நேற்று புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். இரண்டு மணி நேரம் இருந்தேன். புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களில் ஒருவரான ஒளிவண்ணன் எனக்குக் கொடுத்த எல்கேஜி புத்தகங்களை உயிர்மை ஸ்டாலில் ஒளித்து வைத்து விட்டு வந்து விட்டேன். அதை வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஜாங்கிரி பொட்டலம் மாதிரி அதை எனக்குப் பரிசு கொடுத்தார்கள். இது போன்ற விஷயங்களில் எனக்கு சகிப்புத்தன்மை கம்மி. உதாரணமாக, நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காததற்கு முக்கியமான காரணம், அதில் வரும் விளம்பரங்கள்தான்.
எல்லோரும் புத்தகக் கண்காட்சியைக் கொண்டாடுகிறார்கள். எழுத்தாளர்களின் கொண்டாட்டம்தான் அதிகமாக இருக்கிறது. பூரிப்பும் சந்தோஷமும் அவர்கள் முகத்திலேயே தெரிகிறது. இதுதான் எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது. பெரிய டாப் செல்லரின் நாவலே மொத்தமாக 3000 பிரதிதான் விற்கிறது. இதில் நான் எங்கிருந்து புத்தகக் கண்காட்சியைக் கொண்டாடுவது? எல்லோரும் மூட்டை மூட்டையாக புத்தகங்களை அள்ளிக் கொண்டு போகிறார்கள். ஒரு மூட்டையில் கூட இலக்கியப் புத்தகங்கள் இல்லை. இதை எப்படி நான் வரவேற்பது?
கண்காட்சியில் நுழைகிறேன். ஒருவர் கை கொடுத்தார். பேசினார். பேசினேன். உங்களை டிவி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். சந்தித்ததில் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்றார். சந்தோஷம் என்றேன். விடை பெறும் போது உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா என்றார்.
இதை எப்படி நான் சந்தோஷமாக எடுத்துக் கொள்வது? கண்காட்சியின் உள் வாசலில் நுழையும் போது ஒரு பிரம்மாண்டமான திரையில் மிஷ்கினும் வெற்றிமாறனும் புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறார்கள். அங்கேயே என் கையில் விஷம் இருந்தால் குடித்து விட்டுச் சாகலாம் என்று தோன்றியது. புத்தகங்களின் முக்கியத்துவம் பற்றிக் கூட ஒரு சினிமாக்காரர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? என்ன சமூகமடா இது! வெளிவாசலில் டிவி ரசிகர்… உள்வாசலில் சினிமாக்காரர்! இதையும் தாண்டி உள்ளே போனால் ஒரு ஸ்டாலில் எனக்கு மிகப் பிடித்த Tahar Ben Jeloun-இன் நாவலின் மொழிபெயர்ப்பு நாவலைக் கண்டேன். நிழலற்ற பெருவெளி என்ற தலைப்பு. இது ஜெலோனின் எந்த நாவலின் மொழிபெயர்ப்பாக இருக்கும் என்று குழம்பினேன். ஏனென்றால், அவரது நாவல்களின் தலைப்புகள் எல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் ஜெலோன் என்பதால் வேறு யோசனையே இல்லாமல் பக்கத்தில் இருந்த நண்பர் கார்ல் மார்க்ஸை வாங்கித் தரச் சொன்னேன். வாங்கிக் கொடுத்தார்.
வீட்டுக்கு வந்து பார்த்தால் அந்த நாவல் நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொழுகை என்ற தலைப்பில் (முழுத் தலைப்பும் மறந்து விட்டது) ஜெலோனின் The Blinding Absence of Light என்ற அற்புதமான நாவல் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தேன் அல்லவா? அந்த நாவலின் மொழிபெயர்ப்பு தான் நிழலற்ற பெருவெளி. இந்த நாவல் நோபல் பரிசுக்கு நிகரான டப்ளின் இம்பாக் விருது பெற்றது. மொழிபெயர்த்தவர் ஜெலோனின் மூஞ்சியில் சாணி அடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். இரண்டு தலைப்பையும் ஒப்பிடுங்கள். 20 கைதிகள் வெளிச்சமே இல்லாத பாதாள அறைகளில் அவர்கள் சாகும் வரை அடைக்கப்படுகிறார்கள். கண்களைக் குருடாக்கும் இருள். This blinding absence of light. இதை அப்படியே மொழிபெயர்த்தால் கண்களைக் குருடாக்கும் இருள். Absence of light என்பதை அப்படியே தமிழில் சொல்ல முடியாது. ஆனால் இங்கே பெருவெளி எங்கே வந்தது? பெருவெளி மறுக்கப்பட்டவர்கள் ஆயிற்றே? நேர் எதிராகவா மொழிபெயர்ப்பது? வெளி என்றால் space. அவர்களின் வெளி தானே ஐயா மறுக்கப்பட்டது? இதில் எங்கிருந்து வந்தது நிழலற்ற பெருவெளி? இந்த நாவலின் ஃப்ரெஞ்ச் தலைப்பு Cette aveuglante absence de lumière இதன் நேரடி வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பே This Blinding Absence of Light தான். இதற்குக் காரணம் ஐரோப்பிய மொழிகள் பலவற்றுக்கும் மூலம் ஒன்று. இங்கே தமிழ், மலையாளம், தெலுங்கு மாதிரி. இதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமானால் “இந்தக் கண்களைக் குருடாக்கும் இருள்…” என்றே மொழிபெயர்க்க வேண்டும். அல்லது, வேறு தலைப்பு தான் தேடியிருக்க வேண்டும். உதாரணமாக, அதற்கு முன் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
தமிழில் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுப்பு தான் சிறுகதை மொழிபெயர்ப்பில் ஆகச் சிறந்தது. இதை நிரூபிக்க நான் எந்த விவாதத்திலும் கலந்து கொள்ளத் தயார். க.நா.சு.வே எனக்குப் பின்னே தான். ஏனென்றால், க.நா.சு. சில விஷயங்களை முழுங்கி விடுவார். முழுமையாக இராது. இருந்தாலும் என்னுடைய முன்னோடி என்ற வகையில் க.நா.சு.வும் நானும் மட்டுமே முதன்மை மொழிபெயர்ப்பாளர்கள். அந்த அளவுக்கு சரியாக இருக்கும். ஜி. குப்புசாமி, ராமானுஜம், எம்.எஸ். ஆகியோரின் மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கும். ரவிக்குமாரின் மொழிபெயர்ப்புகளில் மிகச் சிறப்பானவை. ஆனால் அவர் கருணாநிதியின் காலில் விழுந்ததால் அவர் செய்த அரும் பணிகள் எல்லாம் அந்த கருணாநிதி சுனாமியில் அடித்துக் கொண்டு போய் விட்டன.
இதற்கிடையில் ஒரு அறிவாளி சாருவின் மொழிபெயர்ப்பு சிறப்பானது என்றால் அவர் ஏன் இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்று கேட்டிருந்தார். அவரை நான் block செய்து விட்டேன். இது போன்ற உலக அறிவாளித்தனமான கேள்விக்கெல்லாம் பதில் சொன்னால் மூளை மரத்துப் போய் விடும். அல்லது, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் இதற்குப் பதில் சொல்லலாம். ஊரின் மிக அழகான பெண் – மொழிபெயர்ப்பு மட்டும் அல்ல; அந்தத் தேர்வே அபாரமானது. உலக இலக்கியத்திலேயே மூழ்கிக் கிடந்தால் அப்படி முத்தெடுக்க முடியும். அந்தத் தொகுப்பில் நான் எடுத்த ஒரு எழுத்தாளர் Rogelio Sinan. பனாமா நாட்டைச் சேர்ந்தவர். கணினி வருவதற்கு முன்னால் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இவரது ஒரு கதையை நான் மொழிபெயர்த்தேன். கூபாவிலிருந்து வந்த granma பத்திரிகையின் சில பிரதிகளை புதுவை ஞானம் என்ற நண்பர் எனக்குக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து படிக்க எண்ணி, ”நான் இந்தியாவில் இருக்கும் ஒரு ஏழை எழுத்தாளன், எனக்கு உங்கள் granma பத்திரிகையை அனுப்பி வையுங்கள்” என்று நேரடியாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு எழுதினேன். க்ரான்மா நிற்கும் வரை எனக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பிரதிகள் அனைத்தும் ஸ்கேன் செய்து பாதுகாக்கப்பட வேண்டியவை. அவ்வளவும் என்னிடம் இப்போதும் உள்ளன. ரோஹலியோ சினானின் கதை பெயர் Red Beret. சிவப்புத் தொப்பி. தமிழில் பார்த்தால் எவ்வளவு தட்டையான தலைப்பு பாருங்கள். அந்தக் கதையின் நாயகி கதையின் இடையே கடல் கன்னியாக மாறி விடுவாள். எனவே கடல் கன்னி என்று அதற்குத் தலைப்பு வைத்தேன்.
வெளியே (space) மறுக்கப்பட்டவர்களின் பாதாள சிறை வாழ்க்கைக்கு பெருவெளி என்று தலைப்பு வைப்பது ஏன் தெரியுமா? தமிழ் மொழியை ஐம்பது ஆண்டுகளாக பெரும்பாலான எழுத்தாளர்கள் திருகிக் கொண்டிருக்கிறார்கள். விஷயத்தை நேரடியாகச் சொன்னால் அது இலக்கியம் இல்லை என்று முட்டாள்தனமாக நினைக்கிறார்கள். அதனால் கவித்துவ வெங்காயத்தைச் சேர்த்து அது இப்படி டப்பாவாகி விடுகிறது. என்ன கருமமோ! இதையெல்லாம் எப்படிக் கொண்டாடுவது என்று புரியவில்லை.
இருந்தாலும் புத்தக விழாவில் ஒருசில அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. முதல்நாள் புத்தக விழாவுக்குச் சென்ற போது கடைகளைச் சுற்றிப் பார்த்தேன். ஒரு புத்தகமும் வாங்கவில்லை. வாங்குவதற்குக் கையில் காசு இல்லை என்பது ஒரு விஷயம். அப்படியே வாங்கினாலும் வீட்டில் வைக்க இடமும் இல்லை. சுற்றிப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தேன். அன்னம் ஸ்டால் தென்பட்டது. உள்ளே போனேன். மந்திரச் சிமிழ் என்று ஒரு பத்திரிகையைக் கண்டேன். அதில் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி, கேத்தி ஆக்கர், ஜே.ஜி. பல்லார்ட் என்று எனக்குப் பிடித்த பெயர்கள். ஒரு பிரதி அல்ல; 2009 இலிருந்து ஆகஸ்ட் 2013 வரை வந்த ஏழெட்டு இதழ்கள் கிடந்தன. அத்தனையையும் வாங்கினேன். பில் போடும் இடத்தில் இருந்தவர் முக மலர்ச்சியுடன் எழுந்து நின்று கை கொடுத்தார். பணம் கொடுத்து விட்டுக் கிளம்பும்போது உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். செண்பக நாதன். மந்திரச் சிமிழின் ஆசிரியர் என்றார். பக்கத்தில் இருந்த இன்னொரு இளைஞரைக் காண்பித்து இவர் உதவி ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தி என்றார்.
இங்கே நிறுத்துகிறேன். நீங்களே யோசித்துப் பாருங்கள். எங்கள் மூவரின் மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும்? என் கையில் அப்போது எந்தப் புத்தகமும் இல்லை. அந்தப் புத்தகக் காட்சியில் நான் வாங்கிய ஒரே புத்தகம் மந்திரச் சிமிழ் தான்.
இது போன்ற அற்புதங்கள் நிகழ்வதால் இன்றும் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். மாலை ஆறு மணி அளவில்.
பணம் அனுப்புவதற்கான விபரங்கள்:
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI account No. 602601 505045
Account holder’s name: K. ARIVAZHAGAN
T. Nagar branch. chennai
IFSC Code Number: ICIC0006026
Comments are closed.