அராத்துவின் மயிர்க்கூச்செறிதல் சிறுகதை நல்லதொரு விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பி விட்டது. இப்படித்தான் இருக்க வேண்டும். என்ன ஆச்சரியம் என்றால், அராத்துவுக்குப் பெரிய ஒரு ஆர்மியே இருப்பதுதான். ஆர்மியில் இளம் பெண்களின் கூட்டம் அதிகமாக இருப்பது வேறு பொறாமையைக் கிளப்புகிறது. கதை பற்றி என் நண்பரும் பேராசிரியருமான ராஜா ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம்:
அன்புள்ள சாரு,
மயிர்க்கூச்செறிதல் கதையைப்படித்துவிட்டு நான் படித்ததில் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என என் மனைவியிடம் கூறினேன். அவள் சந்தேகத்துடனே அதைப் படிக்க ஆரம்பித்தாள். சந்தேகம், நான் இதற்கு முன் பரிந்துரைத்த கதைகளால் வந்தது. இப்படி நான் பரிந்துரைத்த கதைகள் எல்லாம் “இலக்கிய” கதைகள். எனக்குப் புரியவில்லை என்ற ஒற்றை வார்த்தையில் அவை நிராகரிக்கப்படும்.
நான் பரிந்துரைத்து அவள் முழுதுமாய்ப் படித்த முதல் கதை இதுதான். அந்த வகையில் சுவாரஸ்யம் குன்றாமல் எழுதி, உங்கள் குருகுலத்தில் சிறந்த மாணவர்களில் ஒருவராக அராத்து தேறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். நீங்கள் மொழியின் போதாமை குறித்து எழுதியிருந்தீர்கள். அது உண்மைதான். ஆனால் இனிவரும் காலங்களில் நாம் இதற்குப் பழகிக்கொள்ளவேண்டும் என்றே தோன்றுகிறது. தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கவே முடியாத சில தலைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அத்திப்பூத்தாற்போல் தமிழ் மீது ஆர்வம் கொண்டு வரும் இளைஞர்களுக்கு நாம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது. ஒன்று, எந்த உணர்வையும் ஏற்படுத்தாத தட்டையான மொழியில் எழுதப்பட்ட மொண்னையான படைப்புகள். இவை வார இதழ்களிலும் வலைப்பூக்களிலும் எழுதப்படுபவை. இவற்றுடன் ஒப்பிடும்போது என் இளமைப்பருவத்தில் படித்த பாக்கெட் நாவல் மற்றும் பாலகுமாரன் நாவல்கள் ஆகச் சிறந்தவையாக தோன்றுகிறது. இவற்றைப் படிக்கும் ஒருவர் தமிழ் குறித்து எவ்வாறான மதிப்பீடுகளைக் கைக்கொள்வார் என எண்ணவே பயமாக உள்ளது. இதற்கான ஒரு மாற்றைத் தேடினால் கிடைப்பவையோ அதிதீவிர எழுத்துக்கள். இவற்றைப் புரிந்துகொள்ள தீவிர பயிற்சி தேவையாக இருக்கிறது. உங்கள் எழுத்துக்களைப் படிக்க எந்தத் தடையும் இல்லை எனினும் ஒரு தொடர்ச்சியான பயிற்சியும் இலக்கியக் கூறுமுறைகள் பற்றிய புரிதலும் இல்லாத ஒருவர் மிகுந்த குழப்பத்தை அடைவார். உண்மையான வாசிப்பு ஆர்வம் உள்ளவர்களுக்கு அது ஒரு தடை இல்லை. நான் அப்படி வந்தவன்தான்.
ஆனால் நான் இங்கே குறிப்பிடவிரும்புவது அவ்வப்போது ‘பச்சைத் தமிழன்’ கோஷங்களால் உந்தப்பட்டு, ’அட, தமிழில் என்னதான் இருக்கிறது என பார்ப்போம்’ என்று வருபவர்களை. அம்மாதிரி மனிதர்களை, வாசகர்களைத் தக்க வைத்துகொள்ள நம்மிடம் என்ன உள்ளது. அராத்து போன்றோரின் படைப்புகள் அந்த இடைவெளியை நிரப்பும் என நம்புகிறேன். நீங்களே குறிப்பிட்டதைப்போல அவர் இன்றைய மொழியில் எழுதுகிறார். உங்கள் பள்ளியில் இருந்து மேலும் பலர் இது போன்று உருவாக வாழ்த்துக்கள்.
ஒரு அபிப்பிராயம் – ஆங்கில வசனங்களைத் தமிழில் எழுதுவது படிப்பதற்குக் கடினமாக உள்ளது. அதற்கான முயற்சியில் இறங்கும் பொழுது தொடர்ச்சியான வாசிப்பு தடைப்படுகிறது. பதிலாக அப்படியே ஆங்கிலத்திலேயே எழுதிவிடலாம்.
இணையத்தின் சாத்தியங்களை அதன் துவக்க காலத்திலேயே உணர்ந்து அதனை ஒரு கருவியாக பயன்படுத்திய முன்னோடி நீங்கள். உங்கள் எழுத்தால், தொடர்சியான செயல்பாடுகளால் பலரை புதிய சாத்தியங்களை நோக்கிப் பயணிக்க வைத்திருக்கிறீர்கள் – இலக்கியத்தில் மட்டுமல்ல, சினிமா, இசை நாடகம் போன்ற பல துறைகளிலும். ஆனால் அது தொடர்ச்சியாக இருட்டடிக்கப்படுவதாகவே உணர்கிறேன். தங்களின் பணி மென்மேலும் தொடரட்டும். உங்களின் மாணவர்களால் நிகழ்காலத்திலேயே தமிழ் இலக்கிய வரலாற்றில் உங்களின் இடம் நிறுவப்படும் என நம்புகிறேன். அபிலாஷின் உரை ஒரு நல்ல ஆரம்பம்.
இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பேட்டியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார் ” History will be more kinder to me” என.
உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அது உங்களுக்கும் பொருந்தும்.
Dr. Raja, N. S.
Genetic Engineering Department
ராஜாவின் கடிதம் ஏன் முக்கியமானது என்றால், இன்றைய எழுத்தின் பல பிரச்சினைகளையும், சவால்களையும் அவர் அதில் கோடிகாட்டியிருக்கிறார். இதைப் படித்தபோது ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இவரைப் போன்றவர்கள் தமிழ்த் துறையில் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? எனக்கு மிக இளம் வயதில், அதாவது, எட்டு ஒன்பது வயதில் தமிழ் மீது ஆர்வம் வந்ததற்குக் காரணமே எங்கள் தமிழாசிரியர் சீனி சண்முகம்தான். அந்தக் காலத்தில் நாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் சீனி சண்முகத்தை உயர்நிலைப் பள்ளியில் மட்டுமே அறிவார்கள். ஆனால் அவர் எனக்கு இரண்டாம் வகுப்பு ஆசிரியராகவும், மூன்றாம் வகுப்பு ஆசிரியராகவும், நான்காம் வகுப்பு ஆசிரியராகவும் இருந்தவர். நான் உயர உயர அவருக்கும் பணி உயர்வு கிடைத்துக் கொண்டே வந்தது. பிறகு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் போய் ஐந்து ஆண்டுகள் புலவர் படிப்பு படித்து விட்டு வந்து நான் ஒன்பதாம் வகுப்பு வந்தபோது அவர் என் தமிழாசிரியராக வந்து சேர்ந்து விட்டார். அண்ணாதுரை, நெடுஞ்செழியன் போன்றவர்களின் இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்டு மயங்கியிருக்கிறேன். அதேபோல் வகுப்பு எடுப்பார் சீனி சண்முகம். அது மட்டுமல்லாமல் பழந்தமிழ் இலக்கியத்தின் மீது பெரும் ஆர்வத்தையும் கொண்டு வந்தவர்.
இதை அறிவுத் துறையிலும் மடை மாற்றம் செய்யக் கூடிய தமிழ் ஆசிரியர்கள் இன்று தேவை. அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, சமகால இலக்கியத்தைப் படிப்பதுதான். ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு அவர்கள் இந்தக் காரியத்தை மட்டும் செய்வதே இல்லை. டி. தர்மராஜின் ஸூம் உரைகளைக் கேட்டீர்களா? தமிழ்நாட்டில் அவரைப் போன்ற புத்திஜீவிகள் வெறும் இருபது பேர் இருந்தால் போதும், ஒரு மாவட்டத்துக்கு ஒருவர். இந்த சமூகமே திருந்தி விடும். ஆனால் அவரும் தமிழ்த் துறை அல்ல என்று நினைக்கிறேன். இருக்க வாய்ப்பு இல்லை. Folklore அல்லது மானுடவியல் துறையாக இருக்க வேண்டும். தமிழ்த்துறையில் அவரைப் போன்ற புத்திஜீவிகளை உள்ளேயே விட மாட்டார்கள். நான் மிக மதிக்கும் மற்றொரு புத்திஜீவி, அபிலாஷ் ஒரு படைப்பாளியும் கூட. அவரும் ஆங்கிலத் துறை. அதுவும் பெங்களூர். தமிழ்த் துறையில் எனக்குத் தெரிந்து ஆளே இல்லை.
இந்த நிலையில்தான் என்னைப் போன்ற பேசவே தெரியாதவர்கள் பேசக் கற்றுக் கொண்டு மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் உரையாற்றிக் கொண்டிருக்கிறோம். போகட்டும்.
ராஜாவின் மனைவி அராத்துவின் கதையைப் படித்து விட்டு என்ன சொன்னார் என்று ராஜாவும் எழுதவில்லை; நானும் கேட்கவில்லை. ஏனென்றால், அது இங்கே முக்கியமே இல்லை. இலக்கியம் என்ற வகைமையில் வரும் கதைகளை, அதாவது தன் கணவர் படிக்கும் கதைகளை ஒன்றும் புரியவில்லை என்று திருப்பிக் கொடுத்து விடுகிறார், அப்படிப்பட்டவர் அராத்துவின் கதையை முழுசாகப் படித்தார் என்பதே அராத்துவின் வெற்றி. என்னுடைய வெற்றி. அவர் அந்தக் கதையைத் திட்டியிருந்தால் கூடப் பரவாயில்லை. காரணம், இன்றைய எழுத்தாளர்கள் பலரது கதைகளைப் படிக்கவே முடியவில்லை. ஒரு எழுத்தாளர் இருக்கிறார். ஏழெட்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். ஏழெட்டு நாவல்கள் என்றாலே நீங்கள் வயதை யூகித்துக் கொள்ளலாம். அறுபது. ஆனால், ஒரு தமிழ்ப் படத்தில் பார்த்தோம் இல்லையா, அஸாருத்தீன்னு ஒரு பையன் புதுசா வந்திருக்கான், நல்லா ஆட்றான் என்று ஒரு கேரக்டர் சொல்லும், அந்த மாதிரி இன்னமும் எண்பதுகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் அவர். முப்பது ஆண்டுகளில் அவர் எழுத்து காலாவதி ஆவது அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் என்ன மிதப்பில் இருப்பார் என்றால், எல்லாரும் ஞான சூன்யம், யாருக்கும் இலக்கியம் தெரியவில்லை, எந்தக் காலத்திலும் இலக்கியத்தை இருபது பேர்தான் படிப்பான், அப்படித்தான் நம்மைப் படிக்கவும் எப்போதும் இருபது பேர் இருப்பான். இப்படி நினைப்பது ஒரு விதத்தில் நல்லதுதான், இல்லாவிட்டால் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும். அல்லது, பைத்தியம் பிடித்து விடும். பியானோ டீச்சர் நாவல் படித்திருக்கிறீர்களா? நம் மகள் எரிக்கா பீத்தோவன் மாதிரி ஆக வேண்டும் என்று அவள் அம்மா அவளை வெளியுலகத் தொடர்பே இல்லாமல் பியானோவிலேயே வளர்ப்பாள். எரிக்காவுக்குத் தெரிந்ததெல்லாம் பியானோ மட்டும்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவளுக்கு பியானோவில் எந்த உயரத்தையும் எட்ட முடியவில்லை. முப்பத்தைந்து வயது வரை ஒரு அறையிலேயே அடைத்து பியானோவை மட்டும் கற்றுக் கொடுத்தால் பியானோவா வரும்? அவள் கடைசியில் வெறும் ஒரு பியானோ டீச்சராக மட்டுமே எஞ்சி விட்டாள். இப்போது எரிக்கா ஒரு கல்லூரியில் பியானோ டீச்சர். நாவலின் அடுத்த பகுதிதான் படு சுவாரசியம். ஆனால் நான் சொல்ல வந்தது, நம் எழுத்தாளர்கள் பெரும்பாலும் அந்தப் பியானோ டீச்சர் எரிக்காவைப் போலவேதான் இருக்கிறார்கள். பலரும் எண்பதுகளையே தாண்டவில்லை. அதனால்தான் இளைஞர்களால் அந்த எழுத்தோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடியவில்லை. புரியவில்லை என்று திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். அராத்துவைப் படிக்கிறார்கள்.
மேலும், இன்று இணையத்தில் வரும் ஏராளமான குப்பைகளைப் பார்க்கும்போது பாலகுமாரன் எழுத்தெல்லாம் காவியம் என்றே சொல்ல வேண்டும். பாலகுமாரனை ஒரே வார்த்தையில் வர்ணித்து விடலாம். Poor man’s Janakiraman. அதையெல்லாம் தொடுவதற்கு இந்த இணைய மொண்ணைகளால் முடியவே முடியாது. பாலகுமாரன் பழந்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர். வார்த்தைகள் அவரிடம் விளையாடும். அதனால்தான் அவருக்கு வார்த்தைச் சித்தர் என்று பட்டம் கூடக் கொடுத்தார்கள். அவர் எங்கே முடங்கினார் என்றால், ஜானகிராமனை அவர் தாண்டவே இல்லை. தாண்டவும் முடியாது. அவர் தன்னுடைய இந்து சமய, பிராமண தர்மத்திலிருந்து வெளியிலேயே வரவில்லை. சுஜாதா வந்தார். வந்து வியாபார முதலையின் வாயில் சிக்கிக் கொண்டார். பாலாவை முழுங்கியது பிராமணீயம். சுஜாதாவை முழுங்கியது வணிக எழுத்து. இல்லாவிட்டால் இரண்டு பேரும் நவீனத் தமிழ் இலக்கியத்தில் சென்றிருக்க வேண்டிய தூரம் ரொம்ப தூரம். நம் சூழலின் பிரச்சினையால் ஒரு மரியோ பர்கஸ் யோசாவையும் ஒரு கார்ப்பெந்த்தியரையும் நாம் இழந்து விட்டோம்.
கடைசியாக, மன்மோகன் சிங்கை அவர் பதவியில் இருந்தபோது பிடிக்காமல் இருந்தது. இப்போது அவரை ரொம்பவும் ‘மிஸ்’ பண்ணுகிறேன். ராவையும்தான்.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai