வரும் 25, 26 தேதிகளில் மதுரையில் இருப்பேன். விருப்பப்படும் வாசகர்கள் எனக்கு மெயில் எழுதி விட்டு என்னை சந்திக்கலாம். ஆனால் ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. என்ன பிரச்சினை என்றால், புதிதாக சந்திக்கும் நண்பர்கள் எப்போதுமே தொந்தரவு தருபவர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் பாண்டிச்சேரியில் ஒரு வாசகர் சந்திப்பு நடந்தது. அதற்கு புதிதாக ஒரு நண்பர் வருவதாக ஆர்வம் காட்டினார். வயது கிட்டத்தட்ட 50 இருக்கலாம். ஏற்கனவே மகாபலிபுரத்தில் நடந்த வாசகர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு என்னிடம் நல்ல பெயர் எடுத்தவர் என்பதால் பாண்டிச்சேரி சந்திப்புக்கு வருவதாகச் சொன்னதும் எப்போதுமே அராத்துவிடம் கலந்து ஆலோசிக்கும் நான் அவரிடம் கலந்து ஆலோசிக்காமலேயே சம்மதம் கொடுத்து விட்டேன். ஆனால் பிறகு அராத்துவிடம் இதைச் சொன்ன போது எப்படியோ போங்கள் என்று சொல்லி விட்டார். பாண்டி போனோம். அன்பர் பெயர் ராஜன் என்று வைத்துக் கொள்வோம். மதியம் ஒரு மணியிலிருந்தே வாசகர் வட்ட அமைப்பாளர் செல்வகுமாருக்கு போன் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டார் ராஜன். எப்படி வருவது? அந்த இடம் எங்கே இருக்கிறது? காலாப்பட்டுக்குப் பக்கத்தில் யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். ராஜனோ பாண்டிச்சேரி டவுனிலிருந்து செல்வாவையே கேட்டு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ராஜன் செய்ததை பயிற்சிக்காக ஒரு கதை போல் எழுதுங்கள் என்று செல்வாவிடம் சொல்லியிருந்தேன். வாசகர் வட்டத்தில் சேர வேண்டும் என்றால் காய்கறி முதற்கொண்டு நறுக்கத் தெரிய வேண்டும். தெரியாவிட்டால் கற்றுக் கொள்ள வேண்டும். சிலருக்குக் கற்றாலும் வராது. எனக்கு எவ்வளவு முயன்றும் பிற மொழிகள் வராத மாதிரி. அம்மாதிரி நண்பர்கள் வேறு எடுபிடி வேலைகள் செய்து உதவலாம். எடுபிடி என்றதும் சிணுங்கக் கூடாது. இதையெல்லாம் நான் ஆன்மீகவாதிகளிடம் தான் கற்றுக் கொண்டேன். பாபாவின் கோவிலில் ஐஏஎஸ் அதிகாரிகள் கூட கக்கூஸை சுத்தம் செய்வார்கள். இதையெல்லாம் நம் வீடு என்று நினைக்க வேண்டும். நம் வேலை என்று நினைக்க வேண்டும். ஆனால் நம் வீட்டிலேயே நம் அம்மாவோ சகோதரிகளோதானே இதையெல்லாம் செய்து நம்மை மகாராஜாக்களாகப் பயிற்றுவித்திருக்கிறார்கள்? அதனால்தான் வலிக்கிறது.
வாசகர் வட்டத்தில் முதல் பாடம் எல்லோரும் சமம். எல்லா வேலையையும் எல்லோரும் கலந்து கட்டி செய்ய வேண்டும். அதற்காக காய்கறி நறுக்க வராதவர்கள் நானே நறுக்குவேன் என்று சொல்லி விரலை வெட்டிக் கொண்டு எங்கள் எல்லோருக்கும் டார்ச்சர் கொடுக்கக் கூடாது. எனக்கு அர்விந்த் கெஜ்ரிவாலைப் பார்த்தால் நாலு அறை கொடுக்கலாம் போல் தோன்றுகிறது. முட்டாள்கள் எப்போதுமே ஆட்சியில் அமரக் கூடாது. அந்த விஷயத்தில் அயோக்கியர்களை விட மூடர்கள் ஆபத்தானவர்கள். இந்த முட்டாளின் செயலால் ஒரு கோடி தில்லி மக்களை அகதிகளாக்கி விட்டார். இப்படி வாசகர் வட்டத்தில் கெஜ்ரிவால் வேலையெல்லாம் யாரும் காண்பிக்க அனுமதி இல்லை.
காய்கறி மட்டும் அல்ல; கதை எழுதவும் பயிற்சி உண்டு. பின்வருவது பாண்டிச்சேரிக்கு வந்த ராஜன் கொடுத்த டார்ச்சர் பற்றி செல்வா ஒரு பயிற்சிக்காக எழுதியது.
முதலில் சாருவை அழைத்துக் கொள்ளவேண்டும். நானும் சாமியும் ஒரே தெருவில் இருப்பதால், நாங்கள் வழியில் அழைத்துக் கொள்ள வேண்டியது. சாருவைசார் என்று கூப்பிடக் கூடாது. பெயர் சொல்லித்தான் அழைக்கவேண்டும். அதே சமயம் சுயமரியாதையில் ஆள் கவனமாக இருப்பார். சின்ன அவமரியாதையைக் கூட பொறுக்க மாட்டார். அதேபோல் அடுத்தவரை அவமரியாதையாக நடத்தவும் மாட்டார். இது நுண்ணுணர்வு சார்ந்த விஷயம். உதாரணமாக….. ம்ஹூம். நான் இன்னும் பரிட்சை முடிக்காத மாணவன். உங்களுக்கு இப்போதே பாடம் எடுப்பது சரியில்லை.
சாருவின் இன்னொரு பழக்கம், கடிகாரத் துல்லியத்துடன் செயல்படுபவர். பாண்டிச்சேரிக்கு ஒரே காரில் செல்லவேண்டும், அவருடைய வீடுவரை என்னை அலைய விடவும் அவருக்கு மனமில்லை. அதனால், இருவருக்கும் மையமாக அடையாரில் சந்தித்து அங்கிருந்து ஒன்றாகச் செல்லலாம் என்று திட்டமிட்டோம். அடையாரில் இருவரில் ஒருவர் நீண்ட நேரம் காத்திருக்கவும் கூடாது. அதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் தாண்டும்போது நான் போன் செய்வேன். அவர் ஆட்டோவில் மயிலாப்பூரில் இருந்து அடையாறு மேம்பாலம் வந்துவிடுவார். அநேகமாக இருவரும் ஒரு நிமிடத் துல்லியத்தில் அங்கே சந்திப்போம். கடந்த இரு முறையும் அப்படித்தான் நடந்தது. இந்த முறையும் அப்படியேதான்ஒரு நிமிடமும் குறைவான இடைவெளியில் இருவரும் அடையாரில் சந்தித்தோம்.
இப்போது காய்கறி,பழங்கள் வாங்க வேண்டும். இந்த முறை அந்த வேலையை எங்கள் மூவர் குழு செய்வதாக ஏற்கனவே பேசியிருந்தோம். கிட்டத்தட்ட இருபது பேர் கூடும் இடத்தில், யாருமே Junk Food கொண்டு வர வட்டத்தில் அனுமதி இல்லை. பாலவாக்கம் காய்-கனி அங்காடி ஒன்றில் இறங்கினோம். நறுக்க சுலபமான அல்லது நறுக்கத் தேவையில்லாத பழங்கள் மட்டும் வாங்குவதென்று முடிவானது. திராட்சை, மாதுளை, கொய்யா, சிறிய ஊட்டி ஆப்பிள், ஸ்டார் பழம், பிறகு சாலட் செய்ய ஆர்கானிக் வெள்ளரி (இதைத் தோல் சீவ வேண்டிய அவசியம் இல்லை), தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் (காப்சிகம் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இரண்டு வகையாக), எலுமிச்சை, இஞ்சி, சிறிய முட்டைகோஸ். இவற்றையெல்லாம் கழுவி, நறுக்கத் தேவைப்படும் இடைவெளியில் உபயோகிக்க, ஏற்கனவே நறுக்கி வைக்கப்பட்ட பழ சலாத் பாக்கட்டுகளும் கொஞ்சம் வாங்கிக் கொண்டோம். இதை பெரும்பாலும் சாருதான் செய்தார். கிட்டத்தட்ட முக்கால்மணி நேரம், முனைப்பாக செய்து முடித்தார்.
பாண்டிச்சேரி செல்லும் சாலையின் இரண்டுபுறமும் கூடுதல் அழகு தெரிந்தது. நவம்பர் மாதத்தின் மழையால் வனப்போடு பசுமையாக இருந்தது. சென்றமுறை கூட்டத்தில் நடந்த சில நட்பு பயங்கரவாதங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு போனோம். மழை இன்னொரு தோழனாய்த் தொடர்ந்துகொண்டிருந்தது.
∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞ ∞
கண்ணாடியைத் தாண்டித் தெரியும் அரபிக் கடல் சத்தமிடாமல் அலையடித்துக் கொண்டிருந்தது. பெருமழை ஓய்ந்தாலும் தூறல் நிற்கவில்லை. மனித நடமாட்டம் இல்லாமல் மீன்பிடிப் படகுகளும், கடற்கரையும் ஓய்வில் இருந்தன. அந்த ரம்மியம் மாலையில் கடற்கரை அமர்வில் சாருவை தனக்குள் இழுத்துக் கொண்டு விடலாம். பிறகு, சாருவை கடவுளிடமிருந்து பூமிக்கு அழைத்து வருவது சிரமம். ஹோட்டல் அறையில் கொஞ்சநேரம் முன்பிருந்த கதகதப்பு மாறி சில்லிடத் தொடங்கிவிட்டது. சாரு கண்ணாடிக் கோப்பையை தன் பக்கம் நகர்த்திக் கொண்டார். ரெமி மார்ட்டினை அதிக நிதானத்துடன் அட்டைப் பெட்டியில் இருந்து விடுவித்தார். அதன் மூடி மேல் இருந்த தாளைப் பிரித்தார். குப்பை போடுவதற்கு என்று அராத்து தயார் செய்து வைத்திருந்த ஒரு பையில் போட்டார்.
இடைப்பட்ட நாட்களில் என்னென்ன புத்தகங்கள் படித்தீர்கள் என்று கேட்டார்.
தற்போது குறைந்த இடைவெளியில் கூட்டங்கள் நடத்தப்படுவதால் குறைவானவர்களே வந்திருந்தார்கள். “வருடக் கணக்கில் வராதாவர்கள் கூட ‘அடிக்கடி சந்திப்பா’ என்று கேட்பது ஆச்சரியம்தான்” என்றார் அராத்து.
அப்படியும் நாங்கள் பதினோரு பேர் கூடியிருந்தோம். தட்டுகளில் பழங்களும், நறுக்கிய காய்கறிகளும் நிரப்பப் பட்டன. அந்த ஏற்பாடுகள் அலாதியானவை.
தோல் சீவப்பட்ட வெள்ளரிக்காய்கள் துண்டுகளாக நறுக்கப்பட்டு,சிறிது உப்பும், சிறிது மிளகாய்ப் பொடியும் தூவபட்டிருந்தன. பெரிய குடைமிளகாயை (காப்சிகம்) விதைகளை நீக்கி நெடிய துண்டுகளாக நறுக்கி,எலுமிச்சை பிழிந்து,உப்பும் தூவியிருந்தார்கள். முட்டைக்கோசை இதழ் இதழாகப் பிரித்து, சிறிய துண்டுகளாகக் கிழித்து அதிலும் எலுமிச்சை பிழியப்பட்டு, சிறிது உப்பு தூவினார்கள்.
கனிந்த நிலையில் இருந்த பப்பாளிப் பழங்களை தோல் நீக்கி, விதைப் பகுதியை முழுக்க வழித்தெடுத்துவிட்டு சிறு துண்டங்களாக்கி இருந்தார்கள். ஆப்பிள் துண்டங்கள், கமலா ஆரஞ்சு சுளைகள், உப்பு தூவப்பட்ட கொய்யாத் துண்டங்கள் (பெரிய இனிப்பான கொய்யாப் பழங்கள்), உதிரியாக்கப்பட்ட மாதுளை முத்துக்கள் என்று ஒவ்வொன்றும் ஒரு தட்டில் அந்த இடம் முழுவதும் நிரம்பியது. அராத்துவின் தொடர் பயிற்சிகளால் எல்லோருமே இதுபோன்ற ஏற்பாடுகளில் ஆர்வமும், நிபுணத்துவமும் அடைந்திருந்தோம். மூன்று மணிநேர பயணத்தின் அலுப்பால் இதுபோன்ற ஏற்பாடுகள் இத்தோடு முடிந்தன. நேரம் இருப்பின் கிட்டத்தட்ட கல்யாண கலாட்டாதான். இந்த ஏற்பாடுகள் முடியவே அரைமணிக்கு மேல் ஆகியிருந்தது.
சாரு மிக முக்கியமானஒரு விவாதத்தைத் தொடங்கிய போது என்னுடைய போன் ஒலித்தது. பொதுவாக சாரு பேசிக் கொண்டிருக்கும் போது யாரும் போன் பேசுவதில்லை. அதன் மௌன சமிக்ஷையை புறக்கணித்துவிட்டு அவர் பேச்சையே கேட்டுக் கொண்டிருப்பார்கள். பேசுதல் என்பது அங்கே ஒருவழிப்பாதையல்ல. சாருவுக்குத் தகுந்த இடங்களில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால், இன்றைய சந்திப்புக்கு இன்னும் சிலர் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பிலும், அவர்களுக்கு வழி சொல்ல வேண்டிய நிர்பந்தமும் சேர்ந்து நான் போனில் பேச வேண்டியதாயிற்று.
போனில் ராஜன்… இது போன்ற சந்திப்புகளுக்கு வரும் புதியவர். அவருக்கு வழி சொல்லும் போது எல்லாவற்றையும் இரண்டு இரண்டு முறை சொல்ல வேண்டியிருந்தது. ஹோட்டல் பெயர் இரண்டு முறை, ஏரியா பெயர் இரண்டு முறை, ரூம் நம்பர் இரண்டு முறை…. எல்லாம் சொன்ன பிறகும் கூட ஆட்டோ டிரைவரிடம் அதையே சொல்லச் சொல்லி போனை அவரிடம் கொடுத்தார். பேசி ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் போனில் அழைத்து மீண்டும் அதே தகவல்களைக் கேட்டார். பின்னர் ஹோட்டலுக்குள் வந்தாகி விட்டது என்று சொனார். ரூம் எண் நூற்றி ஒன்பது என்பதைச் சொன்னேன். மீண்டும் அரை மணிநேரம் கழித்து அழைத்தவர் ரூம் நம்பர் இருநூற்றி நாலுதானே என்றார்.
(தொடரும்…)