அன்புள்ள சாரு
எனக்கு தருண் மீதும் சாருவின் மொழிபெயர்ப்பு மீதும் நம்பிக்கையுண்டு. உங்களின் இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் தயவுசெய்து தலைப்பு பற்றி கொஞ்சம் மறு பரிசீலனை செய்யுங்கள். இது ஒரு மாயாவிக் கதையின் தலைப்பு போல இருக்கிறது. ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். மேலும் இந்தக் கதையில் நீங்கள் ஊறியிருப்பீர்கள். அதனால் வித்தியாசமான மற்றும் ஆங்கிலத் தலைப்புடன் ஒத்துப் போகக்கூடிய ஒன்று நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். மெதூஸாவின் மதுக்கோப்பை போல.
அன்புடன்
சுரேஷ்
டியர் சுரேஷ்,
நாவலில் மொத்தம் 16 அத்தியாயங்கள். 13 அத்தியாயங்களில் கடைசிக் கட்ட திருத்தங்கள் செய்து விட்டேன். இன்று காலை reverie என்ற வார்த்தையைத் தமிழில் கொடுப்பதற்காக மட்டும் ஒரு மணி நேரம் யோசித்துப் பார்த்தேன். இன்னும் மூன்று அத்தியாயங்கள் வந்து சேர வேண்டும். அதையும் முடித்து விட்டால் அச்சுக்குத்தான்.
தலைப்பு வேறு ஒன்றாகவே ஆரம்பத்தில் இருந்தது. அது ரொம்பவும் கவித்துவமான தலைப்பு. ஆனால் கதையின் கருவுக்கு மிகவும் எதிரானது. இது பற்றி நாம் கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது. The Blinding Absence of Light என்பது நாவலில் தலைப்பு. அதைத் தமிழில் நிழலற்ற பெருவெளி என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்கள். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் நிலவறைக் குழிகளில், இருட்டான பொந்துகளில் சிறை வைக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் கூறும் கதை. கதைக்கும் தலைப்புக்கும் எத்தனை வேறுபாடு பாருங்கள். கடவுள் என்றால் சைத்தான் என்றா மொழிபெயர்ப்பது!?! பெருவெளியே இல்லை என்பதுதானே கதையே? ஆங்கிலத்தைப் பாருங்கள். கண்களைக் குருடாக்கும் இருட்டு. இருட்டு என்பது absence of light என்று வருகிறது. ஆகவே தலைப்பையே வேறு மாதிரிதான் யோசிக்க வேண்டும். நம் பக்தி இலக்கியங்களில் தேடலாம். நிறைய மாட்டும். கௌதம் மேனன் அப்படித்தான் தேடித் தேடிப் பிடிப்பார். வாரணம் ஆயிரம் மாதிரி.
அல்லது, மூல மொழியான அரபியிலிருந்து நேரடியாக எடுக்கலாம். வெறும் தலைப்புக்கு மட்டும்தானே? அப்படித்தான் Naked Bread என்ற தலைப்பை முகம்மது ஷுக்ரியின் அரபி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் வைத்தார். மொழிபெயர்ப்பாளருக்கு அரபி தண்ணி பட்ட பாடு. நாவலின் அரபித் தலைப்பு அல்-கூப்ஸ் அல்-ஹஃபி. கூப்ஸ் என்பது ரொட்டி. ஹஃபி அம்மணம். ஷுக்ரி பிச்சைக்காரனாக வாழ்ந்த போது போட்டுக் கொள்ளவும் துணியில்லாமல் அம்மணக்குண்டியாக குப்பைத் தொட்டியில் காய்ந்து போன ரொட்டிகளைப் பொறுக்கிக் கொண்டிருப்பார். அப்போது தெருச் சிறார்கள் அவரை அல்-கூப்ஸ் அல்-ஹஃபி என்ற மாதிரி கிண்டல் செய்வார்கள். அம்மணக் குண்டி ரொட்டி. கையில் ரொட்டி. அம்மணக் குண்டி தோற்றம். அதனால் Naked Bread என்று வைத்தார்.
பனாமாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ரொஹேலியோ சினான் (Rogelio Sinan) -இன் Red Beret என்ற கதையை நான் மொழிபெயர்த்த போது சிவப்புத் தொப்பி என்று தலைப்பு வைத்தால் கேவலமாக இருக்கும் இல்லையா? அதனால் கதையின் motif ஆக வரும் கடல் கன்னியையே தலைப்பாக வைத்தேன். கடல் கன்னி. அந்தக் கதை இங்கே இந்தியாவில் தொன்மமாகப் படிந்த கதை. அது பொருந்தியது.
எனவே கவித்துவத்தை விட கதையின் அர்த்தத்தோடு ஒத்து வருவதுதான் முக்கியம். ஆக, முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்ற தலைப்பில் கவிதை இல்லாவிட்டாலும் கதைக்கு ரொம்பவும் பொருந்தும். கதையில் வரும் பள்ளத்தாக்கை நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒரு போதும் மறக்கவே இயலாது. இப்படி ஒரு கதை உலக சரித்திரத்தில் எழுதப்பட்டதே இல்லை. அந்தப் பள்ளத்தாக்கின் கதை. முகமூடிகள் வாழும் அந்தப் பள்ளத்தாக்கின் கதையை நீங்கள் இன்னும் ஒரு மாதத்தில் காணலாம். மொழிபெயர்ப்பு நான் மட்டுமே செய்ததல்ல. இன்னும் இருவர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்பதில் லயம் இல்லைதான். கவிதை இல்லை. ஆனால் நாவலின் கருத்துக்கு எதிரான – ஆனால் கவித்துவம் மிளிர ஒரு தலைப்பு வைப்பதை விட நாவலுக்கு உகந்த – நாவலோடு சேர்ந்து பயணப்படுகின்ற ஒரு தலைப்பை வைப்பதே சிறப்பானது. அந்த வகையில் இதுவே கிடைத்தது. நாவலைப் படிக்கும்போது தலைப்பின் அர்த்த முக்கியத்துவத்தை உணர முடியும்.
ஒரு மாதம் காத்திருங்கள்.
***
சந்தா/நன்கொடையை ஞாபகப்படுத்துகிறேன்.
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai