கடும் மன உளைச்சலில்தான் சாந்த்தியாகோ நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். மாச்சு பிச்சுவில் பிரச்சினையே இல்லை. ஆனால் குஸ்கோவில் மூச்சு விட முடியவில்லை. இரண்டு காரணங்கள். மாச்சு பிச்சுவின் உயரம் 8000 அடிதான். குஸ்கோ 12000 அடி. மாச்சு பிச்சுவில் சுற்றியது பகல். குஸ்கோவில் இரவு. குஸ்கோவில் இரவு தூங்கி விட்டு பகலில் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு அடுத்த நாள் உயூனி போகலாம் என்பது திட்டம். உயூனி ஒரு உலக அதிசயம். 11,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஒரு உப்பு ஏரி. நீர் உறைந்து கண்ணாடியாய் பிம்பம் தெரியும் ஏரி. ஆனால் எனக்கு குஸ்கோவிலேயே உயரம் காரணமாக மூச்சு விடுவது சிரமமாகப் போய் விட்டதால் என் பயணத் தோழர் ரவிக்கு அங்கேயே டாட்டா காண்பித்து விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று நான் மட்டும் சாந்த்தியாகோ வந்து விட்டேன். இனிமேல் ரவி இங்கே சாந்த்தியாகோ வந்து சேர எட்டு தினங்கள் இருக்கின்றன. ரவியும் கூடவே வந்திருந்தால் இந்த எட்டு தினங்களையும் சீலேவிலேயே நல்ல முறையில் திட்டமிட்டிருக்கலாம். ரவிக்கு பொலிவியாவை விட மனசில்லை.
எட்டு தினங்களை இந்த ஊரில் தனியாகக் கழிக்க வேண்டும். ஒரு திட்டமும் கைவசம் இல்லை. ஆனால் காலையில் எழுந்து விடுதியை விட்டு வெளியே வந்தால் மொனேதா அரண்மனை கண்முன்னே நிற்கிறது. கடவுளின் தரிசனத்துக்காக பல ஆண்டுகள் தவமிருந்த ஒருத்தனுக்கு கடவுள் நேரில் வந்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது எனக்கு. சாந்த்தியாகோ என்றால் அங்கே பார்க்க வேண்டிய இடங்களில் மொனேதா அரண்மனையும் உண்டு என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்த விஷயம்தான். ஆனால் இப்படிக் கண்விழித்துப் பார்த்ததும் மொனேதா அரண்மனை கண் முன்னே நிற்கும் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏன் எனக்கு இந்த ஆச்சரியமும் பரவசமும் என்றால், அதற்கு நீங்கள் சீலேயின் ஐம்பது ஆண்டு கால அரசியல் வரலாற்றை கவனித்திருக்க வேண்டும். அவ்வளவெல்லாம் நேரம் இல்லை என்றால், Battle of Chile என்ற படத்தையாவது பார்த்திருக்க வேண்டும். ஒரே வாக்கியத்தில் சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன். ஏனென்றால், இதிலெல்லாம் நாம் மெதுமெதுவாகப் போய்க் கொண்டிருந்தால் மெய்ன் மேட்டரான மாயமான் வேட்டையை விட்டு விடுவோம். டாக்டர் அயெந்தே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமெரிக்க ஆதரவுடன் வலதுசாரி ராணுவ அதிகாரிகள் பினோசெத்தின் தலைமையில் ஒரு ராணுவப் புரட்சியை நடத்தினார்கள். ”டாக்டர் அயெந்தே, நீங்கள் சரணடைந்து வெளிநாட்டுக்குச் சென்று விடுங்கள். இல்லாவிட்டால் அரண்மனையில் குண்டு போடுவோம்” என்றது ராணுவம்.
மொனேதா மாளிகையில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே ”என் உயிர் போனாலும் சரணடைய மாட்டேன்” என்று சொல்லி அயெந்தே கொடுத்த வானொலி உரை, காணொலி எல்லாம் Battle of Chile படத்தில் உண்டு.
அப்பாடா, நிம்மதி. இனிமேல் வரும் எட்டு தினங்களையும் இந்த அரண்மனையையே சுற்றிச் சுற்றி வந்து ஓட்டி விடலாம்.
முதல் நாள் அரண்மனையில் கழிந்தது. ஆனால் அது பெயருக்குத்தான் அரண்மனை. நம்மூரில் ஒரு ஜமீந்தாரின் வீடே இதை விடப் பல மடங்கு பெரிதாக இருக்கும். டாக்டர் அயெந்தேயின் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற உரையையும் சில புகைப்படங்களையும் தவிர அந்த அரண்மனையில் ஒன்றுமில்லை. படத்தில் முழு உரை இல்லை. இங்கே அயெந்தேயின் முழு உரையையும் கேட்க முடிந்தது.
மறுநாள் என்னுடைய பயண நிறுவனம் ஒரு வழிகாட்டியை அனுப்பி வைத்திருந்தது. அவனோடு சாந்த்தியாகோ நகரில் கொஞ்சம் சுற்றினேன். மாலையில் இருவரும் ஒரு பப்பில் பிஸ்கோ சோர் (Pisco Sour) சாப்பிட்டோம். அதுதான் பெரூ, சீலே இரண்டு நாடுகளின் தேசிய பானம். எலுமிச்சை சாறையும் முட்டையின் வெண்கருவையும் சேர்ந்து அடித்து அதில் பிஸ்கோ சோரையும் கலந்து மறுபடியும் அடித்துக் குடிக்க வேண்டும். மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் ரொபர்த்தோவுக்கு வேறோர் குழுவுடன் வேலை இருந்தது. முன்கூட்டியே சொல்லியிருந்தால் இந்த எட்டு நாட்களையுமே நல்ல முறையில் திட்டமிட்டிருக்கலாம் என்றான்.
அடுத்த நாள், பல்கலைக்கழகத்தில் ஒரு நாடகத் திருவிழா நடப்பதாக செய்தித்தாளில் படித்து அங்கே கிளம்பினேன். சீலே பல்கலைக்கழகம் மொனேதா அரண்மனையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர். பொதுவாக வெளியூர் வந்தால் வழி தவறி விடாமல் இருப்பதற்காக தெருப் பெயர்களையெல்லாம் அடையாளம் வைத்துக் கொண்டே வருவேன். ஆனால் இப்போது அந்த அவசியம் இல்லை. மொனேதா அரண்மனைக்கு வழி தெரிய வேண்டுமா என்ன?
மற்ற தென்னமெரிக்க நாடுகள் பற்றித் தெரியாது. ஆனால் சீலேயைப் பொறுத்தவரை இங்கே பல்கலைக்கழகங்கள் என்றால் அவைதான் மிகத் தீவிரமான அரசியல், கலாச்சார, சமூகச் செயல்பாடுகளின் மையமாக விளங்குகின்றன. பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார். பார்ப்பதற்கு ராணுவத்தைப் போல் இருந்தார்கள். நாடக விழா நடக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடித்துப் போனேன்.
அன்றைய நாடகம்: Catarina de San Juan: Nacido como una princesa mogul, vivió como una esclava y se convirtió en una santa. Dirección: Meera. தலைப்பு புரிந்து விட்டது. ஆனால் இயக்குனரின் இந்தியப் பெயர்தான் குழப்பியது. ஏதாவது எழுத்துப் பிழையோ, Mira தான் பிழையாக Meera என்று வந்து விட்டதோ? ஆனால் காதரீனா தெ ஸான் ஹுவானின் பெயருக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை எண்ணியதும் மீரா இந்தியப் பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. எனக்கு இந்த காதரீனா தெ ஸான் ஹுவான் என்ற பெயர் ஒக்தாவியோ பாஸின் In Light of India என்ற புத்தகத்திலிருந்துதான் அறிமுகம். அதற்குப் பிறகு காதரீனா பற்றி அலோன்ஸோ ரமோஸ் சே.ச. ஒரு மூன்று வால்யூம் புத்தகம் எழுதியிருக்கிறார். அது இன்னமும் என்னுடைய படிக்க வேண்டிய நூல் பட்டியலில் உள்ளது. ஆனாலும் அடிப்படைத் தகவல்களை வேறொரு சிறிய நூலிலிருந்து படித்து விட்டேன். உண்மை கற்பனையை விட ஆச்சரியமானது என்பார்களே, அது போன்றதொரு கதை காதரினாவின் வாழ்க்கை. அக்பரின் நெருங்கிய உறவான மீரா என்ற பெண்ணை போர்த்துக்கீசிய மாலுமிகள் கடத்திக் கொண்டு போய் கொச்சியில் அடிமை வணிகர்களிடம் விற்று விட்டார்கள்.
இந்தக் கொச்சி கடற்கரைதான் எத்தனை வினோதமான வரலாற்றுச் சம்பவங்களைக் கண்டு விட்டது! பதின்மூன்றாம் நூற்றாண்டில் முகமது பின் துக்ளக்கிடமிருந்து உயிர்ப் பிச்சை பெற்று சீன தேசத்துக்கு துக்ளக்கின் தூதனாக கொச்சிக்கு வந்து சேர்ந்த இப்ன் பத்தூத்தா தொழுகைக்காகக் கடற்கரைக்கு வந்த போது எதிர்பாராத புயலில் அவனுடைய அத்தனை கப்பல்களும் கடலில் மூழ்கி விட ஒரு பிச்சைக்காரனாக கொச்சி கடற்கரையில் கிடந்தான். அதேபோல் பேரரசர் அக்பரின் ஆக்ரா மாளிகையில் ஒரு சிறுமியாக ஓடியாடித் திரிந்து கொண்டிருந்த மீரா, போர்த்துக்கீசிய மாலுமிகளால் கடத்திச் செல்லப்பட்டு ஒரு சில தினங்களில் கொச்சி கடற்கரையில் அடிமையாக நிற்கிறாள். ஃபிலிப்பைன்ஸ் தேசத்து பெண் தரகன் ஒருவன் அவளை விலை பேசி வாங்கி… அதற்கடுத்த ஆறு ஆண்டுகள் மணிலா நகரில் அவள் ஒரு பாலியல் தொழிலாளி. அங்கேதான் அவளது இந்திய அழகைக் கண்ட மெக்ஸிகோ தேசத்து வணிகன் ஒருவன் பெரும் பணம் கொடுத்து அவளை வாங்கிக் கொண்டு மெக்ஸிகோ போய்ச் சேர்ந்தான்.
ஆனால் இது காதரினா பற்றிய கதையும் அல்ல என்பதால் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். இது மீரா என்ற நாடக இயக்குனரைப் பற்றிய கதை. கதையில் இத்தனை வாக்கியங்கள் எழுதப்பட்டும் மீரா அறிமுகமாகாதது மட்டுமல்ல, அவள் இந்தியனா மெக்ஸிகனா என்றே இன்னமும் விளங்கவில்லை. இதில் அக்பர் காலத்துக் காதரினா பெயரும் மீரா, 2019இல் சாந்த்தியாகோ நகரில் சீலே பல்கலைக்கழகத்தில் காதரினா நாடகத்தை இயக்கும் பெண்ணின் பெயரும் மீரா. குழப்புகிறது. மேலே செல்வோம்.
அக்பரின் சகோதரி ஒருத்திக்கு இருபது ஆண்டுகள் குழந்தையே இல்லாமல் பிறகு கன்னி மேரியை வேண்டிக் கொண்டு பிறந்தவள் மீரா. அக்பரின் அரசவையில் பல கிறித்தவ குருமார்களும் பிராமண அறிஞர்களும் இருந்தார்கள்; அவர் காலத்தில் இஸ்லாம் – கிறித்தவம் – இந்து ஆகிய மூன்று மதங்களுக்குள் மிகுந்த சிநேகபாவமே இருந்தது என்பதையெல்லாம் நாம் அறிவோம்.
1606-இல் ஆக்ராவில் பிறந்த மீரா 1621இல் மெக்ஸிகோவின் தென்கிழக்கில் உள்ள பூவப்லா (Puebla) என்ற நகருக்கு ஒரு வணிகனின் அடிமைப் பெண்ணாக வந்து இறங்கியது ஒரு கதை. மெக்ஸிகோ வந்ததும் மீராவுக்குக் காதரினா என்ற கிறித்தவப் பெயர் சூட்டப்பட்டது. அடுத்து நடந்தது ஒரு அதிசயம் அல்ல; பல அதிசயங்கள். அன்னை மேரி காதரினாவின் கனவில் வந்தார். பின்னர் நேரிலும் தரிசனம் தந்தார். மட்டுமல்லாமல் காதரினாவின் வாழ்வில் பல அதிசயங்களை நிகழ்த்தினார். காதரினா என்ன சொல்கிறாரோ அது நடந்தது. நோயாளிகளின் பிணி தீர்ந்தது. துக்கம் விலகியது. (இது பற்றியெல்லாம் மிக விரிவாக காதரினாவே எழுதியிருக்கிறார்.) இந்தக் காரணங்களால், சிறிது காலத்திலேயே காதரினா மெக்ஸிகோ தேசத்தின் காவல் தேவதையாக மாறினார்.
இன்றைய தினம் மெக்ஸிகோவில் மிக அதிக அளவு வரையப்பட்ட ஓவியங்கள், புனையப்பட்ட பாடல்கள், பேசப்பட்ட நாட்டுப்புறக் கதைகள், சொல்லப்பட்ட குழந்தைக் கதைகள், சினிமா எல்லாமே காதரினா பற்றியதுதான். இவர் நிகழ்த்திய அற்புதங்களிலேயே மிகவும் பெரிதாகப் பேசப்படுவது ஹுமானோ இந்தியர்களை (Jumano Indians) கிறித்தவத்துக்கு மாற்றியதுதான். ஹுமானோ இந்தியர்கள் நீண்ட காலமாகத் தாங்கள் மதம் மாறுவதற்காகத் திருச்சபைக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார்கள். யாரேனும் பாதிரிகள் சென்று அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி வைக்க வேண்டும். ஆனால் பாதிரிகள் எல்லோரும் வேறு வேறு முக்கியப் பணிகளில் இருக்கிறார்கள். ஹுமானோ இந்தியர்கள் மெக்ஸிகோவில் இருந்திருந்தால் வேலை சடுதியில் முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் இருப்பது புதிய ஸ்பெய்னில். அதாவது, இப்போதைய டெக்ஸஸ் மற்றும் நியூ மெக்ஸிகோ பகுதி. யாருக்கும் அவ்வளவு தூரம் போக நேரமில்லை. அப்போதுதான் ஸோர் மரீயா தெ ஹேசூஸ் தெ ஆக்ரேதாவுடன் (Sor Maria de Jesus de Ágreda) சேர்ந்து அந்த இந்தியர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் காதரினா. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா? மரீயா தெ ஹேசூஸ் ஸ்பெய்னில் வசித்தவர். ஸ்பெய்னில் அவருடைய மடாலயத்தை விட்டு அந்தக் குறிப்பிட்ட ஆண்டுகளில் அவர் வெளியிலேயே வரவில்லை. அதேபோல் காதரினாவும் பூவெப்லா நகரை விட்டு வெளியில் செல்லவில்லை. சாட்சிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் எங்களோடுதான் இருந்தார்கள் என்று சொன்னார்கள் ஹுமானோ இந்தியர்கள். அதுவும் தவிர காதரினா பூவெப்லா நகரில் தன்னுடைய மடாலயத்துக்குள்ளேயே இருப்பார். ஆனால் அதே நேரத்தில் மெக்ஸிகோவின் ஒரு கிராமத்தில் பல நோயாளிகளைச் சந்தித்து சொஸ்தப்படுத்திக் கொண்டிருப்பார். இன்னொரு சமயம் இன்னொரு கிராமத்தில் இருப்பார். அதே நேரத்தில் பூவெப்லா மடாலயத்திலும் இருப்பார். அவருடைய உருவம் ஆகாயத்தில் பறந்து செல்வதைப் பலர் பார்த்திருக்கிறார்கள். சரி, இதையெல்லாம் புருடா என்பீர்கள். மரியா தெ ஹேசூஸின் உடல் கடந்த நான்கு நூற்றாண்டுகளில் பலமுறை விஞ்ஞானிகளின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. உடல் கெடவே இல்லை. இன்றைக்கும் இது ஒரு தொடரும் அதிசயமாகவே கருதப்படுகிறது.
நான் ஒரு நல்ல கதைசொல்லி அல்ல என்று நினைக்கிறேன். காரணம், இத்தனை எழுதியும் நாம் இன்னமும் நிஜ மீராவைச் சந்திக்கவில்லை. அந்தக் கவலையுடனேயே நாடக அரங்கின் உள்ளே நுழைந்தேன். பேசினால் ஸ்பானிஷ் ஏதோ ஓரளவு புரியும். ஆனால் நாடகம் ஒரு கடுமையான இலக்கியப் பிரதியை வாசிப்பது போல் இருந்தது. காதரினாவின் வாழ்வை அப்படியே நாடகமாக்குவதில் என்ன புதுமை இருக்கிறது? அந்த வாழ்வில் நாம் எப்படி நம்மைப் பொருத்திக் கொள்வது? அதையெல்லாம் எனக்குத் தெரிந்த குறைந்த அளவு ஸ்பானிஷை வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் நாடக வடிவம் என்னை வெகுவாக ஈர்த்தது. முக்கியமாக இசையும் ஒளியமைப்பும். இன்னொரு சந்தேகம், அதிசயங்களைத் தொலைத்து விட்ட ஒரு நவீன மனிதனுக்குக் காதரினாவின் வாழ்க்கையில் என்ன செய்தி இருக்க முடியும்? ஆ! ஒவ்வொரு கலா சிருஷ்டியும் ஒரு செய்தியைத்தான் கொண்டு வர வேண்டுமா? கலைஞன் என்ன தபால்காரனா? அல்லது, தீர்க்கதரிசியா? தீர்க்கதரிசிகளால்தானே இந்த உலகம் இத்தனை அல்லலுறுகிறது?
காதரினா மெக்ஸிகோவின் ஆன்மீக அடையாளம். ஆனால் அவர் ஒரு இந்தியர். ஆறு ஆண்டுகள் பாலியல் தொழிலாளியாகவும், அடிமையாகவும், அதன் பிறகு பல அற்புதங்களை நிகழ்த்திய ஞானியாகவும் வாழ்ந்தவர். இது ஒரு ரோலர் கோஸ்டர் வாழ்க்கைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ரோலர் கோஸ்டர்களுக்கு இந்தியாவில் பஞ்சமா என்ன?
நாடகம் முடிந்ததும் வெளியே வந்து தனியாக அமர்ந்திருந்தேன். இரவு எட்டு மணி. கடும் குளிர். மொபைலைப் பார்த்தேன். மைனஸ் இரண்டு என்று இருந்தது. இத்தனை குளிர்காலத்தில் சீலே வந்திருக்கக் கூடாது. ஆனால் இப்போது விட்டால் எப்போதுமே வர முடியாதோ என்ற பயத்தினால்தான் பணம் கிடைத்ததும் உடனே கிளம்பி விட்டேன். இதை எழுதும் இந்தக் கணத்தில் தோன்றுகிறது, நான் எடுத்த முடிவு எத்தனை நல்ல முடிவு என்று. இல்லாவிட்டால் இந்தக் கொரோனா முடிந்து எப்போது இனிமேல் சீலே போவது? அதுவும் கொரோனா விட்டு வைத்திருந்தால்…
எல்லோரும் கூட்டம் கூட்டமாக நின்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அநேகமாக எல்லாருடைய கைகளிலும் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. நாளை ரொபர்த்தோவிடம் இது பற்றிக் கேட்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் புகைக்கலாமா?
ரொபர்த்தோ கூட இருந்தால் அவனோடு எங்காவது பப்புக்குப் போயிருக்கலாம். ரொபர்த்தோவுக்கு சரியாக என் வயதுதான். ஆனாலும் அவன் என்றுதான் பேசத் தோன்றுகிறது. இதுவே ஒரு இந்தியராக இருந்திருந்தால் அறுபத்தேழு வயது ஆசாமியை அவன் என்று சொல்லத் தோன்றுமா? ஆனால் அவனும் அறுபத்தேழு மாதிரியா நடந்து கொள்கிறான்? நேற்று மதியம் ஒரு கஃபேவுக்குப் போயிருந்த போது அங்கே சிநேகமான ஒரு வெனிஸுவேலன் பெண்ணை என்னுடைய அறைக்குக் கூட்டி வந்து காரியத்தை முடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறான். எனக்கு ஏதோ திடீரென்று கல்லூரி மாணவனாக ஆகி விட்டது போல் இருந்தது. ரொபர்த்தோ மட்டும் இல்லை, தென்னமெரிக்கா முழுவதுமே பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட ஆரம்பித்து விட்டது. அவர்களின் இலக்கியம், சினிமா போன்ற எல்லாவற்றிலுமே பெண்களை ஒரு போகப் பொருளாகவே அந்த ஆண்கள் பாவிப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுகிறது. எத்தனை தூரம் உண்மையோ, ஆனால் ரொபர்த்தோ அப்படித்தான் இருந்தான். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பாலியல் சார்ந்த ஒரு காமெண்ட்டைப் போடாமல் விட மாட்டான். பெண்களின் மாரைப் பார்த்தால் “உங்கள் ஊர்ப் பெண்களுக்கு இப்படி இருக்குமா?” என்பான். ஸ்கர்ட் அணிந்த பெண்களைப் பார்த்து ”உங்கள் ஊர்ப் பெண்களின் தொடை இத்தனை வாளிப்பாக இருக்குமா?” என்பான். ஒரே ஒரு முறை பதிலுக்கு, ”ஏய் அப்பா, எங்கள் ஊரில் இன்னமும் ஸ்கர்ட் அணிய ஆரம்பிக்கவில்லை” என்றேன்.
”அதனால் என்ன? நீ பார்த்திருப்பாயே?”
“சீச்சீ… நான் ஏக பத்தினி விரதனப்பா…” என்று சொல்லி விட்டு அதை வேறு ராமாயணக் கதையெல்லாம் சொல்லி விளக்கினேன்.
”அதேதான் சூர்யா. நானும் ஏக பத்தினி விரதன்தான். என் மனைவியைப் பொருத்தவரை. ஆனால் நான் என்ன உன் மனைவியா? என்னிடம் ஏன் பயப்படுகிறாய்? சொல், உங்கள் ஊர்ப் பெண்களின் தொடை எப்படி?”
எனக்கு ரொம்ப ஆச்சரியமாகப் போயிற்று. ஒரு அறுபத்தேழு வயதுப் பெரியவர் பேசும் பேச்சா இது?
“ஹேய் சூர்யா, எனக்கும் இந்தியா பற்றித் தெரியும். எத்தனை பயணிகளைப் பார்த்திருக்கிறேன். மேலும் நான் அமெரிக்காவிலும் பத்து வருஷம் இருந்திருக்கிறேன். அதுவும் நியூ ஜெர்ஸியில். கிட்டத்தட்ட இந்தியாவில் இருந்தது போலத்தான். என்ன, நாங்கள் வெளிப்படையாகப் பேசுவோம். ஆனால் காரியத்தில் பூஜ்யம். நீங்கள் பேச மாட்டீர்கள். காரியத்தில் கில்லாடி… உங்கள் ஜனத்தொகையைப் பார்த்தாலே தெரிகிறதே?”
இப்படி எத்தனை நேரம் பேசினாலும் அதில் பெரும் பகுதி செக்ஸ்தான். ஆனால் இலக்கிய வாசகனும் கூட. சீலேயர்களைப் பற்றி இப்படிப் பிரித்துச் சொல்லத் தேவையில்லை. எல்லா சீலேயர்களுமே இலக்கிய வாசகர்கள்தாம்.
பார்த்தீர்களா, கதையே முடியப் போகிறது. இன்னமும் கதாநாயகியைக் காணோம். நானும் என் அறைக்குத் திரும்புகிறேன். வழியில் ஒரு கடையில் நுழைந்து பிஸ்கோ சோரை வாங்கிக் கொள்ள வேண்டும். அறையிலேயே எலுமிச்சையும் முட்டையும் இருக்கிறது. பிஸ்கோ சோர் ஒரு சொர்க்கம். சொர்க்கம். பெரூவில் தங்கின போது அறிமுகம்.
ஆக, நாளையும் தனியாகவே சுற்ற வேண்டும். இரவு இரண்டு மணி வரை நிதானமாகக் குடித்து விட்டு காலையில் மெதுவாக எழுந்து கீழே வந்து ஏதோ ஒரு கண்றாவி ப்ரேக்ஃபாஸ்டை முடித்து விட்டு வெளியே வந்தேன். கொஞ்ச நேரம் அரண்மனைக்கு வெளியே நடந்து விட்டு மீண்டும் அறைக்கு வந்து குளியலை முடித்து விட்டு பல்கலைக்கழகத்துக்குக் கிளம்பினேன். அங்கே ஒரு புத்தகக் கடையும் அருகிலேயே ஒரு வாசக சாலையும் இருந்தது ஞாபகம் வந்தது. அங்கே கொஞ்ச நேரம் பொழுதைப் போக்கலாம். இன்று திங்கள்கிழமை என்பதால் மியூசியம் மூடியிருப்பார்கள், போக வேண்டாம் என்று ரொபர்த்தோ சொல்லியிருந்தான்.
புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். சாந்த்தியாகோவின் மற்ற புத்தகக் கடைகள் என்னை ஏமாற்றியிருந்தன. நான் தேடிய எந்தப் புத்தகத்துக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புகளே இல்லை. ஆங்கிலமே இல்லாத ஊர். நான் கொஞ்சம் நிகானோர் பார்ராவின் கவிதைகளை வாங்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தேன். வழக்கம் போலவே எல்லாம் ஸ்பானிஷில் இருந்தன. அப்போது ஒரு பெண் என்னை நெருங்கி, ”நேற்று உங்களை நாடகத்தில் பார்த்தேன், பேசலாமா? நீங்கள் இந்தியர்தானே?” என்று ஆங்கிலத்தில் கேட்டாள். வட இந்தியப் பெண். ஐந்து அடிக்குக் கொஞ்சம் அதிகம். வட இந்தியாவுக்கு அது குள்ளம் என்றுதான் சொல்ல வேண்டும். இருபது வயது இருக்கும். இங்கே சீலே பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருக்க வேண்டும். இவ்வளவு தூரமா வந்து படிக்கிறார்கள்? வட இந்தியப் பெண்கள் இப்படி ஒரு தென்னிந்தியனிடம் வந்து பேச மாட்டார்களே? சொல்லப் போனால் எந்த இந்தியப் பெண்ணுமே இந்திய ஆணுடன் இப்படி வலிந்து போய் பேசத் துணிய மாட்டாள். எங்காவது மான்குட்டி புலியுடன் போய்ப் பேசி ஹாய் சொல்லுமா? பைத்தியமா அதற்கு? இவள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறாள்.
ஓ, பேசலாமே என்றேன். (கரும்பு தின்னக் கூலியா?)
வாருங்கள், இங்கே ஒரு காஃபி குடித்துக் கொண்டே பேசுவோம், இன்னும் நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை என்றாள்.
”ஓ, ஆமாம், நான் இந்தியன்தான். டேமில். மெட்றாஸ்.”
வட இந்தியர்களிடம் அதைத் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். இல்லாவிட்டால் மதறாஸி, கேரள், கன்னட் என்று போட்டுக் கண்டபடி குழப்புவார்கள்.
ஆனால் அவளோ, “என்ன என்ன? இந்தியன் புரிகிறது. அது என்ன தாமில், மாத்றாஸ்… புரியவில்லையே? பை த வே, நான் மீரா ஃப்ரம் மெக்ஸிகோ. குவாதலாஹாரா பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் பணியாற்றுகிறேன்…” என்றாள்.
“ஓ, நீங்கள்தான் நேற்றைய நாடகத்தின் இயக்குனர் மீராவா? நான் உங்களை நேற்று கவனிக்கவில்லை. இப்போது பார்த்ததும் வட இந்தியர் என்று நினைத்து விட்டேன். மேலும், நீங்கள் என்ன பேராசிரியரா, நான் உங்களை மாணவி என்றல்லவா நினைத்து விட்டேன்? மன்னியுங்கள்” என்றேன்.
அதற்குள் காஃபி ஷாப் வந்தது. இரண்டு எஸ்பிரஸோ சொல்லி விட்டு ஒரு ஓரமாக வந்து அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தோம்.
பூனைக் கண்கள். மெக்ஸிகன் பெண்களுக்கே உரிய அடர்த்தியான கருத்த முடி. நம் கன்னடத்துத் துளு பெண்களைப் போல் இருந்தாள். சொன்னேன்.
”அப்படியா, நான் பார்க்க வேண்டுமே?”
என் கைபேசியை எடுத்து சில துளு பெண்களின் படத்தைக் காண்பித்தேன்.
“நான் இத்தனை அழகாகவா இருக்கிறேன்?”
என்னைக் கேட்டாளா, தனக்குள் சொல்லிக் கொண்டாளா, தெரியவில்லை. அதற்கு நான் நேரடியாக பதில் சொல்லாமல் ரொபர்த்தோவுடன் நடந்த ஒரு உரையாடலைச் சொன்னேன்.
எனக்கு சீலேவுக்கு அடுத்த படியாக மெக்ஸிகோவுடன் ஒரு நீண்ட கலாச்சாரத் தொடர்பு உண்டு. மெக்ஸிகோவின் பெண்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் தோற்றத்திலும் பழக்கவழக்கங்களிலும் அப்படியே தென்னிந்தியர்களை ஒத்தவர்கள். பொதுவாகவே உலகம் பூராவும் ஆண்கள் மத்தியில் ஒரு பேச்சு வழக்கு உண்டு, மணம் செய்து கொண்டால் மெக்ஸிகன் பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று. பேரழகிகள் என்பது மட்டும் அல்லாமல் கணவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
ரொபர்த்தோவிடம் இப்படி நான் சொல்லிக் கொண்டிருந்தபோது அவன் அதைத் தீவிரமாக மறுத்தான். வெனிஸுவேலன் பெண்களைப் பார்த்தால் நீ அப்படிச் சொல்ல மாட்டாய் என்று சொல்லி அந்த பப்பிலிருந்த சில வெனிஸுவேலன் பெண் சிப்பந்திகளை அழைத்துக் காண்பித்தான். ஆனாலும் அவன் சொன்னதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அந்தப் பெண்கள் எல்லோரும் porn actors மாதிரிதான் இருந்தார்களே ஒழிய மெக்ஸிகோ பெண்களின் அருகில் கூட வர முடியாது என்று தோன்றியது. குறிப்பாக, மெக்ஸிகோ பெண்களின் தாமிர நிறம்.
எல்லாவற்றையும் கேட்ட மீரா “எல்லாம் சரிதான், ஆனால் மெக்ஸிகோ பெண்கள் ஒரு விஷயத்தில் தொல்லை பிடித்தவர்கள், தெரியுமா?” என்றாள்.
“கேட்டுக் கொண்டிருக்கிறேன்…”
“பிடித்தால் விட மாட்டார்கள். Very possessive…”
“Like Indians…”
“இன்னொரு விஷயத்திலும் தொல்லை பிடித்தவர்கள்…” என்று சொல்லி விட்டுக் கண்களைச் சிமிட்டினாள்.
“தெரியும் தெரியும்…”
“அனுபவமோ?”
“அந்த அதிர்ஷ்டம் எல்லாம் எனக்கு இல்லை. எல்லாம் கேள்விதான்…”
உடனே பேச்சை மாற்றிய நான் ”நீங்கள் எப்படி இந்தியரைப் போல் இருக்கிறீர்கள். பெயரும் வேறு டிபிகல் இந்தியப் பெயர்… எப்படி?” என்று கேட்டேன்.
சிரித்தபடியே “இதற்கான பதிலை நான் ஒரு நானூறு பக்கத்தில் ஒரு நாவலாக எழுதி வைத்திருக்கிறேன். அலெக்ஸ் ஹெய்லியின் ரூட்ஸ் மாதிரி. உங்களுக்குக் காதரினா தெரியும்தானே? நேற்று நாடகம் பார்த்தீர்களே?”
“ஓரளவு மேலோட்டமாக அவர் கதை தெரியும். ஒக்தாவியோ பாஸின் புத்தகம் மூலமாக. எனக்கு ஸ்பானிஷ் தெரியாததால் நேற்றைய நாடகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.”
காஃபியைக் குடித்து விட்டு ”இன்று இள வெயில் அடிக்கிறது, நடக்கலாமா?” என்றாள். எனக்கு ரொபர்த்தோ ஞாபகம் வந்தது. நடக்கலாமா என்று அவன் கேட்டால் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் என்று பொருள். அதிலும் இந்தத் தென்னமெரிக்க நாடுகள் பூராவுமே சமதளமாக இருப்பதில்லை. எல்லாம் ஒரே மேடு பள்ளம்தான். மலைகள். குன்றுகள். மலைகள். குன்றுகள். ”என்னுடைய விடுதி மொனேதா அரண்மனைக்கு முன்னால் உள்ள ஒரு தெருவில் இருக்கிறது. வேறு இடங்களுக்குப் போனால் அங்கிருந்து என் விடுதிக்குச் செல்ல வழி தெரியாது” என்றேன்.
”ஒன்றும் பிரச்சினை இல்லை. மொனேதா வரை போகலாம். அங்கே அமர்ந்து பேச நல்ல இடம் இருக்கிறது. நான் இங்கே பல்கலைக்கழகத்தில்தான் தங்கியிருக்கிறேன். என்னுடைய நாடகம் முடிந்து விட்டாலும் நாடக விழா இன்னும் மூன்று நாட்கள் தொடரும். நானும் மூன்று நாட்கள் இருப்பேன்.”
நான் ஒரு எழுத்தாளன் என்று சொன்னதும் அவள் சட்டென்று என்னை ஏறிட்டுப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள்.
“யூகித்தேன்…”
“எப்படி?”
“பொதுவாக இந்தியர்கள் பூமியின் இந்தப் பக்கம் வந்தால் குழுவாகத்தான் வருவார்கள். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் இங்கே அதிகம் வருவதுண்டு. இங்கே என்றால் எங்கள் மெக்ஸிகோவுக்கும் இந்தத் தென்னமெரிக்கா பக்கமும்… ஆனால் தனியாக நான் யாரையும் பார்த்ததில்லை. எல்லோரும் குழுக்களாகத்தான் வருவார்கள். அது என்ன சுற்றுலா என்றே எனக்குப் புரியாது. ஒரு ஊர் என்றால் அதன் மியூசியமும் கட்டிடங்களும் மட்டும்தானா? லோக்கல் மனிதர் ஒருவரிடமாவது அவர்கள் பேசியிருப்பார்களா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. மெக்ஸிகோவில் பரவாயில்லை. இந்திய உணவும் மெக்ஸிகோவின் உணவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் தென்னமெரிக்க நாடுகளில் போய் இந்திய ரெஸ்டாரண்டுகளைத் தேடிக் கொண்டிருப்பார்கள். பாவம். ஒக்தாவியோ பாஸ் நம்முடைய இரண்டு நாடுகளின் உணவு பற்றி எழுதியிருப்பாரே, ஞாபகம் இருக்கிறதா?”
“அந்த நூலில் எனக்கு ரொம்பப் பிடித்த இடம் அது…”
”மேற்கத்திய நாடுகளின் உணவுகள் ஒவ்வொன்றாக வரும். ஆனால் மெக்ஸிகோவின் உணவும் இந்திய உணவும் இருபது முப்பது ஐட்டமாகச் சேர்ந்து பரிமாறப்பட்டிருக்கும். இதுதான் இந்த இரண்டு நாடுகளின் பன்முகத்தன்மையின் குறியீடு என்கிறார் பாஸ். மேற்கத்திய நாடுகளுக்கு ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம். மெக்ஸிகோவிலும் இந்தியாவிலும் பல மொழிகள், பல கடவுள், பல நம்பிக்கைகள், பல இனங்கள்… நான் சில இந்திய உணவகங்களில் சாப்பிட்டிருக்கிறேன். டஜன் கணக்காக ஐட்டங்களைப் பரப்பி வைப்பார்கள். அதிலும் போஸ்த்ரேயைக்* கூட முதலிலேயே தட்டில் வைப்பது வாவ் வாவ்…”
*Postre – dessert – இனிப்பு
”உணவையும் கலாச்சாரத்தையும் கொண்டு இந்தியாவையும் மெஹீகோவையும் ஒப்பிடுவது பாஸின் பிரமாதமான அப்ஸர்வேஷன் இல்லையா?”
அதற்குப் பிறகு நீண்ட நேரம் தொடர்ந்தது இலக்கிய அரட்டை. அதெல்லாம் கதைக்கு அவசியம் இல்லை. இது வேறு சிறுகதை ஆயிற்றே? குறுநாவல் என்றாலாவது சிலதைச் சொல்லலாம். சிறுகதையில் சொன்னால் உங்களுக்கு அலுப்பாக இருக்கும். அதோடு சிறுகதை இலக்கணத்தையும் தாண்டி விடும். மூன்று மணி நேரம் எதுவுமே சாப்பிடாமல் பேசிக் களைத்து விட்டோம். மாலை நான்கு மணி ஆகியிருந்தது. காலையில் நான் என் விடுதியில் சாப்பிட்ட ஒரு பாடாவதி ப்ரேக்ஃபாஸ்ட்தான். கொலைப்பசி.
பேச்சினிடையே அவளுக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது.
“எப்படி உங்களுக்கு இத்தனை தென்னமெரிக்க எழுத்தாளர்களைத் தெரிந்திருக்கிறது?”
ஆனால் அதற்கு என்னுடைய பதில் அவளை இன்னும் அதிகமாக ஆச்சரியப்படுத்தியது. ”தமிழ்நாட்டில் உள்ள ஒரு முப்பது வயது இளைஞன் கூட – அவன் எழுத்தாளனாக இருந்தால் – இத்தனை பேரையும் – இதற்கும் மேலாகவும் படித்திருப்பான்.”
நிஜமாகவா நிஜமாகவா என்று பலமுறை கேட்ட மீரா தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
அப்போது குறுக்கிட்ட நான் எங்காவது நல்ல உணவு விடுதிக்குப் போய் சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா என்றேன். அதற்கு அவள் குடித்துக் கொண்டே சாப்பிட்டால் என்ன என்று கேட்டாள். ”உணவு விடுதியிலும் குடிக்கலாம்தான். ஆனால் குடிக்கென்றே இருக்கும் இடங்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கும்… என்ன சொல்கிறீர்கள்?”
”வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு பெண் இப்படிக் கேட்கிறாள். மிகவும் தாமதமாக… என் வயது அறுபத்தேழு…”
“இது ஒரு டிபிகல் இந்திய மனோபாவம் என்று நினைக்கிறேன். பெண்ணுக்கும் வயதுக்கும், குடிக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் என்றே எனக்குப் புரியவில்லை. அநேகமாக எந்தத் தென்னமெரிக்கனுக்கும் அது புரியாது.”
உடனே அது பற்றி விளக்கினேன். ஒரு நல்ல உயர்தரமான பப்புக்கு அழைத்துச் சென்றாள். “நீ ஒரு எழுத்தாளன் என்பதாலும் எங்கள் ஊர்ப் பக்கம் வந்திருக்கிறாய் என்பதாலும் நீ இன்று என்னுடைய கெஸ்ட்” என்றாள்.
”இந்த விதியை நான் மெஹீகோ வரும்போது கடைபிடி. இன்று நீதான் என் கெஸ்ட்.”
“ஓகே. நாளை என்ன நாம் பார்க்காமாலா போய் விடப் போகிறோம்? நாளை நீ என் கெஸ்ட். ஆமாம், எத்தனை நாள் இங்கே இருப்பாய்?”
நான் இங்கே தனியாக மாட்டிக் கொண்ட கதையைச் சொன்னேன்.
“ஓ, நீயும் கோஷ்டி ஆள்தானா?”
அவளுடைய ஆங்கிலத்தின் இடையே ஸ்பானிஷ் கலக்கும் போது என்னை நீ என்று ஒருமையில் அழைப்பதை கவனித்தேன். ஸ்பானிஷில் தமிழைப் போல் நீ – நீங்கள் வித்தியாசம் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் அந்த வித்தியாசம் இல்லாததால் நான் youவையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
மீரா சொன்ன கதையின் சுருக்கம். மீரா என்ற காதரினா ஆக்ராவிலிருந்து கடத்தப்பட்ட போது அவளோடு கூட இருந்தவள் மீராவின் பணிப்பெண் ஆலியா. தன் எஜமானியம்மாளே அடிமையாகி விட்டபோது பணிப்பெண் என்ன ஆவாள்? மீராவுக்கு என்னவெல்லாம் ஆனதோ அதெல்லாம் ஆலியாவுக்கும் ஆனது. ஒன்றே ஒன்றைத் தவிர. ஆலியாவுக்கு எந்த அற்புதங்களும் நடக்கவில்லை. அவள் எப்போதும் போல் எல்லோருடைய பணிப்பெண்ணாக மட்டுமே இருந்தாள். மீரா காதரின்னாக மாறி அற்புதங்கள் நிகழ்த்த ஆரம்பித்த போது ஆலியா திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் நுழைந்தாள். திருமணத்தில் அவளுடைய விருப்பம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. எல்லாம் காதரின்னின் விருப்பம் போல் நடந்தது. தனக்காக ஆலியா பிரம்மச்சரியம் சுமக்க வேண்டாம் என்று கருதினாள் காதரின். மேலும், ஆலியா பிரம்மச்சரிய வாழ்க்கைக்கு உகந்தவள் அல்ல என்றும் நினைத்திருக்கலாம். குடும்ப வாழ்வில் இருந்தாலும் காதரின்னின் பார்வையிலேயே இருந்தாள் ஆலியா. ஆலியாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு மட்டும் காதரின்னின் விருப்பத்தை மீறி மீரா என்று பெயரிட்டாள் ஆலியா. (காதரின்னின் விருப்பம் மேரி.) அதற்குப் பிறகு அந்தச் சந்ததியில் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தைக்கு மீரா என்றே பெயரிடப்பட்டது. இதோ உன் முன்னே அமர்ந்திருப்பதும் அப்படி ஒரு மீராதான்.”
கதை அநேகமாக முடிவை நோக்கி வந்து விட்டது. அட, இப்போதுதானே ஆரம்பம் என்கிறீர்களா? ஆமாம், அதுதான் முடிவும். மீரா அன்றைய தினம் பிஸ்கோ சோர் அருந்தினாள். நான் பகல் என்பதால் வைன் குடித்தேன். அதற்குப் பிறகும் என் விடுதிக்குப் போய் என் அறையில் அமர்ந்து பேசினோம். குடித்தோம். அறையில் பிஸ்கோ சோர் இருந்தது. பேச்சு பேச்சு அப்படி ஒரு பேச்சு. இருவரும் உறங்கும் போது அதிகாலை ஐந்து மணி இருக்கும்.
அநேகமாக நான் ஒரு பெண்ணுடன் தனியாக ஒரு விடுதியின் அறையில் உறங்குவது அதுதான் முதல் முறை. ரவியும் வருவார் என்பதால் இரண்டு கட்டிலுக்கான அறையையே எடுத்திருந்தேன். மேலும் ஒற்றைக் கட்டில்கள் எனக்கு ஆகாது. உறக்கத்தில் விழுந்து விடுவேன். அடிக்கடி அப்படி விழுந்திருக்கிறேன். வீட்டில் அப்படி விழுந்து விடாமல் இருக்க என் இரண்டு பக்கத்திலும் ஒவ்வொரு தலையணையை வைப்பது பெருந்தேவியின் வழக்கம். ஆனால் நான் பார்த்த எல்லா விடுதிகளிலுமே இருவருக்கான அறை என்றாலும் கட்டில் இரண்டும் தனித்தனியாகவே போடப்பட்டிருக்கும். நடுவே ஒரு ஸ்டூலும் இரவு விளக்கும் தடுக்கும். அவை நகர்த்த முடியாதபடி பொருத்தப்பட்டிருக்கும். இந்த அறையும் அவ்வாறே இருந்தது. ஆண் பெண் ஜோடியாக வந்தால் couple room என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது. இம்மாதிரி விடுதி அறைகளில் உள்ள தனிக் கட்டில்களில் பக்கவாட்டில் தலையணையையும் போட முடியாது. இடம் இருக்காது. கொஞ்சம் புரண்டாலும் விழ வேண்டியதுதான். ஆனாலும் வீட்டில் விழுந்திருக்கிறேன். விடுதிகளில் குடித்து விட்டுப் படுக்கும்போது விழுந்ததில்லை.
நல்லவேளை, ஒரே கட்டில் என்றால் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்திருக்கும். எப்படி ஒரு அந்நிய ஸ்த்ரீயுடன் ஒரே கட்டிலில் சரீரம் படாமல் தனித்தனியாகப் படுத்து உறங்குவது?
மறுநாள் நான் பன்னிரண்டு மணிக்கு எழுந்த போது ஆளைக் காணோம். ஆச்சரியமாக இருந்தது. ஏதோ ஹாலிவுட் படங்களில் நடப்பது போல் இருக்கிறதே. அவளுடைய போன் நம்பரையும் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை என்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது.
சரி, நடப்பது நடக்கட்டும் என்று அதோடு அந்த எண்ணத்தை மனதிலிருந்து அகற்றினேன். எதையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காது. இன்னும் ஒரு நாள் அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்றால் மீண்டும் பல்கலைக்கழகத்துக்குப் போய் நாடக விழாவில் தேடலாம் என்று வைத்துக் கொண்டேன்.
மறுநாள் ரொபர்த்தோ வந்திருந்ததால் அவனோடு கிளம்பி ஈஸ்லா நேக்ரா (Isla Negra) கடற்கரைக்குப் போனேன். வாழ்ந்திருக்கிறார் நெரூதா. சாந்த்தியாகோவிலிருந்து 108 கி.மீ. ஒன்றரை மணி நேரப் பயணம். மாலையில் திரும்பினோம். குடிக்கப் போகலாம் என்று அழைத்தான். இல்லை, ஓய்வெடுக்கப் போகிறேன் என்று சொல்லி விட்டு அவசர அவசரமாகப் பல்கலைக்கழகத்துக்குப் போய் நாடக விழா நடக்கும் இடத்துக்குப் போனேன். மீரா இல்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை.
குழப்பத்துடன் விடுதிக்குத் திரும்பினேன். வரவேற்பறை ஆளைப் பார்த்தேன். அவன் என்னை வெறுமையாகப் பார்த்தான். நானும் அவனை வெறுமையாகவே பார்த்து விட்டு அறைக்குப் போனேன். ரொபர்த்தோவுக்கு போன் போட்டு குடிக்க அழைக்கலாமா என்று யோசித்த போது அழைப்பு மணி. ஆ, மீரா என்று ஆர்வத்துடன் கதவைத் திறந்தால் வரவேற்பறை ஆள். உங்கள் தோழி இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்று ஸ்பானிஷில் சொல்லி ஒரு உறையை நீட்டினான்.
அடப்பாவி, இதை நான் வரும்போதே கொடுத்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாதவன். ஒரு வெள்ளைக் காகிதத்தில் La Piojera என்று பென்ஸிலில் கிறுக்கியிருந்தது. கூகிளில் பார்த்தேன். ஒன்றரை கி.மீ. விடுதி வாசலிலேயே ஒரு வாடகைக் காரை எடுத்துக் கொண்டு ஓடினேன். மணி ஐந்து.
”காலையிலேயே நீ வருவாய் என்று நினைத்து நாடக அரங்கம் சென்றேன். நீ இல்லை. போன் நம்பர் கொடுக்காதது தப்பாயிற்று. உன் அறைக்கு வந்தேன். நீ ரொபர்த்தோவுடன் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். திரும்பவும் நாடக விழாவுக்குச் செல்ல மனசில்லை. இங்கே வந்து விட்டேன். இன்று வைன்தான்.”
எவ்வளவு போயிற்று என்றேன். ஆள் காட்டி விரலைக் காட்டினாள்.
ம். பாதகமில்லை. எனக்கு பிஸ்கோ சோர்.
அன்றைய தினம் லா பியோஹெராவில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த அவசரத்திலும் அவளுக்கு நான் கொடுப்பதற்காக வைத்திருந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட என்னுடைய புத்தகம் ஒன்றை எடுத்து வந்திருந்தேன். லத்தீன் அமெரிக்க சினிமா பற்றியது. பிரித்துப் பார்த்தாள். கண்களை அகல அகல விரித்தாள்.
“நீ இத்தனை பெரிய ஆள் என்று தெரியாமல் உன்னை தூ தூ என்று ஒருமையில் அழைத்துக் கொண்டிருக்கிறேனே. இனிமேல் உஸ்தேத் என்றுதான் அழைக்க வேண்டும் போல?” என்றாள்.
“அப்படியானால் நானும் உன்னை செஞோரீத்தா என்றல்லவா அழைக்க வேண்டும்? அசட்டுப் பேச்சை நிறுத்து…”
அப்போது எங்களுக்குப் பணி புரிந்து கொண்டிருந்த பெண் மீராவை நெருங்கி புத்தகத்திலிருந்த என் புகைப்படத்தைக் காட்டி ஏதோ கேட்டாள். இவளும் ஆமாம், ஆமாம், எஸ்க்ரித்தோர் என்றாள்.
எனக்குப் புரிந்து விட்டது. மீரா சொன்னாள். இந்தப் புத்தகம் அவளுக்கு வேண்டுமாம். உன் கையெழுத்தோடு. அதற்காக எத்தனை டாலர் வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறாள்.
ஆயிரம் டாலர்?
ஓ எஸ். ஆனால் ஒரு நிபந்தனை.
என்ன?
உங்களோடு நான் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை என்னுடைய இன்ஸ்டாகிராமில் போடுவேன்.
வேண்டாம் அம்மணி. நான் இலவசமாகவே கையெழுத்துப் போட்டுத் தருகிறேன் என்று சொல்லி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.
அவளும் நானும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியே வந்தால் அது என் தற்கொலைக்குச் சமம். அவள் மேலே ஒரு ஜிகினா ரிப்பனும் கீழே ஒரு முக்கோண ஜிகினாவும்தான் அணிந்திருந்தாள்.
மீராவுக்கு என் அறையில் இருக்கும் இன்னொரு பிரதியைக் கொடுப்பதாகச் சொன்னேன்.
எஞ்ஜாய் என்றவள் “அவளுக்கு உன் மீது ஆர்வம் வந்து விட்டது. அது இந்த ஊரில் சகஜம்தான். ஜாக்கிரதையாக இரு. இங்கே எழுத்தாளர்கள் என்றால் ராக் ஸ்டார்கள் மாதிரி” என்றாள்.
மறுநாளும் மீராவும் நானும் லா பியோஹெராவிலேயே சந்தித்தோம். அங்கேதான் அதிக சத்தம் இல்லாமல் இருந்தது. நிதானமாகப் பேச முடிந்தது. அப்போது அந்தப் பணிப்பெண் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத்தாள். ஸ்பானிஷில் எழுதியிருந்தது.
“மதிப்புக்குரிய எழுத்தாளர் சூர்யா…
அதிகாலையில் என் வேலை முடிந்ததிலிருந்து தூங்காமல் உங்கள் புத்தகத்தையே படித்துக் கொண்டிருந்தேன். நேராக வேலைக்கு வந்து விட்டேன். அந்தப் புத்தகத்தைப் படித்ததால் உங்களிடம் இதைக் கேட்கலாம் என்று தோன்றியது.
நீட்டி வளர்த்தாமல் சொல்லி விடுகிறேன். நான் இந்தியா வர விரும்புகிறேன். ஒரே ஒரு மாதம் எனக்குத் தங்க இடமும் உணவும் கொடுத்தால் போதும். நான் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருக்கிறேன். அங்கே எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நான் இந்தியா வர விரும்பும் ஒரே காரணம், அங்கே இப்படி நிர்வாணமாக வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எனக்கு நிர்வாணமாக வேலை செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மைனஸ் மூன்று டிகிரி செல்ஷியஸில் அப்படி நடமாடுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உள் அறையின் வெப்பநிலை சற்றே கூடுதல் என்றாலும் கூட…
அலெஹாந்த்ரா.”
இதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று மீராவிடம் கேட்டு, சிக்கல் இல்லாவிட்டால் இவளுக்கு நான் உதவத் தயார் என்றேன். அவள் அலெஹாந்த்ராவை அவளுடைய ஆவணங்களை எடுத்துக் கொண்டு நாளை பல்கலைக்கழகத்துக்கு வரச் சொன்னாள். என்னையும்.
மீரா எனக்காகத் தன் பயணத்தை ஒத்திப் போட்டு விட்டாள். விழா முடிந்ததும் பல்கலைக்கழகத்திலிருந்து பையை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வந்து விட்டாள். ஆனால் நாளை இரவு ரவி பொலிவியாவிலிருந்து வந்து விடுவார். அதற்குள்ளா எட்டு நாட்கள்?
இன்று ஏழாவது நாள். நாளை மறுநாளிலிருந்து ரவியுடன் சேர்ந்து மூன்று தினங்கள் இங்கே சீலேயில் ஒரு குழுவுடன் சுற்ற இருந்தது. ஆக, இன்றிலிருந்து ஐந்து நாட்கள் என்னோடு இருக்க முடியுமா என்று மீராவிடம் கேட்டேன். நாளை காலையே வேறொரு விடுதியில் அறை பிடித்து விடலாம். ரவியை விமான நிலையத்தில் சந்தித்துக் கொள்ளலாம். ஐந்து தினங்களும் சுற்றலாம்.
பிரச்சினை இல்லை என்று சொல்லி விட்டாள் மீரா. அதிகம் குடிக்காமல் ஊர் சுற்றலாம் என்று முடிவு செய்தோம். சாந்த்தியாகோவின் சுற்று வட்டாரத்திலேயே ஊர் சுற்றிப் பார்க்க எக்கச்சக்கமான இடங்கள் இருந்தன. எல்லாம் முப்பது நாற்பது கி.மீ. தூரம் என்றபடியால் மாலை நகரத்துக்குத் திரும்பி விடுவோம்.
ஏழு மணி ஆகி விட்டால் கொஞ்சம் வைன் என்று அவளோ அவள் சொல்லாவிட்டால் நானோ பேச்சை எடுப்போம். அப்போது ஆரம்பித்தால் காலையில் ஐந்து மணி ஆகி விடும். பேச்சு குடி பேச்சு குடி. பேச்சு குடி. அவளுடைய சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்கக் கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். அதேபோல் அவளைத் தீண்டக் கூடாது என்பதிலும். ஒரு பெண் என்றால் சரீரத்தைப் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டுமா? ஆனால் அது சம்பந்தமாக என்னைப் பல சந்தேகங்கள் தொடர்ந்து மொய்த்தன. இத்தனை அந்நியோந்நியமாகப் பழகி விட்டு சரீர சம்பந்தம் என்பது அநிச்சையாக அதன் போக்கில் நிகழ்ந்தால் அதை ஒரு பலத்த வேலி போட்டுத் தடுத்துத்தான் ஆக வேண்டுமா? நாம் எதிலுமே அப்படி ஒரு கொள்கை வெறியன் அல்லவே? நாமாக முயற்சி செய்யக் கூடாது. அது அசிங்கம். அதுவே தன்னியல்பாக நடந்தால் தடுக்க வேண்டாம். ஐந்து நாளில் இரண்டாம் நாள் இரவு. இரண்டு பேரும் பிஸ்கோ சோர். பிஸ்கோ சோர் கொஞ்சம் வீரியம். கொஞ்சம் என்ன, அதி வீரியம்தான். இரவு ஒரு பத்து மணி அளவில் ”கொஞ்சம் பொறு, குளித்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி உள்ளே போனவள் ஷவரை முடித்து விட்டு ஒரு வெள்ளை நிற டர்க்கி ஓவர் கோட் மாதிரி ஒன்றை மாட்டிக் கொண்டு வந்தாள். அதை இங்கே அறை எடுத்ததும் வார்ட்ரோபில் பார்த்தேன். இதற்குத்தானா அது? நடுவில் கட்டும் கயிறு இல்லை போல. பொத்தான்களும் இல்லை. முன்பக்கம் மேலிருந்து கீழ் திறந்திருந்தது. ஒரு சிறுவனைப் போல் தலையைத் தாழ்த்திக் கொண்டேன். இந்தியர்களின் குருதியிலேயே ஓடுகிறது போலும் தேகம் பற்றிய இந்த லஜ்ஜை. உள்ளே வந்தவள் அதற்குப் பிறகுதான் பேண்டீஸ் அணிந்து மேலே ஒரு கையில்லாத பனியனை அணிந்து கொண்டாள். கச்சை அணியவில்லை. இப்படி என்னால் இத்தனை சுவாதீனமாக குளியலறையிலிருந்து வந்து ஆடை மாற்றிக் கொள்ள முடியுமா என்று என்னால் கற்பனையும் செய்ய முடியவில்லை.
என்ன என் மதிப்புக்குரிய எழுத்தாளர் அவர்களே, என்ன ஆழ்ந்த யோசனை?
உன் உடம்புதான், வேறு என்ன?
அவ்வளவு பிரச்சினை என்றால் அதை ’ரிஸால்வ்’ பண்ணி விட வேண்டியதுதானே?
அதை ‘ரிஸால்வ்’ பண்ணுவதில் இரண்டு பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே?
நெட்டில் எழுத்தாளரின் கதைகள் சில ஆங்கிலத்தில் கிடைத்தன. நாலைந்து நாட்களாக அதைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் இந்தப் பிரச்சினையை ‘ரிஸால்வ்’ பண்ணுவதில் நிபுணர் மாதிரி அல்லவா தெரிகிறது?
எழுத்து வேறு, வாழ்க்கை வேறு இல்லையா?
இதுதான் நீ ‘ரிஸால்வ்’ பண்ணுவதன் முதல் படி என்று எனக்குத் தெரியும் ப்ளடி ராஸ்கல்…
அதற்குப் பின் இருவருக்கும் வார்த்தைகளின் தேவை இருக்கவில்லை. இடி மேகத்துடன் பெருமழை பெருகி மண்ணில் கரைவது ஓடுவது போல் இரண்டு தேகங்களும் கலவி கொண்டாடின.
அவளுக்கு மெக்ஸிகோவில் ஒரு காதலன் இருக்கிறான். ஆவணப் பட இயக்குனன்.
என்னைப் பற்றி அவனுக்குத் தெரிந்தால்?
என்ன இது, முட்டாள்தனமான கேள்வி? அவனுக்கு ஏன் உன்னைப் பற்றித் தெரிய வேண்டும்? நீ என்னுடைய அந்தரங்கம் இல்லையா? ஒரு பெண்ணோ அல்லது ஆணோ ஒரு இணையைத்தான் காதலிக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? அப்படி இருந்தாலும் மனம் அதைக் கேட்குமா?
அவளுடைய கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை. ஆனால் அன்று இரவு ஏழெட்டு சுற்று பிஸ்கோவுக்குப் பிறகு ”நான் முதலில் சொன்னது உளறல். நீயே இப்போது அந்த வெனிஸுவலாக்காரி அலெஹாந்த்ராவுடன் இந்தப் படுக்கையில் கிடப்பதை நான் பார்க்க நேர்ந்தால் அதற்குப் பிறகு உன் தொடர்பை நிறுத்தி விடுவேன் என்பதுதான் பச்சையான உண்மை சூர்யா” என்றாள்.
***
விமான நிலையத்துக்கு வந்திருந்தாள் மீரா. ரவிக்கு அறிமுகப்படுத்தினேன். கிளம்பும்போது என்னை இறுக அணைத்து நீண்டதொரு முத்தம் தந்தாள். யாருங்க சூர்யா இது என்று பெரும் ஆச்சரியத்துடன் கேட்டார் ரவி. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தமிழ் சினிமா நாயகனைப் போல் தொண்டை அடைத்தது. கண் கலங்கி நீர் முத்து கீழே விழுந்து விடுமோ என அஞ்சினேன்.
ஒருக்கணம் திரும்பிப் பார்த்தேன். திரும்பிக் கொண்டிருந்தாள் மீரா. மீரா என்று குரல் கொடுத்தேன்.
ஒரு நிமிடம்.
வந்தாள். அவளை அணைத்து கண்களிலும் கன்னங்களிலும் கழுத்திலும் உதட்டிலும் என் உதடுகளால் ஒத்தி எடுத்தேன். சட்டென்று திரும்பி விட்டேன்.
***
அலெஹாந்த்ரோவின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் வீசாவைப் பெற்றுக் கொண்டு மதறாஸ் வரச் சொல்லியிருந்தேன். ஓரிரு மாதங்களில் அவளுக்கு வீசா கிடைத்தது. இங்கே என் நண்பர்களிடம் சொல்லி அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன். வந்தவுடனேயே அவளுக்கு வேலையும் கிடைத்தது.
மீராவை மீண்டும் சந்திப்பதற்கு சென்ற ஆண்டு (2020) மார்ச் மாதம் மெக்ஸிகோ சென்றிருக்க வேண்டும். கொரோனா குறுக்கிட்டது. ஒரு வருடமாக வெறும் கடிதங்களில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. நாவலை முடித்து விட்டாளாம். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் முதல் பிரதி எனக்குத்தான் என்கிறாள். நான்தான் அதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமாம். (மறுபடியுமா?)
சாந்த்தியாகோவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய புதிதில் ”அலெஹாந்த்ராவுடன் தொடர்பு உண்டா, எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டாள் மீரா. ”வேலை வாங்கிக் கொடுத்ததோடு சரி, அவளும் டாட்டா சொல்லி விட்டுப் போய் விட்டாள். அதற்குப் பிறகு அவளோடு என்ன?” என்று வாட்ஸப் பண்ணினேன். வாட்ஸப் போகவில்லை. கோவாவில் சிக்னல் கிடைப்பது கஷ்டம்.
”என்ன அமோர், நான் இருக்கும்போது போனில் பிஸியாக இருக்கிறாய்? யார், செஞோராவா?” என்றாள் அலெஹாந்த்ரா கண்களைச் சிமிட்டியபடி. மெஸேஜைக் காண்பித்தேன். ஹாஹா என்று சிரித்தபடியே என்னைக் கட்டிப் பிடித்து ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ் அடித்தாள்…
***
(புகைப்படம் நன்றி: Wikimedia Commons)
இந்த மார்ச் மாதத்தில், வழக்கமாக அனுப்பும் நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களிடமிருந்து சந்தா/ நன்கொடை எதுவுமே வரவில்லை. கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai
***