178. இசை கேட்கும் காலம்

என்னுடைய புதுமைப்பித்தன் உரைகள் இரண்டும் எல்லோருக்கும் வந்து சேர்ந்து விட்டதா?  இல்லையென்றால் எழுதுங்கள்.

பதினெட்டாம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை ஏழு மணிக்கு ஸூமில் என்னைச் சந்திக்க விரும்புபவர்கள் எனக்கு எழுத வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ஏனென்றால், இது ஒரு கலந்துரையாடல் என்பதால் பெரும் கூட்டமாக இருந்தால் யாருமே உரையாடவோ பேசவோ முடியாது.  ஒரு இருபத்தைந்து பேர் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன்.  அதனால் பாஸ்வேர்ட் போன்ற தகவல்களை பொதுவில் வைக்கவில்லை.  வர விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டும் அனுப்புகிறேன்.  வருவதை உறுதிப்படுத்தினால் வசதியாக இருக்கும்.  ஏழு மணிக்கே வர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.  இடையில் வந்து இணைந்து கொள்ளலாம்.  எல்லோரும் விடியோவை ஆன் பண்ணி வைத்திருக்கலாம். ஆன் பண்ண வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு பயனில்லை.  நேரில்தான் சந்தித்திருப்போம்.  கொரோனா காலம் என்பதால் ஸூமில் சந்திக்கிறோம்.  இதில் முகம் காண்பிக்காமல் கலந்து கொள்வது முறையாகாது. ஆனால் ஆடியோவை மட்டும் நீங்கள் பேசும்போது ஆன் பண்ணினால் போதும்.  இல்லாவிட்டால் சுற்றுப்புற சப்தம் இடைஞ்சலாக இருக்கும். கலந்து கொள்ள விரும்புவோர் எழுதுங்கள். 

***

பதினைந்து வயதிலிருந்து சாஸ்த்ரீய சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  1978-இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த காலத்தில் வாரம் இரண்டு முறையாவது நேரிலேயே கச்சேரிகளுக்குப் போய் விடுவேன்.  அங்கு அதெல்லாம் இலவசமாகக் கிடைத்தது.  இங்கே போல் மேட்டுக்குடி சமாச்சாரம் அல்ல.  இங்கே ம்யூசிக் அகாதமி டிக்கட்டே ஐநூறு, ஆயிரம் என்று போகிறது.  இசை கேட்கும் கருவிதான் பதினைந்து வயதிலிருந்து இன்று வரை பிரச்சினை.  ஆனாலும் அது பற்றி நான் இதுவரை பொருட்படுத்தியது இல்லை.  பொழுதுபோக்குதானே என்பதால்.  இனிமேல் அப்படி இருக்க முடியாது போல் இருக்கிறது.  இன்றைய காலகட்டத்தில் இசை என் வாழ்வில் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது. இனி வருங்காலமும் இப்படித்தான் இருக்கும்.  இதுவரை அதிகம் ராக் மெட்டல் இசைதான் கேட்பேன் என்றபடியால் அதற்கு வீட்டில் அனுமதி இல்லை.  ஏனென்றால், அதைக் கேட்டால் அவந்திகாவுக்குக் கடும் தலைவலி வந்து விடும்.  அடுத்தவரை வேதனைப் படுத்தி இசை கேட்பதா என்று நானும் கேட்பதில்லை.  அவளும் இருபத்து நாலு மணி நேரமும் வீட்டிலேயே இருப்பவள் என்பதால் அவள் இல்லாத நேரத்தில் கேட்பது என்ற பேச்சுக்கும் இடமில்லை.  அவளுடைய தந்தையின் மரணத்துக்கே ஒரு மணி நேரத்தில் திரும்பி விட்டாள்.  அந்த ஒருமணி நேரமாவது ஆசுவாசமாக ராக் மெட்டல் கேட்கலாம் என்றால் இரண்டு மணி நேரத்துக்கான வேலையை என்னிடம் ஒப்படைத்து விட்டே போயிருந்தாள்.  வந்ததும் குளிக்க வேண்டும், வெந்நீர் போட்டு வைத்து விடு; நான் குழம்பு வைத்து விட்டேன், நீ சோறு வைத்து விடு; இன்று ஆன்மீக வகுப்பு இருக்கிறது, கடைக்குப் போய் ஸ்வீட்ஸ் வாங்கி வந்து விடு (”நீ வந்த பிறகு போறேம்மா.”  ”ஏன், இப்பவே முடிச்சுடு.  வந்த பிறகு வேற வேலை இருக்கு.”) இதற்கு இடையில் அங்கே அம்மா வீட்டிலிருந்தே போன் வரும். 

“சாரு, இங்கே மழை தூறுது.  அங்கே தூறுதா?” 

“அப்டியா?  மழையா?  இரு, பார்க்கிறேன்…  ஆமா, இருட்டிக்கிட்டு வருது.  இன்னம் தூற ஆரம்பிக்கல.” 

“அப்போ ரொம்ப நல்லது.  காஞ்சுக்கிட்டிருக்கிற துணியை எல்லாம் எடுத்து வச்சிட்டியா?”

”அப்டியா?  துணி காஞ்சுக்கிட்டு இருக்கா?”

“பார்த்தியா?  அதுக்காகத்தான் போன் பண்ணேன்.  அந்தத் துணியையெல்லாம் எடுத்து மடிச்சு வச்சிடு.”

“ஓகேமா.”

ஒரு பத்து நிமிடம் கழித்து மறுபடியும் போன் வரும். 

“சாரு, துணியெல்லாம் மடிச்சு வச்சிட்டியா?”

“ஓ, அப்பொவே மடிச்சு வச்சிட்டனே?”

“எல்லா துணியையுமா?”

“ஆமா? ஏன்?”

”டர்க்கி டவலெல்லாம் இன்னும் காஞ்சு இருக்காதேப்பா.  அதை ஏன் மடிச்சு வச்சே?  அப்புறம் நாறும்.  போய்ப் பாரு.”

“ஆமா, அது இன்னும் முழுசா காயல.”

“அதுல முழுசா காயாததையெல்லாம் உள் கொடில காய வைக்கணும்.”

”சரிம்மா.”

ஐந்து நிமிடம் கழித்து இன்னொரு போன்.

“சாரு, சொல்ல மறந்துட்டேன்.  க்ளிப் போட்டுட்டியா?”

“ஓ, உள்கொடில போட்டாலும் க்ளிப் போடணுமா?”

“ஆமாம்ப்பா, இல்லன்னா கீழ விழுந்து அழுக்காய்டும்ல?”

“சரிம்மா, போட்டுட்றேன்.”

”இதோ நானும் வந்துட்டேன்.  வாசல் கிட்டதான் இருக்கேன்.  வெந்நீரை எடுத்து பாத்ரூம்ல வச்சுடு.”

தந்தை மரணத்துக்காக ஒரே ஒரு மணி நேரம் வெளியே சென்றதற்கே இத்தனை ரகளை என்றால் நான் வீட்டில் எங்கே ராக் மெட்டல் கேட்பது?  இந்த இருவரில் நான் எழுத்தாளன் என்பதால் இத்தனையும் எழுதி விட்டேன்.  அவந்திகா எழுத்தாளர் என்றால், “ஐய்யயோ, ஏன் கேட்கறீங்க.  அப்பாவோட சாவுக்குக் கூட நிம்மதியாப் போய்ட்டு வர முடியாது.  மழை பேஞ்சா துணியை எடு.  ஈரமான துணியை மடிச்சு வைக்காதே.  க்ளிப் போடு.  ஐயோ பெரிய டார்ச்சர்.  இப்படி அவள் ஒரு பாராயணம் எழுதுவாள்.

ஆனால் இப்போது சாஸ்த்ரீய சங்கீதம் என்பதால் சத்தமாகக் கேட்கலாம்.  ஆனால் கேட்கத்தான் வழியில்லை.  ஆயுள் முழுவதுமே அது எனக்கு வாய்க்கவில்லை.  ட்ரான்ஸிஸ்டர் இருந்த போது – பதினைந்து வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை – அது ஒரு அலுமினிய டப்பா – அதில் விரலை வைத்துப் பிடித்துக் கொண்டே இருந்தால்தான் இசை வரும். விரலை எடுத்து விட்டால் புஸ்ஸ்ஸ் என்ற சப்தம்தான் வரும்.  இதில்தான் ரவிஷங்கர் எல்லாம் கேட்டுப் பழகினேன்.  அப்போது சோனி டேப் ரிக்கார்டர் காலம்.  தூரத்திலிருந்து பார்த்ததோடு சரி.  எண்பதுகளில் சங்கீதம் தில்லியின் பல்வேறு அரங்குகளில் நேரடியாக சித்தித்தது.  அப்போது ஊட்டியில் நண்பர் பிரம்மராஜன் கிராமஃபோன் ரெக்கார்ட் ப்ளேயர் வைத்திருப்பார்.  நல்லதொரு இசைத்தட்டு கலெக்‌ஷனும் அவரிடம் இருந்தது.  இன்னமும் வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன்.  பிறகு இரண்டாயிரத்துக்குப் பிறகு கணினியில் குறுந்தகடுகள் மூலம், ஸ்பீக்கர் மூலம்.  இப்போதைய ஸ்பீக்கர் அப்போதைய அலுமினிய ட்ரான்ஸிஸ்டர் மாதிரி கிட்டத்தட்ட.  எப்போதுமே புஸ்ஸ்ஸ் சப்தம்தான்.  அதனால் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக ஐஃபோன் மூலம்தான் சங்கீதம்.  உருப்படியாக இதுவரை ஒரு நல்ல சாதனத்தின் மூலம் சங்கீதம் கேட்டதே இல்லை.  இனி கேட்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  உங்களிடமிருந்து யோசனை வேண்டும்.  சீனியிடம் கேட்கலாம்தான்.  உங்களிடமிருந்து கேட்டு விவரங்களைச் சேகரித்துக் கொண்டு அவரிடம் போகலாம் என்று திட்டம்.  அதற்காக ரஹ்மானின் இசை மையம் மாதிரியெல்லாம் வேண்டாம்.  சாதாரணமாக புஸ்ஸ்ஸ் கிர்ர்ர்ர் எல்லாம் வராமல் நல்லபடியாகக் கேட்க வேண்டும்.  என்ன செய்யலாம்?

இந்த மாத முடிவுக்குள் மடிக்கணினி வாங்கி விடுவேன்.  பணம் அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி.  அசோகாவையும் அதோடு கூடவே எழுதிக் கொண்டிருக்கும் இன்னொரு நாவலையும் முடித்த கையோடு – 2021 இறுதியில் பயணம் கிளம்பலாம் என்று திட்டம்.  கடவுளின் திட்டம் என்னவோ?  2020இல் குறைந்த பட்சம் பத்து நாடுகளுக்காவது போய் விடலாம் என்று நினைத்திருந்தேன்.  உலகமே ஸ்தம்பித்து விட்டது.  என்ன சொல்ல? 

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai