ஒரு நிறுவனம் எப்படி உயர்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்து காணாமல் போகிறது என்பதை ஏர்டெல் நிறுவனத்தின் மூலமே அவதானித்து வருகிறேன். இண்டர்நெட் என்பது எனக்கு அறிமுகமான நாளிலிருந்தே ஏர்டெல் இணைப்புதான் வைத்திருக்கிறேன். சுமார் பதினைந்து ஆண்டுகளாக. சென்னையே வெள்ளத்தில் மிதந்தபோது கூட எனக்கு இண்டர்நெட் இல்லாமல் இருந்ததில்லை. இண்டர்நெட் இல்லை என்ற பேச்சே பதினைந்து ஆண்டுகளில் இல்லை. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இடி இடித்தால் இண்டர்நெட் வெட்டு, மழை பெய்தால் வெட்டு, புயலடித்தால் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்களுக்கு இண்டர்நெட் இல்லை. இதை விடப் பெரிய வேடிக்கை என்னவென்றால், புகார் செய்தால் அந்த ஊழியர்கள் கொடுக்கும் பதில்தான். மழை சார், என்னா சார் பண்ண முடியும்? தொடர்ந்து இதே பதில்தான். எப்போது கேட்டாலும் இதே பதில். என்னங்க இது, மூணு நாளா இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று குரலை உயர்த்தினால் எங்க டெக்னீஷியன்ஸ் அட்டெண்ட் பண்ணிட்டு இருக்காங்க சார். உயர் அதிகாரிகளின் நம்பரை வாங்கி அவர்களுக்கு போன் பண்ணினால் தரமான ஆங்கிலத்தில் கவனிக்கிறோம், நிச்சயம் கவனிக்கிறோம் என்று மிக அன்பாகச் சொல்வார்கள். என்னங்க, மூணு நாள் ஆகுதுங்க, இது நியாயமாங்க என்று கேட்டால், உங்கள் நிலைமை புரிகிறது, நிச்சயம் சரி செய்கிறோம் என்று சுத்த ஆங்கிலத்தில் பணிவாகச் சொல்வார்கள்.
இவர்கள் இப்படி மெண்ட்டல் டார்ச்சர் கொடுக்கிறார்கள், நான் என்ன செய்கிறேன் பார் என்று அவந்திகா ஒரு பெண்ணிடம் ஒரு மணி நேரம் பேசினாள். ம்ஹும். ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு உயர் உயர் அதிகாரி போன் பண்ணி உங்கள் லைனை மட்டும் தனியாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று உறுதியளித்தார். இதற்குள் ட்விட்டரில் போட்டு அந்த நிறுவனத்தைப் பற்றி நூறு பேருக்குத் தெரிவித்து சமூக சேவையும் செய்தேன். அப்படியும் அவர்கள் உஷார் ஆகவே இல்லை. ஏர்டெல் நிறுவனத்திடம் ஊதியம் வாங்குகிறோமே என்ற மனசாட்சி கூட இல்லாமல் அந்த ஊழியர்கள் அந்த நிறுவனத்தைக் குழி தோண்டிப் புதைக்க கங்கணம் கட்டிக் கொண்டது போல் வேலை செய்தார்கள். பதில் சொன்னார்கள். மூன்று நாட்களாகவா ஒருத்தர் மழை பெய்கிறது சார், நாங்கள் என்னா செய்ய முடியும் என்று பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள்? நாலாம் நாள் இணைப்பு வரும். ஆனால் அன்று மாலையே திரும்பவும் பணால். அதற்கடுத்து ரெண்டு நாள். இங்கே எனக்கும் அவந்திகாவுக்கும் பைத்தியம் பிடிக்காததுதான் பாக்கி.
இப்படியே ஆறு மாதம். ஆனால் ஜனவரி பிறந்ததும் – ஒரு காலத்தில் திமுக ஆட்சியில் தினமும் பதினாறு முறை மின்வெட்டு வரும் போகும் இல்லையா, அதேபோல் இண்டர்நெட் போகும், வராது, வந்தால் மறுபடியும் போகும், வராது, வந்தால் மறுபடியும் போகும். அப்படியே அந்தக் காலத்து மின்வெட்டு கணக்குதான். ஒரே நாளில் நாலு தடவை ஐந்து தடவை. வரும் போகும்.
என் நண்பரைக் கேட்டேன். ஜியோதான் தகவல் தொடர்பை இனி ஆளப் போகிறது. அதில் உடனடியாகப் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். ஜியோ ஆள் வந்தார். உங்கள் ஏரியாவில் ஜியோ இல்லை, இப்போதுதான் பாதை அமைத்துக் கொண்டிருக்கிறோம், ஒரு மாதம் ஆகும் என்றார். ரெண்டு மாதம் ஆகிறது. ஒரு எதிர்வினையும் இல்லை.
இன்னொரு நண்பரைக் கேட்டேன். ஒரே வழி Hathway என்றார். பதிவு செய்தேன். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆள் வந்தார். 1300 ரூ. பணம் கட்டினேன். பணம் கட்டும் வரை பக்கத்திலேயே – நான்கு அடி இடைவெளி விட்டு – இருந்தார். கட்டி முடித்ததும் தொழில்நுட்பர்கள் வருவார்கள் என்று சொல்லிச் சென்றார். மறுநாள் ஒரு தொழில்நுட்பர் வந்தார். வந்து மேற்பார்வை செய்து விட்டு நாளை வேறொரு தொழில்நுட்பர் வருவார், அவர் சாதனத்தை இணைப்பார் என்று சொல்லி விட்டுப் போனார்.
மறுநாள் – அதாவது நேற்று – ஒரு திடுக்கிடும் சம்பவம் நடந்தது. (உங்கள் வீட்டில் சம்பவம் நடக்காமல் இருந்தால்தானே ஆச்சரியம் என்றார் ஒரு நண்பர்!)
காலை எட்டு மணிக்கு அவந்திகா நம்பருக்கு ஹாத்வேயிலிருந்து ஒரு போன். இம்மாதிரி விஷயங்களுக்கெல்லாம் நான் என் நம்பரைத்தான் கொடுப்பது வழக்கம். ஏனென்றால், அவந்திகாவுக்கு மண்டையிடி வந்து கிட்டத்தட்ட மன உளைச்சலின் உச்சத்துக்கே போகிற மாதிரி நடந்து விடும் காரியங்கள். பத்து நாள் ஆகும் அவள் அந்தக் கொடுந்துயரிலிருந்து வெளியே வர. ஆனால் இந்த முறை அவந்திகா, பாவம் சாரு நீ, ஹாத்வேக்கு என் நம்பரையே கொடுத்து விடலாம். நானே மேனேஜ் பண்ணிக் கொள்கிறேன், நீ எழுத்து வேலையைப் பார் என்று சொல்லி அவள் நம்பரைக் கொடுத்தாள். ஆனால் தொழில்நுட்பர் இணைப்பு கொடுக்க வந்த போது அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் – மாலை நாலரை மணி. எங்கள் வீட்டில் மதிய உணவு மாலை மூன்றரைக்குத்தான் தயார் ஆகும். அன்றைய தினம் நாலு ஆகி விட்டது. அவளுக்கு ஏதோ கடும் வேலை. அதனால் நாலரைக்குத்தான் சாப்பிட ஆரம்பித்து ஒரு கவளத்தைப் போட்டாள். தொழில்நுட்பர் வந்து விட்டார். அதனால் அவள் இந்த விஷயத்திலிருந்து ஜகா வாங்கி நீயே பார்த்துக் கொள் என்று என் நம்பரைக் கொடுத்து விட்டாள். இந்தக் காரணத்தினால் ஹாத்வேயிடம் அவந்திகாவின் நம்பர் சிக்கிக் கொண்டது.
காலை எட்டு மணிக்கு அவந்திகா எண்ணுக்கு ஒரு போன். மேடம், ஹாத்வேக்கு புது கனெக்ஷன் வேணுமா, அதுக்கு டீடேய்ல்ஸ் சொல்றேன், குறிச்சுக்கிறீங்களா?
என் நம்பரை உங்களுக்கு யார் குடுத்தா? அதுதான் ஏற்கனவே ஒத்தர் வந்து இங்கே பார்த்துட்டுப் போனாரே?
அது பரவால்ல மேடம். உங்களுக்குப் புது கனெக்ஷன் வேணும்னு எங்களுக்குத் தகவல் வந்திருக்கு மேடம். அதுனால அது சம்பந்தமா நான் சொல்ற டீடெய்ல்ஸை நோட் பண்ணிக்கிட்டீங்கன்னா பெட்டர் மேடம்.
ஏங்க, நல்லா தமிழ்லதான் பேசுறீங்க. நானும் தமிழ்லதான சொல்றேன்? நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா இல்லியா?
நல்ல புரியுது மேடம்.
அப்புறம் என்னாங்க உங்களுக்குப் பிரச்சினை? என்னாங்க வேணும் உங்களுக்கு?
அதுதான் சொன்னேனே மேடம்? உங்களுக்குப் புது கனெக்ஷன் வேணும்னு எங்களுக்குத் தகவல் குடுத்துருக்காங்க மேடம். அதுக்கு உங்க சைட்ல என்னென்ன வேணும்னு நான் சொல்ல வந்தேன்.
அடடா, அதைத்தானேங்க நான் சொல்றேன். இங்கே அதுக்கு ஆள் வந்தாச்சுங்க. என் நம்பரை உங்களுக்கு யார் குடுத்தா அதைச் சொல்லுங்க முதல்ல?
ஸாரி மேடம். ஒரே ஒரு கேள்விதான் மேடம். உங்களுக்குப் புது ஹாத்வே கனெக்ஷன் வேணும்தானுங்களே?
ஆமா வேணும். யார் இல்லைன்னு சொன்னா? அதுக்குத்தான் ஆள் வந்தாச்சுன்னு சொல்றேன் இல்லை? நாங்க அதுக்குப் பணம் வேற கட்டிட்டோம்.
பணம் கட்டிட்டீங்களா, இதை மின்னாடியே சொல்லியிருக்கலாமே மேடம்? பரவாயில்லை மேடம். பணம் கட்டியிருந்தாலும் என்னென்ன நல்ல ஸ்கீம்ஸெல்லாம் இருக்குன்னு சொல்றேன் மேடம். இன் ஃப்யூச்சர் உங்களுக்கு ஹெல்ப்பா இருக்கும். 999 ரூபாயில் ஒரு ஸ்கீம் மேடம்…
காட் ப்ளெஸ் யூ தம்பி என்று சொல்லி விட்டு அவந்திகா போன் இணைப்பைத் துண்டித்து விட்டாள். அதற்குப் பிறகு பத்து நிமிடம் தலையைக் கையில் பிடித்தபடி அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள்.
பிறகு எட்டரைக்கு ஒரு போன். அவந்திகாவுக்கு. மேடம், ஹாத்வே புது கனெக்ஷனுக்கு ரெஜிஸ்டர் பண்ணியிருக்கீங்களா?
ஐயோ மஹந்தா, ஏன் இப்படி டார்ச்சர் பண்றாங்க? என் நம்பரை உங்களுக்கு யார் குடுத்தா? ஏன் இப்படி பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி டார்ச்சர் பண்றீங்க?
ஒண்ணுமே இல்ல மேம். ஹாத்வே புதூ கனெக்ஷனுக்கு நீங்க ரெஜிஸ்டர் பண்ணிருக்கீங்க. அதோட ஸ்கீம்ஸையெல்லாம் எக்ஸ்ப்ளேய்ன் பண்ணினா உங்களுக்கு ஹெல்பா இருக்கும்ல?
அது இருக்கட்டும். உங்க பேர் என்ன?
மோகன் மேம்.
இதுக்கு முன்னால ஒருத்தர் போன் பண்ணி இதையேதான் சொன்னார். இப்போ நீங்க பண்றீங்க. என்னா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? எனக்கு என்னா வேற வேலையே இல்லியா? ஒங்க ஒவ்வொத்தருக்கும் பதில் சொல்றதுதான் எனக்கு வேலையா?
ஸாரி மேம். ஜஸ்ட் டூ மினிட்ஸ்தான் மேம். முடிச்சிர்லாம்.
முடிப்பீங்க. முடிப்பீங்க. இங்கே ஆளையே முடிச்சிருவீங்க போலருக்கே?
அதெல்லாம் இல்ல மேம். ஜஸ்ட் உங்களுக்கு என்ன ஸ்கீம் வேணும்னு என்னென்ன ஸ்கீம்ஸெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சாதானே மேம் சொல்ல முடியும்? அதனாலதான் சொல்ல வந்தேன்.
அதுக்குத் தேவையே இல்லியே. பணமே கட்டி முடிச்சாச்சே. அப்புறம் எதுக்கு ஸ்கீமெல்லாம்?
பணம் கட்டியாச்சா மேம்? ஸாரி மேம். இருந்தாலும் ஃபர்தர் யூஸேஜுக்கு இன்னும் என்னென்ன ஸ்கீம்ஸ்னு தெரிஞ்சா நல்லதுதானே மேம்?
காட் ப்ளெஸ் யூ என்று சொல்லி விட்டு போனை கட் பண்ணினாள் அவந்திகா.
இதே போல் ஒன்பது மணி, ஒன்பதரை மணி, பத்து மணி, பத்தரை, பதினொன்று, பதினொன்றரை, பன்னிரண்டு என்று சொல்லி வைத்தாற்போல் அரை மணிக்கு ஒருமுறை வெவ்வேறு நபர்களிடமிருந்து வந்த போன் அழைப்புகளுக்கு அவந்திகா இதேபோல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். இதேபோல் என்றால் நீங்களே கொஞ்சம் யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். ஒவ்வொரு அரை மணிக்கும் உக்கிரம் கூடிக் கொண்டிருந்தது. நான் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த உரையாடலையெல்லாம் இங்கே திரும்பவும் எழுதி உங்களை டார்ச்சர் பண்ண வேண்டாம் என்று பார்க்கிறேன். அந்தப் பன்னிரண்டு மணி உரையாடலை மட்டும் ஒரு மாதிரிக்கு இங்கே தருகிறேன்.
“ஹாத்வேயிலிருந்து கூப்பிட்றேன் மேம்… நீங்க புது கனெக்ஷனுக்கு…”
“எம்ப்பா நீங்க இப்டி ஆளைக் கொல்றீங்க. இன்னிக்கு ஒருத்தரையாவது தீத்துக் கட்டாம விட மாட்டீங்க போல இருக்கே?”
“ஸாரி மேம். புது கனெக்ஷனுக்கு நீங்க ரெஜிஸ்டர் பண்ணினதுனாலதான்…”
“ஏஏஏஏங்க இப்ப்டி கிளம்பிட்டீங்க. என்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பாம விட மாட்டீங்க போல இருக்கே. உங்க ஆஃபீஸர் யார் சொல்லுங்க. உடனே சொல்லுங்க. எனக்கு அவர் நம்பர் வேணும். உடனே வேணும். இல்லேன்னா உங்க மேல போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுப்பேன். நம்பரைக் குடுங்க…”
அவர் அதிகாரி நம்பரைக் கொடுக்கிறார்.
அதிகாரி போனை எடுக்கவில்லை.
பன்னிரண்டரைக்கு அவந்திகாவுக்கு போன். அதுவரை சும்மா இருந்த நான் “நீ ஏம்மா இப்டித் தெரியாத நம்பரையெல்லாம் எடுக்கிறாய்?” என்றேன். ”சரி, இந்த காலை நான் அட்டெண்ட் பண்றேன்” என்று சொல்லி விட்டு நான் எடுத்தேன்.
“ஹலோ…”
“ஹலோ…”
“சார்… ஹாத்வேயிலேர்ந்து…”
“ப்ரதர். நான் ஒரு நம்பர் குடுக்கிறேன். உடனே அதுக்கு போன் பண்றீங்களா. இந்த போன்ல பேசினா சரியா இருக்காது. இது லேடீஸ் நம்பர். என் நம்பருக்குக் கூப்பிடுங்க. என் நம்பர் குறிச்சிக்குங்க…”
நம்பரைக் கொடுத்தேன்.
உடனே வந்தது.
“சார். ஹாத்வேயிலேர்ந்து புது கனெக்ஷனுக்கு…”
”ஆமாங்க ஆமாங்க… ஆனா புது கனெக்ஷன் வாங்கறதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு கேள்வி ப்ரதர். கேட்கலாமா?”
“என்ன டவுட்னாலும் கேளுங்க சார்?”
”ஏண்டா நீங்கள்ளாம் எங்கேர்ந்து கிளம்பி வர்றீங்க? ஒரு பொம்பளையைப் போட்டு எப்பிர்ரா இப்டி டார்ச்சர் குடுப்பிங்க? காலைலேர்ந்து இதோட பத்து போன் வந்துடுச்சுடா இடியட். எதுக்குடா இப்டி டார்ச்சர் குடுக்கிறீங்க? யார்ரா உன் பாஸ்? அவன் போன் நம்பரைக் குட்ரா…”
போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதோடு அவளுக்கு போன் வரவில்லை.
பிறகு ஒரு தொழில்நுட்பர் வந்தார். அடுத்த நாள் இணைப்பு கொடுக்கப்படும் என்று சொல்லிச் சென்றார். அந்த அடுத்த நாள் நேற்று. ஒரு தொழில்நுட்பர் வந்தார். எல்லாம் பார்த்து விட்டு இந்த வீட்டுக்கு இணைப்பு கொடுக்க இயலாது; அந்த வசதி வீட்டில் இல்லை என்றார். எனக்கு இதெல்லாம் பன்றி ரோமத்துக்கு சமம். ஆனால் அவந்திகா ஒழுங்கின் சிகரம். ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தாள். (அவளுக்கு எப்போதும் ரத்த அழுத்தம் 120 – 80 இலேயே இருக்கும். எனக்கு எப்போதும் 150 – 100 இலேயே இருக்கும்!) பிறகு அவளே தொழில்நுட்பளாக மாறி அந்த அஃபிஷியல் தொழில்நுட்பருக்கு என்ன என்ன செய்தால் இணைப்பை வீட்டுக்குள் கொண்டு வந்து சாதனத்தை வீட்டில் வைக்கலாம் என்று விளக்கினாள். ஒரு மணி நேரம் அவள் வழிகாட்டலில் சாதனம் பொருத்தப்பட்டது. தொழில்நுட்பர் கிளம்பினார்.
மாலை எட்டு மணிக்கு ஹாத்வே அலுவலகப் பணியாளர் அழைத்தார். என்னென்னவோ கேட்டார். அவர் கேட்ட எல்லா விவரத்தையும் அந்த சாதனத்தைப் பார்த்துச் சொன்னேன். கேட்டுக் கொண்டு இன்னும் பத்து நிமிடத்தில் பாஸ்வேர்ட் உங்களுக்கு மெஸேஜ் வரும் என்றார். அப்போது மாலை எட்டு மணி. இப்போது மறுநாள் மதியம் பன்னிரண்டு மணி. பதினாறு மணி நேரம் ஆயிற்று. மீண்டும் ட்விட்டரில் புகார் செய்திருக்கிறேன்.
***
என் சக எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் தவிர மற்றவர்கள் இந்தத் தளத்தை வாசிக்கும் நண்பர்கள் இதற்குக் கட்டணமாக அல்லது நன்கொடையாக நீங்களே ஒரு தொகையை நிர்ணயித்து அனுப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். மாதாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களும் இதே முறையைப் பின்பற்றி எனக்குப் பணம் அனுப்பி வைக்கலாம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai