பகவான் கிருஷ்ணரும் பரமசிவனும் (ஒரு குட்டிக் கதை)

அது ஏன் கிருஷ்ணருக்கு ர் விகுதி, அடுத்ததுக்கு ன் விகுதி, ஏன் பெயர்களில் கூட இந்தப் பாகுபாடு என்ற ஐயம் உங்களுக்கு எழலாம்.  பரமசிவனும் கிருஷ்ணரும் இரண்டு அவதாரங்கள்.  நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவே இருந்தாலும் இந்த அவதார விஷயங்களில் நம்பிக்கை கொண்டவராக இருக்க சாத்தியம் இல்லை.  அப்படிப்பட்ட ஆட்களெல்லாம் விவேகானந்தரோடு முடிந்து போய் விட்டார்கள்.  ஆனால் நான் அவதாரத்தை நம்புகிறேன்.  பரமசிவன் சாட்சாத் பரமசிவனின் அவதாரம்.  கிருஷ்ணர் சாட்சாத் கிருஷ்ணரின் அவதாரம்.  கிருஷ்ணரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.  அவரது தகப்பனார் வாசுதேவனை நன்றாகத் தெரியும்.   அது ஏன் வாசுதேவனுக்கு மட்டும் ன் விகுதியா?  ஏன் வாசுதேவர் என்று போடலாமே?  ம்ஹும்.  தேவையில்லை.  வாசுதேவன் காலமாகி விட்டார்.  அப்படியே உயிருடன் இருந்திருந்தாலும் மற்ற நாரோயில்காரர்கள் மாதிரி கேஸெல்லாம் போட மாட்டார்.  நீ ரொம்பப் பண்றே, இப்படியெல்லாம் ர் ன்  விகுதியையெல்லாம் நீ அநாவசியமாகப் பெரிது படுத்துகிறாய் என்று நீங்கள் என்னைச் சாடலாம்.  அப்படியானால் நீங்கள் ஜென்ரல் நாலட்ஜில் வீக் என்று அர்த்தம்.  சமீபத்தில் கி.ரா. மீது ஒருவர் கேஸ் போட்டு விட்டார்.  என்ன பிரச்சினை தெரியுமா?  எல்லாம் இந்த ன் ர் பிரச்சினைதான்?  கி.ரா.விடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன?  நீங்கள் கிராமவாசியாக இருந்தும், இத்தனை கிராமீயக் கதைகளை எழுதியும் ஏன் தலித்துகளைப் பற்றி ஒரு கதையும் எழுதவில்லை?  என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தால் “என்னுடைய எல்லா கதைகளுமே தலித் விடுதலைக்கான கதைகள்தான்” என்று பதில் சொல்லியிருப்பேன்.  மைலாப்பூரில் பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்து இதைக் கூட கற்றுக் கொள்ளாவிட்டால் என்ன?  கி.ரா.வுக்கு மைலாப்பூர் தெரியாது.  வெகுளி.  வெள்ளந்தியாக பதில் சொன்னார்.  “அவன் கதை எனக்குத் தெரிந்தாலும் அவன் மொழி எனக்குத் தெரியாதே?” கிட்டத்தட்ட இப்படித்தான் சொன்னார் கி.ரா.  உடனே பாய்ந்தது வழக்கு.  கி.ரா. தலித்துகளை அவன் என்று சொல்லி அவமதித்து விட்டார்.  கி.ரா.வுக்கு நூறு வயது.  எப்படிப்பட்ட மன உளைச்சல், உடல் அவதி என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  எல்லாம் இந்த ன் என்ற ஒற்றை எழுத்தால் வந்த வினை! எனவே நாம் இந்த ன் விஷயத்தில் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும். 

சரி, என்னதான் சொல்ல வருகிறாய், சுற்றி வளைக்காதே என்கிறீர்களா?  மேட்டர் இதுதான்.  எனக்குக் கேஸ் என்றால் பயம்.  இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியாக இருந்து கொண்டு நீயெல்லாம் எப்படி ஜம்பமாகப் பேசுகிறாய் என்று உங்களுக்கு அடுத்த கேள்வி வரும்.  சின்ன வயதில் யோசித்திருக்கிறேன்,  எக்காரணங் கொண்டும் கோர்ட் வாசல் மிதிக்கக் கூடாது என்று.  ஆனால் டெஸ்டினி வேறு விதமாக நினைத்தது.  ஒருமுறை குடும்ப கோர்ட்.  இன்னொரு முறை, கிரிமனல் கோர்ட்.  கிரிமினல் என்ற வார்த்தையைக் கேட்டதுமே உங்கள் அடி வயிற்றில் கொஞ்சம் அழற்சி வருகிறதல்லவா?  இல்லை என்று சொன்னால் நீங்கள் பொய்யர்.  அல்லது, விஷயம் தெரியாதவர். 

ஒருநாள் பெங்களூர் கோர்ட்டில் நின்று கொண்டிருக்கிறேன்.  உட்காரவும் பயம்.  அப்படியே இல்லை என்றாலும் உட்காரவும் இடம் இல்லை.  அத்தனை கூட்டம்.  ஜாமீனுக்காகக் காத்திருக்கிறேன்.  ஜாமீன் மறுக்கப்பட்டால் ஜெயில்.  மறுநாள் துரதிர்ஷ்டவசமாக சனிக்கிழமை.  ஆக, திங்கள் கிழமை ஜாமீன் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் மூன்று இரவுகள் மொழி தெரியாத ஜெயிலில் கிடக்க வேண்டும்.  நினைத்தாலே நெஞ்சு வலித்தது.  ஜெயில் என்ன அப்படி ஒரு வதைக் கூடமா?  காந்தி ஜெயிலுக்குப் போனதில்லையா?  வைகோ போனதில்லையா?  வைகோவுக்கு நார்மல் லைஃப் அலுப்புத் தட்டினால் ஒன்று, நடைப் பயணம் கிளம்புவார்.  தமிழ்நாடு பூராவும்.  இல்லாவிட்டால், தமிழ்நாடு தமிழருக்கே என்பது போல் எதையாவது பேசி இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டு இரண்டு ஆண்டுகள் ஜெயிலில் இருப்பார்.  அந்த மாதிரிக் குற்றத்துக்கெல்லாம் ஜாமீன் கிடையாதாம்.  இது குறித்து ஒரு தீவிர வைகோ எதிர்ப்பாளர் – ரொம்ப மோசமான ஆள் அவர் –  என்ன சொல்வார் தெரியுமா?  வைகோவுக்கு பீப்பி ஜாஸ்தி ஆகி விட்டது.  அதனால் அவர் சில காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர் அட்வைஸ் செய்திருக்கிறார்.  அதுதான் விஷயம்.  சே.  பெர்வர்ட் என்று திட்டினேன்.  இதெல்லாம் ஷியர் பெர்வர்ஷன் இல்லாமல் வேறு என்ன?  ஒரு தேசத் தலைவர் இப்படியெல்லாமா செய்வார்?  ஒரு மட்டு மரியாதை வேண்டாமா?

