ஒரு முக்கியமான விஷயத்தை எழுத மறந்து போனேன். உங்களுக்கு என்ன வேண்டும், சொன்னால் வாங்கி வந்து கொடுத்து விட்டுக் கிளம்புகிறேன் என்று மனோ கேட்டபோது எதுவுமே ஞாபகம் வரவில்லை. ஆனால் அவர் கிளம்பிய அடுத்த கணம் ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தது. நான் ஒரு தஞ்சாவூர்க்காரன் என்பதால் ஏற்பட்ட பழக்கம். இன்னமும் போகவில்லை. எப்போதும் போகாது. ஏனென்றால், நான் எதற்குமே அடிக்ட் ஆவதில்லை. பயங்கரமான அடிக்ஷன் குணமுள்ள கஞ்சாவுக்கே அடிக்ட் ஆகவில்லை. உணவில் மட்டும் காஃபிக்கும் மீன் உணவுக்கும் அடிக்ட். ஒரு மாதம் தொடர்ந்தாற்போல் மீன் சாப்பிடவில்லையானால் மன உளைச்சலாகி விடும். விவேகானந்தர் அந்த மாதிரி ஐஸ்க்ரீம் அடிக்ட். துறவு வாழ்வில் அவர் கடைசி வரை மாமிசத்தையும் சிகரெட்டையும் விடவில்லை. மாடு, பன்றி இரண்டை மட்டும் தொட மாட்டார். சில பேர் அவரிடம் இந்த இரண்டுக்கும் அடிக்ட் ஆகி விட்டீர்களா, இரண்டும் இல்லாமல் இருக்க முடியாதா என்று கேட்கும் போதெல்லாம் ஓரிரண்டு மாதம் இரண்டும் இல்லாமல் இருந்து காண்பிப்பார். மற்றபடி நோன்பு மற்றும் தவ காலங்களில் இரண்டையும் தொட மாட்டார். “ஆனால் ஐஸ்க்ரீம் இல்லாமல் மட்டும் என்னால் வாழவே முடியாது. அதற்கு நான் அடிக்ட்தான். என் துறவு வாழ்வில் எதை வேண்டுமானாலும் துறப்பேன், ஐஸ்க்ரீமைத் துறக்க முடியாது” என்பாராம் சிரித்துக் கொண்டே.
எனக்கு மீனும் காஃபியும். மற்றபடி போதை வஸ்துக்களுக்கு நான் அடிக்ட் இல்லை. வெற்றிலை பழக்கம். வேண்டும் என்று இல்லை. பிடிக்கும். ஒரு நாளில் ஒரே ஒரு முறை போடுவேன். மதிய உணவுக்குப் பிறகு. என் வெற்றிலைப் பழக்கம் என் நெருங்கிய நண்பர்களுக்கே கூடத் தெரியாது. வட இந்தியப் பானும் ரொம்ப இஷ்டம். ஆனால் மீட்டா பானைத் தொடவே மாட்டேன். தம்பாக்கு பான் சாப்பிட்டால் உடனே வாந்தி எடுத்து விடுவேன். புகையிலை எந்த ரூபத்திலும் பிடிக்காது. புகையிலை சேர்க்காத சாதா பான் ரொம்ப இஷ்டம். இங்கே நுங்கம்பாக்கத்தில் கண்பத் ஓட்டல் வாசலில் உள்ள பெங்காலி கடையில்தான் சென்னையின் சிறந்த பான் கிடைக்கிறது. ராம்ஜி அறிமுகப்படுத்திய இடம். சாப்பிட்டு இரண்டு ஆண்டுகள் இருக்கும். இங்கே என் வீட்டுக்கு எதிரே ஒரு கடை வந்துள்ளது. அங்கே அவ்வப்போது வாங்கிச் சாப்பிடுவேன். அவந்திகாவுக்கு மீட்டா. எனக்கு சாதா. என் வெற்றிலை ஆசையைப் பார்த்து அப்பு தெரு தனி வீட்டில் அவந்திகா வெற்றிலைக் கொடி வைத்தாள். மிகச் செழித்து வளர்ந்து எனக்கு உரம் ஊட்டியது. பத்து ஆண்டுகள். இங்கே வந்த பிறகு வைத்தோம். தொட்டியில் வளர்வதாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தாலோ செழிப்பு இல்லை. ரொம்ப சவலையாக உள்ளது. இலை பறிக்க முடியவில்லை. வெற்றிலை போட்டு ஒன்பது மாதம் இருக்கும்.
