ஒருவழியாக வராந்தாவில் நின்றபடி, தொலைவில் அல்லாடிக் கொண்டிருந்தவரை கண்டுபிடித்து அழைத்தேன். ராஜன், அறையின் உள்ளே நுழைந்ததும், முதலில் சாருவை அடையாளம் கண்டு கொண்டார். வந்தவருக்கு வயது ஐம்பதை நெருங்கியிருக்கும் என்று தோன்றியது. அவர் நிறை போதையில் இருந்தார். கையில் புகைந்து கொண்டிருத்த சிகரட்டில் புகையிலை மட்டுமில்லை. வேறு வஸ்துகளும் இருந்தன. “ஆமா சார்… கஞ்சா… அம்பது ரூவா வித்துக்கிட்டு இருந்தது… இங்கே ஐநூறு சொல்றான்” என்றார்.
தொடர்ந்து…“நான் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நண்பன். பதினைந்து வருடமாக அவருடன் எனக்கு பழக்கம் உண்டு. நான் அவருக்கு மகன் போல, அவர் எனக்கு அப்பா மாதிரி….. சாரு உன்னையும் எனக்குப் பிடிக்கும்….. நீ என் அண்ணன் மாதிரி….”
மிமிக்ரி ஆர்டிஸ்டுகள் ஒரே வசனத்தை நிகழ்ச்சி முழுவதும் பேசுவார்கள் அல்லவா…. அதேபோல மேல்கண்ட வசனத்தை நூறு முறை… அடுத்தவர் பேச்சின் இடையில் குறுக்கிட்டு சொல்லிக் கொண்டே இருந்தார். அவரின் உச்சஸ்தாயி குரலை யாரும் அலட்சியம் செய்ய முடியவில்லை. கவனிக்காதது போல் இருந்தாலும் குரலின் டெசிபல் அதிகமாகிக் கொண்டே போனது. சாருவின் புதிய நாவல் பற்றிப் பேச்சு வந்தது. அதில் மீண்டும் குறுக்கிட்டார். ஆனால், இந்த முறை வசனம் வேறு.
“நீ மேதை….தலைவா. அற்புதம். எனக்குத் தலைப்பு மறந்து போச்சு. அதான் என் பிரச்சனை. தினமும் வேலூர் போவியே தலைவா…. உன் புஸ்தகத்துல எழுதியிருக்கே.. நான் படிச்சிருக்கேன்…. அப்போ நானும் உன் கூடத்தான் வருவேன்… அப்படி எழுதியிருக்கே… நீ இல்லை… நான்தான் போறேன்…அப்படி… நீதான் நான். நான்தான் நீ…”
இப்போது அவர் தொந்தரவு நிலையில் இருந்து பிரச்சனையாக மாறியிருந்தார். எவரும் எதுவும் சொல்லி அவரை அமைதிப்படுத்த முடியவில்லை. சாரு இந்த இடையூறால் பதற்றம் அடையலாம் என்பதால் ராஜனை அப்புறப்படுத்த முயற்சி செய்யத் தொடங்கினோம்.
சாமி அவருடைய கையைப் பிடித்து பக்கத்துக்கு அறைக்கு சென்று சிறிது ஓய்வெடுத்து விட்டு வாருங்கள் என்று அனுப்பினால், பின்னாலேயே வந்துவிடுவார். கஞ்சா புகை மற்றவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை வெளியில் சென்று புகையுங்கள் என்றாலும் அவருக்குப் புரியவில்லை. எவர் சொல்வதையும் காது தாண்டி, புத்திவரை செல்ல அவரது நிலை அனுமதிக்கவில்லை.
அப்போதுதான் எங்கள் அறையின் பின்பக்கத்தில் உள்ள கண்ணாடிக் கதவில் ஒரு ஆள் வந்து எங்களை அழைப்பது தெரிந்தது. ஆட்டோக்காரர். ராஜன் வந்து இரண்டு மணி நேரம் இருக்கும். அப்போதுதான் அவர் ஆட்டோவை அனுப்பவில்லை என்பதே எங்களுக்குத் தெரிந்தது. ராஜன் டவுனில் ஒரு ரூம் போட்டுத்தான் குடித்து விட்டு வந்திருக்கிறார் என்பதும் எங்களுக்கு அப்போதுதான் தெரிந்தது. அந்த ஆட்டோவையே சாக்காக வைத்து ராஜனைதிருப்பி அனுப்ப எத்தனித்தோம்.
எங்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு, மீண்டும் சாருவின் எதிரில் அமர்ந்து பேசத் தொடங்கினார்.
“உன்னைப் படிச்சதில் இருந்தே நானும் எழுதணும் என்று தோணுது சூர்யா. அதான் என் ஆசை. நிச்சயம் எழுதுவேன்.” என்றார். இதையும் திரும்பத் திரும்ப சொன்னார். இப்போது சாரு சூர்யாவாக மாறி இருந்தார். ஆள் முழுக்கவும் நிதானத்தை இழந்திருந்தார்.
இதோடு செல்வாவின் கதை முடிகிறது. இதை ஏன் பிரசுரத்துக்குக் கொடுக்கவில்லை என்றால் ராஜன் பண்ணிய கலாட்டா முழுமையாக வரவில்லை என்ற ஒரே காரணத்தினால்தான்.
அந்த ஆள் எங்கள் பனிரண்டு பேரை ஆட்டின் கழுத்தை அறுப்பது போல் இரண்டு மணி நேரம் அறுத்தார். எங்கள் யாரையும் பேசவே விடவில்லை. பெருங்குரலில் கத்திக் கொண்டே இருந்தார். திடீர் திடீரென்று என் காலில் வேறு விழுந்தார். அரை கிலோமீட்டர் தூரத்துக்குக் கேட்கும் குரலில் “ஜெயகாந்தன் என் அப்பா; சாரு நீ எனக்கு அண்ணன்” என்று கத்தினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். யாரேனும் பேச ஆரம்பித்தால் “நீ சும்மா இரு; நான் பேசணும்” என்று ஆரம்பிப்பார். அராத்துவாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
ஒரு கட்டத்தில் ராஜனே கத்திக் கொண்டிருந்த நிலையில் “பாருங்க என்னா மாதிரி நம்மத் தாலிய அறுக்கிறான் பாருங்க… லூசுக் கூதி” என்று ஒருமையில் திட்டினேன். அதற்கும் “திட்டு சாரு… திட்டு… நீ யாரு என் அண்ணன்… திட்டு நீ… திட்டு… திட்டு… யாரைத் திட்டுறே… உன் தம்பியைத் தானே திட்டுறே… திட்டு சாரு திட்டு… நீ திட்டுனா நான் என்னா குறைஞ்சுடுவேன்… திட்டு சாரு… உனக்கு ஒன்னு தெரியுமா சாரு… சாரு நீ என் அண்ணன். ஜெயகாந்தன் என் அப்பா… அராத்து டேய்… நீ யாரு… சும்மா இரு… நானும் சாருவும் பேசிக்கிட்டு இருக்கும் போது நீ குறுக்க வராதே… வரவே வராதே… இது அண்ணனுக்கும் தம்பிக்கும் உள்ளது. என் அண்ணன் இப்போ என்னை என்னா சொல்லிட்டான்… லூசுக்கூதின்னு சொல்லிட்டான்.. டேய் அராத்து… இதுக்குக் குடுத்து வச்சுருக்கணும்டா… உனக்கு என்னடா தெரியும் அராத்து… நீ நேத்து வந்தவன்… நான் இருவது வருசமா இருக்கேண்டா… லூசுக்கூதி… வாட் அ போயட்ரி… உத்தமத் தமிழ் எழுத்தாளனால இப்படித் திட்ட முடியுமா… சொல்லு அராத்து..”
இன்னும் நிறைய… எனக்கு ஞாபக மறதி கம்மி. (இந்த வசனத்தை மறந்து போனீர்களே செல்வா…?)
இவ்வளவு பெரிய வசனத்தை உணர்ச்சி பொங்க சொல்லி விட்டு தடாலென்று என் காலில் விழுவார் ராஜன். உடம்பு வேறு கட்டுமஸ்தாக இருக்கும் என்பதால் என் மேலே விழுந்து எலும்பு கிலும்பு முறிந்து விடப் போகிறதோ என்று பயந்தேன்.
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இப்படிப்பட்ட ராஜன்கள் குடிக்காவிட்டால் ஏதோ கடவுளின் தூதனைப் போல் நடந்து கொள்கிறார்கள். அப்படியானால் குடிக்காதே. அவ்வளவுதான். குடிக்காதே. அதுசரி, இப்படி பனிரண்டு பேர் தாலியை அறுக்கிறீர்களே, உங்களுக்குத் தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியும்தானே? அப்படி இருக்கும் போது ஏன் இப்படி பனிரண்டு பேர் கழுத்தை அறுக்கிறீர்கள்? பனிரண்டு ஆடுகள் கழுத்து அறுபட்டுத் துடித்துக் கொண்டிருந்த காட்சிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.
கடைசியில் இரண்டு மணி நேரம் கழித்து, நான் பொறுமை இழந்தேன். ராஜன் பழையபடி ஆரம்பித்தார். நான் என்னுடைய rare தொனியில் “ராஜன்… போதும்… இனி ஒரு வார்த்தை பேசினாலும் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது” என்றேன். பதிலுக்கு ராஜன் “அதாவது சாரு…” என்று ஆரம்பித்ததுமே “ராஜன்” என்று ஒரே வார்த்தை சொன்னேன். அந்தக் குரல் ஆயிரம் நாளில் ஒரு நாள் மட்டுமே வரும். உடனேயே எழுந்து தள்ளாடியபடி போய் விட்டார். செல்வா தான் அவரைக் கைத்தாங்கலாக அழைத்துப் போய் ஆட்டோவில் அமர்த்தினார்.
வட்டத்துக்குப் புதியவர்கள் வந்தால் இப்படித்தான் டார்ச்சர் கொடுக்கிறார்கள்.
(தொடரும்…)
Comments are closed.