நான் வரையறைகளுக்குள் அடங்க மறுப்பவன். அடையாளங்களிலும் அடைபட மாட்டேன். எனவே என் கவிதைகள் பொது அர்த்தத்தளத்தில் கவிதைகளாகவே ஆக மாட்டா. கவிதைப் புலத்தில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை. நிகானோர் பார்ராவை எதிர்க் கவிதை என்கிறார்கள். ஆனால் அவருடைய எதிர்க் கவிதையே ஒரு அடையாளத்துக்குள் வந்து விட்டது. எந்த அடையாளத்திலும் வரையறையிலும் வராத கவிதைகள் என்றால் ஒரே ஒரு ஆள்தான் இருக்கிறார். அவர் கவிஞர்களுள் சாதி விலக்கம் செய்யப்பட்டவர். சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. எக்கச்சக்கமான கவிதைகளை எழுதிக் குவித்தார். அவர் கவிதைகளை இலக்கிய ஸ்தாபனக்காரர்கள் மோசமான கவிதைகள் (bad poetry) என்றார்கள். அவரை அவர்கள் ஒருபோதும் கவிஞர் என்றே ஒப்புக் கொள்ளவில்லை. கவனியுங்கள், நிகானோர் பார்ராவுக்குக் கிடைத்த எதிர்க் கவிதை என்ற அங்கீகாரம் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கிக்குக் கிடைக்கவில்லை. கவிஞரே இல்லை என்ற பட்டமே கிடைத்தது. ஆனால் ப்யூகோவ்ஸ்கிக்குத்தான் உலகெங்கிலும் – இன்றளவும் – ஒரு மதத் தலைவருக்கு இருப்பதைப் போன்ற மிகத் தீவிரமான வாசகர்களும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் ஒரு ராக்ஸ்டாரைப் போல் பிரபலமாக இருக்கிறார். அவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. ஆனால் ஸ்தாபனம் இன்றளவும் அவரைக் கவிஞரே இல்லை என்கிறது. கார்டியன் பத்திரிகையில் ஒரு விமர்சகர் இப்படி எழுதுகிறார்:
“(Charles Bukowski) bears the same relation to poetry as Zane Grey does to fiction, or Ayn Rand to philosophy – a highly colored, morally uncomplicated cartoon of the real thing.”
உலகம் பூராவும் ஒரு cult எழுத்தாளனாகக் கொண்டாடப்படுபவனை இலக்கிய ஸ்தாபனம் கார்ட்டூன் என்று வர்ணிக்கிறது. அமெரிக்காவின் புத்தகக் கடைகள் ப்யூகோவ்ஸ்கியின் கவிதை நூல்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஆனால் ஸ்தாபனரீதியான கவிதை ஆந்தாலஜிகளில் ப்யூகோவ்ஸ்கியின் பெயரே இருக்காது.
இங்கே திலீப்குமார் என்ற இலக்கியத் தரகர் ஆங்கிலத்தில் தொகுத்த தமிழ்ச் சிறுகதைகளின் ஆந்தலாஜி ஞாபகம் வருகிறது. அந்தத் தரகரின் நூல்களையெல்லாம் நான் கையால் கூடத் தொடுவது இல்லை. இருந்தும் அந்த ஆந்தலாஜி என் பார்வைக்கு வந்தது ஒரு கதை. நான் ஏஷியன் ஏஜ் (டெக்கான் கிரானிகிள்) அகில இந்தியப் பதிப்பில் வாராவாரம் பத்தி எழுதிக் கொண்டிருந்த கால கட்டத்தில் அப்பத்திரிகையின் தில்லி அலுவலகத்திலிருந்து இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்து மதிப்புரை எழுதச் சொன்னார்கள். அதில் அண்ணாதுரை, சி.பி. சிற்றரசு, மு. கருணாநிதி, விழி பா. இதயவேந்தன், பாவண்ணன், முதல் புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், ராமகிருஷ்ணன் ஈறாக தமிழில் சிறுகதை எழுதிய அத்தனை பேரின் கதைகளும் இருந்தன. சிலருக்கு இரண்டு கதைகள் இருந்தன. தொகுத்த தரகர் திலீப்குமாரின் கதையும் இருந்தது. என் கதை இல்லை. இதை நான் தில்லி அலுவலகத்துக்கு எழுதிப் போட்டு இதற்கு நான் மதிப்புரை எழுத விரும்பவில்லை என்று எழுதினேன். இதே கதைதான் ப்யூகோவ்ஸ்கியின் வாழ்நாள் பூராவும் நடந்தது. அவருக்கென்று பதிப்பாளர்கள் கூடக் கிடைக்காததால் – அவர் கதைகள் ப்ளேபாயில் வந்ததால் அவரை செக்ஸ் எழுத்தாளர் என்று ஒதுக்கினார்கள் – ஜான் மார்ட்டின் என்பவர்
ப்யூகோவ்ஸ்கிக்காகவே Black Sparrow Press என்ற பதிப்பகத்தை
ஆரம்பித்தார். அதன் பிறகு ப்யூகோவ்ஸ்கியின் நூல்கள் லட்சக்கணக்கில் விற்றன. இருபது மொழிகளுக்கு மேல் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனாலும் ஜான் மார்ட்டின் ப்யூகோவ்ஸ்கியை மெய்ன்ஸ்ட்ரீம் எழுத்தாளர் அல்ல; ஒரு குறுங்குழுவுக்காக எழுதுபவர் என்றே சொல்கிறார். இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மில்லியன் கணக்கில் விற்றாலும் ப்யூகோவ்ஸ்கியின் வாசகர்கள் ஒரு குறுங்குழுதான். அவரது எழுத்தைப் படிப்பவர்களுக்கு ஒரு transgressive thrill கிடைப்பதாக ஒரு விமர்சகர் எழுதுகிறார். அவர்கள் மில்லியன் கணக்கில் இருந்தாலும் அவர்கள் குறுங்குழுதான். இல்லாவிட்டால் கும்பகோணம் என்ற ஒரு நகரில் விக்ரம் என்ற கல்லூரி மாணவர் ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளை மொழிபெயர்த்து புத்தகமாகப் போட்டு இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?
அதைப் போலவேதான் என் கவிதைகளையும் அதேபோல் ஸ்தாபன ரீதியான இலக்கியவாதிகள், வாசகர்கள் யாரும் ஒப்புக் கொள்ளாமல் போகலாம். அது பற்றி எனக்குக் கவலையில்லை. யாருடைய அங்கீகாரத்துக்காகவும் நான் என்று இல்லை, எந்த எழுத்தாளனுமே எழுதுவதில்லை. அங்கீகாரத்தையெல்லாம் எதிர்நோக்கிக் கொண்டிருந்தால் எழுத்தே வராது.
சமீபத்தில் ஒரு பஞ்சாயத்து நடந்தது. கவிதை என்ற பெயரில் வெளிவரும் பல படைப்புகளின் வாக்கியங்களை உடைக்காமல் நேர் நேராக உரைநடையாக எழுதினால் அது கவிதை என்ற அந்தஸ்தை இழந்து விடும் என்பது புகார். இந்தப் புகாரும் ப்யூகோவ்ஸ்கி மீது வைக்கப்பட்டது. இதனால் நான் இப்படி வரும் எல்லா கவிதைகளையும் கவிதையாக ஏற்கிறேன் என்று அர்த்தம் அல்ல. கவிதை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதன் கவித்துவத்தை ஒருவர் புரிந்து கொண்டு விட முடியும். கவிதை வடிவத்திலேயே இருக்கும் பல கவிதைகள் போலி கவிதைகளாக இல்லையா என்ன? எனவே வடிவத்தை மட்டும் வைத்து ஒரு கவிதையை கவிதையா போலியா என்று முடிவு செய்ய முடியாது. கவிதை என்றால் என்ன?
ஒக்தாவியோ பாஸின் The Monkey Grammarian என்ற நூலைப் பற்றி ஒரு விமர்சகர் “இது மொழியில் நடந்த ஒரு தியானம்” என்று வர்ணித்தார். இதே விளக்கத்தை நாம் கவிதைக்கும் சொல்லலாம். (அந்த நூலில் வரும் இலக்கணக் குரங்கு நம் ஹனுமன் தான். ஹனுமன் ஒரு இலக்கண வித்தகன்.) எனவே கவிதானுபவம் என்பது மிகவும் அந்தரங்கமானது. எனக்குக் கவிதையாகத் தெரிவது உங்களுக்கு மிகச் சாதாரணமாகத் தெரியும். உலகமே வியக்கும் பாப்லோ நெரூதாவை விட எனக்கு ஒக்தாவியோ பாஸின் கவிதைகள்தான் நெருக்கமானவை. ஆனால் என் நண்பர் ஒருவருக்கு (அவர் ஒரு கவிஞர்) பாஸின் கவிதைகள் பிடிக்காது. இவ்வளவு பிரச்சினையிலும் போலிக் கவிதைகளும் பெருவாரியாக உருவாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றையும் நீங்கள் உங்களுடைய தொடர்ந்த வாசிப்பு அனுபவத்தின் மூலமாகத்தான் கண்டு கொள்ள முடியும். டி.எஸ். எலியட்டின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு. ”முதிர்ச்சி அடையாத கவிஞன் நகலெடுக்கிறான்; முதிர்ந்த கவிஞன் திருடுகிறான்.”
சுருக்கமாகச் சொன்னால், எது கவிதை?
அதை விளக்க முடியாது.
***
என் சக எழுத்தாளர்கள், மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai
***