வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள்… (5)

முதலில் சாரு வெளியீடு.  அடுத்து, லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் கிரணம் வெளியீடு.  மூன்றாவது, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவல்.  கிரணம் வெளியீடு.  இதை நான் வட்டிக்குக் கடன் வாங்கியும் என் மனைவியின் (அவந்திகா அல்ல) தாலியை விற்றும் பிரசுரித்தேன். 

நிறைமாத (ஒன்பதாவது மாதம்) கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் அண்ணா நகரிலிருந்து மைலாப்பூரில் இருக்கும் அச்சகம் வரை பஸ்ஸில் வந்து அந்த நாவலுக்காக அலையாய் அலைந்தார்.  நான் அப்போது தில்லியில் இருந்தேன்.  நாவல் வந்தது.  எல்லோருக்கும் இலவசமாகவே விநியோகித்தேன்.    குழந்தையும் பிறந்தது.  ஜனனம் நடந்த வீடு மரண வீட்டைப் போல் இருந்தது.  – இப்போது எழுதி முடித்த நாவலில் பிற விபரங்கள் உள்ளன – சமைக்க ஆள் இல்லை.  பீத்துணியை அலச ஆள் இல்லை.  கையில் காசு இல்லை.  இருந்த காசில் நாவல் போட்டாயிற்று.   பீத்துணியை அலச முதலில் வீட்டில் தண்ணீர் இல்லை.  பத்து வீடு தள்ளிப் போய் கிணற்றில் நீர் சேந்தித்தான் பீத்துணி அலச வேண்டும்.  நான் தான் செய்தேன்.  டயாபர் வாங்குவதைப் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை.  அந்த அளவு கஷ்டம்.  குழந்தையோடு குடும்பமாகத் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்த தருணத்தில் – அப்போது மணி இரவு பதினொன்று – வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.   பார்த்தால் அச்சகத்தில் வேலை பார்க்கும் நண்பர். அச்சகத்திலிருந்து பணம் கேட்டு அனுப்பினார் என்றார்.   அச்சக நண்பர் எழுத்தாளர்.  என்ன இது, வட்டிக்கடை சேட்டு மாதிரி இப்படி நடுராத்திரில அனுப்பி இருக்கார்; நாளை நானே நேரில் வருகிறேன் என்று சொல்லி அனுப்பினேன். 

மறுநாள் கோபத்துடன் நேரில் போனேன்.  ஆனால் அச்சக நண்பரோ கொலைவெறியில் இருந்திருக்கிறார் போல.  என் முகத்தைப் பார்த்ததுமே எல்லோர் எதிரிலும் வெளியே போடா நாயே என்றார்.

அழுது விட்டேன்.  எல்லோர் முன்னிலையிலும் அழுதேன்.  பிறகு அவமானம் தாங்காமல் அச்சகத்தின் கக்கூஸில் போய் அழுதேன்.  அவர் சொன்னது போல் வெளியே போகவில்லை.   நீங்களா இப்படிச் சொன்னீர்கள் என்று கேட்டேன்.

அடுத்தது, குருதிப் புனல் விமர்சனம்.  யாரும் வெளியிடவில்லை.  புத்தகமாகப் போட்டேன்.  தியேட்டர் வாசலில் நின்று விநியோகித்தேன்.  நல்லவேளை.  பதிப்பக நண்பர் என்னிடம் காசு கேட்கவில்லை.

அடுத்தது பெருசு.  ஸீரோ டிகிரி. வழக்கம் போலவே ஒரு பப்ளிஷரும் கிடைக்கவில்லை.  காகித மூட்டையைத் தோளில் சுமந்து கொண்டு திருவல்லிக்கேணியில் அச்சகம் அச்சகமாக அலைந்தேன்.   என்னென்னவோ கேள்வி கேட்டார்கள்.  செக்ஸ் புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை; நக்ஸலைட் விஷயங்கள் இருக்கக் கூடாது என்றார்கள்.  அரை மணி நேரம் என்னை இண்டெர்வியூ செய்து முடியாது என்று சொன்னார்கள்.

பிறகு வசந்தகுமாரிடம் கொடுத்து என் செலவில் வெளியிட்டேன்.  என் செலவு. அவருக்கென்று பதிப்பகம் இருந்தது.  ஆனால் என் செலவில்தான் வெளியிட வேண்டி வந்தது.  காரணம், பதிப்பகத்தாருக்கு என் எழுத்து பிடிக்கவில்லை.   வழக்கம் போல் பணம் பாக்கி வைத்தேன். 3000 ரூபாய் பாக்கி.  கையில் ஒரு பைசா இல்லை. வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் என்றார் வசந்தகுமார்.  நல்லவேளை… ஷோபா சக்தி காப்பாற்றினார்.  3000 ரூ. அனுப்பினார்.  வசந்தகுமாரிடம் கொடுத்து வக்கீல் நோட்டீஸிலிருந்து மீண்டேன்.  ஸீரோ டிகிரியையும் எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தேன். 

அடுத்து, ஆனந்த விகடன் ஆன்லைனில் இரண்டு ஆண்டுகள் கோணல் பக்கங்கள் எழுதினேன்.  பிய்த்துக் கொண்டு போயிற்று.  முழுக்கவும் இலவசம்.  எழுத்தாளர்களையெல்லாம் வாழ வைக்கும் விகடன் என்னிடமிருந்து இரண்டு ஆண்டுகள் இலவசமாகவே கட்டுரைகளை வாங்கிக் கொண்டது.  ஆனால் ஆரம்பத்திலேயே காசு கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டதால் எனக்கு ஏமாற்றம் இல்லை.  ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  ஓடி ஓடிப் போய் எழுத்தாளர்களை கௌரவிக்கும் விகடனா எனக்கு இப்படிச் செய்கிறது என்று நொந்து போனேன்.  ஆனாலும் எனக்கு விகடன் இணைய தளத்தில் இடம் கொடுத்தது பற்றி மகிழ்ந்தேன். 

பிறகு கோணல் பக்கங்கள் முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி எல்லாவற்றையும் நானே தான் வெளியிட்டேன்.  Ecks Publishers. புரிகிறதா? எக்ஸ் பதிப்பகம்.   பிறகு கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதி. எக்ஸ் பதிப்பகம்.  ஆனால் மனுஷ்ய புத்திரன் தான் புத்தகமாக வர உதவினார்.  எப்படி என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.   உயிர்மையில் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று எல்லோருடைய புத்தகங்கள் வந்தும், நான் மனுஷ்ய புத்திரனின் மிக நெருக்கமான நண்பனாக இருந்தும், உயிர்மையின் முதல் இஷ்யூவிலிருந்து என் கட்டுரைகள் வெளிவந்தும் என் புத்தகம் உயிர்மையில் வரவில்லை.   எந்த ஊருக்குப் போனாலும் நண்பர்கள் கேட்பார்கள்.  லஜ்ஜையாக இருக்கும்.  ஏனென்றால், உயிர்மையின் முதல் இஷ்யூவிலிருந்து எழுதுகிறேன்.  ஏன் உயிர்மையில் என் புத்தகம் வரவில்லை?  கடுப்புடன் உயிர்மையில் என் புத்தகம் வராது என்று சொல்லுவேன்.  இரண்டு விஷயங்கள் உள்ளன.  என் உயிர் நண்பரே என் புத்தகத்தைப் போடவில்லை என்றால் அதற்கு அவருக்கு மிக நியாயமான காரணம் இருக்கும் என்று நான் நம்பினேன்.  இன்று வரை காரணம் தெரியாது.  அல்லது, காரணமே இல்லாமலும் இருக்கலாம். 

பிறகு கோணல் பக்கங்கள் மூன்றாவது தொகுதிக்காக எவ்வளவு செலவு ஆகும் என்று ஹமீதிடம் கேட்டேன்.  சுமார் 60,000 என்றார்.  உடனே மாதம் 5000 ரூ என்று என் வாசகர்களிடமிருந்து வசூலித்து ஒரு வருடம் ஹமீதிடம் கொடுத்தேன்.  முதல் தவணை கொடுத்தவர் இன்று முகநூலில் பிரபலபமாக இருக்கும் நாராயண்.  ஒரு ஆண்டு சென்றுதான் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதி வந்தது.  ஆனால் மனுஷ்ய புத்திரன் நெகிழ்ந்து போனார்.  மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இனிமேல் சாரு எதை எழுதினாலும் அதை உயிர்மையில் பதிப்பிப்பேன் என்றார்.  அதை நிறைவேற்றவும் செய்தார்.  மீறியது நான் தான்; அவர் அல்ல.   என் புத்தகங்கள் பரவலாகக் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் செய்தேன்.   ஆனால் சமீபத்தில் வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸில் ஸீரோ டிகிரி இருக்கிறதா என்று கேட்டேன்.  பலரும் கேட்டு விட்டுப் போகிறார்கள்.  இல்லை என்றார்.  யாரை நொந்து கொள்வது?

என்னைச் சந்திக்க நினைக்கும் நண்பர் என்னிடம் 50 ரூபாய்க்குக் கணக்குப் பார்த்து என் நண்பரிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு போகிறார்.  பெரிய தொழில் அதிபர்.  ஐயா, நான் உங்களிடமிருந்து பணம் கேட்கவில்லை.  என் மீது பிரியம் உள்ளவர்கள், முடிந்தவர்கள் கொடுக்கிறார்கள்.  நீங்கள் ஏன் அனாவசியமாக என்னை நெருங்குகிறீர்கள்? 

இதற்கிடையில் பத்திரிகைகள்.  ஆயிரம் ரூபாய்தான் அதிக பட்சம்.  ஒரு கட்டுரைக்கு.  பல பத்திரிகைகள் அதுவும் கொடுப்பதில்லை.   வின் டிவியில் நடந்தது உங்களுக்குத் தெரியும்.  50 எபிசோட் செய்தேன்.  ஐம்பதில் பலதும் உலக சினிமா.  ஒரு பைசா கொடுக்கவில்லை. ஒரு எபிசோடுக்கு மூன்று நாள் உழைப்பேன்.  என் நண்பரிடம் கேட்டேன்.  அவருக்கு ஒரு எபிசோடுக்கு 60,000 ரூ. கொடுத்தார்கள் என்றார்.   சினிமா பற்றிய விமர்சனத்துக்கு.  உங்களுக்குக் குறைந்த பட்சம் 30,000 ரூ கொடுத்திருக்க வேண்டும் என்றார்.  30000 x 50 எவ்வளவு ரூபாய் வரும்?  லட்சமா கோடியா தெரியவில்லை.  ஊடகங்கள்தான் என்னைப் பிச்சைக்காரனாக ஆக்குகின்றன.  அதனால்தான் நான் வாசகரிடம் காசு கேட்கிறேன். 

பிரபஞ்சன் எழுதுகிறார், நான் வாசகனிடம் காசு கேட்க மாட்டேன் என்று.  அவர் கேட்க மாட்டார்.  அவர் மிராசுதாரின் பிள்ளை.  இன்றைக்கும் அவர் மிராசுதார்தான்.  ஒரு பிரபலமான தொலைக்காட்சி சேனலில் மாதம் ஒரு லகரம் கொடுப்பதாக அறிந்தேன்.  ஏதோ ஆலோசகராம்.  நினைத்தால் ஃப்ரான்ஸ்.  நினைத்தால் அமெரிக்கா.  ஆறு மாதம் அமெரிக்காவில் இருந்தேன் என்றார்.  அவருக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. 

எனவே முடிவாக என்ன சொல்ல வருகிறேன் என்றால், நான் தனிப்பட்ட முறையில் யாரிடமும் காசு கேட்டதில்லை.  கேட்கவும் மாட்டேன்.  இது ஒரு உண்டியல்.  முடிந்தவர்கள் அனுப்புங்கள்.  அவ்வளவு தான்.  ஊடகங்கள் எனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் நானே என் செலவில் வாசகர் வட்டக் கூட்டம் நடத்துவேன்.  என்னைப் போன்ற புரவலரை நீங்கள் பார்க்க முடியாது.  ஏனென்றால், காசை நான் என் காசு என்று என்றுமே நினைத்ததில்லை. 

இன்னொரு முக்கிய விஷயம்.  இன்னொருவருக்குத் தொந்தரவு செய்யாத வகையில் என்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் பார்க்கலாம்.  ஆனால் உங்களுக்கு என் செலவில் தான் தேநீர் கூட வாங்கித் தர வேண்டும் என்றால் வேண்டாம், என்னை விட்டு விடுங்கள்.

இவ்வளவையும் படித்து விட்டு பணம் கொடுத்தால்தான் இவன் பார்ப்பானா என்று தவறாக எடுத்துக் கொண்டு விடாதீர்கள்.  யாரையும் பார்ப்பேன்.  சமீபத்தில் ஈரோட்டிலிருந்து ஸ்ரீதர் மாகாளிக் கிழங்கு ஊறுகாயைப் பார்சல் செய்து குரியரில் அனுப்பியிருந்தார்.  அற்புதமாக இருந்தது. பிராமணரல்லாதார் இந்த ஊறுகாயைச் சாப்பிட மாட்டார்கள்.  கரப்பான் பூச்சி நாற்றம் அடிப்பதாகச் சொல்வார்கள்.  எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்  அன்பின் வெளிப்பாடு.  ஐம்பது ரூபாய்க்கு செலவுக் கணக்கு கொடுத்து வாங்கிக் கொண்டு போகிறவருக்கும் ஈரோட்டிலிருந்து மாகாளிக் கிழங்கு ஊறுகாய் போட்டு அனுப்புபவருக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். 

charu.nivedita.india@gmail.com

பணம் அனுப்புவதற்கான விபரங்கள்:

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026

 

 

     

Comments are closed.