167. கலைஞனின் உன்மத்தம்

அருட்செல்வப் பேரரசன் மொழிபெயர்த்த மஹாபாரதத்துக்கு ஒரு வெளியீட்டு விழா வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  சில நண்பர்கள் கூட இருந்தனர்.  நான் எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவதுதான் என் நண்பர்களின் வழக்கம்.  அந்த நண்பர் குழாமில் அப்போது இன்னொரு நண்பரும் இருந்தார்.  அவர் தீவிர இந்துத்துவச் சார்பு உள்ளவர்.  என்றாலும் மற்ற விஷயங்களில் நல்ல ஞானம் உள்ளவர் என்பதால் அரசியல் தவிர்த்து மற்றவற்றைப் பேசிக் கொண்டிருப்பேன்.  சுவாரசியமாகப் பேசுபவர்.  விஷயதாரி.  சமய இலக்கியம், பழைய கால விஷயங்கள் எல்லாம் கேட்டுக் கொள்ளலாம்.  வெளியீட்டு விழா பற்றியே நண்பர்கள் சாதகமாகப் பேசாத நிலையில் பேச்சை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி ஜெயமோகனை அழைக்கலாம் என்றேன்.  வெண்முரசு எழுதியவர் என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.  நான் சொல்லி முடிக்கக் கூட இல்லை, அந்த இந்துத்துவ நண்பர் ஜெயமோகன் வேண்டாம், அவர் கம்யூனிஸ்ட், நாம் வேளுக்குடி கிருஷ்ணனை அழைக்கலாம் என்றார்.  நான் பேச்சை மாற்றி விட்டேன்.  இத்தனைக்கும் அந்த நண்பர் நவீன இலக்கியப் பரிச்சயமும் உள்ளவர்தான்.

சராசரி மனிதர்களைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்றாலே அவன் சமூகத்துக்கு விரோதமானவன், சமூகத்துக்கு விரோதமாகச் சிந்திப்பவன் என்ற பிம்பமே இருந்து வருகிறது.  இதில் வருத்தப்படுவதற்கோ ஆச்சரியப்படுவதற்கோ ஒன்றுமில்லை.  எப்பேர்ப்பட்ட எழுத்தாளனாக இருந்தாலும் அவன் status quoவை எதிர்ப்பவன் தான், அறிந்தோ அறியாமலோ.  அவர் அதைச் சொன்னபோது ஒரு எழுத்தாளனுக்குக் கிடைத்த பாராட்டாகத்தான் கொண்டேன்.  ஜெயமோகனுக்கே அந்தப் பெயர் என்றால் எனக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்து சிரித்துக் கொண்டேன்.

சராசரி மனிதர்கள் அப்படிச் சொல்லலாம்.  ஆனால் அறிஞர்கள் அப்படிப் பேசக் கூடாது.  ஒருபோதும். அறிஞர் என்றால் என்ன?  பல துறைகளிலும் ஞானமுள்ளவர்.  நாம் பத்து ஆயுள் எடுத்தாலும் படிக்க முடியாததை, தெரிந்து கொள்ள முடியாததை ஒரே ஆயுளில் படித்தவர்.  நம் சந்தேகங்களைத் தீர்ப்பவர்.  அதனால் அறிஞர் என்றால் சகலகலா வல்லவர் என்று அர்த்தமல்ல.  ஒரு அறிஞருக்கு வான சாஸ்திரம் தெரியாமல் இருக்கலாம்.  ஆனால் வான சாஸ்திரம் பற்றிய ஒரு சிறிய திறப்பு அவரிடம் இருக்கும்.  அது எதைக் குறித்தது, அதில் பயணித்தால் அது எங்கே போய் முடியும் என்ற புள்ளியை அவர் அறிவார். சகல துறைகளிலும் ஒரு நுண்ணுணர்வு கொண்டிருத்தல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.   

