வர வர அபிலாஷின் அதகளம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போதுதான் முகநூலில் அவரது இந்தப் பதிவைப் படித்தேன். அவருடைய அனுமதி இல்லாமலேயே இங்கே எடுத்துப் போடுகிறேன். எதாவது புக்கர் கிக்கர் கொடுத்தான்கள் என்றால் இதற்கான கட்டணத்தை அவரிடம் கொடுத்து விடுகிறேன். அதுவரை அபிலாஷுக்கு வெறும் நன்றி மட்டுமே. சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த பதிவு இது. சார்த்தர் இதைத்தான் living intensely என்கிறார். அபிலாஷ் சொல்லும் இன்பத்தை ஒத்திப் போடுதல் (postponing the pleasure) பற்றியும் முன்பு எழுதியிருக்கிறேன். ஒருமுறை – இருபது ஆண்டுகளுக்கு முன்னே – ஒரு கேரளத்துக் கல்லூரி மாணவன் எதற்காக எழுதுகிறீர்கள் என்று கேட்டபோது – பொதுவாக இம்மாதிரி கேள்விகளை எதிர்கொள்ளும்போது ஏதோ கோஸ்ட்ரைட்டர் வைத்துக் கொண்டு எழுதும் ஒரு ஆள் கூட்டத்தை எதிர்கொண்டால் எப்படிப் பேந்தப் பேந்த முழிப்பானோ அப்படி முழிப்பேன் – ஆனால் அன்றைய தினம் கண்ணிமைக்கும் நேரத்தில் – அதிலும் அந்நிய மொழி பேசும் இடம், நான் ஆங்கிலத்தில் பதில் கூறினேன் – i write as a bird flies என்று. எப்படித்தான் அப்படி சட்டென்று சொன்னேன் என்று இன்னமும் புரியவில்லை. அதெல்லாம் அபிலாஷின் இந்தப் பதிவைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது. இன்னமும் நிறைய எழுதலாம். காலை நான்கு மணியிலிருந்து நடைப் பயிற்சி கூட செய்யாமல் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இடையில் அராத்துவை அழைத்து நிர்வாணம் பற்றிப் பத்து நிமிடம் பேசினேன். (வழக்கமான நிர்வாணம் அல்ல. இது வேறு!)
அபிலாஷின் அதகளத்தைப் படித்து இன்புறுங்கள்:
எழுத்தாளனுக்கு என்ன வேண்டும்?
நேற்று நண்பர் பால் வீட்டுக்கு வந்திருந்த போது உரையாடலின் ஊடாக இந்த கேள்வி எழுந்தது. ஏன் எழுகிறோம்? பணத்துக்காகவா? புகழுக்காகவா?
என்னுடைய பதில் என்பது இரண்டும் அல்ல என்பது. ஏன் எழுதுகிறோம் என்னும் கேள்விக்கான பதிலை அடைய ஏன் வாழ்கிறோம் எனக் கேட்க வேண்டும்? நாம் வாழ்வதன் பிரதான நோக்கம் புகழோ பணமோ இன்பமோ அல்ல – அவை துணைக் காரணங்கள் மட்டுமே. வாழ்வதன் பிரதான இலக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக தீவிரமான வாழ்வது. தம் இருப்பை புலனனுபவங்களில், மொழியில் தொடர்ந்து உணர்வது. ஆனால் ஒரு சிக்கல் – இந்த ‘தீவிரம்’, ‘ஆழம்’, ‘இருப்பு’ ஆகியவை பூடகமான, விளக்குவதற்கு சிக்கலான சொற்கள்.
ஆகையால் மற்றொரு விளக்கத்தைப் பார்க்கலாம்.“நாம் வாழ்வதன் பிரதான நோக்கம் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவது.”என்ன இலக்கு? அது எதுவாகினும் இருக்கலாம், ஒரே அடிப்படை வரையறைதான் அதற்கு உள்ளது. அந்த இலக்கு சுலபத்தில் அடையக் கூடியதாக இருக்கலாகாது. அப்படி இருந்தால் அந்த நொடியே வாழ்க்கை ‘படுத்து’ விடும்.
வாழ்க்கையை இச்சையாலான ஒரு நீண்ட பாதையாக உருவகிக்கலாம். நாம் பிறந்த மறுநொடியே இச்சையால் ஆட்படுகிறோம். பாலுண்ணும் இச்சை. அடுத்து அன்னையின் உடம்புச்சூட்டுக்கான இச்சை. அடுத்து உலகை புலனுணரும் இச்சை. உலகின் அலகிலா இன்பங்களை இந்த உடலால் விளையாடியும் பொருட்களை போட்டுடைத்தும் பேசியும் ஒவ்வொன்றிலும் தன்னையே கண்டும், காண்கிற ஒவ்வொன்றும் முழுமையாகத் தான் அல்ல எனும் புரிதல் தரும் அதிருப்தி. அதிருப்தியை தீர்க்க மேலும் பல ஆட்டங்கள் ஆடும் இந்த வாழ்க்கை எனும் பெருவிளையாட்டு. ஒருவேளை பசியென்பது உண்டதும் ஒரேயடியாய் அடங்கி விடும் ஒன்று என இருந்தால் நாமெல்லாம் அன்னையிடம் இருந்து அந்த முதல் முலையூட்டலுடனே விலகி இருப்போம். இந்த உலகை அனுபவிக்கக் கிளம்பிய அடுத்த நொடியே போதும் என வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்போம். தீரா இச்சையே இந்த வாழ்க்கை. அது தீரா இச்சையாக இருப்பதாலே இந்த வாழ்க்கை இப்படி கட்டற்றதாக, ஒரு மகத்தான திளைப்பாக இருக்கிறது. இப்படியே உளவியலாளரும் பின்னமைப்பியல் சிந்தனையாளருமான லக்கான் விளக்குவார்.
இச்சைக்குட்படும் ஒரு பொருளை லக்கான் நம்மிடம் இருந்து தொடர்ந்து விலகிச் செல்லும், எப்போது நம் விரல் நுனிக்கு அருகே வந்து நம்மை சீண்டி விட்டு நாம் எம்பிப் பிடிக்க முயலும் போது மறைந்து தொலைவுக்கு சென்று கெக்கலித்து நம்மை மேலும் ஆசைப்பட வைக்கும் ஒன்று என்கிறார். காமசூத்ரா படித்தீர்கள் என்றால் நமது மரபு காமத்தை எப்படி கட்டற்றதாக ஆக்குவது, ஒரே சமயம் உடம்பாகவும் உடம்பு மட்டும் அல்லாததாகவும் ‘அது’ உள்ளதை, மானுடர் அதைப் புரிந்து அனுபவிக்கும் சடங்குகளை, வித்தைகளை, விதிமுறைகளை, நுட்பங்களை விளக்கி இருக்கிறார்கள் எனப் புரியும். காமம் என்பது உடம்பால் கட்டியெழுப்பப்படும் ஒரு மாயவிளையாட்டு. அடைந்த மறுநொடியே இல்லாமலாகிடும் பேரின்பம். அப்படி இல்லாமலாகுவதாலே மகத்தான அனுபவமாக அது நீடிக்கிறது. லக்கானும் இச்சையை கிட்டத்தட்ட இப்படித்தான் விளக்கினார்.
இந்த நோக்கில் நம் பதிலை மேலும் கூர்மையாக வடிவமைக்கலாம்:“நாம் வாழ்வதன் பிரதான நோக்கம் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையாது தள்ளிப்போட்டபடி செல்வது.”பணம் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு இலக்காக இருக்க முடியாது. மார்க் மேன்ஸன் தனது Subtle Art of Not Giving a Fuck நூலில் இதைப் பற்றி சொல்லும் போது அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற பணம் படைத்தவர்களுக்கு கூடுதலாக சேரும் பணம் பயனற்றதாகிறது என்கிறார். இதை முதலாளித்துவ அமைப்புகள் அறியும். அதனாலே அவை நுகர்வுக் கலாச்சாரத்தை உருவாக்கி, இச்சையை கட்டமைக்கிறார்கள், அதன் பிறகு இச்சிக்கப்படும் பொருளை உருவாக்குகிறார்கள். சிக்ஸ் பேக் உடல் என்பது ஒரு உதாரணம். சிக்ஸ் பேக் உடல்கள் தொடர்ந்து ஊடகங்களில் விளம்பரப்படுத்திய பின்னரே உடற்பயிற்சி உபகரணங்கள், ஜிம், பயிற்சி முறைகள், அதற்கான புத்தகங்கள், காணொளிகள் நம்மிடம் விற்கப்படுகின்றன. இந்த உபரியான இச்சைகளை நாடி ஓடியே நமது கணிசமான வாழ்க்கை வீணாகி விடுகிறது. இந்த இச்சைகளை அடைந்த பின்னரும் திருப்தியை விட அதிருப்தியே நமக்கு ஏற்படும் என மேன்ஸன் கூறுகிறார். ஆக, ஒரு அளவுக்குப் பிறகு நமக்கு பணத்தினால் பயனில்லை. சொல்லப் போனால் எந்த அளவுக்கு வேண்டும் என்பதை குறைத்துக்கொண்டே வர முடிந்தால் நாம் கூடுதலாக மகிழ்ச்சியாக இருப்போம் என்பதே உண்மை.
