உலகின் மிகச் சிறந்த நாவல் இடைவெளி

எஸ். சம்பத்தின் இடைவெளிக்குத்தான் இதுவரையிலான என் நாவல் வாசிப்பு அனுபவத்திலேயே முதல் இடம் கொடுப்பேன்.  ஏன் என்று பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  வாசித்துக் கொள்ளுங்கள்.  ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் எவனும் மரண வெளியில் சென்று கள ஆய்வு செய்து நாவல் எழுதி செத்தது இல்லை.  சம்பத் செய்திருக்கிறார்.  செத்தும் இருக்கிறார்.  நல்ல புத்திசாலி.  கஷ்டப்பட்டவர் எல்லாம் இல்லை.  வசதியானவர்.  மரணத்தில் கள ஆய்வு செய்தார், அவ்வளவுதான்.

இவருடைய ஒரே நாவலான இடைவெளியை வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளன என்று தெரிகிறது.  இவரது குடும்பத்தாரிடமிருந்து நாவலை வெளியிட எழுத்து மூலமான அனுமதி கிடைப்பதில்லை.  நீங்கள் வெளியிட்டுக் கொள்ளுங்கள், நாங்கள் ஒன்றும் கேட்க மாட்டோம், எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.  இதுதான் அவர்கள் தரப்பு.  இதில் எதுவும் எனக்குத் தப்பு தெரியவில்லை.  நண்பரிடம் நாவலை வெளியிடச் சொன்னேன்.  நண்பர் நேர்கோடு.  எதையும் சட்டப்படியே செய்பவர்.  அதனால் எழுத்து மூலம் அனுமதி இருந்தால்தான் வெளியிடுவேன் என்று சொல்லி விட்டார்.  வாஸ்தவத்தில் இதன் முதல் பதிப்பு க்ரியா வெளியீடு.  மீண்டும் அவர்கள்தான் வெளியிட வேண்டும்.  வெளியிடவும் விரும்பினார்கள்.  ஆனால் குடும்பத்தில் இப்படி.  க்ரியா ராமகிருஷ்ணனும் நேர்கோடு.  எதையும் சட்டப்படியே செய்பவர்.  இந்த நிலையில் இடைவெளியை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தார் அழகிய சிங்கர்.  அவர் எழுத்து அனுமதியையெல்லாம் பற்றிக் கவலைப்படவில்லை என்று நினைக்கிறேன்.  ஆனால் அந்த வெளியீட்டை தயவுசெய்து யாரும் படிக்காதீர்கள்.  ஏனென்றால், அது அந்த நாவல் உமாபதியின் தெறிகள் பத்திரிகையில் வந்த அதே வடிவம்.  ஆனால் க்ரியாவில் புத்தகமாக வந்தது சி. மோகனும் நாவலை எழுதிய சம்பத்தும் சேர்ந்து எடிட் பண்ணியது.  சி. மோகனைப் போன்ற ஒரு எடிட்டர் இன்று தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு பேர்தான் இருக்கிறார்கள்.  அந்த வடிவம் – அதாவது சி. மோகன் எடிட் பண்ணின வடிவம் பி.டி.எஃப். ஆக பல ஆண்டுகளாகக் கிடைக்கிறது.  அதை இன்று இங்கே நான் பகிரக் காரணம், இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான்.  இது சம்பத்துக்கு நான் செய்யும் அஞ்சலி. 

இது யாருக்காவது இடைஞ்சலாக இருந்தால் எழுதுங்கள்.  இந்தப் பதிவை நீக்கி விடுகிறேன்.  நீதி மன்றத்துக்கெல்லாம் இழுத்துப் பழி வாங்காதீர்கள்.  எனக்கு நேரம் இல்லை.  பி.டி.எஃப். போடக் கூடாது என்றால் சொல்லுங்கள்.  நீக்குகிறேன்.  பீரியட்.

இது இடைவெளி நாவலின் பி.டி.எஃப்.

https://siliconshelf.files.wordpress.com/2011/11/sampath_idaiveli.pdf