தமிழில் அப்படிப்பட்ட அறிஞனாக பாரதி இருந்தார்.  அவருக்குப் பிறகான வாசிப்பில் அப்படிப்பட்ட ஒரு அறிஞனாக என்னால் புதுமைப்பித்தனை மட்டுமே பார்க்க முடிகிறது.  ஆனால் அவருக்குக் கூட சங்கீதம் பற்றி அட்சரம் கூடத் தெரியவில்லை. அதற்குப் பிறகு க.நா.சு.  அதற்குப் பிறகு ஒருவர் அல்ல, இருவர்.  ஜெயமோகனும், ராமகிருஷ்ணனும்.  ஜெயமோகன் புதுமைப்பித்தன் அளவுக்கு அல்ல; சங்கீதம் பற்றி எழுதியிருக்கிறார்.  Cradle of Filth குழு பற்றி நான் அவரிடம் கேட்டிருந்த சந்தேகம் பற்றி அவர் எழுதியிருந்த விளக்கத்தை என்னால் மறக்கவே முடியாது.  இதைத்தான் நுண்ணுணர்வு என்கிறேன்.  சங்கீதமே தெரியாவிட்டாலும் எல்லா கலைகளைப் பற்றியுமான ஒரு அடிப்படை நுண்ணுணர்வு அது.  மேலும், எம்.எஸ். பற்றி நான் ஆய்வு செய்ய முனைந்த போது முன்னால் வந்து நின்றது ஜெயமோகன் எம்.எஸ். பற்றி எழுதியிருந்த ஒரு நீண்ட கட்டுரைதான்.  டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய எம்.எஸ். பற்றிய ஆங்கில நூலுக்கு ஜெ. எழுதிய ஒரு நீண்ட மதிப்புரையே அது. 

ஆனால் இப்படி ஒரு அறிஞனாக இருப்பது ஒரு சுமையும் கூட.  எந்தக் காலத்திலும் உளறவே முடியாது.  உளற முடிவது ஒரு லக்‌ஷுரி அல்லவா?  என் நல்லூழ் காரணமாக நான் அறிஞனாக இல்லாததால் அந்த லக்‌ஷுரியை அவ்வப்போது அனுபவிக்க முடிகிறது.  இந்த நிலையில் நேற்று ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையில் விழுந்திருந்த ஒருசில வரிகளைப் படித்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். 

”ஆனால் கர்நாடக இசைக்கலைஞர்கள் செயற்கையாக அளிக்கும் கையசைவுகளும் கஷாயம் குடித்தது போன்ற முகபாவனைகளும் இசைக்கு நேர் எதிரானவை என்பது என் எண்ணம். அவர்களிடம் பெரும்பாலும் உண்மையான உணர்ச்சிகள் வெளிப்படுவதில்லை. நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தை ஓடிமுடிக்க முயல்பவரின் பரிதவிப்பும் மூச்சிளைப்பும்தான் நிகழ்கின்றன.”

மேற்கண்ட விஷயம் மிகவும் தவறானது.  இன்றைய இளைய தலைமுறை சினிமா இசையின் பக்கம் நின்று கொண்டிருக்கிறது.  இசை என்றாலே தமிழ்நாட்டில் சினிமாதான்.  இதில் எழுத்தாளனும் விதிவிலக்கு அல்ல.  கர்னாடக இசை என்பதும் சம்ஸ்கிருதம் போலவே ஒரு சிறு குழுவுக்கானதாக ஆகி விட்டது.  ஒரு இனம் தன்னுடைய பொக்கிஷத்தை இழப்பது எப்பேர்ப்பட்ட துரதிர்ஷ்டம்!  ஆப்ரஹாம் பண்டிதர் தன்னுடைய கர்னாம்ருத சாகரத்தில் தமிழ் இசைதான் இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் அடிப்படை என்பதை நிறுவியிருக்கிறார்.  அதை சங்கீத மேதை எஸ். ராமநாதனும் தன்னுடைய சிலப்பதிகாரத்து இசை விளக்க நுணுக்கம் என்ற நூலில் வழிமொழிந்து மேலதிகத் தரவுகளைத் தருகிறார்.  ஆனால் கர்னாடக சங்கீதம் இன்று ஒரு மிகச் சிறிய குழுவினரின் கைகளில் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் ஜெயமோகனைப் போன்ற ஒருவர் இப்படிச் சொன்னால் அது இளைஞர்களின் மனதில் எவ்வித அபிப்பிராயத்தை உருவாக்கும்? 

அடிப்படையில் ஜெயமோகனின் அந்தக் கருத்தே பிழையானது.  ஜெயமோகன் எழுத்தாளன் என்ற நிலையைத் தாண்டி ஒரு கலைஞன் என்ற நிலையை அடைந்து விட்டவர்.  அவருக்கு நான் இப்போது சொல்லப் போவது நன்றாகப் புரியும்.  ஒரு படைப்புச் செயலில் ஈடுபடும்போது அங்கே நிகழ்வது ஒரு catharsis.  அந்தக் கணத்தில் படைப்பாளி ஒரு உன்மத்த நிலையில் இருக்கிறான்.  அந்த உன்மத்த நிலையில் இருந்து எழுதப்பட்டதுதான் கொற்றவை. 

(வரலாற்றைத் திரும்ப எழுதுதல் என்ற துறையில் வந்த புத்தகங்கள் பெரும்பாலானவற்றைப் படித்து விட வேண்டும் என்ற ரீதியில் சமீபத்தில் நான் படித்த நாவல் கொற்றவை.  ஜெயமோகன் எழுதிய பல புதினங்களை நான் வாசித்ததில்லை.  ஆனால் தமிழ்ப் புதினங்களில் கொற்றவை ஒரு உச்சபட்ச சாதனை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.)

பொதுவாக எழுத்தில் தெரியும் சீரியஸ் தன்மை ஜெயமோகனின் நேர்ப்பழக்கத்தில் இருக்காது.  மிகத் தீவிரமான தத்துவங்களையும் இலக்கியத்தையும் மணிக் கணக்கில் சுவாரசியமாகப் பேசக் கூடியவர் என்றாலும் அதை விட்டு விட்டு வெளியே வந்தால் அவரைப் போல் தமாஷாகப் பேசக் கூடியவரை நான் கண்டதில்லை.  என் எழுத்தைப் படித்துத் தங்கள் அலுவலகத்திலேயே விழுந்து விழுந்து சிரித்ததாகவும் கூட இருப்பவர்கள் ஒரு தினுசாகப் பார்ப்பதாகவும் பல நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை பஸ்ஸில் பல பேர் முன்னிலையில் என் நூலைப் படித்து அப்படிச் சிரித்து விட்டதாக ராகவன் சொன்னார்.  ஆனால் என் நேர்ப்பழக்கத்தில் நான் ரொம்பவும் சீரியஸான ஆள்.  ஒரு ராணுவ அதிகாரி மாதிரி.  சிரிப்பே வராது.  சிரிப்பாகப் பேசவும் தெரியாது.  ஆனால் ஜெ. அதற்கு நேர் எதிர்.  பல சமயங்களில் சிரித்துச் சிரித்து எனக்கு வயிறே வலித்திருக்கிறது.  ஒரு விகடன் விழாவில் அவரும் நானும் மேடையில் நிற்கிறோம்.  பிரம்மாண்டமான மேடை, பிரம்மாண்டமான கூட்டம்.  முன்வரிசையில் இருந்து எழுந்து நடந்து வரும் ஒருவரைப் பார்த்து என்னிடம் கிசுகிசுப்பாக “பார்க்க அச்சு அசல் நாஞ்சில் சம்பத் மாதிரியே இருக்கார் இல்ல?” என்றாரே பார்க்கலாம்.  மைக்கைக் கையில் வைத்துக் கொண்டு வெடிச் சிரிப்பு சிரித்து விட்டேன்.  அவர் சொன்னது யாருக்கும் காதில் விழுந்திருக்காது.  நான் சிரித்ததை எல்லோரும் பார்த்தார்கள்.  அப்படிப்பட்ட ஆள் ஜெ.  ஆனால் எழுத்தில் அப்படியா தெரிகிறது?  அங்கே நடப்பது ஒரு காளிங்க நர்த்தனம்.  அதைத்தான் லா.ச.ரா.வும் இன்ன பிற எழுத்தாளர்களும் “நானா எழுதுகிறேன், தேவிதான் எழுதுகிறாள்” என்றார்கள்.  சாமியாடி பத்துப் பதினைந்து ஆடுகளின் குரல்வளையைக் கடித்துத் தின்பது மாதிரி.  ஆ. மாதவனின் கதையில் வரும் நாயகன் அவ்வாறு ஒரு ஆட்டையோ மாட்டையோ தின்பான்.  Pure form of catharsis.  அது ஒரு உன்மத்த நிலை.

எழுத்தாளன் தான் இந்த உன்மத்த நிலையில் கொஞ்சம் கீழே இருப்பவன்.  நிகழ்த்துக்கலைகளில் இது உச்சத்தில் இருக்கும்.  சாமியாடி.  சாக்கியார் கூத்துக் கலைஞன்.  மைக்கேல் ஜாக்ஸன் மற்றும் பிற கலைஞர்கள்.  நம்முடைய பாலமுரளி கிருஷ்ணா.  அவர் வாழ்விலும் அப்படியே. 

ஆக, சங்கீதக் கலைஞர்கள் மேடையில் அமரும் போது அவர் ஒரு மனிதர் அல்ல.  ஒரு பைத்தியம்.  முழுப் பைத்தியம்.  பித்தநிலையின் உச்சத்தில் நின்றுதான் அவரது உச்சக்கட்ட கலை வெளிப்பாட்டை நிகழ்த்துகிறார்.  அப்போது அவர் உடல் என்னவெல்லாம் ஆகிறது என்பது மற்றவர்களுக்குத்தான் சேஷ்டை.  ஆனால் அந்தக் கலைஞனுக்கு அதெல்லாம் எதுவுமே தெரியாது.  ஜெயமோகன் அதிகமாக டி.எம். கிருஷ்ணா போன்ற இசை வியாபாரிகளின் பரிச்சயத்தில் இருக்கிறார் போலிருக்கிறது.  செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம் போன்ற மேதைகளை சில நேரம் அவர் கேட்டுப் பார்க்க வேண்டும்.  இந்த மேடை சேஷ்டைகள் ஹிந்துஸ்தானி கலைஞர்களிடம் ரொம்பவே உண்டு.  நல்லவேளை, ஜாக்கிரதையாக ஜெயமோகன் கர்னாடக சங்கீதக் கலைஞர்கள் என்று சொல்லி விட்டார்.  ஏனென்றால், ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் மேடையில் சேஷ்டை செய்யாத கலைஞனே கிடையாது.  பீம்சென் ஜோஷி ஒரு உதாரணம்.  Ecstacyயில் மனிதர் ஆடவே ஆரம்பித்து விடுவார்.  ஹிந்துஸ்தானியில் ஒரு கட்சி இருக்கிறது.  ருஷ்ய இலக்கியத்தில் தஸ்தயேவ்ஸ்கி படித்தவனுக்கு டால்ஸ்டாய் பிடிக்காது.  டால்ஸ்டாய் பிடித்தவன் தஸ்தயேவ்ஸ்கியை இது சாதாரணம் என்று தள்ளுவான்.  அப்படி ஜோஷிக்கு ஒரு கூட்டம், ஜஸ்ராஜுக்கு ஒரு கூட்டம் உண்டு.  இரண்டும் இரண்டு துருவம்.  நான் ஜஸ்ராஜ் கோஷ்டி. 

ஜெயமோகன் தன் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அநேகமாக அவர் நண்பர் யுவனும் நான் சொன்னதையேதான் சொல்வார்.

***

கடந்த ஆறு மாதங்களாக நான் பேசிய சி.சு. செல்லப்பா, க.நா.சு., நகுலன், கோபி கிருஷ்ணன், புதுமைப்பித்தன் உரைகளின் காணொலி தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதினால் அனுப்பி வைக்கிறேன். charu.nivedita.india@gmail.com பல நண்பர்கள் சந்தா அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியாததால் என் உரைகளின் காணொலியை அனுப்ப இயலவில்லை. அவர்கள் எனக்கு எழுதலாம். யாரேனும் எழுதிக் கேட்டு அனுப்ப விடுபட்டுப் போயிருந்தாலும் அவர்கள் மீண்டும் நினைவுபடுத்தி எழுதுங்கள். என் வேலைப்பளுவினால் விடுபட்டிருக்கும்.

ஷார்லட் தமிழ்ச் சங்கத்தில் பேசிய காணொலி கிடைக்கிறது.

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai