Dear sir,
thanks for today’s session. It was a good opportunity for me to learn new perspectives on Pudumaipithan stories.
குறிப்பாக, இன்று நீங்கள் பகிர்ந்த கதைகளில் பல எனக்கு மிகவும் விருப்பமானவை; என்னை பாதித்தவை.
காலனும் கிழவியும் கதை முதல்முறை வாசிக்கும்போது என்னிடம் ஒட்டியுள்ள வாழ்வின் அற்பத்தனங்களை, நம்பிக்கையின்மையை, அச்சங்களை உதறி வீசச் சொல்லும் ஒரு திறப்பாக அது எனக்குத் தோன்றியது. மரணம் குறித்த விசாரணையாக இருந்தாலும் வாழ்க்கையை நோக்கியே என்னை எப்போதும் திரும்பச் செய்யும் அந்தக் கதை. இன்று உங்கள் மூலம் கேட்கும்போது அது புதிய பார்வையாக, அனுபவமாக இருந்தது.
மகாமசானம் எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஜோதி டீச்சர் சொன்னார்கள்: ‘நிமிடத்துக்கு நாலு குழந்தைகள் பிறந்துகொண்டிருப்பார்கள். அதே போல் யாராவது ஒருவர் இறந்துகொண்டிருப்பார்.’ And I took it so literally as I started thinking that a man is equal to four children.
மகாமசானம் கதையை முதன்முதலாகப் படிக்கும்போது நான் அவ்வளவு வருடங்களாக சொல்லுக்குச் சொல் எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பொருள் கலைவதை அந்த முதல் வாக்கியம் உணர்த்தியது. ஆனால் அதை அப்படியே அப்போது உணரவில்லை. என்னுடைய ஏதோ ஒரு கருத்தாக்கம் மாறியதாக மட்டும்தான் தோன்றியது. ஆனால் நீங்கள் இன்று அந்த முதல் வாக்கியத்தை வாசிக்கும்போதுதான் அந்தக் கதை என்ன விதத்தில் என்னை மாற்றியுள்ளது என்பதை உணர்ந்தேன். அந்தக் கதையின்பால் எப்போதுமே எனக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு. அது நிஜமாக நடந்த கதை போல் நம்பினேன். பின் அது எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் கதை என்பதை உணரத் தொடங்கினேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், அது சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தம் என்று அனுமானித்துக் கொண்டேன். அந்தக் கதையில் காட்டும் இடத்தைப் பற்றிய குறிப்புகள் சைதாப்பேட்டையுடன் பொருந்துவதாக என் எண்ணம். சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தைக் கடக்கும்போதெல்லாம் மகாமசானம் பற்றி நினைக்காமலிருக்க முடியவில்லை, இப்போதுகூட. சில சமயங்களில் தோன்றும்: ‘என்றாவது ஒரு நாள் அந்தக் குழந்தையையும் இரண்டு பிச்சைக்கார்களையும் அங்கே பார்த்துவிடுவேன், அப்படியென்றால் நானும் புதுமைப்பித்தனின் கதையில்தான் அப்போது வாழ்ந்துகொண்டிருப்பேன்.’ I may sound crazy. But I can’t tell how I think more clearly.
செல்லம்மாள் கதையைப் பற்றியும் ஒரு புதிய அணுகுமுறையாக இருந்தது இன்று. அதில் பெண்ணடிமைக் கூறு இருப்பதாக எப்போதும் கருதியதில்லை. வழக்கமான முறையில், மணம் செய்துகொண்ட இருவர் பணி நிமித்தம் வேறு இடத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகத்தான் தோன்றுகிறது. மேலும் செல்லம்மாளைக் கவனித்துக் கொள்ளவோ அவள் மீது அக்கறை காட்டவோ பிரமநாயகத்தைத் தவிர யாருமில்லை; அவர்கள் இருவருக்குமே அவர்களைத் தவிர ஆதரவு தருவோர் குடும்பத்தில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதுபோல் ஒரு வரியும் அந்தக் கதையில் வருவதாக ஞாபகம். நோயின் கூறால் முடங்கியிருக்கும் நிலைதான் செல்லம்மாள் தான் கட்டிப்போடப்பட்டதாகக் கருதக் காரணம் என்றெண்ணுகிறேன். அந்தக் கதையில் எனக்குப் பிடித்த இன்னொரு அம்சம்: சின்ன விஷயங்களுக்கே தளர்ந்து சோர்ந்து, விபரீத முடிவுகளைக்கூட மனிதர்கள் தேர்ந்துவிடும் காலம் இது. ஆனால் வறுமை, நோய் என அப்படிப்பட்ட நிலையிலும் அவர்கள் இருவரும் இயல்பான வாழ்க்கையைத்தான் மேற்கொள்ள விரும்புவதாகத் தோன்றுகிறது. எளிய சமையலானாலும் அது பற்றிப் பேசிக் கொள்வதாகட்டும்… தீபாவளிக்குச் சேலை வாங்கிக்கொண்டு வந்து எது வேண்டும் என்று தேர்ந்து பார்ப்பதிலாகட்டும்… எந்நிலையிலும் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து பார்த்தவளாகத்தான் செல்லம்மாள் எனக்குத் தோன்றுகிறாள்; பிரமநாயகம் அதற்குத் துணையாக இருந்தபோதிலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை என்பது என் எண்ணம். செல்லம்மாள் போகும்போது அவர் நிம்மதியடைந்தாலும் அவர் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்த செல்லம்மாள் அவர் வாழ்வையும் சேர்த்து தான் வாழ்ந்துவிட்டுப் போய்விடுகிறாள்.
இன்று சந்திப்பு முடியும்முன் வறுமை கலையாக மாறுவது பற்றியான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பொய்க்குதிரை கதையிலும் இது மிகமிக நுட்பமாகக் கையாளப்பட்டிருக்கும். வறுமையின் கோரம் பேசப்படுவதாக எங்குமே காணமுடியவில்லை; அத்தகைய மனிதர்களின் உணர்வுகள் கதையில் கையாளப்பட்டிருக்கும் விதம் கலையாகப் பரிணமிப்பதாகத் தோன்றுகிறது. நீங்கள் பொய்க்குதிரை படித்திருப்பீர்கள். ஆனாலும் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கதையில் ஒரு பணக்கார நண்பன் வீட்டு விருந்துக்கு மனைவியை அழைத்துச் செல்ல விரும்புகிறான் ஒருவன். அவளுக்குத் தயக்கம். ஏற்கெனவே கணவனுக்கு இன்னும் சம்பளம் வரவில்லையே என்று கலக்கத்தில் இருப்பாள். அவள் மனநிலையை மாற்றும் எண்ணத்தில் வற்புறுத்துகிறான். இருவரும் ஆயத்தமாகிறார்கள். முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க வருகிறாள். அவன் அவளைத் தன் மடி மீதிருத்தி இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள். அந்த இடத்தில் எழுதியிருப்பார். ‘கண்ணாடியில் பாதிக்கு மேல் ரசம் போயிருந்ததை இருவருமே மறந்துவிட்டனர்.’ இதே வார்த்தைகள்தானா என்று சொல்லமுடியாது. ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன். ரொம்பச் சிறிய மூன்று பக்கக் கதைதான். ஆனால் சொல்லுக்குச் சொல் செதுக்கப்பட்டிருக்கும் கதை. விருந்திலிருந்து திரும்பி வந்தும் மனநிம்மதி மேலும் குன்றியிருக்கும். அவள் தன்னையறியாமல் கண்ணீர் சிந்திவிடும் இடத்தில் அவன் அவளுக்கு ஆறுதல் தருமிடம் ஒரு கவிதை. இதை வார்த்தை மாறாமல் என்னால் சொல்லமுடியும். ‘கனவின் நிலவுபோலும் மென்மையாக முத்தமிட்டான்.’ செல்லம்மாள் அருமையான காதல் கதை என்பது பரவலான கருத்து, எனக்கும் அப்படித்தான். அதே அளவு நான் பொய்க்குதிரையையும் ஆராதிக்கிறேன். ‘கனவின் நிலவுபோலும் மென்மையாக முத்தமிட்டான்’ என்ற வரியை நான் 19 ஆண்டுகளாக ஏந்திக்கொண்டிருக்கிறேன் மனத்தில்; இந்த வரி இல்லாத உலகில் வாழவே முடியாது என்று தோன்றுமளவுக்கு.
இந்தக் கதை குறித்து உங்கள் பார்வையையும் அறிய விருப்பம். இது ஒரு வேண்டுகோளும்கூட.
அருமையான உரைக்கு மீண்டும் என் நன்றி.
Sorry for the long mail.
Thanks and regards.
கார்த்திகா முகுந்த்
டியர் கார்த்திகா,
நீங்களும் உங்கள் குட்டிப் பெண் நேயமுகிலும் கேட்ட இரண்டு கேள்விக்குமே என்னால் பதில் சொல்ல இயலவில்லை. பைலார்க்கஸ் பற்றி நீங்கள் கேட்ட கேள்வியை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியாதது முதல் விஷயம். நேயமுகில் குறிப்பிட்ட கதையை நான் படித்திருக்கவில்லை. பைலார்க்கஸ் பற்றிய உங்கள் கேள்வியை எனக்கு அனுப்பித் தாருங்கள். என் பார்வை என்ன என்று சொல்ல முயல்கிறேன்.
உங்கள் கடிதம் புதுமைப்பித்தனை வாசிப்பவர்களுக்கு மேலும் பல திறப்புகளைக் கொடுக்கும். செல்லம்மாள் கதை பெண்ணடிமைத்தனம் என்ற ஒற்றைச் சொல்லாடலையும் மீறி குடும்பம் என்ற அமைப்பில் உருவாக்கும் கண்ணுக்குப் புலனாகாத அதிகாரத்தையும் உணர்த்துகிறது. பிரமநாயகம் பிள்ளையின் பொறுமையும் தியாகமும் செல்லம்மாள் மீதான அன்பும் அப்பழுக்கற்றது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் செல்லம்மாள் சென்னை நகரத்தில் ஒரு வீட்டு அடிமையாகக் கிடக்கிறாள். ஆயுள் கைதி. அவளுக்கு வாழ்க்கையே இல்லை. நோயும் இருட்டும் தனிமையும் மட்டுமே அவள் வாழ்க்கை. நீர்மை கதையில் வரும் வாழ்நாள் பூராவும் விதவையாக தனிமையில் வாழும் பிராமண மூதாட்டிக்கு இருக்கும் ஒரு “வெளி” கூட, நீர்மை கூட தன் மீது உயிரையே வைத்திருக்கும் கணவனைப் பெற்ற செல்லம்மாளுக்குக் கிடைக்கவில்லை. அவள் வேர் பிடுங்கப்பட்ட பெண். நீர்மையின் விதவைக்கு – குறைந்த பட்சம் – வேர் பிடுங்கப்படவில்லை. விதவையின் பிரச்சினை தேகத்தின் தாபம். அது கதையில் வெளிப்படையாக இல்லை. நீர்மை என்ற ஒற்றை வார்த்தையும் அவளுடைய தீராத குளியலும்தான் அதை நமக்கு உணர்த்துகிறது. செல்லம்மாளுக்கு நோயும் இருட்டும். கூடவே வேரிலிருந்து பிடுங்கப்பட்டு விட்டவள். இந்தத் தனிமைதான் அவள் வாழ்வை சூன்யமாக்குகிறது. ஜுர வேகத்தில் அவள் பிதற்றுவதெல்லாம்தான் (துரோகி, துரோகி) கதையின் முடிச்சு.
இதை இப்போது எழுதும் அளவுக்கு என் உரையில் கொண்டு வந்து சேர்த்தேனா என்று தெரியவில்லை.
பொய்க்குதிரை கதையை இப்போதுதான் படித்தேன். எல்லாம் அவருடைய சொந்தக் கதைதான். மனைவி பெயரைக் கூட மாற்றவில்லை. கமலாதான். அலுவலகத்தில் சம்பளம் போடவில்லை. ஊரெல்லாம் நவராத்திரிக் கொண்டாட்டம். இவர்கள் வீட்டிலோ பட்டினி. கையில் இருந்த ஓரணாவுக்கும் கமலாவுக்கு மல்லிகைப் பூ வாங்கிக் கொள்கிறான். நீங்கள் சொன்ன மாதிரி ரசம் போன கண்ணாடி. கனவின் நிலவு போலும் மென்மையாக இருந்த முத்தம். இதுதான் கதையை வேறோர் தளத்துக்குத் தூக்கிக் கொண்டு போகிறது.
பைலார்க்கஸ் பற்றி எழுதுங்கள்.
இன்னொரு விஷயம். நேற்றைய உரைக்கு ஐம்பது பேர் வருகை. அதில் இரண்டு பேர் பெண்கள். அந்த இரண்டு பேர் கூட என்ன காரணம் என்றால், உங்கள் வீட்டில் மூவருமே இலக்கியவாதிகள். இன்னொரு பெண் வீட்டில் இருவருமே இலக்கிய வாசகர்கள். மற்ற எந்தப் பெண்ணாலும் கலந்து கொள்ள முடியவில்லை என்பதற்குக் காரணம், பெண்ணடிமைத்தனம் என்று நான் சொன்னால் யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அந்தப் பெண்களே கூட. செல்லம்மாள் கதைதான் ஞாபகம் வருகிறது. பெண்களின் வாழ்க்கை ஒரு தங்கக் கூண்டு. அவர்களுக்குத் தங்கள் நேரத்தைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை இல்லை. ஞாயிறு காலையில் ஒரு கணவன் தன் நண்பர்களோடு சினிமாவுக்கோ, கோவிலுக்கோ, பஜனைக்கோ வேறு எந்தக் காரியத்துக்காகவோ போக உரிமை உண்டு. ஆனால் என்னை இன்று காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது வரை விட்டு விடுங்கள், சாரு உரையைக் கேட்க வேண்டும் என்று சொல்ல அநேகம் பெண்களுக்கு உரிமை இல்லை என்றே நினைக்கிறேன். பெண்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. நான் யாரையும் குறை சொல்லவில்லை. வெவ்வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனவே எனக்கு தயவுசெய்து விளக்கங்கள் அனுப்பாதீர்கள். தயவுசெய்து. அது எனக்கு ரொம்ப தர்மசங்கடமாக இருக்கும். நான் பொதுவான சமூக நிலையைச் சொல்கிறேன். ஒரு ஆணுக்கு ஒரு ஞாயிறு காலையில் எதைச் செய்யவும் உரிமை உண்டு. பெண்ணுக்கு இல்லை. 50 ஆண்களில் 2 பேர் மட்டுமே பெண்கள் என்பதில்தான் செல்லம்மாள் கதையின் அடியோட்டம் இருக்கிறது.
சாரு