வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள்… (4)

அவர் பெயர் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர்.  அவரோடு ஒருமுறை மாசாணி அம்மன் கோவில் போயிருந்தேன்.  கூட பிரகாஷும் வந்திருந்தார்.  நாங்கள் மூன்று பேர் சென்று வந்தோம்.  அதற்கு சில தினங்கள் முன்பு கரூரில் நான் நண்பர்களைச் சந்தித்த போது மகேஷையும் வரச் சொல்லியிருந்தேன்.  மதியம் வந்தவர் இரவு வரை இருந்து விட்டுப் போனார்.  அப்போது ஒரு விஷயம் நடந்தது.  மதிய உணவுக்கு ஒரு மெஸ்ஸில் சொல்லியிருந்தோம். என் அறையில் என்னோடு இருந்தது பத்து பேர்.  எல்லோருக்குமாக ரமேஷ் (ஈரோடு ஆடிட்டர்)  விஜியின் டிரைவர் பாயை (அவர் பெயர் தெரியவில்லை; எல்லோரும் பாய் என்றுதான் அழைப்போம்)  அனுப்பினோம்.  அங்கே போன பிறகு அவரிடம் கொடுத்து அனுப்பிய பணம் போதவில்லை.  அப்போது மகேஷின் டிரைவரிடம் பணம் கொடுத்து அனுப்பினால் பணத்தையும் கொடுத்து விட்டு சாப்பாட்டையும் எடுத்து வர உதவியாக இருக்கும் என்று மகேஷிடம் கேட்டு விட்டு அவர் டிரைவரை அனுப்பினோம்.  ஆனால் அவருக்குக் கரூரில் வழி தெரியாது என்பதால் ஆட்டோவில் போகச் சொன்னோம்.  வரும் போது பாயோடு காரில் வந்து விடலாம். 

எல்லாம் செவ்வனே முடிந்தது.  பிறகு எப்போதோ  விஜியிடம் பேசிக் கொண்டிருந்த போது  மகேஷின் பேச்சு வந்தது.  பதினைந்து இருபது பேர் கூடினோமே, யார் யார் செலவு செய்தது, எல்லாவற்றையும் ரமேஷின் தலையிலேயே கட்டி விடக் கூடாது என்று கேட்டேன்.  விஜியும் விபரம் எல்லாம் சொன்னார்.  மகேஷ் பெயரே வரவில்லை.  செலவில் மகேஷ் ஒன்றையும் ஏற்றுக் கொள்ளவில்லையா என்று கேட்டேன்.  என்ன பாஸ் இப்படிக் கேட்டு விட்டீர்கள்? என்று விஜி ஒரு கதை சொன்னார்.  செலவில் எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்.  அவருடைய டிரைவரை மெஸ்ஸுக்கு அனுப்பினோம் அல்லவா? அதற்கு ஆட்டோ செலவுக்கு ஐம்பது ரூபாயை நாங்கள் கொடுத்து அனுப்பிய பணத்தில் எடுத்துக் கொண்டாராம்.  கணக்கை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறார்.    ஏன் மிஸ்டர் மகேஷ்… என்னை இப்போது மதுரையில் சந்திக்க வேண்டும் என்று நேற்று ஒரு பத்து அழைப்பும் இன்று ஒரு அரை டஜன் அழைப்பும் முகநூலில் ஒரு மெஸேஜும் அனுப்புகிறீர்களே… நான் உங்களுக்கு ஐம்பது ரூபாய்க்குக் கூடவா பெறாமல் போய் விட்டேன்?  எனக்கும் நண்பர்களுக்கும் (மகேஷ் சாப்பிடவில்லை என்று நினைக்கிறேன்) சாப்பாடு வாங்கி வருவதற்கு ஆட்டோ செலவைக் கூட உங்களால் கொடுக்க முடியாது என்றால் என்னை ஏன் சந்திக்கிறீர்கள்? சந்திக்க விரும்புகிறீர்கள்? 

40 ஆண்டுகளாக நான் ஓசியிலேயே எழுதி விட்டேன்.   தமிழ்நாட்டிலேயே பதிப்பகம் கிடைக்காமல் தானே தன் எழுத்தைப் பிரசுரித்துக் கொண்ட தறுதலைகளில் நான் தான் முதல் ஆளாக இருப்பேன் என்று நினைக்கிறேன்.  ஸீரோ டிகிரி நாவலின் கையெழுத்துப் பிரதியை ஒரு சாக்கில் போட்டுக் கொண்டு – 1000 பக்கங்கள் கொண்ட ஒரு பெரிய காகித மூட்டை அது – வீதி வீதியாக அலைந்திருக்கிறேன். 

முதல் நாளிலிருந்தே நான் transgressive writer ஆகத்தான் கருதப்பட்டு வந்திருக்கிறேன்.  என்ன, transgression என்ற வார்த்தை அப்போது  பரிச்சயமாகி இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறேன்.  ஜே.ஜே. சில குறிப்புகளை தமிழ்நாடே கொண்டாடியது.  அந்த நாவலைப் போல் தமிழில் வேறு எந்த நாவலையும் தமிழ்நாடு கொண்டாடியதில்லை.  அப்போது நான் 25 வயதுச் சிறுவன்.  அது ஒரு போலி நாவல்; fake என்று கட்டுரை எழுதி கொல்லிப்பாவைக்கு அனுப்பினேன்.  அது சு.ரா. ரசிகர்களின் பத்திரிகை.  போடுவார்களா?  திருப்பி அனுப்பி விட்டார்கள்.  இப்போது உங்களுக்கு இருப்பதைப் போல் முகநூல் வசதியும் இணைய வசதியும் இருந்த காலமா என்ன?  என் கட்டுரையை வெளியிட அப்போது பத்திரிகையே இல்லை.  நான் தில்லியில் இருந்தேன்.  அங்கே என் நண்பருடன் கல்யாணப் பத்திரிகை அச்சடிக்கும் ஒரு ட்ரெடில் ப்ரெஸ் இருந்தது.  அங்கே போய் ராப்பகலாகக் கண் விழித்து ப்ரூஃப் பார்த்து அதை ஒரு புத்தகமாக அடித்தேன்.  எனக்கு அப்போது சம்பளம் 560 ரூ.  அதில்தான் அந்தப் புத்தகத்தை அச்சடித்து எல்லா நண்பர்களுக்கும் இலவசமாக விநியோகித்தேன்.   சாரு வெளியீடு என்பது அந்தப் பதிப்பகத்தின் பெயர்.  தமிழின் சமகால இலக்கியத்தின் முதல் பதிப்பகம் எழுத்து என்றால் சாரு வெளியீடு எத்தனையாவது பதிப்பகம் என்று தெரியவில்லை.

அடுத்து, லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் நூல்.  அதை கிரணம் வெளியீடு என்ற பெயரில் நான் பாண்டிச்சேரியில் வேலை இல்லாமல் பட்டினி கிடந்த போது வெளியிட்டேன்.  ஆயிரம் ரூபாய் அச்சகக் கட்டணம்.  ஐநூறு ரூபாய் கொடுத்து விட்டேன்.  மீதி ஐநூறை புத்தகம் விற்றதும் தருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.  அப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கா என்றால் என்ன என்றே யாருக்கும் தெரியாது.  சே குவேரா இன்று சினிமா இயக்குனரின் டீ ஷர்ட்டில் இருக்கிறார்.  ஆனால் 1982-இல் சே குவேரா பெயரைத் தெரிந்த இரண்டே பேர்களில் அடியேனும் ஒருவன்.  (இன்னொருவர் தருமு சிவராமு).  அப்போது சே-வின் பெயர் மட்டுமல்ல.  அவருடைய புத்தகங்களையும் நான் படித்து முடித்து படிகளில் ஒரு நீண்ட அறிமுகக் கட்டுரையும் எழுதியிருந்தேன். 

லத்தீன் அமெரிக்க சினிமா வெளியே வந்ததும் அத்தனை பிரதிகளையும் பாண்டிச்சேரி நண்பர் ஒருவரின் சிபாரிசில் என்.சி.பி.ஹெச். நிறுவனத்துக்கு அனுப்பினேன்.  அது அவ்வளவு சுலபம் அல்ல.  அவர்கள் அந்த நிறுவனத்தின் 12 பிரிவுகளுக்கு பல்வேறு ஊர்களுக்கு அனுப்பச் சொன்னார்கள்.  12 ஊர்களுக்குப் பார்சல் செய்தேன்.  புத்தகம் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்து விட்டது.  அப்போது கம்யூனிசம் பரவலாக மதிப்பைப் பெற்றிருந்த காலம்.  ஒரு பிரதியின் விலை 18 ரூ.  அதைக் கிண்டலடித்து அ. மார்க்ஸ் “இவர் என்ன லத்தீன் அமெரிக்காவுக்கே சென்று இந்த சினிமாவையெல்லாம் பார்த்தாரா?” என்று எழுதினார்.  ஏன் பதினெட்டு ரூபாய் என்றால் அந்தப் படங்களையெல்லாம் அவ்வளவு சிரமப்பட்டு பார்த்தேன்.  அப்போதெல்லாம் க்ளாபர் ரோச்சாவின் படங்களைப் பார்ப்பது அவ்வளவு கடினம்.  கிட்டத்தட்ட ப்ரஸீல் தான் போக வேண்டும்.  ஒரே மாதத்தில் அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்தும் என்.சி.பெ.ஹெச். நிறுவனம் எனக்கு ஒரு பைசா கூடக் கொடுக்காமல் பட்டை நாமம் தீட்டி விட்டது.   நடந்து முப்பது ஆண்டுகள் ஆகி விட்டது.  இப்போது நஷ்ட ஈடு எல்லாம் போட்டுப் பார்த்தால் லட்சக் கணக்கில் வரும்.  எல்லாப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தது எப்படித் தெரியும் என்றால், அப்போதெல்லாம் தஞ்சாவூர், திருச்சி, மதுரை என்று எல்லா ஊர்களில் பஸ் ஸ்டாண்டுகளின் அருகில் என்.சி.பி.ஹெச்.சின் புத்தகங்கள் எப்போதுமே ஒரு ஸ்டாலில் கிடைக்கும்.  அங்கேயெல்லாம் கேட்ட போது விற்று விட்டன, ஒரு பிரதி கூட இல்லை என்றே சொல்லப்பட்டது.  அதுதான் உண்மையும் கூட.  இப்படி என்.சி.பி.ஹெச். நிறுவனம் என்னை ஏமாற்றி விட்டதால் நான் அச்சகத்தாரிடமிருந்து ஒளிந்து மறைந்து வாழ நேர்ந்தது. அச்சக நண்பர் வீட்டுக்கு என்னைத் தேடி வரும் போதெல்லாம் கக்கூஸில் போய் உட்கார்ந்திருப்பேன்.   பல நாட்கள் அப்படி நான் கக்கூஸில் ஒளிந்திருக்கிறேன்.   அந்த வலியும் ரணமும் இன்னமும் என்னிடம் இருக்கிறது.  இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், முதல் நாளிலேயே நான் தமிழின் ஆகப் பெரிய கடவுள் பிம்பமான சுந்தர ராமசாமியை விமர்சித்து விட்டேன்.  சாதா விமர்சனம் அல்ல; போலி என்று நிறுவி விட்டேன்.  அதற்குப் பிறகு எவன் என் புத்தகத்தைப் பதிப்பிப்பான்? 

இன்று என்னை சந்திக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டு பதினெட்டு போன் அடிக்கும் நீங்கள் ஐம்பது ரூபாய்க்கு சீட்டு எழுதிக் கொடுத்து வாங்கிக் கொண்டு போகிறீர்களா?  என்னை சண்டைக்காரன் என்கிறார்கள்.  இதுநாள் வரை இந்த விஷயம் பற்றி நான் வாயைத் திறந்தேனா?  இல்லையே?  இப்போது இவர் பதினெட்டு முறை போன் செய்ததால் இதை எழுதும்படி நேரிட்டது.  இல்லாவிட்டால் இதையும் மறந்து போய் இருப்பேன். 

தொடரும்…

Comments are closed.