ம்… எங்கே விட்டேன்.  இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேச்சு எங்கெங்கோ ஓடி விடுகிறது.  ம்… ஜெயில்.  வைகோவுக்கு ஜாலிதான்.  ஜெயிலில் அவர் ஷட்டில்காக் ஆடுவதெல்லாம் பத்திரிகையில் வரும்.  ஆனால் நான் என்ன வைகோவா?  தொலைத்துக் கட்டி விடுவார்கள் சக கைதிகள்.  எனக்கு ஜெயில் என்றாலே தமிழ் சினிமா ஜெயில்கள்தான் ஞாபகம் வருகின்றன.  பிறகு என்ன வரும்?  நமக்கு எல்லாமே சினிமா மூலம்தானே வந்து கொண்டிருக்கின்றன?  ஆனால் அதையெல்லாம் தூக்கி அடிக்கக் கூடிய ஒரு சம்பவம் மரியோ பர்கஸ் யோசாவின் The Neighbourhood நாவலில் வருகிறது.  வேண்டாம், அதெல்லாம் நமக்குத் தேவையில்லாத சங்கதி.  இதை நான் குட்டிக் கதை என்று சொல்லியிருக்கிறேன்.  குட்டியாகச் சொல்ல வேண்டும்.  நாம் இங்கே பெங்களூர் கோர்ட்டில் நிற்கிறோம்.  பயப்படாதீர்கள்.  நாம் என்றால் நான்.  அது என்னய்யா கிராமர் என்கிறீர்களா?  எழுத்தாளன் என்றால் அப்படித்தான்.  மீண்டும் ன் விகுதி.  இங்கே பெண் எழுத்தாளர்கள் கோபித்துக் கொள்வார்கள்.  ஆனாலும் பரவாயில்லை.  பெண்கள் இன்னும் அந்த அளவுக்கு அதிகாரத்துக்கு வரவில்லை.  அதனால் அதுவரை நாம் மொழியில் விளையாடலாம்.  நாம் கோர்ட்டில் நிற்கிறோமாவது பரவாயில்லை.  இன்னொரு எழுத்தாளன்.  அவனிடம் நீங்கள் பிறந்தது எப்போது என்பது கேள்வி.  இப்படியெல்லாம்தான் எழுத்தாளரைப் பேட்டி எடுப்பார்கள்.  அதுவே தமிழ் இலக்கிய மரபு.  நான் 1950-இல் களியாக்காவிளையில் பிறக்கிறேன் என்கிறான் எழுத்தாளன்.  இத்தனைக்கும் எழுத்தாளன் தமிழ்ப் பேராசிரியன்.  எனவே கிராமர் தெரியாது என்றும் சொல்ல முடியாது.   இந்தப் பேட்டி வெளிவந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பிறக்கிறேன் என்பதை என்னால் மறக்கவே முடியவில்லை, பார்த்துக் கொள்ளுங்கள்.  என்னது, 1950இல் பிறக்கிறேன்.  இன்னமும் எனக்கு அதன் புரியவில்லை.  நான் 1950-இல் பிறந்தேன் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?  ஏன் இலக்கணப் பிழையோடு 1950-இல் பிறக்கிறேன் என்றீர்கள்?  ஆளைப் பார்த்தால் கேட்க வேண்டும் என்றுதான் இருக்கிறேன்.  முப்பது ஆண்டுகளாக ஆளை நேரில் சந்திக்க முடியவில்லை.  70 வயது ஆகிறது.  சரி விடுங்கள்.  கதை இப்படியே இழுத்துக் கொண்டு போகிறது.  கோர்ட்டில் நிற்கிறோம்.  நிற்கிறோம், நிற்கிறோம்… நின்று கொண்டே இருக்கிறோம்.  லஞ்ச் பிரேக் கூட விட்டாயிற்று.  ஜாமீன் கிடைக்கவில்லை.  வக்கீல் அவ்வப்போது வந்து வந்து ஆறுதலும் தேறுதலும் சொல்லி விட்டுப் போகிறார்.  இதற்கிடையில் ஜாமீன் தொகை வேறு 3000 ரூபாயை அபராதப் பிரிவில் செலுத்தி ரசீதையும் பெற்று வைத்திருக்கிறோம். 

மூன்று மணி நேரம் நின்றது கூட பெரிசில்லை.  கரெண்ட் வேறு வந்து வந்து போனது.  அரை மணி நேரம் இருக்கும்.  பிறகு போய் விடும்.  பிறகு வரும்.  பிறகு போய் விடும்.  ஜட்ஜுக்கு வேர்த்து ஊற்றியது.  கைக்குட்டையை எடுத்து எடுத்துத் துடைத்துக் கொள்கிறார்.  எதிரே அமர்ந்திருக்கும் டைப்பிஸ்டிடம் விஷயங்களை டிக்டேட் செய்கிறார்.  இந்த சூழ்நிலையில் ஒரு கடுப்பில் எனக்கு ஜாமீன் கொடுக்காமல் போய் விட்டால்?  அதிலும் பரமசிவன் போட்ட கேஸ்.  பரமசிவனை அவமதித்து எழுதிவிட்டேனாம்.  அதுதான் கேஸ்.  அதுவும் சிவில் கேஸ் அல்ல. கிரிமினல் கேஸ். 

இதை நான் ஐநூறு பக்கங்களுக்கு நீட்ட முடியும்.  இது குட்டிக் கதை.  மேலும் பின்நவீனத்துவக் காலம்.  நீங்களேதான் கதையை விரித்து விரித்து எழுதிக் கொள்ள வேண்டும்.  சென்னையிலிருந்து பெங்களூருக்கு எட்டு ஆண்டுகள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ரயிலிலும் விமானத்திலுமாக அலைந்து கொண்டிருந்தேன்.  இதெல்லாம் ஒற்றை வாக்கியத்தில் எழுதி விடலாம்.  அலைந்து பார்த்தால் தெரியும்.  இப்போது பரமசிவன் கைலாயத்தில்  தவத்தில் இருப்பதால் இத்தனை தைரியமாக எழுதுகிறேன்.  இல்லாவிட்டால் இதைக் கூட எழுதியிருக்க முடியாது.  ஒரு கேஸ் அல்ல.  மூன்று கேஸ்.  மூன்றும் கிரிமினல்.  முதலில் ஒரு கேஸில்தான் தொடங்கியது.  அதைப் பற்றி நான் ஒரு பத்திரிகையில் எழுதினேன்.  உடனே பாய்ந்தது அடுத்த கேஸ்.  அது என்னவோ ஒரு கேஸ் நடந்து கொண்டிருக்கும்போது அதைப் பற்றி எழுதக் கூடாதாமே? ஆக, இப்படியே மூன்று கேஸ் ஆகி விட்டது.  ஒன்று மாற்றி ஒன்று.  தாவு தீர்ந்து விட்டது.  இதுவே பெருமாள் முருகனாக இருந்தால் விஷயம் ஐ.நா. சபை வரை போய் இருக்கும்.  அதற்கு கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் உதவி வேண்டும்.  இந்துத்துவ அமைப்பு கொலை மிரட்டல் விட வேண்டும்.  கம்யூனிஸ்ட் அதை எதிர்த்து நமக்கு சார்பாக கோர்ட்டில் வாதாட வேண்டும்.  எனக்கு சார்பாக வாதாட முன்வந்தது யார் தெரியுமா?  முருகனுக்குக் கொலை மிரட்டல் விட்ட அதே இந்து அமைப்பு.  ஐயா, சாமிகளா, நீங்கள் என்னை எதிர்த்தால்தான் எனக்கு பலம்.  சப்போர்ட் பண்ணினால் என் நண்பன் அபிலாஷ் சந்திரனே என்னைக் குழி தோண்டிப் புதைத்து விடுவான், நகர்ந்து போங்கள் அந்தப் பக்கம் என்று சொல்லி ஓடி வந்து விட்டேன்.   அது என்ன விவகாரம் தெரியுமா?  பரமசிவனுக்கும் மற்ற கடவுள்களுக்குமான உள் சண்டை.  பாகிஸ்தான் இந்தியா சண்டையின் போது இரவு நேரத்தில் ஒன்றுக்கு அடிக்க வீட்டை விட்டு வெளியே வரும் பொடியன்களைத் தீவிரவாதி என்று ராணுவம் சுட்டு விடும்.  போயும் போயும் அந்தப் பொடியன் மாதிரியா நாம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்றுதான் ஓடியே வந்து விட்டேன். 

எட்டு வருடம் மூன்று கிரிமினல் கேஸ்.  எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?  லட்சங்கள் ஐயா, லட்சங்கள்.  அதுவும் பரமசிவன் பெங்களூரின் பெரிய பெரிய லாயரை வைத்து ஆடினார்.  நானோ ஒரு தூசு.  அது மட்டும் அல்ல.  முதலில் எனக்கு லாயரே கிடைக்கவில்லை.  யாரைப் போய்க் கேட்டாலும் பரமசிவனை எதிர்த்து வாதாட முடியாது என்று கை விரித்து விட்டார்கள்.  அதற்கும் காசு கொடுத்து முடக்க முடியுமாமே?  இதை எழுதித்தான் இரண்டாவது கிரிமினல் கேஸ் ஆயிற்று.  அதனால் இத்தோடு மூடிக் கொள்கிறேன்.

ஏதோ இந்து மதத்தில் தவம் என்று ஒரு விஷயம் இருக்கிறதோ பிழைத்தேனோ, இல்லாவிட்டால் இப்போது இந்தக் குட்டிக் கதைக்கும் ஒரு கேஸைப் போட்டிருப்பார் பரமசிவன். 

இப்போதெல்லாம் ஒருவருக்கொருவர் கேஸ் போடுவது ஃபேஷனாகி விட்டது.  ஒருத்தரைப் பிடிக்கவில்லையா, போடு கேஸை.  இதில் தண்டனையே என்ன தெரியுமா?  நீங்கள் பாட்டுக்கு ஊட்டியில் உட்கார்ந்து கொண்டு நாரோயில்காரர் மேல் கேஸைப் போட்டால் அந்த நாரோயில்வாசி ஊட்டிக்கும் நாரோயிலுக்கும் அலையாய் அலைய வேண்டும்.  இது மட்டும் கற்பனை அல்ல.  நிஜம்.  நாரோயில்காரர் ஜெயமோகன்.  ஏன் இங்கே மட்டும் நிஜப் பெயரைச் சொல்கிறேன் என்றால், ஜெயமோகன் என் மீது ஒருக்காலும் கேஸ் போட மாட்டார்.  ஊட்டியில் வசிக்கும் ஒரு அறிஞர் ஜெ. மீது கேஸைப் போட ஜெ. கொஞ்ச நாள் ஊட்டிக்கும் நாரோயிலுக்குமாக அலைந்தார்.  அறிஞர் என்பது தமிழ்நாட்டில் ரொம்ப அரிதான விஷயம்தான்.  அறிஞர் என்றால் அது ஒரே ஒரு அறிஞர்தான்.  அவரை உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  இந்த ஊட்டி அறிஞர் அறிஞர் என்றே எனக்கு ஜெ. எழுதித்தான் தெரியும்.  ஜெ. சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.  விஷயம் தெரியாமல் சொல்ல மாட்டார்.  ஆனால் கடைசி கடைசியில் இந்த கேஸ் என்ற விஷச் சுழலில் ஜெயமோகனும் மாட்டி அவரும் ஒரு சிலர் மீது கேஸ் போடும் சூழ்நிலை வந்ததை காலத்தின் கோளாறு என்றுதான் சொல்ல வேண்டும்.    நீங்களுமா ஜெயமோகன் என்று ஜெயமோகனுக்கே போன் போட்டுக் கேட்டேன்.  அவர் காரணங்களை எடுத்துச் சொன்னார்.  நியாயமாகவே தெரிந்தது.  ஆனால் பேசி முடித்ததும் ஜெ. ஒரு நாத்திகர் போல என்று நினைத்துக் கொண்டேன்.  நம் மீது ஆயிரத்தெட்டு பேர் (இந்த இடத்தில் நம் என்பது ஜெ.வை) புகார் சொல்கிறான்.  தீது பேசுகிறான்.  எல்லார் மீதும் கேஸா போட்டுக் கொண்டு இருக்க முடியும்?  பெர்னார்ட் ஷா சொன்னதுதான் சரி.  Never wrestle with pigs.  You both get dirty and the pigs like it.  இதில் பன்றிகள் அதை விரும்புகின்றன என்பதுதான் முக்கியம்.  ஆக, பன்றிகளுக்கான விருப்பத்தை நாம் பூர்த்தி செய்து விடுகிறோம்.  அந்த வகையில் சண்டையில் நாம் ஜெயித்தாலும் உண்மையில் அது தோல்விதான்.  ஏனென்றால், பன்றிகளின் விருப்பத்தை நாம் நிறைவேற்றி விடுகிறோமே?

சரி, கிருஷ்ணர் கதைக்கு வருவோம்.  கிருஷ்ணரின் தந்தை வாசுதேவனுக்கு சாமிநாதன் என்று ஒரு அத்யந்த நண்பர்.  நெருக்கம் என்றால் அப்படி ஒரு நெருக்கம்.  நகமும் சதையும் போல.  வாசுவின் மரணத்துக்குப் பிறகு கிருஷ்ணர் சாமிநாதனின் மீது ஒரு கேஸ் போட்டார்.  சாமிநாதனோ முதியவர்.  காலும் சரியில்லை. கம்பு ஊன்றிதான் நடக்க வேண்டும்.  அட, நாம் வாசுவைப் பார்க்க நாரோயில் போகும்போதெல்லாம் இந்தக் கிருஷ்ணன் குஞ்சு ட்ராயர் கூடப் போடாமல் வெண்ணைய் தின்று கொண்டிருப்பானே, இவன் போய் நம் மீது கேஸ் போட்டு விட்டானே என்று சாமிநாதனுக்கு ஒரே அளப்பறை.  சாமுக்கு ஒன்று புரியவில்லை.  எல்லாம் கர்மா.  நீர் போன ஜென்மாவில் யாரைக் கேஸ் போட்டுப் படுத்தினீரோ.  மேலும், பகவான் கிருஷ்ணரின் லீலா விநோதத்தையெல்லாம் பழித்துக் கொண்டிருக்கக் கூடாது.

இப்படியெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யலாம் கர்மா பர்மா என்று.  தனக்கு வந்தால் தெரியும் வயத்துவலி. இப்போதுதான் நான் புலிவாலைப் பிடிக்கப் போகிறேன்.  இந்தக் குட்டிக் கதையின் முடிவுக்கு வரப் போகிறோம்.  அந்த கிருஷ்ண லீலைகளில் ஒன்று, பப்ளிஷிங்.  அவருடைய புத்தகம் ஒன்றை ஒரு தினசரியில் கிழிகிழியென்று கிழித்துத் தோரணம் கட்டி விட்டார்கள்.  உடனே அந்த தினசரிக்காரர் ஒருவர் பதிலுக்கு பகவானைக் கிழித்துத் தோரணம்.  அடப் பாவி, இந்தத் தம்பிக்கு பகவான் கிருஷ்ணர் பற்றி விஷயம் தெரியாதா?  இல்லாவிட்டால் நான் பெங்களூர் போய் வந்தது போல் மாதாமாதம் நாரோயில் போய் வரத் தயாராகி விட்டாரா?  என்ன பயங்கரம் இது!

இதோடு முடிந்திருந்தால் இந்தக் கதையையே எழுதியிருக்க மாட்டேன்.  ஒருத்தர் என்ன பண்ணினார், நீங்கள் தினசரிக்காரரை ஆதரித்து எழுத வேண்டும் என்றார்.  ஐயோ, நான் கேஸுக்குப் பயந்த ஆள்.  மட்டுமல்லாமல் நான் பகவான் கிருஷ்ணரின் தீவிர விசிறி.  அது பகவானுக்கே தெரியாது என்ற போதிலும் நான் அவருடைய விசிறிதான்.  வாசுதேவனுக்கும் எனக்கும்தான் கொஞ்சம் மனத்தாங்கலே தவிர கிருஷ்ணரோடு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  பிரச்சினை எல்லாமே இந்த எழவெடுத்த எழுத்தாளர்களோடுதானே?  பகவானும் தகப்பனாரைப் போல் நாவல் எழுதியிருந்தால் இதே நேரம் ஜென்மப் பகையாகியிருக்கும்.  (எப்படியும் நான் திட்டித்தான் எழுதுவேன்.  கிருஷ்ணர் ஜென்மப் பகை லிஸ்டில் சேர்த்திருப்பார்.  ஆனால் கிருஷ்ணர் எழுத்தாளர் இல்லையே, பதிப்பாளர்தானே?  எனக்குப் பதிப்பாளர்களோடும் பிரச்சினை உண்டு.  எக்கச்சக்கமான பிழை விடுவார்கள்.  திட்டி எழுதுவேன்.  கடுப்பாகி விடுவார்கள்.  ஆனால் அதிர்ஷ்டவசமாக பகவானின் பதிப்பகத்தில் அந்தப் பிரச்சினையும் இல்லை.  இந்த ஒரே காரணத்தினால்தான் நான் பகவானுக்கு விசிறி ஆனேன் என்றால் மற்ற பதிப்பாளர்களின் கதியை நினைத்துப் பாருங்கள்.  Of course க்ரியா, ஸீரோ டிகிரி போன்ற விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.  (எதுக்கு வம்பு?  ஒரு விஷயம் எழுதினால் ஒம்போது விஷயம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்கள்!)

இப்படி நான் பகவானின் விசிறியாக இருந்தாலும் பகவானிடம் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம், இந்தக் கேஸ் விஷயம்.  கண்டமானிக்குக் கேஸைப் போட்டுத் தள்ளுவது.  ஆனால் பகவானைச் சொல்லியும் குற்றமில்லை.  அது நாரோயில் ஜீனிலேயே இருக்கிறது.  என் நண்பர் ஒருத்தர் நாரோயில்.  அவருடைய தம்பியே அவர் மீது கேஸ் போட்டு விட்டார்.  என்ன நண்பா இது என்று மிரண்டேன்.  அது ஒன்னும் இல்லப்பா, எங்க சித்தப்பா எங்க அப்பா மேல கேஸ் போட்டார்.  இப்போ தம்பியும் அதையே பண்றான். 

சரி, தினசரிக்காரர் பகவானின் புத்தகத்தைக் கிழித்தார்.  பகவான் இந்த முறை கேஸ் போடாமல் தினசரிக்காரரைக் கிழித்தார்.  இதில் நான் எங்கே வந்தேன்?  என் நண்பர் ஒர்த்தர் குறுக்கே புகுந்து, பகவானின் பிரச்சினை, இன்னொரு கன்னத்திலும் வேண்டும் என்பதுதான்.  என்ன அது?  முத்தம்.  அந்த தினசரி பகவானின் பதிப்பகத்தின் சென்னை பிராஞ்ச் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு காலத்தில் இயங்கி வந்தது.  அப்போது தினசரியில் பகவான் புத்தர் பணி புரிந்து கொண்டிருந்த சமயம்.  புத்தரும் கிருஷ்ணரும் நண்பர்கள்.  ரெண்டு பேருமே பகவான்கள் இல்லையா?  இப்போது புத்தர் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குப் போய் விட்டார்.  தினசரியில் கிருஷ்ணரின் புத்தகத்துக்கு விமர்சனம் வந்து விட்டது.  பிரச்சினை என்ன தெரியுமா?  இந்தக் கன்னத்துல பத்து குடுத்தே.  அடுத்த கன்னத்துல அஞ்சு தானே குடுத்தே?  ஏன் மீதி அஞ்சைக் குடுக்கலே?  அவ்ளோதான். 

நண்பா, நீ எழுதினதை ப்ளேஜியரைஸ் செஞ்சு எழுதிட்டேன்.  கோச்சுக்காதே.  கேஸ் போட்ராதே.  மறுபடியும் என்னால் பெங்களூருக்கு அலைய முடியாது.  ஒருவேளை போட்டால் உன் வீட்டில்தான் வந்து தங்குவேன்.  பார்த்துக்கோ.  ஏன் உன் பெயரை அமுக்கி விட்டேன் என்றால், உன் பெயரை வைத்தே நான் இன்னாரைத்தான் குறிப்பிடுகிறேன் என்று போட்டு லாயர் என்னை நாரோயிலுக்கு இழுத்து விடுவார்.  அதனால் இந்தப் பிளேஜியரிஸத்தை மன்னித்து விடு நண்பா.