ஜெயமோகனின் வாசகர்களுக்கு…

அன்புள்ள சாறு,

தங்களின் எந்த புத்தகத்தையும் படித்தது இல்லை . புத்தக கண்காட்சியில் தங்களை பார்த்தும், முகத்தை திருப்பி கொண்டுபோனவன் நான். பாலகுமாரனில் தொடங்கி, ஜெயகாந்தன், சுஜாதா, தி. ஜா, ஜெயமோகன், லியோ டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, அமி  என்று எல்லோரையும் படித்துள்ளேன். ஏனோ ஜெயமோகனின் தாக்கத்தால் என்னை அறியாமலேயே தங்களை அணுக தடுத்தது.

அமி பற்றி தாங்கள் பேசியது யூடியூபில் கேட்டேன். இவ்வளவுநாள் நான் இறுக்கமாக தங்களின் எழுத்தையோ, பேட்சையோ செவிசாய்க்காதது  என் தவறென உணர்கிறேன். 

புதுமைபித்தனை பற்றி தாங்கள் பேசியது கேட்கவேண்டும் என்று பட்டது. கொரோனா காலத்தில் நான் கேனடா வந்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு வேலை கிடைத்ததும் தங்களின் கூழாங்கலாய் இருப்பேன்.

தங்களின் பணி  சிறக்க இறைவனை மனதார பிராத்திக்கிறேன்.

அன்புடன்,

———–

பொதுவாக எனக்கு வரும் கடிதங்களில் பிழை திருத்தம் செய்துதான் வெளியிடுவேன்.  இதில் அப்படிச் செய்யவில்லை.  என் பெயரிலேயே பிழை இருப்பதால் பிழை திருத்தம் செய்வதில் ஆர்வம் இல்லாமல் போனது. இந்தக் கடிதத்தில் எனக்குத் தெரிந்து பத்து ஒற்றுப்பிழைகள் உள்ளன.  தமிழ் எழுத்து ரீதியாக செத்துக் கொண்டிருக்கிறது.  இந்தக் கடிதத்தை வெளியிட்டதன் காரணம், இது போல் பல ஜெயமோகன் வாசகர்களை நான் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.  நேரடி சந்திப்பு இல்லாவிட்டாலும் வேறு எப்படியாவது எதிர்கொள்வது போல் சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது.

ஒரு மலேஷிய எழுத்தாளர் – ஜெ.வின் தீவிர விசிறி – ஜெ பற்றி வியந்தோதி கட்டுரை எழுதுகிறார்.  நல்லது.  ஆனால் அதில் என்னை ரெண்டு திட்டு திட்டினால் ஜெ. சந்தோஷப்படுவார் என்று மடத்தனமாக நினைத்துக் கொண்டு அந்தத் தறுதலை “உலக இலக்கியத்தைத் தன் கை விரல்களில் வைத்துக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொள்ளும் சாரு நிவேதிதா” என்று எழுதுகிறது. அட மூடனே, என்னைத் திட்டக் கூட உனக்குத் தெரியவில்லையே, நீயெல்லாம் என்ன எழுத்தாளன்?  உலக இலக்கியத்தை எட்டிப் பார்த்த ஒரு ஆள் கூட அப்படிச் சொல்ல மாட்டானே?  நான் சொல்வேனா?  நூறு ஜென்மம் எடுத்தாலும் நடக்கக் கூடிய சமாச்சாரமா அது?  வானத்து நட்சத்திரங்களை ஒருத்தன் எண்ண முடியுமா?  அதுபோல் அல்லவா உலக இலக்கியம்? 

இப்படித்தான் பல ஜெயமோகன் விசிறிகளைப் பார்க்கிறேன்.

சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் வட்டத்தில் ஒரு இளைஞர் மரணம் அடைந்து விட்டார்.  அதற்கு ஜெ. எழுதிய அஞ்சலிக் குறிப்பைப் படித்தேன்.  எனக்கு அஞ்சலிக் குறிப்பு படிக்க மிகவும் இஷ்டம்.  அதிலும் ஜெ. எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் விசேஷமானவை.  இதைப் படித்ததும் நீங்கள் எல்லோரும் என்னை பர்வர்ட் என்று திட்டுவீர்கள்.  இல்லை.  எனக்கு ஜனனமும் மரணமும் ஒன்றுதான்.  அட, நம் எல்லோருக்குமே நம் உயிர் என்றால் வெல்லக்கட்டிதானே?  எனக்கு இல்லை.  மரணம் என்பது வீடு காலி பண்ணுவது மாதிரிதான்.  சில பல காரணங்களால் வீடு காலி பண்ணுவது முன்னே பின்னே போகும் இல்லையா, கொரோனா லாக் டவுன் காலத்தில் காலி பண்ண முடியுமா அந்த மாதிரி.  அப்படி கொஞ்சம் அவசர வேலை இருந்தால் எமனிடம் எக்ஸ்டென்ஷன் கேட்கலாம்.  அவ்வளவுதான்.  அடுத்த ஜென்மம் எனக்கு ஆகப் பிரமாதமாக இருக்கும் என்று இப்போதே தெரிவதால் மரணம் பற்றிக் கடுகத்தனையும் கவலை இல்லை.  ஒரே வருத்தம், நகுலன் கவிதை மாதிரி…

