் எழுத்து. என் சோற்றுப் பருக்கையும் என் எழுத்தின் மூலமே கிடைக்க வேண்டும். மிக முக்கியமாக, என் நேரம் முழுமையாக எழுத்துக்கே தரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். காலையில் அராத்துவின் பதிவில் கோடீஸ்வரர் என்று பார்த்ததும் இதை எழுதத் தோன்றியது. இனி வேலையில்தான் கவனம் செலுத்த வேண்டும்.
இதுவரையிலான சி.சு. செல்லப்பா, நகுலன், க.நா.சு., கோபி கிருஷ்ணன் உரைகளின் காணொலிகள் தேவையெனில் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai