முன்னோடிகள்: புதுமைப்பித்தன் (1)

அன்புள்ள சாரு,

புதுமைப்பித்தன் உரையின் முதல் பாகம் கேட்டேன். படு விறுவிறுப்பான சினிமா போல் இருந்தது. 5 நிமிடம் கேட்கலாம் என்று உட்கார்ந்தேன். முன்றரை மணிநேரம் கழித்துத்தான் எழுந்தேன். ஆனால் கோபி கிருஷ்ணன் உரை தான் இது வரை நான் கேட்ட உரைகளிலேயே உச்சம். நகுலன் உரையில் உங்கள் அறையின் ஒளி, நீங்கள் உங்கள் பூனைகளுடன் பேசுவது என்று அற்புத அனுபவமாக இருந்ததென்றால், கோபி கிருஷ்ணன் உரையைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

உங்களது உரைகள் எழுத்தாளர்கள் பற்றியது என்பதைத் தாண்டி இலக்கியத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான பாடமாகவே எனக்கு அமைகிறது. நிலவு தேயாத தேசம் தவிர தாங்கள் எழுதியவை அனைத்தையும் குறைந்தது இரு முறை படித்திருக்கிறேன். 2015ஆம் ஆண்டு ராஸ லீலாவை முதல் முறை படித்து முடித்ததும் பிரமை பிடித்தது போல் சற்று நேரம் உட்கார்ந்திருந்தேன். பிறகு அன்றே மீண்டும் இரண்டாம் முறையாகப் படித்தேன். Zero degree எல்லாம் ஆறு முறைக்கு மேல் படித்திருப்பேன். ஆனால் கோபி உரையைக் கேட்ட பிறகு உங்களை இன்னும் படிக்கவே தொடங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. பாகீரதியின் மதியம் நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியதைக் கேட்ட போதும் இதுதான் தோன்றியது. இப்படியல்லவா படிக்க வேண்டும் என்று.

கோபி கிருஷ்ணன் உரை முடிந்ததும் உங்கள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். அந்தப் பிரகாசத்தில், அதற்குப்பின் இருக்கும் ஆத்மார்த்தமான உழைப்பில், ஞானத்தில் ஒரு துளி என்னுள் விழுந்து முளைவிடட்டும்.

நன்றியுடன்
பன்னீர் செல்வம்.

அன்புள்ள சாரு,

இன்றைய கூட்டம் பிரமாதமாக இருந்தது என்பது கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. என்னைப் பொறுத்தவரை இதுவரையிலான சிறந்த உரை கோபி கிருஷ்ணன்.  அதற்கு இணையானது நகுலன்.  ஆனால் இன்றைய கூட்டம் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு ஞானச்சுரங்கம்.  ஏனென்றால், நசிகேதனுக்கும் எமனுக்கும் நடந்த உரையாடல் குறித்த ஒரு மணி நேர உரை.  எந்த ஆன்மீகவாதியின் உரைகளை விடவும் அது சிறந்ததாக இருந்தது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. ஏனென்றால் உங்களுடைய உதாரணங்கள் புதுமைப்பித்தனிடமிருந்தும் நடைமுறை வாழ்விலிருந்தும் எடுக்கப்பட்டவையாக இருந்தன.  கேட்பவரை உள்ளே இழுத்துக் கொண்டது உங்கள் உரை.  அந்நியமாக நிறுத்தவில்லை.  எமன் சொன்ன ஷ்ரேயாவை (உன்னதம்) எங்கள் கரங்களிலே கொண்டு வந்து கொடுத்தீர்கள்.  கேட்டவர்களுக்குத் தெரியும். கதோபநிஷதத்துக்கு இதை விட நடைமுறை சாத்தியம் கொண்ட விளக்கம் வேறு இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.  நான் ஓஷோவின் கதோபநிஷதம் படித்திருக்கிறேன்.  சுவாமி ஞானானந்தாவின் விளக்கமும் படித்திருக்கிறேன்.  இந்த இரண்டையும் விட உங்கள் உரை தத்துவார்த்த அடர்த்தி கொண்டதாகவும் அதோடு practical demonstrationஓடும் இருந்தது.  நாமும் நசிகேதனாக முயற்சிக்கலாம் போலிருக்கிறதே என்று எண்ண வைத்ததுதான் இன்று உங்கள் சாதனை.

இந்த மாதாந்திரக் கூட்டங்களை விட்டு விடாதீர்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

என். கதிரேசன்      

அன்புள்ள பன்னீர் செல்வம், கதிரேசன்,

உங்கள் இருவரின் ஆத்மார்த்தமான வார்த்தைகள் என்னை மிகவும் தொட்டன.  கடந்த வாரம்தான் மாதாந்திரக் கூட்டங்கள் பற்றிச் சற்று மனத் தளர்ச்சியுடன் இருந்தேன்.  உங்களுடைய இந்தக் கடிதங்களைப்  போல் பலரும் எழுதியிருப்பதால் தொடர்ந்து மாதம் ஒரு கூட்டம் ஸூமில் நடத்தி விடலாம், பேசி விடலாம் என்ற உற்சாகம் தொற்றிக் கொண்டு விட்டது.  அதிலும் இன்று காலை ஆறு மணி சந்திப்புக்கு ஐந்தேமுக்கால் மணிக்கு சந்திப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கார்த்திக்கிடம் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று கேட்டபோது ஒன்றிரண்டு பேரே வந்திருப்பார்கள் என்று நினைத்தேன்.  ஏனென்றால், காலையில் நல்ல மழை.  இரண்டு வாரமாகவே தொடர்ந்து மழைதான்.  அதிலும் தினமும் கனத்துப் பெய்து கொண்டிருந்தது.  இன்றும் அதேபோல்.  மழை இருந்தால் குளிர் இருக்காது என்பார்கள்.  அப்படியும் இல்லை.  நல்ல குளிர் வேறு.  சரி, எல்லோரும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் பதினைந்து பேர் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள்.  கூட்டம் ஆரம்பித்த கையோடு மொத்தம் ஐம்பது பேர்.  இந்தக் குளிர் காலத்தில் இது ரொம்பப் பெரிய விஷயம். 

ஏன், சௌகரியமாக மாலையில் வைக்கலாமே என்று நினைக்கலாம். எனக்கு காலை ஆறு மணி என்பது உங்களின் எட்டு மணி மாதிரி.  ஏனென்றால், நான் நாலு மணிக்கே எழுந்து விடுவேன்.  மேலும், மாலையில் நான் அத்தனை உற்சாகமாக இருக்க மாட்டேன்.  நான் எத்தனைதான் உற்சாகமாக நடித்தாலும் பலரும் “சோர்வாகத் தெரிகிறீர்கள்” என்று சொல்லி விடுகிறார்கள்.  என்னுடைய நேரம் காலைதான்.  மேலும், மாலை நேரத்தில் பலரும் அந்த வேலை இந்த வேலை என்று டிமிக்கிக் கொடுத்து விடுகிறார்கள்.  அதிகாலை என்றால் அலாரம் வைத்து எழுந்து வருபவர்கள் மாலையில் வைத்தால் காண்பதில்லை.  மனைவியிடமிருந்து காலையில் தப்புவது போல் மாலையில் தப்ப முடிவதில்லை போல.  And vice versa.  ஆனாலும் எனக்கு உங்களை ரொம்பவும் தொந்தரவு செய்யக் கூடாது என்று தோன்றுவதால் இனி எப்போதும் மாத முதல் வாரத்தின் சனி மாலை ஏழு மணிக்கு தவறாமல் நம் உரை இருக்கும். 

அதன்படி, ஜனவரி இரண்டாம் தேதி சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு தி. ஜானகிராமன்.  இனிமேல் இன்னொரு முடிவும் எடுத்து விட்டேன்.  ஒரு எழுத்தாளருக்கு ஒரு உரைதான்.  ஏனென்றால், இன்றுதான் தெரிந்தது, புதுமைப்பித்தன் பற்றி சென்ற மாதம் மூன்றரை மணி நேரம் பேசியாயிற்று.  இன்று மூன்று மணி நேரம்.  (இரண்டு மணி நேரம் பேச்சு.  ஒரு மணி நேரம் கேள்வி பதில்.)  ஆனாலும் இன்னும் பல மணி நேரத்துக்குப் பேச வேண்டியிருந்தது இல்லையா?  அதனால் இனி, ஒரு மாதத்துக்கு ஒரு எழுத்தாளர் என்றே வைத்துக் கொள்ளலாம்.  இல்லையானால் தி.ஜா.வுக்கெல்லாம் பத்து மாதம் வைக்க வேண்டியிருக்கும்.

இந்த மாதம் 18-ஆம் தேதி சந்திப்பு மாலை ஏழு மணிக்கு.  உரையெல்லாம் இல்லை.  பிறந்த நாள் சந்திப்பு.  எந்த விதத் திட்டமும் இல்லாமல் அரட்டை அடித்துக் கொண்டிருக்கலாம்.  ஆனால் யாரும் உரையாற்றக் கூடாது.

புதுமைப்பித்தன் உரை இரண்டாவது பாகம் நாளைக்குள் தயாராகி விடும்.  தேவைப்படுவோர் எழுதுங்கள்.  அனுப்புகிறேன்.  நீங்களே நிர்ணயம் செய்து கொள்ளும் கட்டணம்தான் அதற்கு.  மாணவர்களும் என் சக எழுத்தாளர்களும், சந்தா/நன்கொடை அனுப்புபவர்களும் கட்டணம் அனுப்ப வேண்டாம்.    

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai