1.

எதையெல்லாம் நீ துறக்கிறாயோ…

புத்தாண்டில் எழுதும் முதல் கட்டுரை.  கிருமி முற்றாகப் போகவில்லை என்றாலும் நாம் பூச்சியை முடித்து விடுவோம்.  இதற்கு வேறு ஏதாவது ஒரு தலைப்பு வைக்க  வேண்டும்.  அதுவரை எண்கள்.

சென்ற ஆண்டு நிறைய எழுதியவர்களில் என்னையும் சேர்த்திருந்தார் பா. ராகவன்.  சந்தோஷமாக இருந்தது.  ஆனால் வேறொரு விஷயத்தை நான் உங்களுக்கு இதுவரை சொல்லவில்லையே என நினைத்து சற்று என் மீதே வருத்தமாகவும் இருந்தது.  நான் எழுதிய பூச்சி அனைத்தும் நான் ஈடுபட்ட வேலையிலிருந்து ஓய்வு நேரத்தில் எழுதியவை.  ஓய்வு என்றால் வேலைக்கு நடுவே இன்னொரு வேலையைச் செய்வது.  அதுதான் ஓய்வு.  அப்படியானால் பிரதான வேலை என்ன?  அசோகாவுக்குக் குறிப்புகள் எடுத்தது.  இன்னொரு நாவலுக்காகப் படித்தது.  இசைக் குறிப்புகளுக்காக சுமார் ஆயிரம் பக்கங்கள் எழுதி வைத்திருப்பது.  இது எல்லாமும் பிரதான வேலையில் சேர்த்தி இல்லை.  பிறகு நான் செய்த பிரதான வேலைதான் என்ன? இப்போது சொல்லி விட வேண்டியதுதான்.  அவர் என் பெயரைச் சேர்த்திருக்காவிட்டால் இதை இங்கே எழுதியிருக்க மாட்டேன்.  (என்னடா இது, இந்த ஆளோடு பெரிய வம்பாகப் போயிற்று? பெயரைப் போட்டாலும் பிரச்சினை பண்றார்,  போடா விட்டாலும் பிரச்சினை பண்றார் என்று நினைத்துக் கொள்வார் ராகவன்.  இருந்தாலும் எல்லாம் நல்லதுக்குத்தான்!)  ஏப்ரல் 2020இலிருந்து செப்டம்பர் வரை தினமும் எட்டு மணி நேரம் ஒரு நாவல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தேன்.  அது சந்தர்ப்பவசத்தில் என் மீது விழுந்த வேலை.  நானாக எடுத்தது அல்ல.  தென்றல் சிவகுமார் மொழிபெயர்த்திருந்த The Valley of Masks என்ற நாவலின் தமிழ் வடிவத்தில்தான் அப்படி மூழ்கினேன்.  தருண் தேஜ்பால் எழுதியது.  என் நண்பன் என்பதால் ஈடுபட்டேன்.  முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்பது தமிழ் மொழிபெயர்ப்பின் தலைப்பு.  தென்றல் சிவகுமார் போட்டிருந்த கட்டுமானத்தில் அடுத்த கட்ட பணியாக அது அமைந்தது.  ஒரு நாள் கூட விடாமல் ஆறு மாத காலம் தினமும் எட்டு மணி நேரப் பணி.  மொழிபெயர்ப்பு என்பது ஹராகிரி.  அப்படித்தான் இருந்தது.  ஆனாலும் நிறைய கற்றுக் கொண்டேன்.  நிறையவே கற்றேன்.  விழி பிதுங்கும்போது பூச்சி எழுதினேன்.  குடிக்கவும் முடியாது.  பைத்தியம்தான் பிடிக்கவில்லை.  இந்த இரண்டாவது கட்டப் பணி முடிந்ததும் மூன்றாவது கட்டமாக நானும் காயத்ரியும் ஸூம் மூலம் வாரம் மூன்று தினங்கள் முறை மூன்று மணி நேரம் என்று செப்பனிட்டோம்.   இப்படி ஒரு மூன்று மாதம் ஓடியது.  இப்போது நான்காம் கட்டமாக இறுதிப் படிவத்தை காயத்ரி மட்டுமே அமர்ந்து மூலப் பிரதியோடு ஒப்பிட்டு சரி பார்த்து செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்.  சில இடங்களை முற்றாகவே மாற்ற வேண்டியிருந்தது என்றார்.  இது நான்காம் கட்டம்.  இப்படிக் கிடைத்த படிவம் -4ஐ நான் இறுதியாகச் சரி பார்த்தேன்.  இது 5-ஆம் கட்டம்.  இதை நான் மூலப் பிரதியோடு ஒப்பிடவில்லை.  அதைத்தான் காயத்ரி செய்து விட்டாரே?  நான் செய்தது தமிழ்ப்  பிரதியை மட்டும் சரி பார்ப்பது.  இது 5-ஆம் கட்டம்.  பிறகு நான் சரி செய்ததை – 6-ஆம் கட்டமாக நானும் காயத்ரியும் படித்துப் பார்த்து அச்சுக்கு அனுப்பத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.  அந்த ஆறாம் கட்டம்தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.  இன்னும் ஓரிரு வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களில் முகமூடிகளின் பள்ளத்தாக்கு உங்கள் கரங்களில் தவழும்.  இந்த நாவல் பற்றி ஒரே ஒரு விஷயம்தான் உங்களிடம் சொல்ல வேண்டும்.  என் வாழ்நாளில் நான் படித்த மிக அடிப்படையான மூன்று நாவல்கள் என்று கேட்டால் அதில் ஒன்றாக முகமூடிகளின் பள்ளத்தாக்கைச் சொல்வேன்.  மற்ற இரண்டு: கஸார்களின் அகராதி, The Blinding Absence of Light.  முகமூடிகளின் பள்ளத்தாக்கு வெளிவரும் வரை வாயே திறக்கக் கூடாது என்று இருந்தேன்.  ஆனால் ராகவனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.    

நான் நிம்மதியாகத் தூங்கி ஐந்தாறு ஆண்டுகள் இருக்கும்.  குடியை விட்டதுமே தூக்கமும் போயிற்று.  அதற்காகத் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறேன் என்று அர்த்தம் அல்ல.  இன்னமும் படுத்த அடுத்த நிமிடம் உறக்கத்தில் சென்று விடுகிறேன்.  ஆனால் உறக்கத்தின்போது ஒரு வேலைதானே நடக்க வேண்டும்?  எனக்கு  இரண்டு வேலைகள் நடக்கின்றன.  உறக்கம் தவிர, மன உலகம் அது பாட்டுக்குத் தன் போக்கில் ஏதாவது ஒரு கதையை எழுதிக் கொண்டும், கல்பனா ராஜ்ஜியத்தை எழுப்பிக் கொண்டும் தனிக்காட்டு ராஜாவாக இயங்குகிறது.  ஒரே ஒரு இரவு பற்றி பூச்சியில் எழுதினேன்.  அது ஒரு நண்பனை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி பெரிய பிரச்சினை ஆகி அந்தப் பதிவையே நீக்க வேண்டியதாகி விட்டது.  கனவுக்கு தர்க்கம் கிர்க்கமெல்லாம் இருக்கிறதா என்ன?  அந்த அனுபவத்திலிருந்து கனவுகளைப் பற்றி எழுதுவதை நிறுத்தி விட்டேன்.  முந்தாநாள் கண்ட கனவை எழுதினால் என்னைத் தூக்கில் போட்டு விடுவார்கள். 

ஆனால் ஒன்று, பயணம், எழுத்து ஆகிய இரண்டைத் தவிர மற்ற எல்லாமும் என் மனதை விட்டு அகன்று விட்டன.  கனவுக்கு நான் பொறுப்பு அல்ல.  மேலும், என் கனவுகளினால் யாருக்கும் பாதகமும் இல்லைதானே? எழுதினால்தானே வம்பு?  எழுதாவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. 

இந்த இடத்தில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் என் மானசீக குருவான விமலானந்தரின் ஞாபகம் வருகிறது.  அகோரா நூலில் ராபர்ட் ஸ்வபோதா விவரிக்கிறார்.  விமலானந்தர் பற்றி இரண்டொரு வார்த்தைகள் எழுதியிருக்கிறேன்.  அகோரி.  பூரணத்துவம் அடைந்த அகோரி.  இருந்தும் அவரது ஜனனேந்திரியம் சில சமயங்களில் விறைப்பு நிலை அடைந்து விடும்போது பச்சை மிளகாயை அரைத்து அதில் தடவி விடுவதாக ராபர்ட்டிடம் சொல்லியிருக்கிறார் விமலானந்தர்.  ஒருவேளை அவர் அகோரியாக மாறுவதற்கு முன்னால் அவருடைய இளம் வயதில் நடந்திருக்கலாம்.  நாம் செய்தால் மரணம்தான்.  அகோரிகளை எதிலுமே அடக்க முடியாது. 

வேலை மிகுதியால் இன்று நடக்க இருந்த தி. ஜானகிராமன் பற்றிய உரை இருக்காது.  தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.  இது பற்றி விசாரித்த கிருஷ்ணமூர்த்திக்கு என் அன்பும் பிரியமும். 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பெண்கள் பலர் என் எழுத்தை வாசிப்பதாக அவர்கள் எழுதும் கடிதங்களிலிருந்து தெரிகிறது.  என் மின்னஞ்சல் முகவரி எப்படிக் கிடைத்தது என்றால் கூகிள் என்கிறார்கள்.  ஒரு பெண்மணி ஏழெட்டு கட்டுரைத் தொகுதிகளைப் படித்திருக்கிறார்.  அடுத்து ஸீரோ டிகிரி படிக்கப் போவதாகச் சொன்னார்.  அந்த நாவல் ஒரு cult status அடைந்து விட்டது அல்லவா, அதன் விளைவு.  எடுத்த எடுப்பில் என் புனைவுகளுக்குள் நுழையாதீர்கள் அம்மணி என்றேன்.  அதற்கு அவர் இப்படி எழுதியிருந்தார்:

I just believe every single word of your writing is true…else u can’t write like this…u r not writing….just speaking to us from your heart….that trust only makes me enjoy your writings…

எமன் நசிகேதனுக்கு உபதேசித்த ஒரு வாக்கியம் எனக்கு திடீரென்று ஞாபகம் வருகிறது:

எதையெல்லாம் நீ துறக்கிறாயோ அது எல்லாம் உன் வசமாகும்.   

***

என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள்.  மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai