அன்புள்ள சாரு,
உங்களது புதிய வாசகன் நான்.
உங்களது எழுத்திற்கும் எனக்குமான தொடர்பு “விருப்பு மற்றும் பதற்றத்திலிருந்து விருப்பிற்கு” என்பதாகிய ஒரு தொடர்பாகும்.
உங்களது எழுத்தைப் படித்தவுடன் பின்வரும் இரு நிலைகளில் ஏதோ ஒன்றையே நான் எட்டுகிறேன்.
ஒன்று: படித்தவுடன் விருப்பம் கொள்வது / பிடித்துப் போவது
இரண்டு: படித்தவுடன் ஒருவாறான பதற்றத்திற்கு உள்ளாகி, ஏன் இப்படி எழுதுகிறார் எனும் உணர்வு தோன்றும். பின்னர் அது குறித்த சிந்தனை எழும். நம்முடைய பிரச்சினையைத் தானே எழுதுகிறார் அல்லது நம்மை சுற்றி இருப்போரின் பிரச்சினையைத் தானே எழுதுகிறார் என்ற எண்ணம் தோன்றும். பதற்றமின்றி மீண்டும் படிக்கும் நிலை அமையும், அதன் பின்னர் அவ்வெழுத்தில் விருப்பம் வரும் / பிடித்துப் போகும்.
இந்த இரண்டாம் நிலை ஏற்படக் காரணம், படிக்கவோ எழுதவோ பேசவோ கூடாது என வரையறுக்கப்பட்டவைகளையும் உங்கள் எழுத்து கொண்டுள்ளது. அதற்கும் மேலாக அதை எந்த ஒரு பாசாங்கும் இல்லாமல், உண்மையை உண்மையாய் நீங்கள் எழுதிச்செல்வது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் தரும் உண்மையை பெற்றுக்கொள்ள ஏதுவாக, வாசகனாகிய என்னைத் தயார்படுத்திக்கொள்ள சிறிது நேரம் தேவைப்படுகிறது. இதுவே இந்த இரண்டாம் நிலைக்கு காரணம்.
மேலும் அந்தப் பாசங்கற்ற உண்மைத்தன்மையே உங்களை “அன்புள்ள சாரு” என்று உண்மை அன்போடு அழைக்கும் ஒரு நெருக்கத்தையும் தருகிறது.
எப்படி இருப்பினும் இவ்விரு நிலைகளும் உங்கள் எழுத்தின் மீதான விருப்பு என்பதிலேயே நிறைவு பெறுகிறது.
உங்கள் புத்தகங்களை வாங்கிப்படிக்கவும், உரைகளை கேட்கவும், Charuonline படிக்கவும் கடப்பாடு கொண்டுள்ளேன்.
உங்களது பிறந்த நாளில் எல்லாம் வல்ல இறைசக்தி உங்களுக்கு பரிபூரண ஆசி வழங்கப் பிரார்த்திக்கிறேன்.
அன்புள்ள
கணநாதன். க