ஸ்மாஷன் தாரா – 3

ஆதி அந்தமில்லாத

காலப்பெருவெளியின்

இந்தவொரு புள்ளியில்

நாம் சந்தித்தது

சந்தர்ப்பவசமோ

விதிவசமோ

தெரியாது

மனிதக் கணக்கில்

இருபது ஆண்டுகள்

ஒன்றாயிருந்தோம்

சட்டென்று

கரைந்து விட்டாய்

காலத்தில்

அநந்தகோடி ஒளிப்புள்ளிகளில்

ஒன்றாகிவிட்ட

உன்னையினி

சந்திக்க இயலுமோ

சந்தித்தாலும் ஞாபகமிருக்குமோ

இந்த இருபது ஆண்டுகளில்

நாம் பேசிய வார்த்தைகளும்

பேசாத மௌனங்களும்

கூடலும் ஆடலும்

வெறுப்பின் வெம்மை

படிந்த பகல்களும்

மோகத்தீயில் பற்றியெரிந்த

இரவுகளும்

எனக்காக உன்னை

உருக்கிக் கொண்டதும்

தங்கக் கூண்டில் எனைச்

சிறைப்படுத்திய

உன் பிரியத்தின்

கூர்முனைகளும்

இன்னும் ஏராளமாக

ஏராளமாகச்

சொல்லலாம்

எல்லாம் இனி

ஞாபகங்கள்

வலியையும் வாதையையும்

களிப்பையும் துய்ப்பையும்

ஸ்மாஷன் தாரா

தந்த அனுபவமாய்

ரஸமாற்றம் செய்து வந்த

என்னால்

உன் இல்லாமையின்

பெருவலியைத்

தாங்க முடியவில்லை

இதுகாறும்

தொடர்ந்து வந்த

இசையும் எழுத்தும்

கலையும் குடியும்

நீ இல்லாத

சூன்ய காலத்தின்

சுமையைப் போக்க முடியவில்லை

சுருக்குக் கயிறின்

முடிச்சு இறுகுகிறது

In remembrance of Gérard de Nerval