தமிழ்நாட்டில் செக்ஸ் ஸ்டார்வேஷன் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஃபிலாசஃபி ஸ்டார்வேஷனும் இந்த அளவுக்கு இருந்திருக்கிறதா என்கிற அளவில் பிய்த்துக் கொண்டு போகிறது அபிலாஷின் நாகார்ஜுனா தத்துவ விவாதம். அபிலாஷ் நாகார்ஜுனரின் Mulamadyamakakarika என்ற நூலைப் பற்றி தினமும் அரை மணி நேரம் உரையாற்றப் போகிறேன் என்று சொன்னதும் புத்தாண்டு தினத்தில் ஏன் இந்த சோகச் செய்தி என்றே முதலில் நினைத்தேன். முதலில் அந்த நூலின் பெயரையே சரியா உச்சரிக்க வராதே? சம்ஸ்கிருதத்தில் பிரித்துப் பிரித்துப் போட மாட்டார்கள். தமிழில்தான் அது. மூல மத்ய மகா காரிகா. அபிலாஷும் பின்னிப் பெடலெடுக்கிறார். அபிலாஷை விட சிறப்பாக இந்த மூல மத்ய மகா காரிகாவுக்கு இத்தனை லகுவாக விளக்கம் சொல்ல முடியாது. இதை விடச் சிறப்பாக விளக்கம் சொல்பவர்கள் இருப்பார்கள். நான் சொல்வது லகுத்தன்மை. இத்தனை சுலபமாக.
இலக்கியம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறார்கள், இதில் தத்துவத்தின் பக்கம் யார் வரப் போகிறார்கள் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் முதல் அபிலாஷின் நாகார்ஜுனா உரைக்கு கூட்டம் அலை மோதுகிறது. சந்தேகமெல்லாம் கேட்கிறார்கள். அபிலாஷையே மடக்குகிறார்கள். நாடு திருந்திதான் விட்டது போலிருக்கிறது. எனக்குத்தான் தெரியவில்லை.
சரி, இப்போது அபிலாஷுக்கு ஒரு வேண்டுகோள். இப்போது இந்தத் தத்துவ உரைகள் செம சக்ஸஸாகி விட்டதால் அபிலாஷின் பின் பகுதி இடம் சும்மாதானே இருக்கிறது? அதில் சில புத்தகங்களை விளம்பரமாக வைத்து அதற்கு வேண்டிய கட்டணத்தை வசூலித்து விடலாம் இல்லையா? முதலில் நான் என்னுடைய தாந்தேயின் சிறுத்தை நூலை விளம்பரத்துக்குத் தருகிறேன். ஒரு நாள் டிஸ்பிளேவில் வைக்க ஆயிரம் ரூபாய் தருகிறேன். குறைவுதான். ஆனால் அதற்கே நான் ஸ்பான்ஸர்தான் பிடிக்க வேண்டும். ஸ்பான்ஸர்ஷிப் நிறைய கிடைத்தால் இதை ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று வைக்கலாம். அல்லது, கோக் போன்ற பானங்கள், பியர் ஒய்ன் போன்ற மதுபான வகைகள், சினிமா விளம்பரங்களும் வைத்தால் லட்சக்கணக்கில் வருமானம் வரும். அபிலாஷ் ஒரு மகாத்மா. அதிலும் நல்ல வேலையில் இருப்பவர். அதனால் எனக்குப் பணம் தேவையில்லை என்பார். தேவையில்லைதான். ஆனால் என்னைப் போன்ற ஏழை எழுத்தாளர்கள் பலர் உளர். அவர்களின் நல்வாழ்வுக்கு அதை அவர் பயன்படுத்தலாம். விளையாட்டு அல்ல, சீரியஸ்.
https://www.facebook.com/abilash.chandran.98/videos/10219551421320775