இணையின் உடலை ‘அடைந்த’ பிறகு அது மாயமாக ‘மறைந்து’ போகிறது. இதனாலே அதைத் தொடர்ந்து அவளிடம் / அவனிடம் தேடுகிறோம். ஆனால் ஒரு காரை வாங்கினால் அது ‘மறைந்து’ போகாது. அதன் ‘இருப்பு’ நம்மைத் தொடர்ந்து தொந்தரவு பண்ணும். அதை விற்று ஒழித்தல் தான் உண்டு. அதனாலே நாம் ஒன்றை வாங்கினதும் அதிருப்தியும் திருப்தியாகவும் ஒரு கலவையான உணர்வை அடைகிறோம். காலமாக ஆக அப்பொருள் மீதான அதிருப்தியே நீடிக்கிறது. இது காரின் பிரச்சனையல்ல, இச்சையின் பிரச்சனையே.அடுத்து புகழ் – இது தீர்மானிக்கப்பட்ட எல்லையைக் கொண்டது. ஒரு சினிமா நடிகர் பிரபலமானதும் அவரது பிரபலம் முடிந்து போகிறது. அஜித், விஜய் கடந்த பத்து வருடங்களிலேயே அந்த எல்லையைத் தொட்டு விட்டார்கள். அதற்கு மேல் அவர்கள் பெருமுதலாளிகளுக்கு பணம் ஈட்டிக்கொடுக்கும் ஒரு எந்திரமாகிறார்கள். நடிப்பில், சினிமாவில் ஆர்வம் குறைகிறது. அலுப்பு ஏற்படுகிறது. அஜித் ஆரம்பத்தில் இருந்தே ரேஸிங், புகைப்படக் கலை என தன்னால் புகழை அதிகம் ஈட்ட முடியாத விசயங்களில் ஈடுபடுவது இதனாலே.
தமிழில் ஒரு எழுத்தாளனால் பெற முடிகிற புகழும் இத்தகையதே – சாரு அல்லது ஜெயமோகன் அல்லது மனுஷ்யபுத்திரனால் இப்போதுள்ளதை விட அதிகப் புகழை இலக்கிய வாசகர்களிடம் இனிப் பெற முடியாது. ஒருவேளை மலையாளத்தில் இருந்தால் முடியும். ஆனால் தமிழ்க் கேணியில் புகழை இதற்கு மேல் இறைக்க முடியாது.
ஆக சுலபத்தில் அடைய முடிகிற, தீர்ந்து விடாத இலக்காக இருக்க வேண்டும் எனும் சவாலில் பணமோ புகழோ தோற்றுவிடுகின்றன.பிறகு எதற்கு எழுத வேண்டும்?
1) புதுப்புது சவால்களை எழுத்துக்குள் அமைத்துக்கொண்டு தொடர்ந்து தன்னையே சவாலுக்கு உட்படுத்துவதற்காக.
2) சமூக மேம்பாட்டுக்கு தொடர்ந்து பங்களிப்பதற்காக – சமூகத்தில் சமத்துவதற்கு, நீதிக்கான குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்காக. (நீதி என்பது ஒருபோதும் சாத்தியமாகாத ஒன்றல்லவா?)
3) கடைசியாக, அன்னையிடம் முலையுண்ணும் நிலையில் இருந்து பின்னுக்குச் சென்று கருவறைக்கு, அதன் இருமையில்லாத இருண்மைக்குள் மீண்டும் சரணடைவதற்கு.
இதற்காகவே எழுதுங்கள்!
-அபிலாஷ்