புத்தக விழா

புத்தக விழா வந்து விட்டது.  எழுத்தாளர்கள்தான் அது பற்றி மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். பொதுஜனத்திடம் அந்த ஆர்வம் இருக்கிறதா என்று விழாவின் போதுதான் தெரியும்.  சென்ற ஆண்டே விற்பனை ரொம்ப ’டல்’ என்றும் அதற்கு முந்தின ஆண்டை விடப் பாதிதான் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  இந்த ஆண்டு கொரோனாவின் பாதிப்பு வேறு.  ஆனால் எது எப்படி இருந்தாலும் எழுத்தாளர்கள் மட்டும் எந்தக் கவலையுமின்றி படு உற்சாகமாக புத்தக விழாவை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார்கள். 

நான் எந்தக் காலத்திலும் புத்தக விழாக்களைப் பொருட்படுத்தியது இல்லை.  ஆனால் வாசகர்களுக்குப் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பது ஒரு சந்தோஷமான விஷயமாக இருக்கும்.  அதில் பல அனுபவங்கள் கிடைக்கும்.  முக்கியமாக வாசகர்களின் மகிழ்ச்சியைக் காண்பது ஒரு மகிழ்ச்சி.  அதை இந்த ஆண்டு என்னால் காண இயலாது.   

இரண்டு காரணங்கள்:  ஒன்று, கொரோனா.  எங்களுக்கு இல்லையா என்று கேட்கக் கூடாது.  நான் இருதயம் பாதியளவு மட்டுமே வேலை செய்யக் கூடிய அளவில் வாழ்கிறேன்.  எனவே என்னை மற்றவர்களோடு ஒப்பிடக் கூடாது.  இரண்டாவது, இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலை முடிக்காமல் வெளியில் செல்வது பற்றி யோசிக்கக் கூட முடியாது.  கூடாது. 

பதிப்பாளர்கள் எல்லோரும் கடும் வேலை நெருக்கடியில் இருக்கும் நேரம், புத்தக விழாவுக்கு முந்தின மாதம்.  அந்த நேரத்தில் நான் அவர்களை நெருக்குவதே இல்லை.  ஏதாவது என் புத்தகம் புதிதாக வர வேண்டும் என்றால், ஜூனிலேயே கொடுத்திருக்க வேண்டும்.  கடைசி நேரத்தில் கொடுத்து மன உளைச்சலைத் தரக் கூடாது.  எனவே முகமூடிகளின் பள்ளத்தாக்கு தவிர ஏனைய புத்தகங்கள் எப்போது வரும் என்று எனக்குத் தெரியாது.  முகமூடிகளின் பள்ளத்தாக்குக்கு முன்பதிவு கொடுத்து விட்டதால் அது மார்ச் முதல் தேதி வந்து விடும். 

என்னுடைய கட்டுரைத் தொகுப்பு இஞ்சி சுக்கு கடுக்காய் புத்தக விழா முடிந்துதான் வரும். பதிப்பகத்திடம் இருக்கிறது.  இப்போதைய நெருக்கடி நிலையில் நானும் வேறும் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை.  எப்போது முடியுமோ அப்போது கொண்டு வாருங்கள் என்று சொல்லி விட்டேன்.  நீங்கள் அனைவரும் ரொம்ப ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கும் மாய மோகினி கவிதைத் தொகுதிக்கும் பொறுத்துதான் ஆக வேண்டும்.  மனுஷ்ய புத்திரனும் பயங்கர வேலை நெருக்கடியில் இருக்கிறார்.  அவர்தான் முன்னுரை.  நானும் அவருக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை.  எப்போது நேரம் இருக்கிறதோ அப்போது கொடுத்தால் போதும் என்று சொல்லி விட்டேன்.  ஓவியரிடமும் அதையே சொன்னேன்.  எனக்கு அடித்துப் பிடித்து முந்துவது பிடிக்காது.  முதலில் பாண்டவர்களும், ஹிட்லர், எஸ்கோபார், பிரபாகரன் எல்லோரும் இறங்கி ஆடிக் களைக்கட்டும்.  நாம் மெதுவாக இறங்குவோம். 

இது தவிர லத்தீன் அமெரிக்க சினிமா புத்தக விழாவுக்கு வந்து விடும்.  அதற்கும் முன்பதிவு விளம்பரம் கொடுத்தாகி விட்டது.  அதற்குப் போதுமான அளவுக்கு நான் ப்ரமோஷன் வேலையில் ஈடுபடவில்லை.  ஏனென்றால், அது தானாகவே விற்கும்.  மேலும், எல்லோருமே அந்த நூலைப் படிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை.  தென்னமெரிக்கா பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் படித்தால் போதும்.  ஆனால் அந்தப் புத்தகம் ஒரு புதையல் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்.  அதில் உள்ள படங்களையோ விஷயங்களையோ நாம் கூகிளில் அல்லது இணையத்தின் வழியாகப் பெறவே முடியாது. 

ஆனால் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலை ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும்.  அது ஒரு fable.  இந்த சமூகம் இன்னும் மேம்பாடு அடைவதற்கு அந்த நூல் உதவும்.  அந்த ஒரே காரணத்தினால்தான் அதற்கு இந்த அளவு ப்ரமோஷனில் ஈடுபட்டேன்.  மற்றபடி தருணுக்கும் எனக்குமான நட்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அவரால் எனக்கு ஆகக் கூடியதும் எதுவுமே இல்லை.  என்னுடைய எஜமானன் கடவுள்.  எனக்குத் தேவையானதைக் கொடுக்க இறை சக்தி இருக்கிறது.  மேலும், 1330 குறள்களிலேயே எனக்கு ஆகப் பிடித்த குறள் ஒன்று உள்ளது.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

எதெல்லாம் உங்களிடமிருந்து நீங்கியிருக்கிறதோ அது அது மூலமாக ஏற்படக் கூடிய துன்பங்களிலிருந்து விலகியிருக்கிறான். 

ஒரு உதாரணம் எடுத்துக் கொண்டால், சினிமாவில் நுழைந்தால் எனக்குப் பணம் வரும்.  ஆனால் சினிமாவின் மூலம் எனக்கு ஏற்படக் கூடிய அத்தனை துன்பங்களிலிருந்தும் இப்போது நான் விலகியிருக்கிறேன்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் நாலைந்து பெண் குட்டிகளோடு உலா வரலாம்.  இந்த வயதிலும் அது சாத்தியம்தான்.  கலைஞர்களுக்கு வயது இல்லை.  எனக்குத் தெரிந்து அப்படி ஒரு மூத்த எழுத்தாளர் என் கண்ணெதிரே வாழ்ந்தார்.  அதிலெல்லாம் ஈடுபாடு போய் விட்டது.  அடியேனின் கதையும் உறங்காவில்லி தாஸன் மாதிரிதான் ஆனது.  மனைவி பொன்னாச்சியின் கண்களை விட அழகிய கண்களை ரங்கநாதரின் கண்களில் கண்டு அவரிடம் சரணடைந்த உறங்காவில்லி தாஸனைப் போல், மதுவும் மாதுவும் தரும் இன்பங்களை விடப் பேரின்பங்களைக் கண்டு அவற்றிலிருந்து விலகி விட்டேன்.   இப்படிப்பட்ட ஒரு நிலையை வந்தடைந்த பிறகு எது எது நமக்குக் கிடைக்கவில்லையோ அது அதனால் கிடைக்கக் கூடிய துன்பங்கள் நமக்கு இறை சக்தியால் விலக்கப்பட்டிருக்கின்றன என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.  எனவே எதை எதிர்பார்த்தும் செய்யப்படுவதல்ல முகமூடிகளின் பள்ளத்தாக்குக்கான ப்ரமோஷன்.  அது ஒரு த்ரில்லர் போல் எழுதப்பட்ட நீதி நூல்.  அதை வாசித்தால் சமூகம் மேன்மையுறும். 

புத்தக விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஃபெப்ருவரி 24-ஆம் தேதியிலிருந்து நடைபெற உள்ளது.  என் புத்தகங்கள் ஸீரோ டிகிரி அரங்கு எண் 10, 11-இல் கிடைக்கும்.

600 ரூ. விலையுள்ள முகமூடிகளின் பள்ளத்தாக்கு ரூ.480/- க்குக் கிடைக்கிறது.

225 ரூ. விலையுள்ள லத்தீன் அமெரிக்க சினிமா ரூ. 180க்குக் கிடைக்கிறது. இரண்டு நூல்களின் முன்பதிவுக்கு கீழே:

  https://tinyurl.com/mugamoodigalin