புத்தக விழாவில் வாங்கிய/கிடைத்த புத்தகங்கள்…

1.ஓ க்ரேஸ்…

இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக் கொள்

இந்தப் புத்தகத்தை அவசியம் படிப்பேன்.  நான் வளர்த்த பையன்.  வளன்.  உயிர்மை பதிப்பகம்.

2. காஃபி சூனியக்காரி – சிறுகதைத் தொகுதி – வாசகசாலை

3. கொனஷ்டை புத்தகங்கள் – தொகுப்பாசிரியர் ராணி திலக் – ஸீரோ டிகிரி பதிப்பகம்.  படித்தே ஆக வேண்டிய கிளாஸிக் வகை.

4. அல்லிக்கேணி – நாவல் – ராம்ஜி நரசிம்மன் – ஸீரோ டிகிரி பதிப்பகம் – படித்து விட்டேன்.  ஒரே அமர்வில் படிக்கக் கூடிய படு சுவாரசியமான நாவல்.  சினிமாவாக எடுக்கலாம்.

5. அழியாத ரேகைகள் – சுய வரலாற்றுக் கட்டுரைகள் – சுதா மூர்த்தி – காயத்ரியின் அழகான மொழிபெயர்ப்பு – ஸீரோ டிகிரி பதிப்பகம்.  சமூகத்தை மேம்படுத்தக் கூடிய ஓர் அடிப்படை நூல்.  படு சுவாரசியமாக இருந்தது.

6. கையிலிருக்கும் பூமி – என் முப்பது ஆண்டுக் கால நண்பரும் சுற்றுச்சூழலியல், பறவை ஆய்வு, கானுயிர்ப் பாதுகாப்பு, பயணம் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணருமான சு. தியடோர் பாஸ்கரன் எழுதியது.  உயிர்மை வெளியீடு.  அனைவரும் படிக்க வேண்டிய ஓர் அடிப்படை நூல்.  இது நான் விலை கொடுத்து வாங்கிய புத்தகம்.   

7. அன்பில் ஒரு டீஸ்பூன் கூடி விட்டது – மனுஷ்ய புத்திரன் – உயிர்மை

8. வசந்தம் வராத வருடம் – மனுஷ்ய புத்திரன் – உயிர்மை

9. அலெக்ஸா… நீ என்னைக் காதலிக்கிறாயா?  – மனுஷ்ய புத்திரன் – உயிர்மை

(இன்று உயிர்மை அரங்குக்குச் சென்று மனுஷ்ய புத்திரனையும் செல்வியையும் சந்தித்தேன்.  அப்போது மனுஷ்ய புத்திரன் அன்புடன் அளித்த மூன்று கவிதைத் தொகுதிகள்.   தமிழில் அதிக கவிதைகள் எழுதிய கவிஞர் மனுஷ்ய புத்திரன் தான் என்று நினைக்கிறேன்.  இந்த மூன்று தொகுதிகளையும் பற்றி சுருக்கமாகவாவது விரைவில் எழுதுவேன்.  சலுகை விலையில் இந்த மூன்று தொகுதிகளும் 2000 ரூ. என்றும், இது 300 பிரதிகள் விற்றிருக்கின்றன என்றும் சொன்னார் மனுஷ்.  நிச்சயமாக இது ஒரு அதிசயம்தான், சாதனைதான்.)     

10. புத்திரன் – வாசு முருகவேல் – ஸீரோ டிகிரி பதிப்பகம்

(வாசு முருகவேல் என்னைச் சந்தித்து அளித்த நாவல்.  அவசியம் படிக்க வேண்டும்.)

11. ரோவல் தெரு மனிதர்கள் – உமா கதிர் – ஸீரோ டிகிரி பதிப்பகம்.  எனக்குப் பிடித்த சிறுகதை ஆசிரியர்.  என் நண்பர்.

12.  பேரருவி – கலாப்ரியா எழுதிய நாவல் – சந்தியா பதிப்பகம்

13. சுருக்கப்பட்ட நெடுங்கதைகள் – ரிஷான் ஷெரீப் – வம்சி பதிப்பகம்  (நானே வாங்கிய புத்தகம்)

14. மதுரையின் அரசியல் வரலாறு 1868  – தமிழில் சரவணன் – சந்தியா பதிப்பகம்

15.  பாடலென்றும் புதியது – கலாப்ரியா – சந்தியா பதிப்பகம்

16. என் உள்ளம் அழகான வெள்ளித்திரை – கலாப்ரியா – சந்தியா பதிப்பகம்

17. பெயரிடப்படாத படம் – கலாப்ரியா – நாவல் – சந்தியா பதிப்பகம்

18. மாயவரம் – சில நினைவுகளும் சில நிகழ்வுகளும் – சந்தியா நடராஜன் – சந்தியா பதிப்பகம்

19. வேண்டுதல் – குறுநாவல்கள் – ஜெகநாத் நடராஜன் –  30 ஆண்டுகளுக்கும் மேலாக என் பிரியத்துக்குரிய நண்பர் – அவசியம் படிப்பேன். 

பொதுவாக தமிழ்ப் பதிப்பாளர்களின் மீதான என் கரிசனத்தாலும் அக்கறையினாலும் எழுதிய என் வாக்கியங்களைத் தப்பர்த்தம் பண்ணிக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் அதற்காக முகநூலில் என்னைத் திட்டி எழுதிய சந்தியா நடராஜன் தான் சந்தியா பதிப்பகத்தில் எனக்குப் பிடித்தமான எல்லா நூல்களையும் வெளியிடுபவர்.  அவரைக் கண்டால் இனி முகம் கொடுத்துப் பேசக் கூடாது என்றே இருக்கிறேன்.  அதனால் அவருக்கு ஒரு நஷ்டமும் இல்லை.  என்னுடைய கொள்கை அது.  என்னை அனாவசியமாகத் திட்டுபவர்களோடு பேசக் கூடாது.  உதாரணமாக, என்னை ஒரு எழுத்தாளர் போர்னோ எழுத்தாளர் என்று ஒற்றை வரியில் முகநூலில் எழுதுகிறார்.  ஆனால் நேரில் பார்த்தால் அவர் ஹிஹி என்றால் நான் திருப்பிக் கொண்டுதான் போவேன்.

சந்தியா நடராஜன் என்னைத் திட்டியிருந்தாலும் அவர் பதிப்பிக்கும் நூல்கள் எனக்கு முக்கியம்.  அவர் எழுதிய மாயவரம் நூல் கூட எனக்கு மிகவும் பிரியமானது.  என்னை மலம் என்று திட்டிய சுஜாதாவையே நான் கொண்டாடவில்லையா?  நடராஜன் திட்டியதெல்லாம் சும்மா ஜுஜுபி. 

இடையில் நண்பர் சுனில் கிருஷ்ணன் அவர் எழுதிய எல்லா நூல்களையும் எனக்கு அனுப்பித் தந்திருந்தார்.  அதில் அன்புள்ள புல்புல் நூலை மட்டும் காயத்ரியிடம் கொடுத்து எனக்கு அந்தப் புத்தகத் தயாரிப்பு மிகவும் பிடித்திருந்தது என்று குறிப்பிட்டேன்.  இது தவிர ஸீரோ டிகிரியின் கொனஷ்டை தொகுப்பு, பா. ராகவனின் எல்லா நூல்கள் இவை எல்லாம் புத்தகத் தயாரிப்பில் ஒரு பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தக் கூடியவை.  தமிழ்ப் பதிப்புலகிலேயே இப்படி ஒரு புரட்சி நடந்ததில்லை என்றே சொல்வேன்.  ஆயிரம் பக்கம் இருக்கிறது.  எடுத்தால் இலை போல் கனம்.  என்ன வித்தை இது?  என்ன மாயம் இது?  பயங்கரம்.  அதகளம்.  என் நண்பர்களைப் பற்றி நானே எழுதக் கூடாது என்று இருந்தேன்.  பாரா எழுதினால்தான் சரியாக இருக்கும். 

ஒரு காலத்தில் – அதாவது எக்ஸைல் நாவல் ஆயிரம் பக்கத்தில் வந்த போது பத்ரியிடம் இம்மாதிரி லேசான எடையில்தான் புத்தகம் வர வேண்டும் என்று சொன்னேன்.  பத்ரியும் அதைச் செயல்படுத்தி உதவினார்.  அநேகமாக சமகால இலக்கியத்தில் ஆயிரம் பக்க நூல் ஒன்று வெளிநாட்டு நியூஸ்ப்ரிண்ட் காகிதத்தில் வெளிவந்தது எக்ஸைலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.  தூக்கினால் கனமே இருக்காது.  ஆனால் இப்போது ஸீரோ டிகிரியின் நூல்கள் அதே இலை மாதிரி கனத்தில் ஆனால் படு அட்டகாசமான தரத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இது பதிப்புத் துறையில் ஒரு புரட்சி.  இதன் ஆரம்பம் ஸீரோ டிகிரி பதிப்பகம்தான்.  ராம்ஜிக்கும் காயத்ரிக்கும் என் பாராட்டுகள்.

சுனில் கிருஷ்ணன் புத்தகங்கள் பற்றியும் இன்னொரு பட்டியலைப் பற்றியும் நாளை எழுதுவேன்.