பாதிரியாரான வளன் நேற்றைய பதிவைப் படித்து விட்டு, குடும்பம் என்றால் இத்தனை பிரச்சினை இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் கேட்டான். அவந்திகாவின் version-ஐ அவன் கேட்கவில்லை. அதைக் கேட்டால் இன்னும் பயங்கரமாக இருக்கும். “எழுத்தாளர்களையே கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது. நண்பர்களாகப் பழகலாம். கல்யாணம் மட்டும் பண்ணிக் கொள்ளவே கூடாது” என்பாள். ”கடவுளே மனிதனாகப் பிறந்து ஒரு கணவனாக வாழ்ந்தால் எப்படி வாழ்வானோ அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்தா இப்படிச் சொல்கிறாய்? சரி, அப்படி உனக்கு என்னதான் குறை, சொல்?” என்பேன். ”எப்போது பார்த்தாலும் வெளியூரில் சுற்றிக் கொண்டிருக்கிறாய். வாழ்நாள் பூராவும் நான் தனியாகத்தான் வாழ்கிறேன்.”
”365 நாளில் 330 நாள் வீட்டிலேயே இருந்து வருகிறேன். உனக்கு ஜெயமோகன் மாதிரி இருந்தால்தான் சரியாக வரும். அவர் வருடத்தில் பதினோரு மாதம் உலகத்தைச் சுற்றிக் கொண்டிருப்பார். மீதி ஒரு மாதம் வீட்டில் இருந்தாலும் அப்போதும் எழுதிக் கொண்டுதான் இருப்பார். அந்த மாதிரி ஆளிடம் நீ மாட்டியிருக்க வேண்டும்.”
“ஒரே நாளில் டைவர்ஸ் பண்ணிட்டுப் போயிட்டே இருந்திருப்பேன்.”
ஆக, நீங்கள் எப்படி இருந்தாலும் குறை குறைதான். இப்போது கொரோனா காரணமாக பத்து மாதங்களாக வீட்டிலேயேதான் இருக்கிறேன். இப்போதும் கேட்டால் குறைதான். இருந்து என்ன பயன்? உன்னோடு பேசக் கூட பயமாக இருக்கிறதே? எப்போது பார்த்தாலும் ஏதோ சீரியஸாக டைப் பண்ணிக் கொண்டே இருக்கிறாயே?”
இன்று காலை ஒரு நண்பர் நாளைதானே உங்கள் பிறந்த நாள் என்றார். ”ஆமாம்.” அவருடைய அடுத்த கேள்வி: ”பிறந்த நாளுக்கு உங்களுக்கு என்ன கிஃப்ட் வேண்டும்?” சில ஆண்டுகளுக்கு முன் இதே கேள்வியைக் கேட்ட ராமசுப்ரமணியனிடம் “துருக்கிக்கு ஒரு டிக்கட்” என்று கேட்டதும், தன் மகனின் கல்லூரி அட்மிஷனுக்கு வைத்திருந்த ரூபாயை எடுத்து ஒன்றரை லட்ச ரூபாய்க்கு டிக்கட் மற்றும் பயணச் செலவுக்கான ஓலையை என்னிடம் கொடுத்து விட்டார் என்பதால் மனதில் தோன்றுவதையெல்லாம் சொல்வதை அப்போதே நிறுத்தி விட்டேன். இப்போது கேட்டது ராமின் மனைவி காயத்ரி. ஜாக்கிரதையாக, எனக்கு எதன் மீதும் ஆசை போய் விட்டதே என்று சொல்லி நழுவி விட்டேன். பொய் சொல்லவில்லை. உண்மையும் அதுதான்.
இங்கே இரண்டு விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஒன்று, ஆசைகள் அகன்று விட்டன. இன்னொன்று, நான் பிச்சைக்கார மாறுவேடத்தில் வாழும் பிரபு. பிரபுக்களுக்கு என்ன பரிசு கொடுக்க முடியும்? பிரபுக்களுக்கும் கிடைக்காத பொருட்கள் இருக்கின்றன. எலந்தவடை பிடிக்கும். ஒருநாள் அராத்துவும், மனோவும் என்னைச் சந்தித்த போது என் வீட்டுக்கு வெளியேதான் – மூன்றடி தூரத்தில் நின்றபடி – ”உங்களுக்கு ஏதேனும் தேவையா, வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கவா?” என்று கேட்டார் மனோ. கொரோனா தீவிரமாக இருந்த நேரம். அவர் கேட்டபோது எதுவுமே ஞாபகம் வரவில்லை. முக்கியமாக காஃபிப் பொடிக்கு அல்லாடிக் கொண்டிருந்த நேரம் அது. நான் கோத்தா பிராண்ட் அதுவும் 80 காஃபி – 20 சிக்கரி மட்டும்தான் பயன்படுத்துவேன். இப்படி சிலது உண்டு. இப்போது இதற்கெல்லாம் ஏற்பாடு செய்து விட்டேன்.
முன்பெல்லாம் ஆடை விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். குறிப்பாக லினன். ஒருநாள் ராம்ஜி அழைத்துப் போய் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கான துணிகளை எடுத்துக் கொடுத்தார். சென்ற ஆண்டு. அடுத்த நாளே ராம் அழைத்துக் கொண்டு போய் அதேபோல் வாங்கிக் கொடுத்தார். எனவே இன்னும் நாலு வருடங்களுக்கு ஆடை பற்றிக் கவலை யில்லை.
நேற்று அவந்திகாவின் பிறந்த நாளுக்காக அவள் நண்பர்கள் பலர் வந்து வாழ்த்து சொன்னார்கள். அவர்களில் ஒருவர் ஒரு சாக்லெட் பார் கொடுத்தார். அவந்திகாவோ சாக்லெட் சாப்பிட மாட்டாள். நானோ இந்திய சாக்லெட்டுகளைத் திரும்பியும் பார்க்க மாட்டேன். எனக்கு சாக்லெட் என்றால் உயிர். ஆனால் Lindt பிராண்ட் சாக்லெட் மட்டும்தான் சாப்பிடுவேன். பார்க் ஷெரட்டன் ஓட்டலுக்கு எதிரே உள்ள அம்மா நானாவில் மிண்ட் சாக்லெட் கிடைக்கும். நான் ஒரு சாக்லெட் அடிக்ட் என்பதால் அதற்காகவே அம்மா நானா போய் லிண்ட் சாக்லெட் வாங்கி வருவேன். ஆனால் ஒரு வருட காலமாக வெளியே செல்லாததால் சாக்லெட்டே சாப்பிட முடியவில்லை. நேற்று வந்த அவந்திகாவின் தோழி ஒரு சின்ன பார் கேட்பரீஸ் கொடுத்தார். அடுத்த நிமிடமே அதை எடுத்து என் புத்தக அலமாரி ஒன்றில் ஒளித்து வைத்து விட்டேன். இல்லாவிட்டால் அதை எடுத்து அவந்திகா யாருக்காவது கொடுத்து விடுவாள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இப்போது நாவல் எழுதுவதற்காக நூற்றுக்கணக்கான பக்கங்கள் குறிப்பு எடுக்க வேண்டியிருக்கிறது. அந்தக் குறிப்புகளை கணினியிலேயே சேகரித்து விட்டால் பிறகு அதில் நமக்கு வேண்டியதைத் தேடுவது சிரமமாக இருக்கிறது. என்னதான் தேடுவதற்கான வசதி இருந்தாலும் ஆயிரம் பக்கங்களில் நமக்கு வேண்டிய பகுதியை எடுக்க பக்கங்களை உருட்டிக் கொண்டு கிடக்க வேண்டியுள்ளது. நோட்டுப் புத்தகம் என்றால், சுலபமாகப் புரட்டி விட முடிகிறது. அதனால் எங்கள் குடியிருப்பு மேனேஜரிடம் ஒரு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, கடையையும் சொல்லி விட்டேன். விலை இத்தனை இருக்கும் என்பதையும் சொன்னேன். அந்தக் காலத்து மளிகைக்கடைகளில் கணக்கப்பிள்ளைகள் வைத்திருக்கும் நோட்டுகளில் மூன்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். உள்ளே சாணித்தாள். தூக்கிப் போட்டு விட்டேன். பிறகு ஒரு நண்பரிடம் நல்ல காகிதம் வாங்கித் தரச் சொல்லி அதில் எழுதி வைத்திருக்கிறேன். அது எப்போது இருந்தாலும் தொலைந்து போய் விடும். அடுத்து பேனா. எனக்கு ரேனால்ட்ஸ், யூனிபால் எல்லாம் ஒத்து வராது. நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த புதுமைப்பித்தனே ஷீஃபர் பேனாவில் எழுதுவார் என்றால் நான் குறைந்த பட்சம் வில்லியம் பென்னால் எழுத வேண்டாமா? இருந்தாலும் எளிமை கருதி ஒரே ஒரு வில்லியம் பென்னும், ஒரே ஒரு ஷீஃபரும் வைத்திருக்கிறேன். நேற்றுதான் ஒரு நண்பர் ஷீஃபர் இங்க் வாங்கிக் கொடுத்தார். ஐம்பது மில்லி ஐநூறு ரூபாய். இப்படி இப்போதைய தேவை நல்ல நோட்டும் பேனாவும்தான்.
நாளைய சந்திப்பில் கலந்து கொள்வதற்கான விவரங்களை நான் யாருக்கும் அனுப்பவில்லை. கேட்டு எழுதுபவர்களுக்கு மட்டுமே அனுப்பினேன். அதிலும் உள்வட்டத்து நண்பர்களுக்கு. ஏனென்றால், ஆரம்பத்தில் ஒரு நண்பருக்கு அனுப்பப் போக, அவருக்கு ரொம்பவும் தர்மசங்கடமாகப் போய் விட்டதை அறிந்தேன். அவர் ஒரு சுவாரசியமான உரையாடல்காரர் அல்ல. (அவர் சொன்னது!) மேலும், அவர் வசிப்பது அமெரிக்கக் கிழக்குக் கரை. அங்கே அந்த நேரம் காலை ஐந்து மணி. இவரால் அந்த நேரத்தில் எழுந்து சந்திப்பில் கலந்து கொள்வது ரொம்பக் கடிமம். கலந்து கொண்டாலும் என்ன பேசுவது? நானோ அழைத்து விட்டேன். தட்ட முடியாது. சொல்லவும் முடியாது. ரொம்பவே தவித்துப் போய் பிறகு விலாவாரியாக விளக்கினார். அவர் ஒரு மகாத்மா. என் நண்பர்கள் பதினைந்து பேரில் பதினாலு பேர் மகாத்மாக்கள். ஒரே ஒருவர் சைத்தான். எனக்கு இந்த மகாத்மாக்களை விட சைத்தானைத்தான் ரொம்பப் பிடிக்கும். நாம் எல்லோருமே அப்படித்தானே? அதனால் கலந்து கொள்ள விரும்புபவர்கள் விவரம் கேட்கட்டும் என்று விட்டு விட்டேன். இதுவரை ஒருமுறை கூடத் தொடர்பு கொண்டிராத புதிய நண்பர்களுக்கு விவரம் தரவில்லை. புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். புதியவர்களோடு பேச நான் தயார். ஆனால் சந்திப்பில் கலந்து கொள்ளும் மற்ற நண்பர்களுக்கு அது ஒரு மனத்தடையாகப் போகலாம். ஆனால் தொடர்ந்து என்னோடு தொடர்பில் இருந்து கொண்டிருக்கும் நண்பர்களை அழைத்திருக்கிறேன்.
ah, சொல்ல மறந்து போனேன். cat food மட்டும் எவ்வளவு இருந்தாலும் காணாது போல் தெரிகிறது. தேவை இருந்து கொண்டே இருக்கிறது…
***
என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai