இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும்.
டியர் சிவானந்தம்,
இந்த குஞ்சு என்ற வார்த்தையை தாய்மார்கள் தங்கள் ஆண் மகவுகளின் ஜனன உறுப்பைக் குறிப்பதற்காகக் குறிப்பிடுகிறார்கள். வளர்ந்த ஆடவர்களுக்கு அது பொருந்தாது. அதற்கு வேறு பெயர். மேலும், இலக்கிய வட்டாரங்களில் தங்களுக்குப் பிடிக்காதவர்களைக் கிண்டல் செய்ய விசிலடிச்சான் குஞ்சு என்று சொல்வார்கள். அதிகம் அப்படிச் சொன்னவர் திருவாளர் வெங்கட் சாமிநாதன். நான் இந்த இரண்டு அர்த்தங்களில் மேலே குறிப்பிடவில்லை. எங்கள் தஞ்சை மாவட்டத்தில் வளராத விடலைப் பயல்களை குஞ்சு என்று சொல்லுவோம். குஞ்சு போவுது பாரு என்றால் அறிவு முதிராத விடலைப் பயல் எவனோ போகிறான் என்று பொருள். அப்படி ஒரு விடலைதான் என்னிடம் அஞ்சாயிரம் தருகிறேன் என்று சொன்னது. அவர் பெயரை எக்ஸ் என்று வைத்துக் கொள்வோம்.
உங்களுக்கும் அப்படி ஒய் என்று ஒரு பெயரை வைத்திருக்கலாம். ஆனாலும் விதி வலிது. உங்களுக்கு சோதிடத்தில் நம்பிக்கை உண்டா? எனக்கு உண்டு. இந்த வாரம் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்ட வாரம். பாருங்கள், நீங்கள் அடித்த ஒரே கல்லில் உலகப் புகழ் பெற்று விட்டீர்கள். இன்று இரவுக்குள் அமெரிக்காவிலிருந்து எனக்கு பத்து மின்னஞ்சல் வரும், சிவானந்தம் யார் என்று கேட்டு. அப்படிப்பட்ட அஞ்சல்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை என்றாலும், நீங்கள் உலகப் புகழ் பெற்றது பெற்றதுதான். பெயரை மட்டுமா குறிப்பிட்டேன், இதோ உங்கள் ப்ளாகில் நீங்கள் என் மீது எறிந்த கல்லுக்கும் இணைப்பு கொடுத்து விட்டேன். போதாதா, உலகப் புகழ்தான். நீங்கள் சிறுகதை எழுத முயன்று தோற்றதையெல்லாம் இந்தக் கல்லில் கிடைத்த புகழில் ஈடு கட்டி விடலாம்.
ஆனால் நீங்கள் அடித்த கல் எனக்கு வலிக்கவில்லை. என் மீது யார் கல் எறிந்தாலும் அது என் கழுத்தில் பூமாலையாக வந்து விழும் வரம் வாங்கி வந்திருக்கிறேன் நான். அதனால் கல் எறிந்து விட்டோமே என நீங்கள் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால், நீங்கள் முன்பு எறிந்த கல்லை நான் பொருட்படுத்தவில்லை. என்னை நோக்கி வரும்போதே இடது கையால் அதைத் தட்டி விட்டு விட்டேன். அதனால் அந்தக் கல் மாலையாக விழவில்லை. நான் ஏற்க சித்தமாக இருந்தால்தான் அது மாலையாக மாறும். என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதிகளைப் பற்றியும் நீங்கள் படு மொக்கையாக ஒரு மதிப்புரை எழுதியிருந்தீர்கள் அல்லவா? அதைத்தான் நீங்கள் எறிந்த முதல் கல் என்று குறிப்பிடுகிறேன். ஒரு நண்பர் சொன்னார், உங்கள் பழுப்பு நிறப் பக்கங்களை ஒருத்தர் திட்டியிருக்கிறார் என்று. அடடே, பழுப்பு நிறப் பக்கங்களையே திட்டி இருக்கிறாரா, அப்படியானால் அவர் ஜாம்பவனாகத்தான் இருக்க வேண்டும், அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அமர்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது, என் எழுத்தை அணுகுவதற்குத் தேவையான நுண்ணுணர்வோ, என் எழுத்தின் உள்ளே ஓடும் சிக்கலான இழைகளைப் பிரித்துப் பார்க்கும் அறிவுக் கூர்மையோ இல்லாதவர் நீங்கள் என்று புரிந்தது.
உங்கள் மதிப்புரையை நிதானமாகப் படித்தேன். என்ன சொல்கிறீர்கள்? ஜெயமோகன் எழுதிய இலக்கிய முன்னோடிகள் மாதிரி ஏன் எழுதவில்லை என்ற கேள்விதான் உங்கள் மதிப்புரையின் சாரம். ”அதுதான் இலக்கிய அறிமுகம். உன்னுடையது குப்பை” என்பதுதான் உங்கள் கருத்து. என்னுடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த எவராவது விஷ்ணுபுரம் நாவலுக்கு மதிப்புரை எழுதுகிறேன் பேர்வழி என்று, “மதிப்புக்குரிய ஜெயமோகன், நீங்கள் ஏன் ராஸ லீலாவைப் போல் விஷ்ணுபுரத்தை எழுதவில்லை? சுத்த வேஸ்ட்” என்று சொல்வாரா? வட்டத்தை விட்டு விரட்டி விடுவோம்.
ஜெயமோகனின் எல்லா வாசகர்களுமே இப்படி என்று சொல்ல வரவில்லை. அவருடைய உள்வட்டத்தில் 300 பேர் இருக்கலாம். அதில் ஒருசிலர் உங்களைப் போல் இருக்கிறார்கள். அப்படித்தான் ஒருமுறை நாமக்கல் அருகே ஜெ.வின் நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டுக்கு நட்பு நிமித்தமாகப் போயிருந்தேன். அங்கே உங்களைப் போல் ஒருவர். திடீரென்று என்னிடம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி அவர் ஒரு பெரிய சிந்தனையாளர் என்ற ரேஞ்சில் பேசினார். சுதந்திர தினம் அன்று பாக்கெட்டில் தேசியக் கொடியை ஊசியால் குத்திக் கொள்பவர் போலும். அந்த விஷயம் தெரியாத நான் அவரோடு சரிக்கு சரியாகப் பேசி விவாதித்து சண்டை போட்டு நெஞ்சு வலியால் துடித்துப் போய் விட்டேன். இரண்டு மணி நேரம் ஆனது மீண்டு எழ.
ஆனால் இப்போது பரவாயில்லை, எழுத்துதான். நெஞ்சு வலி வராது. முகத்துக்கு நேரான விவாதம் என்றால் எனக்கு உயிராபத்து. சிங்கப்பூர் பேர்வழியின் அஞ்சாயிரம் சன்மானம் பற்றி நேற்று நான் எழுதியிருந்ததை மறுத்து நீங்கள் எழுதியதை ஒரு நண்பர் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார். பழுப்பு நிறப் பக்கங்களுக்கு நீங்கள் எழுதிய மதிப்புரையைப் போட்ட மாதிரி இதையும் பார்த்த உடனே தூக்கிக் குப்பையில் போட்டு விட்டுப் போயிருக்க வேண்டும். இப்போது இங்கே புத்தக விழா. நான் கொஞ்சம் பிழை திருத்தம் செய்தால் புத்தக விழாவிலேயே என் புத்தகம் வெளிவரும். என் வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அதற்கு முன்னே நான் சூழலை சுத்திகரிக்க வேண்டும். இப்போது செய்வதெல்லாம் சுத்திகரிப்புப் பணிதான். அதனால்தான் துடைப்பத்தைக் கையில் எடுத்துப் பெருக்கிக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் அதே சமயம், ஜெயமோகனின் உள்வட்டத்தைச் சேர்ந்த பல்வேறு நண்பர்கள் எனக்குமே மிக நெருக்கமான நண்பர்கள்தான். உதாரணமாக, செல்வேந்திரன். இன்னொரு நண்பர், ஜெயமோகனின் வலது கரம் போன்றவர். சென்ற வாரம் ஒரு பொதுநலன் கருதி ஒரு வேலை ஆக வேண்டும். என் வேலை என்றால் சிபாரிசுக்குப் போகவே மாட்டேன். பொதுக் காரியம். அதிலும் இலக்கியம் சம்பந்தப்பட்டது. ஜெயமோகனை அணுகினேன். அவர் போன் கிடைக்காத எந்தக் காட்டில் இருந்தாரோ, எடுக்கவில்லை. உடனே அவருடைய வலது கரத்துக்குத்தான் போன் செய்தேன். வேலை முடிந்து விட்டது. மறுநாள் ஜெ. அழைத்தார். விஷயத்தைச் சொன்னேன். உடனே நண்பரின் பெயரைச் சொல்லி அவரிடம் சொல்கிறேன் என்றார். நானும் அவரைத்தான் கூப்பிட்டு நேற்று அவர் முடித்துக் கொடுத்து விட்டார் என்றேன். ”ஆமாம், உங்களுக்குச் செய்வார். உங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் அவர்” என்றார் ஜெ. அந்த நண்பரின் வீட்டிற்குக் கூடப் போயிருக்கிறேன். எந்த நண்பரின் வீட்டிலும் தங்காத நான் அவர் வீட்டில் இரண்டு நாள் தங்கியும் இருக்கிறேன். இப்படிப்பட்ட நல்லுறவுகளும் எனக்கு ஜெ. வட்டத்தில் உண்டு.
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள், பழுப்பு நிறப் பக்கங்களைப் படித்து விட்டு, ஏன் ஜெயமோகனின் இலக்கிய முன்னோடிகள் மாதிரி எழுதவில்லை என்று கேட்கிறீர்கள். ஜெயமோகன் மாதிரி ஜெயமோகன் தானே ஐயா எழுத முடியும்? இது என்ன எந்திரனின் ரோபோக் கூட்டம் மாதிரி நினைத்துக் கொண்டீர்களா? நானும் ஜெ. மாதிரி இருப்பதற்கு? சமீபத்தில் வெளிவர இருக்கும் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலைப் படித்துப் பாருங்கள். உங்களைப் போன்ற ஆசாமிகளுக்காக எழுதப்பட்டதுதான் அந்த நாவல் என்பது புரியும். நேற்றுதான் உங்களின் அந்தப் பிரஸ்தாபக் கட்டுரையைப் படித்தேன். இதோ, இன்று உங்களுடைய இந்தக் கட்டுரை. அதனால்தான் உங்களுக்கு இன்று ரொம்பவும் நல்ல காலம் என்று குறிப்பிட்டேன்.
ஆக, சிவானந்தம், உங்கள் எழுத்துக்கும் லிங்க் கொடுத்து உங்களை உலகப் புகழ் அடையச் செய்து விட்டேன். ஆனால் உங்கள் சகாவுக்குக் கெட்ட நேரம். வருகிறேன், பொறுங்கள்.
சிவானந்தம், உங்களிடம் என் எழுத்தை அணுகுவதற்கான நுண்ணுணர்வில் துளிக்கூட இல்லை. இருந்திருந்தால் நான் சொன்ன வார்த்தைகளைத் தாண்டி அதில் ஓடும் உணர்வைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அஞ்சாயிரம் கொடுத்தால் அதற்கும் திட்டுகிறார்கள் எழுத்தாளர்கள், கொடுக்காவிட்டாலும் திட்டுகிறார்கள், இந்த எழுத்தாளர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது உங்கள் கட்டுரை. ஆக மொத்தத்தில், என் கட்டுரையின் சாரமே உங்களுக்குப் புரியவில்லை. சாரம் என்ன சாரம், ஒரு வார்த்தையைக் கூட நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளக் கூடிய அறிவோ நுண்ணுணர்வோ உங்களிடம் இல்லை.
சரி, அந்த எக்ஸை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? சந்தித்ததுண்டா? உண்டு என்றால், உங்களைப் போன்ற உலக மகா பேக்கு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால், அந்த அளவுக்கு ஒரு நச்சுப் பாம்பு அவர். அது எப்படி எனக்குத் தெரியும் என்கிறீர்களா? ஒரு நிமிடத்தில் தெரிந்து விட்டது. யாருமே சொல்லவில்லை. எக்ஸின் ஒரு நிமிடப் பேச்சில் தெரிந்தது. ஒரே நிமிடம். புரிந்து கொண்டு விட்டேன். இந்த ஆள் ஒரு வெத்துவேட்டு. இலக்கியத்துக்கும் இவருக்கும் காத தூரம். இவர் எந்தப் புத்தகத்தையும் படித்ததில்லை. அறிவில் அடி மடையன். இது எல்லாமே எனக்கு அவருடைய ஒரு நிமிடப் பேச்சில் புரிந்தது. நீங்கள் இதுவரை அவரை சந்தித்தது இல்லையெனில் அவர் அருகே போய் ரெண்டு நிமிடம் நில்லுங்கள். புரிந்து விடும். அவருடைய பொய்மையின் வீச்சு அப்படிப்பட்டது.
எனக்கு மட்டும் எப்படி அது ஒரே நிமிடத்தில் புரிந்தது? 50 ஆண்டுக் கால ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு கொடுத்த நுண்ணுணர்வு.
இதை வாசிக்கும் நண்பர்களே, சிவானந்தம் அவர்களே, அந்த நச்சுப் பாம்பு என்ன சொன்னார் தெரியுமா? அரூ சுஜாவும் பாலாவும் நம்ம பசங்க. நான் தான் எழுதவே சொல்லிக் குடுத்தேன். அந்த ரமா சுரேஷ் யாருங்கிறீங்க, நான் அடிச்சு அடிச்சு சொல்லிக் குடுத்தேன், எழுத. எவ்ளோ அடி வாங்கி இருக்கு தெரியுமா என் கிட்ட? அப்டி என் கிட்ட வளந்த பொண்ணு.
அப்போதுதான் தெரிந்தது, இந்த ஆள் இலக்கியத்தில் ஒரு வார்த்தை படித்திருக்க மாட்டார் என்று. திரும்பவும் சொல்கிறேன் நண்பர்களே, நான் யாரையாவது விமர்சனம் பண்ணினால் அவருடைய தவறுகளில் ஒரு சதவிகிதத்தையே விமர்சிக்கிறேன், மீதி 99 சதத்தை அமுக்கி விடுகிறேன் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
இதையெல்லாம் நான் நேற்று எழுதினேனா? இல்லை அல்லவா? இதையெல்லாம் எழுத வைத்தது யார்? சிவானந்தமாகிய நீங்கள். உங்களுக்கும் அந்த நச்சுப் பாம்புக்கும் என்ன பகை? ஏன் இப்படி சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கிறீர்கள்? நச்சுப் பாம்புக்கு வக்காலத்து வாங்குவது போல் வாங்கி இப்போது பாருங்கள், மரண அடி கிடைக்கிறது. இது தேவையா?
இன்னொரு விஷயம் சிவானந்தம், உங்களுக்கு எத்தனை வயது? நுண்ணுணர்வு என்றால் என்ன என்றாவது உங்களுக்குத் தெரியுமா? அஞ்சாயிரம் கொடுக்கிறேன் என்று சொன்னால் உடனே திட்டி விடுவேனா? அந்த ஆள் அதை எப்படிச் சொன்னார் தெரியுமா? அதையும்தான் கோடி காட்டியிருக்கிறேனே? ஏன் உங்களுக்கு அது புரியவில்லை? ஏதோ பிச்சை போல் சொன்னார். த்வனி என்ற ஒன்று இருக்கிறது. அந்த த்வனியை என் எழுத்திலேயே கொண்டு வந்திருக்கிறேன். என்னால் இப்போதே நிரூபிக்க முடியும். அடுத்த வாக்கியத்தில் எழுதினேன், ஏதோ இலவச இணைப்பு தருவது போல், அந்தக் காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டால் ஒரு கலர் சோடா வாங்கிக் கொடுப்பார்களே அது மாதிரி, நீங்கள் பேச இசைந்தால், முகமூடிகளின் பள்ளத்தாக்கு பத்து பிரதி வாங்கி இங்கே நண்பர்களுக்குக் கொடுப்பேன். எப்படி இருக்கிறது கதை?
அஞ்சாயிரம் கொடுக்க முன்வருபவர் அந்தச் சிறிய தொகைக்காக முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும். கேலாங்கில் வேசியிடம் அஞ்சு டாலருக்குப் போக விருப்பப்படுபவன் முதலில் வேசியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பிறகுதான் அஞ்சு டாலருக்கு வர்றியா என்று கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த உயர்குதிகால் அடிதான் கிடைக்கும். அந்த மன்னிப்பு த்வனியே அந்த நச்சுப் பாம்பிடம் இல்லை. ஏதோ எனக்கு அவர் வாழ்வு கொடுப்பது போல் பேசினார். நாளை என்ன சொல்வார் தெரியுமா, அந்த சாரு நிவேதிதா அட்ரஸ் தெரியாமல் கிடந்தார், நான் தான் எங்கள் வட்டத்தில் பேசுவதற்கு சான்ஸ் கொடுத்து பெரிய ஆளாக்கி விட்டேன் என்பார்.
அப்புறம்தான் விசாரித்தேன். இந்த ஆளுக்குத்தான் சம்பந்தப்பட்ட நண்பர்கள் பலதும் எழுதிக் கொடுத்து உதவியிருக்கிறார்கள். இப்படி ஒரு நச்சுப் பாம்புக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு எழுதுகிறீர்களே, உங்கள் நுண்ணுணர்வை என்னவென்று சொல்வது?
உங்கள் கட்டுரையைப் புறக்கணித்து விட்டுப் போகாமல் உங்கள் பெயர் போட்டு இதை வேலை மெனக்கெட்டு எழுதும் காரணம் என்னவென்றால், உங்கள் மீதான என் பரிதாப உணர்ச்சிதான். என் இளைய தம்பி ஒரு கஞ்சா அடிக்ட் என்றால் அவனைப் பற்றி எனக்கு என்ன உணர்வு தோன்றுமோ அதே உணர்வுதான் சிவானந்தம், உங்கள் மீதும் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்குத்தான் என் எழுத்து ஒத்துக் கொள்ளவில்லை இல்லையா? அதை விட்டுத் தொலைக்க வேண்டியதுதானே? ஏன் தினந்தோறும் படித்து இப்படி ரணகளப்படுகிறீர்கள்? உங்களுக்குப் பிடித்த எழுத்தை ஜெயமோகன் எழுதுகிறார். அதோடு போக வேண்டியதுதானே? அப்புறம் என்ன ————-க்கு சாருவைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்? நான் தான் உங்கள் துயரம். நான் தான் உங்கள் துக்கம். நான் தான் உங்கள் கஞ்சா. இல்லையா? உங்கள் மீது பரிதாபம் கொள்கிறேன் சிவானந்தம். என்னைப் படிக்காதீர்கள். மேலும் மேலும் அடிக்ட் ஆகி, மேலும் மேலும் துவேஷம் வளர்ந்து பைத்தியம் பிடித்து விடும். இப்படிப் பைத்தியம் பிடித்த பல ஆட்களைப் பார்த்திருக்கிறேன். ஏற்கனவே என் பாவக் கணக்கு மிக நீண்டது. நீங்களும் என் பாவக் கணக்கை ஏற்றி விடாதீர்கள். என்னால் என்ன முயன்றாலும் நீங்கள் விரும்புகின்ற பிரகாரம் ஜெயமோகன் மாதிரி எழுத முடியாது. என்னை விட்டு விடுங்கள்.
அன்புடன்,
சாரு