சென்ற வாரம் ஒருநாள் ஜேம்ஸிடம் சொல்லி வாங்கி வர சொன்னேன். ஜேம்ஸ் எங்கள் வாட்ச்மேன். எந்தக் காரியத்தையும் சொதப்புவது அவர் வழக்கம். போய் பானுக்குப் போடும் காட்டு வெற்றிலையை பத்து வாங்கி வந்தார். அடக் கடவுளே, இதை எங்கே வாங்கினீர் என்று கேட்கவில்லை. பான் வெற்றிலையை அதற்கு உரிய தளவாடங்களோடு மட்டுமே போட முடியும். அதெல்லாம் பான் கடையில்தான் இருக்கும். பான் வெற்றிலையை வெறும் சுண்ணாம்பு மட்டும் தடவி பாக்கோடு மடித்து சாப்பிட முடியாது. அதற்கான paraphernalia இல்லாமல் விழுங்கவும் முடியாது. நாக்கிலேயே அரையும். துப்பத்தான் வேண்டும். காட்டு உறைப்பு உறைத்தது. நாக்குத் தடித்துப் போனது. நான் போடுவது கொழுந்து கும்பகோணம் வெற்றிலை. கபாலி கோவில் சன்னிதியும் தெற்கு மாடவீதியும் சந்திக்கும் இடத்தில் கிடைக்கும். இல்லாவிட்டால் எல்லா பெட்டிக் கடைகளிலும் கிடைக்கும். இந்த சிகரெட் காலத்தில் யாரும் வெற்றிலை போடுவதில்லை என்றாலும் வெற்றிலை ஒரு மங்கலப் பொருளாக விளங்குவதால் வெற்றிலை இல்லாத பெட்டிக் கடையே இல்லை.
சுண்ணாம்பு? அது ஒரு தனிக் கதை. எப்போதோ முன்பு வாங்கி வைத்த சுண்ணாம்பு கெட்டி தட்டிப் போய் பல காலம் ஆகிறது. கெட்டி தட்டாமல் அதில் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. இப்போது அதை கத்தியால் கீறிக் கீறி வெற்றிலையோடு கலந்து கொள்கிறேன். அந்தக் காலத்தில் வெற்றிலை போடும் பாட்டிகள் சுண்ணாம்பு இல்லாமல் சுவரில் உள்ள காரையைச் சுரண்டு போட்டுக் கொள்வார்கள். அதுதான் இந்தக் கெட்டி தட்டிய சுண்ணாம்பைப் பார்க்கும் போதெல்லாம் ஞாபகம் வரும். மனோ கேட்டபோது ஒரு சுண்ணாம்பு டப்பாவும் அஞ்சு ரூபாய்க்கு வெற்றிலையும் வாங்கி வர சொல்லியிருக்க வேண்டும். அவர் கேட்டபோது மறந்து விட்டது. இந்தக் காலத்திலும் அஞ்சு ரூபாய்க்குக் கை நிறைய கிடைக்கும் ஒரே பொருள் வெற்றிலைதான்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இப்படி ஒரு கடிதம் வந்தது.
Dear Charu,
Here is (in advance) Wishing you a Very Happy Birthday. My belated Birthday wishes to Madame.
I have personally observed & benefitted from one of your standout dimensions in which, You have been an inspiration & I shall summarize the characteristics as follows(typically this is what is expected from an Corporate Employee):-
1) Listen & Learn
2) Un-learn, Update & Re-learn
3) Acquire Knowledge & Transfer Wisdom
Had you been an corporate employee, you would be a celebrated CEO!. Thanks once again for what you are doing & once again wishing you (in advance) a very Happy Birthday!
Note:- kindly please accept a small token of my gratitude. I have transferred the same to your ICICI bank A/C today.
Stay Safe. Stay Healthy!
With Warm Regards,
Suryanarayanan.R
நண்பர் சூர்யநாராயணனுக்கு என் நன்றி. நான் ஸாஃப்ட்வேரில் மட்டும் இருந்திருந்தால் நிச்சயம் உலகப் புகழ் பெற்றிருப்பேன் என்பதை நானும் உணர்கிறேன். ஆன்மீகமும் அப்படியே. தில்லியில் பத்து வருட காலம் ஸ்டெனோவாக இருந்தபோது அதிகம் பேரால் – sought after என்று சொல்வார்கள் இல்லையா, அப்படித்தான் இருந்தேன். இந்திரா காந்தியின் பர்ஸனல் ப்ராஞ்சுக்கு ஒரு திறமையான தென்னிந்திய ஸ்டெனோவாக என்னை அனுப்ப எண்ணினார் அப்போதைய தில்லி கவர்னர் ஜக்மோகன். நான் தான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஓடி வந்து விட்டேன். அலுவலக வாழ்வில் மிகவும் துன்பப்பட்ட காலம் தபால் இலாகா. யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை. எனக்கும் யாரையும் பிடிக்கவில்லை. அந்த சூழலே மிகவும் அருவருப்பாக இருந்தது. ஆனால் தில்லி அலுவலகச் சூழலை நான் மிகவும் ரசித்தேன். அங்கே நான் ஒரு தாதாவாக இருந்தேன்.
இப்போதைய ஸாஃப்ட்வேர் துறையில் தேவைப்படுவது புதிய அணுகுமுறை. முற்றிலும் புதிய அணுகுமுறை. Innovation. இன்றைய இளைஞர்களிடம் புத்தி இருக்கிறது. கல்பனா சக்தி இல்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு கல்லூரி மாணவன் என்னிடம் ஒரு யோசனை கேட்டான். என் நண்பன். பொறியியல் படிக்கிறான். ப்ராடிஜி என்று சொல்லும் அளவுக்குப் புத்திசாலித்தனம் கொண்டவன். புத்தகத்தையே படிக்காமல் பாடம் கேட்டதை வைத்தே மதிப்பெண் வாங்கும் அளவுக்குக் கல்லூரியில் பிரபலமானவன். ரொம்ப புத்திசாலி என்று சக மாணவர்களால் சொல்லப்படுபவன். அங்கிள், ஒரு பிராஜக்ட் பண்ண வேண்டும். உங்கள் உதவி தேவை என்றான். அப்போது நான் தலை போகிற அவசரத்தில் எதையோ எழுதிக் கொண்டு இருந்தேன். ஒரு வாரத்துக்கு நகர முடியாது. வருகின்ற போன் அழைப்புகளைக் கூட எடுத்துப் பேச முடியாத நிலை. பேசிய நாள் செவ்வாய்க்கிழமை. பிராஜக்ட் கொடுக்க வேண்டிய நாள் திங்கள் கிழமை. சரி, நான் உன்னை சனிக்கிழமை அழைக்கிறேன் என்று சொல்லி வைத்து விட்டேன். மண்டைக்குள் சனிக்கிழமை ஓடிக் கொண்டே இருந்தது. சனிக்கிழமை அழைக்க முடியவில்லை. மெஸேஜுக்கு மெஸேஜ் வந்தது. நானோ ராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். சரியாகத் தூங்கக் கூட இல்லை. காலையில் நான்கு மணிக்கு மெஸேஜ் பண்ணினேன். அப்போதுதான் எழுந்து சுறுசுறுப்பாக இருந்தேன். அவன் உடனே பதிலுக்கு “உங்களை அழைக்கலாமா?” என்றான். அடப்பாவி, அதுக்குள் எழுந்து விட்டாயா என்றேன். அட நீங்க வேறே, நான் இன்னும் தூங்கவே இல்லை என்றான். சரி, என்ன விஷயம்?
விஷயம் இதுதான். பெருநகரங்களில் வீட்டுப் பிரச்சினையை சமாளிப்பது எப்படி என்பதே ப்ராஜக்ட். அதாவது, மக்கள் தொகை அதிகரித்து விட்ட பெருநகரங்களில் வீடு என்ற வசிப்பிட நெருக்கடியை எப்படி சமாளிப்பது? அதிலும் மிகக் குறிப்பாக, ஏழை பாழைகள். இது சம்பந்தமாக இணையத்தில் தேடினால் விளிம்புநிலை மக்களின் சோகங்களையே நூற்றுக்கணக்கான பேர் எழுதிக் குவித்திருக்கிறார்கள். என்ன தீர்வு அங்கிள்?
அடப்பாவி. எனக்கு இது என்னடா தெரியும்? என்று நினைத்தபடி “சரி, பிறகு கூப்பிடுகிறேன்” என்று வைத்து விட்டேன். கூகிளில் how the housing crisis was solved in Hong kong city என்று ஒரு கேள்வியைப் போட்டேன். லட்டு லட்டாக ஏகப்பட்ட விஷயங்கள் வந்தன. இதற்கு எனக்கு பத்து இருபது நொடிகளே ஆயின. லிங்கை அவனுக்கு அனுப்பினேன். அதோடு சத்தமே இல்லை. செவ்வாய்க்கிழமை வாக்கில் அவனுக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினேன். என் தகவல் ஏதாவது உதவியதா? அல்லது மொக்கையா? உன் பிராஜக்ட் என்ன ஆனது?
ஐயோ, அங்கிள். என்னத்தைச் சொல்ல? அப்படியே அல்வா மாதிரி கொடுத்து விட்டீர்கள் அங்கிள். ஒரு மணி நேரத்தில் பிராஜக்டை முடித்து அனுப்பி விட்டேன். கோடி கோடி நன்றி அங்கிள்.
சரி, உனக்கு ஏன் இந்த லிங்க் கிடைக்கவில்லை?
அட நீங்க வேற அங்கிள். ஒரு வாரமா தேடுறேன். திரும்பத் திரும்ப ஏழைகளின் பிரச்சினையையே சொல்லிச் சொல்லி அழுகிறார்களே ஒழிய தீர்வே கிடைக்கவில்லை. கடவுளாக வந்து காப்பாற்றினீர்கள்.
எப்படித் தீர்வு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நானே ஒரு அரைகுறை. அப்படிப்பட்ட அரைகுறைக்கே பத்து நொடியில் பதில் கிடைத்து விட்டது. நீங்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் – உதாரணமாக, ஃப்ரெஞ்ச் இலக்கணத்தில் ஒரு விஷயம் – ஐந்து முறை சொல்கிறீர்கள். எனக்குப் புரியும். ஒரே மணி நேரத்தில் ப்ளாங்க் ஆகி விடும். ஆனால் இந்தப் பையனுக்கு ஒரே தடவை சொல்கிறீர்கள். பத்து வருடம் கழித்துக் கூட திருப்பிச் சொல்வான். ஆனால் என்னால் பத்து நொடியில் தீர்க்கக் கூடிய ஒரு சப்பை மேட்டரை அவனால் தீர்க்கவே முடியவில்லை.
இதில்தான் இன்றைய இளைய தலைமுறையின் பிரச்சினையே இருக்கிறது. இன்னொன்றையும் கவனித்தீர்களா? தேவைப்பட்ட போது எத்தனை முறை வேண்டுமானாலும் மெஸேஜ் கொடுக்க முடிந்த அவனால் காரியம் முடிந்ததும் அது தனக்கு உதவியதா, பிராஜக்ட் கொடுத்தானா என்ற தகவலைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை. நன்றி தெரிவிக்க வேண்டாம். அவன் என் குடும்பம். ஆனால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை டிஸிப்ளின் கூட இல்லை. நானாகத்தான் ஆர்வம் தாங்க முடியாமல் கேட்க வேண்டியிருந்தது. அடித்துச் சொல்கிறேன், இவன் இன்னும் பத்தாண்டுகளில் ஒரு நிறுவனத்தில் சி.இ.ஓ.வாக இருப்பான். அதனால்தான் சொல்கிறேன், நான் ஒரு உலகப் புகழ் பெற்ற ஸாஃப்ட்வேர் ஆளாக இருப்பேன். நாராயண மூர்த்தி மாதிரி. ஒரு சிறிய கல்பனா சக்திதான் வேண்டும். அது இப்போது இல்லை. குதிரைக்குச் சேணம் கட்டிய மாதிரி ஒரே மாதிரி யோசிக்கிறார்கள்.