கடந்த ஒரு ஆண்டாக பிரபலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு நாவலைப் படிக்க எடுத்தேன். பின்னட்டையிலேயே தப்பு. முருகண் என்று வருகிறது. ஒரு எழுத்தாளரின் பெயரை இப்படி முருகண் என்று போட்டிருக்கிறார்கள். அந்த நாவலை எழுதியவர் முருகண் அல்ல. அவர் வேறு. அவர் பெயரில் தப்பு செய்யவில்லை. என்ன ஆகிறது என்றால், இப்படி அட்டையிலேயே தப்பு இருந்தால் உள்ளே எப்படி இருக்கும் என்று பயம் உண்டாகி விடுகிறது. இருந்தாலும் நாவலைப் படித்து விடுவேன். வலுவான சிபாரிசு. எதையும் சுலபத்தில் பாராட்டாத ஆத்மா அந்த நாவலைப் பாராட்டிச் சொல்லியிருக்கிறது.
இதற்கிடையில் இப்போது ஒரு ஐந்து நிமிடம் முன்னர் ஒரு குறுநாவல் படித்தேன். அட அடா… என்ன ஒரு அற்புதமான அனுபவம். அசந்து விட்டேன். படித்துப் பாருங்கள். உங்களையும் உலுக்கக் கூடிய குறுநாவல். இந்தக் குறுநாவலை யாருமே நன்றாக இல்லை என்று சொல்ல மாட்டார்கள். அப்படியான ஒரு கதை. எனக்கு ஜெகனை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளை அழகாக மொழிபெயர்ப்பவராக. பிறகு ஏதோ அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான இருந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கெல்லாம் அவர்தான் வசனம். அதெல்லாம் எனக்குத் தெரியாத உலகம். அப்படி வசனம் எழுதிய முதல் ஆள் அவராகத்தான் இருக்க வேண்டும். டிவி தமிழ்நாட்டுக்குள் வந்தவுடன் எழுதிய முதல் வசனகர்த்தாவாக இருக்க வேண்டும். அதெல்லாம் முக்கியம் அல்ல. இந்தக் குறுநாவல் முக்கியம். ஜெகனை அதன் பிறகு நான் பாலகுமாரனோடு பார்த்ததாக ஞாபகம். அவருக்குள் இப்படி ஒரு அசுர இலக்கியவாதி இருப்பது இப்போதுதான் தெரிகிறது. அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சரி, இப்படி ஒரு நல்ல விஷயத்தைச் சொல்வதற்கு முன்னால் ஏன் ஆரம்பத்தில் அந்த எழுத்துப் பிழை பற்றிச் சொன்னேன்? இந்தக் குறுநாவலிலும் ஏகப்பட்ட அச்சுப் பிழைகள். அதையெல்லாம் தாண்டித்தான் படித்தேன். கதை அப்படி உள்ளே இழுக்கிறது. இவ்வளவு அச்சுப் பிழைகள் தாங்காது. பிழைகளைத் திருத்தும்படி பத்திரிகை ஆசிரியரைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு பக்கம் எழுத்தாளன் உயிரை விட்டு எழுதிக் கொடுக்கிறான். அதை இப்படிக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிக் கொடுக்கிறீர்களே, நியாயமா?