3. இசை பற்றிய சில குறிப்புகள்

நாவல் வேலை சுணங்குகிறது என்ற காரணத்தால்தான் இசையைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கிறேன்.  கர்னாடக சங்கீதத்தில் எனக்குப் பிடித்த மேதைகள் அநேகம்.  அவர்களில் தலையாயவர் வீணை எஸ். ராமநாதன்.  என்ன வீணை எஸ். ராமநாதனா, அவர் பாடகர் அல்லவா என்று கேட்பார்கள்.  இங்கே எம்.டி. ராமநாதன் பிரபலம் என்பதால் பலருக்கும் எஸ். ராமநாதன் தெரியாமலே போய் விட்டார்.  இன்னொரு காரணம், இந்தத் தமிழ்நாட்டுச் சூழல் பிடிக்காததால் எஸ்.ராமநாதன் அமெரிக்கா சென்று விட்டார்.  அவர் அற்புதமான பாடகர், வீணைக் கலைஞர்.  இந்த இரண்டையும் விட உலகமே பாராட்டிக் கொண்டாடிய ஒரு musicologist.  தென்னிந்திய இசை என்றால் உலகம் பூராவும் தேடுவது எஸ். ராமநாதனையும் வி. ராகவனையும்தான்.  மேலே உள்ள லிங்கில் எஸ். ராமநாதனின் கச்சேரி ஒன்றின் இணைப்பு உள்ளது.  இவர் எழுதிய ஒரு நூலைத்தான் நான் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறேன்.  சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்.  இவரைப் பற்றி நான் எழுதியிருந்ததைப் படித்து விட்டு, இந்தக் காலத்தில் என் தந்தை பற்றி எல்லோரும் மறந்து போன நிலையில் நீங்கள் இத்தனை விரிவாக எழுதியிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன் இவரது மகள் கீதா பென்னட் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  கீதா பென்னட் தந்தையை விடப் பிரபலம் என்று எழுதுவது என்னைப் பொறுத்தவரை ஒரு கலாச்சார வீழ்ச்சிதான்.  ஏனென்றால், கீதாவை ஒரு ஜனரஞ்சக எழுத்தாளராக மட்டுமே தமிழ்ச் சமூகம் அறியும்.  ஆனால் கீதா ஒரு அற்புதமான வீணைக் கலைஞரும் கூட.  கீதா பென்னட்டும் தந்தையைப் போல் அமெரிக்காவிலேயே திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்தார்.   முப்பது ஆண்டுகள் உடல் நலத்தோடு போராடி சமீபத்தில் காலமானார்.  கடைசி வரை என்னோடு கடிதத் தொடர்பில் இருந்தார். 

இப்போது கர்னாடக சங்கீதம் பற்றி எழுதுபவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் லலிதாராம்.  அவர் கர்னாடக இசைக் கலைஞர் சீதா நாராயணனிடம் எடுத்த ஒரு நேர்காணலின் இணைப்பை இதோடு கொடுக்கிறேன். 

அந்தக் காலத்தில் – ரொம்ப ஒன்றும் முன்னால் இல்லை, ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட – ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டால் “நேற்று ரேடியோவில் அரியக்குடியின் காம்போதி ஆலாபனையைக் கேட்டீர்களா?” என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார்களாம்.  அதற்குப் பிறகு குசல விசாரிப்புகள் எல்லாம்.  அப்படியும் ஒரு காலம் இருந்தது.  இன்று அற்பத்தனங்களின் காலம். 

செம்மங்குடி சீனிவாச ஐயரின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  90 வயதுக்கு மேலும் இசையில் முதுமை நெருங்காமல் பாடிக் கொண்டிருந்த ஒரு மேதை.  1967-இல் இவரது கச்சேரி:

https://www.youtube.com/watch?v=oH3ARCQDHgE

அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்

அரியக்குடி

இவர்கள் இருவரையும் விட என் ரசனைக்கு மிக நெருக்கமானவர் செம்பை வைத்தியநாத பாகவதர்.  இவருடைய இந்தக் கீர்த்தனையைக் கேட்டு விட்டு சொல்லுங்கள், கர்னாடக இசை அலுப்பூட்டுகிறது என்று.  ஒருவராலும் சொல்ல முடியாது.  பொறுமையில்லாதவர்கள் ஆலாபனையை விட்டு விட்டு ஏழாவது நிமிடத்தில் தொடங்கும் வாரிஜதல லோசனி கீர்த்தனையைக் கேளுங்கள்.  இன்றைய சினிமா பாடலை விடத் துரிதமான வேகத்தைக் காணலாம்.  லலிதா தாசர் இயற்றிய கீர்த்தனை.

இந்த லலிதா தாசரைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

மதுரை மணி ஐயரின் கச்சேரி: