ஸ்மாஷன் தாரா

பிறந்து

ஐந்து வயது வரை

ஊமைப் பிள்ளை

கலியப் பெருமாள் கோவிலுக்கு

வேண்டிக் கொண்டுதான்

பேச்சே வந்தது

பேசிய பேச்சும்

அசட்டுப் பேச்சு

புத்தியும் இல்லாமல் போச்சு

மந்தையைப் பிரிந்து

அபீன் பழக்கமாச்சு

ஸ்த்ரீகளின் சிநேகமும்

கூடவே வந்தது

ஊரிலும் கெட்ட பேர்

உறவும் தள்ளி வைக்க

என்னென்னவோ ஆச்சு

ஆனாலும் உன் கருணை

மழை மட்டும்

குறைவற்றுப் பெய்ய

என்ன தவம் செய்தேனெனக்

கேட்டதுக்குச் சொன்னாள்

தயை கருணை க்ஷமா

மூன்றுமென் முலைகளில் சுரக்க

நீதான் காரணம்