நான் இறந்த பிறகு

எனக்கு யாரும்

அஞ்சலிக் கூட்டங்கள்

நடத்த வேண்டாம்

ஏனென்றால்

என்னால் வர முடியாது

அந்த மாதிரி நான் சொல்ல மாட்டேன்.  எனக்கு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளைப் படிக்க விரும்புவேன்.  அதிலும் குறிப்பாக ஜெயமோகன்.  ஒரு நட்பு கருதி அவரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டால் இப்போதே எழுதிக் கொடுப்பார்தான்.  ஆனால் அது உடலை நீத்த பிறகு எழுதுவது போல் இருக்காது.  இதற்கு சீனியே ஒரு உதாரணம்.  உங்களுக்குத் தெரியுமா, சீனி பிரமாதமாக மிமிக்ரி பண்ணுவார்.  தாமு மாதிரி லோகிளாஸ் அல்ல.  இது ஹையர் கிளாஸ்.  ஜெயமோகன் மாதிரியே பேசுவது, நடப்பது, மனுஷ் மாதிரியே கவிதை வாசிப்பது.  அதாவது மனுஷாகவே மாறி மனுஷைப் போலவே ஒரு புத்தம் புதிய கவிதையைப் புனைந்து வாசிப்பார்.  அச்சு அசல் மனுஷ்.  அதேபோல் சாருவையும் செய்து காட்டுவார்.  ஒரே நிபந்தனை, நான் அங்கே இருக்கக் கூடாது.  நான் இருந்தால் என்னைப் போல் அவருக்கு பாவனை செய்ய வராது.  ஆனால் நான் இல்லாவிட்டால் பிரித்து மேய்ந்து விடுவார்.  அதுமாதிரிதான் ஒருத்தர் உயிரோடு இருக்கும்போதே அஞ்சலிக் குறிப்பு எழுதுவது கஷ்டம்தான்.  ஆனால் பத்திரிகைக்காரர்கள் இப்படி அரசியல்வாதிகளுக்கும், சினிமா ஆட்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் முன்கூட்டியே அஞ்சலிக் கட்டுரைகள் எழுதி வைத்திருப்பார்கள்.  என்னிடம் ஒரு அரசியல் தலைவர் பற்றி அவர் உயிரோடு இருக்கும்போதே ஒரு ஆங்கிலப் பத்திரிகை அஞ்சலிக் கட்டுரையை வாங்கி வைத்திருந்தது.  அது கூடிய விரைவிலேயே பயன்படவும் செய்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். 

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் இறந்ததும் அவர் பற்றிய அஞ்சலிக் குறிப்பைப் படித்து பின்னர் அவர் எழுதிய ஒன்று இரண்டு கட்டுரைகளைப் படித்தால் அடக் கடவுளே, ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதோ ஸ்ரீராமஜெயம் மாதிரி என்னை இழுத்து இழுத்துத் திட்டியிருக்கிறார்.  பாவமாக இருந்தது.  திட்டுங்கள்.  ஆத்திரம் தீரத் திட்டுங்கள்.  ஆனால் படித்து விட்டுத் திட்ட வேண்டாமா?  அந்த இளைஞர் நான் எழுதிய ஒரு எழுத்தைக் கூட படித்ததில்லை என்று தெரிந்தது.  அனாவசியமாக கர்மாவைச் சேர்த்துக் கொண்டு போயிருக்கிறார். 

ஜெயமோகனும் நானும் எதிரெதிர் துருவங்கள்.  எங்கள் வாசிப்பு, வளர்ப்பு, மனோபாவம், நிலம் எல்லாம் அப்படிப்பட்டது.  அவர் வட துருவம், நான் தென் துருவம்.  சேரவே சேராது.  சேர்ந்த ஒரே தருணம், வேலுப்பிள்ளை பிரபாகரன்.  நான் ஒரு படத்தை கிளாஸிக் என்பேன்.  (கேங்ஸ் ஆஃப் வாஸேபூர் ஒரு உதாரணம்) அவருக்கு அது குப்பை.  இப்படி ஆயிரம் உதாரணம் சொல்லலாம்.  மற்றபடி எங்களுக்குள் என்ன வயல் வரப்புத் தகராறா என்ன?  எல்லாம் இலக்கியம், சித்தாந்தம், இத்யாதி.  இந்த க்ஷணம் கூட அவருக்கு போன் பண்ணினால் நாங்கள் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருப்போம்.  அசோகமித்திரன் நன்கு மூப்பு எய்தி இறந்த போது கூட ஜெயமோகனால் மூன்று தினங்கள் அந்த துக்கத்தைக் கடக்க முடியவில்லை. எனக்குப் புத்தகம்தான் பெரிது என்று நட்புக்குத் துரோகம் செய்து விட்டு மனுஷை விட்டு நான் பிரிந்து வந்த போது மூன்று மாதங்கள் மனநல மருந்துகள் உட்கொண்டேன் என்று பின்னால் பல ஆண்டுகள் சென்று மனுஷ் சொல்லியிருக்கிறார்.  நேற்று கூட மனுஷ் என்னோடு பேசினார்.  ஏதோ ஜென்ம ஜென்மாந்திரமான உறவுக்காரர்கள் போலத்தான் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  கொரோனா இல்லையெனில் அந்த க்ஷணமே அவரோடு கிளம்பி டென் டௌனிங் போயிருப்பேன்.  இலக்கியம் ஒன்றுதான் எங்களையெல்லாம் ஒன்று சேர்க்கும் இழை.  எனவே எனக்குக் கடிதம் எழுதிய நண்பர் ஒரு கட்டத்துக்குப் பிறகாவது என்னைப் படிக்கவும் கேட்கவும் முடிவு செய்தாரே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.  இலக்கியம் அன்பையே கற்பிக்க வேண்டும்.  வெறுப்பை அகற்றி விடுங்கள்.  ஜெயமோகனின் எழுத்து எந்த ஒரு எழுத்தாளரையும் வெறுக்கச் சொல்கிறதா என்ன?  அப்படிச் சொல்வதாக உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் சரியாகக் கற்கவில்லை என்றே பொருள்.