எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் நமக்குப் பிரியமான ஒரு எழுத்தாளனை சந்திக்கப் போகும் போது இப்படித்தான் போவதா? என் எழுத்துதான் உங்களுக்கு அப்படிப்பட்ட அராஜகமான மனோபாவத்தை அளிக்கிறதா? சுதந்திரம் என்றால் மற்றவனின் கழுத்தை அறுப்பதா? இதைத்தான் நீங்கள் என் எழுத்தில் கற்றீர்களா?
சரி, நான் கூறு கெட்டுப் போய் இப்படிச் செய்திருந்தேன் என்றால் தலைமறைவாக ஓடி விடாமல் செல்வாவை சந்தித்து வட்ட நிதிக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து ஏதோ ஒரு கைமாறாவது செய்திருப்பேன். அதுவும் கிடையாது. ஏனென்றால், எங்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்கு ஒரு சிறிது பணம் தேவைப்படுகிறது. அல்லது, கொஞ்சம் வசதியானவராக இருந்திருந்தால் நானே என் செலவில் ஒரு வட்டச் சந்திப்பு ஏற்பாடு செய்கிறேன். வந்து ஒரு வார்த்தை பேசாமல் அமர்ந்து இருப்பேன் என்று சொல்லி செய்து காட்டியிருக்கலாம். எதுவுமே இல்லை. ஒருமுறை கற்பழிச்சாச்சு… ஓடிப் போய்டுவோம் என்ற மனநிலையிலேயே இருந்தால் எப்படி உருப்படுவது?
போகட்டும். மிகச் சமீபத்தில் அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் வெளியீட்டு விழா அன்று இரவு மாமல்லபுரத்தில் சந்தித்தோம் அல்லவா? அப்போது ஒரு புதியவர் வந்து சேர்ந்தார். ராஜன் அனுபவத்துக்குப் பிறகு இனிமேல் எந்தக் கொம்பனாக இருந்தாலும் பார்த்து பழகிய பிறகுதான் சேர்த்துக் கொள்வது என்ற தீவிர முடிவில் இருந்தேன். ஆனால் என்னையும் அறியாமல் குறுக்கு வழியில் வந்து சேர்ந்தார் ஒரு அன்பர். அன்பர் போன மாதம் வரை மாணவர். இப்போது வேலையில் சேர்ந்து விட்டார். அன்பும் பண்பும் நிறைந்தவர். என் தஞ்சாவூர்க்காரர். நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். என் மீது அளப்பரிய மரியாதை கொண்டவர். மணி என்று ஒரு பெயரை வைத்துக் கொள்வோம். அவர் நாவில் அந்தக் காலத்துத் தஞ்சாவூர் பிராமண பாஷை துள்ளி விளையாடும். அதைக் கேட்பதே ஒரு இசை போல் இருக்கும். ஆனால் ஒரே முறை பார்த்தவரை எல்லாம் வட்டச் சந்திப்பில் சேர்ப்பது இல்லை. நான் ரமேஷ் என்ற நண்பரின் காரில் மாமல்லபுரம் கிளம்பியதும் மணி கணேஷ் அன்புவிடம் நான் சாருவின் நெருங்கிய நண்பன் என்று சொல்லி அவரோடு கிளம்பி விட்டார். அவர் வருவது பற்றி என்னிடம் சொல்லவில்லை. கணேஷுக்கு அன்பே உலகம். விட்டால் உத்தமத் தமிழ் எழுத்தாளரைக் கூட அழைத்துக் கொண்டு வந்து விடுவார். அவ்ளோ அன்பு.
மாமல்லபுரம் சந்திப்பு பற்றி அப்புறம் எழுதுகிறேன். முதலில் மணி செய்த டார்ச்சர் பற்றி. நாற்பது பேர் இருந்தோம். அதில் சிலர் அராத்துவின் நண்பர்கள். நான் முதல் முறை சந்திக்கிறேன். ஆனால் எனக்கு எதுவும் பிரச்சினை தரவில்லை. என் பக்கமே வரவில்லை. உத்தமம். மணி என்ன செய்தார் தெரியுமா? என் பக்கத்தில் – கிட்டத்தட்ட என்னைத் தொட்டபடி – அமர்ந்து கொண்டார். இட நெருக்கடி. அது எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால்… பதினோரு மணியிலிருந்து காலை ஐந்து மணிக்கு எல்லோரும் உறங்கச் செல்லும் வரை பிரம்மாண்டமான குரலில் விக்கிக் கொண்டே இருந்தார். இடைவெளியே இல்லாமல் நம் அருகில் – மிக அருகில் அமர்ந்து ஒருவர் ஆறு மணி நேரம் விக்கினால் எப்படி இருக்கும்?
நான் ஏதோ போன ஜென்மத்தில் ரொம்பப் பெரிய பாவம் செய்திருக்கிறேன் போல. டார்ச்சர் என்னென்ன விதத்திலெல்லாம் வருகிறது பாருங்களேன்! இப்படியா ஒருத்தன் விக்கி விக்கி சாகடிப்பான்? அதுவும் பிரம்மாண்டமான குரல். ஒவ்வொரு விக்கலும் சம்மட்டி அடி போல் இருந்தது. என் நிலைமையைப் பார்த்து விட்டு ஒரு நண்பர் பாம்பு பாம்பு என்று பயமுறுத்தினார். அதற்கும் விக்கல் நிற்கவில்லை. பாம்பைத் தேடிய பின் விக்கல் தொடர்ந்தது.
அடப்பாவிகளா… இப்படியெல்லாமா இருக்கிறீர்கள்?
மறுநாள் மதியம் பாதிப் பேர் கிளம்பி விட்டார்கள். கூட்டம் குறைந்தது. இரவு கூடினோம். இல்லை, மதியம் ஏழு மணிக்கே கூடி விட்டோம். அப்போதும் என் பக்கத்தில் – ரொம்பப் பக்கத்தில் – வந்து அமர்ந்து கொண்டார் மணி. ஏழரைக்கு ஆரம்பித்தது விக்கல். நாங்கள் கலையும் போது நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். அவ்வளவு நேரமும் என் தலையில் கடப்பாரை இடியாக விழுந்து கொண்டே இருந்தது விக்கல்.
சரி, விக்கல் வந்தால் நான் என்ன செய்யட்டும் என்கிறீர்களா? ஏன்யா, ஒரு தும்மல் வந்தால் கூட எதிரே ஆள் இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அப்படியிருக்கும் போது இப்படி ஏழு எட்டு மணி நேரம் விக்கி அடுத்தவனை ஹாயாக சாக அடிக்கலாமா? விக்கல் வந்தால் எழுந்து போய் படுத்து விட வேண்டும். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
மறுநாள் காலை பத்து மணிக்குக் கிளம்பினோம். காரில் வரும் போது பாதி வழியில் மணி இறங்கியதும் அராத்துவிடம் நான் பட்ட துன்பத்தைப் பற்றி சொன்னேன். அவ்வளவுதான். அவர் ஒரு கதையை எடுத்து விட்டார். அதாவது, மற்றவருக்குத் துன்பம் கொடுப்பவர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை.
விழா முடிந்த பிறகு மாமல்லபுரம் வந்தோம் அல்லவா? அப்போதே அராத்துவிடம் ஷார்ட்ஸ் இருக்கிறதா என்று கேட்டாராம் மணி. அடப் பாவி. அராத்துவையே இப்போதுதான் முதல் முறை பார்க்கிறாய்… உடனே ஜட்டி, ஷார்ட்ஸ் எல்லாம் கேட்பீர்களா? அராத்து இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
அடுத்து, கோபாலையும் விடவில்லை மணி. கோபாலும் ஒரு கதை சொன்னார். நாங்கள் கிளம்பும் அன்று காலையில் ஆறு மணிக்கு எழுந்த மணி பக்கத்தில் இருந்த கோபாலிடம் – கோபால் ஆறு மணிக்கே எழுந்து விடுவார் – எப்போது கிளம்புகிறோம் என்று கேட்டிருக்கிறார். கோபாலுக்கு என்ன தெரியும்? ஏதோ குத்துமதிப்பாக ஒன்பது மணிக்கு என்று சொல்கிறார். சரியாக ஒன்பது ஆனதும் கோபாலிடம் “மணி ஒன்பது ஆச்சு. எல்லாரையும் எழுப்புங்க… எழுப்புங்க…” என்று சொல்லி நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது, மணிக்கு மாமல்லபுரத்திலிருந்து காரில் போக வேண்டும். பஸ்ஸில் போக அலுப்பு. அதற்காக அராத்துவை எழுப்பச் சொல்லி நச்சரிப்பு. இன்னொரு பிரச்சினை, காரில் வேறு இடம் இல்லை. பிரச்சினை அதோடு போகவில்லை. நாங்கள் பத்து மணிக்குக் கிளம்பும் போது, மணி அராத்துவிடம், “நான் திருவான்மியூரில் இறங்கிக் கொள்கிறேன்” என்றார். இதை நானே கண்ணால் பார்த்தேன். அராத்து, “நான் திருவான்மியூர் போகலியேங்க… நீங்க நடுவுல எங்கியாவது இறங்கிக்குங்க” என்கிறார். நடுவுல இறங்கினா பஸ்ஸு கிடைக்காது… நான் திருவான்மியூர்லயே இறங்கிக்கிறேனே…
எனக்குக் கொலை வெறி வந்து விட்டது. ஏனென்றால், நானே நடுவழியில்தான் இறங்கிப் போக வேண்டும். மேலும், அராத்துவுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விழா என்பதால் மருத்துவர் கூறியபடி பெட் ரெஸ்ட் கூட எடுக்காமல் ஏற்கனவே விந்தி விந்தி நடந்து கொண்டிருந்தார். ஆனால் அன்பரை திருவான்மியூரில் காரில் கொண்டு போய் விட வேண்டும்!
என் எழுத்தைப் படித்த பிறகுமா இப்படியெல்லாம் புறப்பட்டு வருகிறீர்கள்?
மதுரையில் என்னை சந்திக்க வருபவர்கள் யார் வேண்டுமானாலும் வாருங்கள். என்னைக் கண்டு சிங்கம் புலி போல் எல்லாம் அஞ்ச வேண்டாம். லகுவாக இருங்கள். இயல்பாக இருங்கள். ஆனால் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். இது ஒன்றுதான் என் வேண்டுகோள்.
இந்த இடத்தில் நேற்று எனக்கு வந்த ஒரு போன் கால் பற்றிச் சொல்ல வேண்டும். அன்பர் சுமார் பத்து முறை அழைத்தார். மதுரைக்கு வந்து உங்களைப் பார்க்கலாமா என்பதற்காக அழைத்திருக்கிறார். பத்து முறையும் போனைக் கட் பண்ணினேன். இப்படியெல்லாம் போனை கட் பண்ணுகிற ஆளே அல்ல நான். எடுக்க விருப்பம் இல்லாவிடில் எடுக்க மாட்டேனே தவிர போனைக் கட் பண்ண மாட்டேன். அந்தக் கதையைச் சொல்கிறேன்.
தொடரும்…
Comments are closed.