அவர் ஒரு பெண் பதிப்பாளர். பார்க்கவும் சுமாராக இருப்பார். என் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார். அதனால் புத்தக விழாவில் எனக்குத் தேவையான புத்தகங்கள் சிலவற்றை ஒரு நண்பர் வாங்கிக் கொடுக்க அதை என்னிடம் இன்னொரு நண்பர் மூலம் அனுப்பி வைத்தார். பெயர்களைக் குறிப்பிட்டால் வம்பு வந்து சேர்வதால் யாருக்கும் புரியாத மாதிரி கிசுகிசு பாணியில் எழுதி விட்டேன். யார் என்று தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொள்ளுங்கள்.
கொடுத்து அனுப்பிய புத்தக பார்சல்களைப் பார்த்து விட்டு மகிழ்ச்சிக்கு பதிலாகக் கெட்ட கோபம் வந்து விட்டது. ஓரியாக தினமும் கருப்பட்டி ஹல்வா சாப்பிட்டேன், ஷ்ரீ மிட்டாய் ஜாங்கிரி சாப்பிட்டேன், ஜிலேபி சாப்பிட்டேன், மிளகு வடை சாப்பிட்டேன் என்று எழுதி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் அந்தப் பெண் பதிப்பாளர், தான் அனுப்பிய பைகள் எது ஒன்றிலும் ஒரு தின்பண்டத்தைக் கூடப் போட்டுக் கொடுத்து அனுப்பவில்லை. மரபின் நதியில் ஒரு ஞாபகக் கிடங்கு எழுதி மை கூடக் காயவில்லை. அதற்குள்ளாக இப்படி ஒரு குருத் துரோகம். என்ன சொல்வது? எல்லாம் கலி. இப்போது வேறு எல்லோரும் அந்தப் பெண் பதிப்பாளரை சுஜாதா மாதிரி எழுதுகிறீர்கள் என்று சொல்லி ஏற்றி விடுகிறார்களா, சிரசில் ஏறியிருக்கும். ஜாங்கிரியாவது போங்கிரியாவது, போய்யா. அடுத்த டீச்சர்ஸ் டே வரும்போது ஒரு நமஸ்காரத்தைப் போட்டு வைத்தால் போயிற்று. ஏற்கனவே என் பிறந்த நாள் அன்று ஷீஃபர் பேனாவும் பேப்பரும் வாங்கித் தருகிறேன் என்று கொடுத்த வாக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. எப்படியும் அடுத்த பிறந்த நாளுக்குள் வந்து விடும். எல்லாவற்றையும் விட்டு விடுவோம். எனக்கு ஆகப் பிடித்த ஒரு எலந்த வடை கூடவா கொடுத்தனுப்பக் கூடாது? போன வருடம் எலந்த வடை மட்டுமே மூணு கிலோ வந்திருக்குமே!