கமல் பற்றி அபிலாஷ் மற்றும் அடியேன்

பின்வருவது அபிலாஷ் முகநூலில் எழுதியது. அது பற்றிய என் கருத்து அதற்குப் பின்னால்:

கமல் எனும் சர்வாதிகார குழப்பவாதிகமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வீட்டு மனைவியருக்கு ஊதியம் வழங்கப்படும் எனும் தனது வாக்குறுதி சம்மந்தமான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அபத்தமான விதத்தை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். கமலுடன் இருக்கிற வேறு நிர்வாகி ஒருவர் தெளிவாக சிறப்பாக பதிலளிக்க கமல் பேசுவது மட்டும் அதர்க்கமாக, சம்மந்தமில்லாமல், தெளிவற்று இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். தன் கட்சி நிர்வாகி தன்னை விட கோவையாகப் பேசுவதைக் கண்டு பதற்றமாகிய கமல் மீண்டும் மைக்கை எடுத்து குழப்படியாக பேசிய ஜம்பத்தையும் கவனித்திருப்பீர்கள். பத்திரிகையாளர்களின் கேள்விகள் அவரை எப்படி பதற்றமாக்குகிறது, உடனே சின்ன பயத்துடன் சிரித்தபடி சமாளித்து மீண்டும் சம்மந்தாசம்மந்தமில்லாமல் எப்படி பேசுகிறார் என்பதையும் பார்த்திருப்பீர்கள்.

தான் அளிக்கும் வாக்குறுதி ஒன்று குறித்த அடிப்படை புரிதல் கூட ஒருவருக்கு இல்லையா, அதை நியாயப்படுத்த ஒரு பள்ளிக்குழந்தை தெரிந்த அளவுக்குக் கூட ஒருவருக்குத் தெரியாதா எனவும் யோசித்திருப்பீர்கள். குறிப்பாக, பொறியியல், மருத்துவம், பல்வேறு பட்டப்படிப்புகள் முடித்த பெண்கள், பள்ளிக் கல்வி வரை முடித்தவர்கள் என பல்வேறு கல்விப் பின்னணி, தகுதி கொண்ட மனைவியருக்கு எப்படி சம்பளம் வரையறை பண்ணுவது என்பதே கேள்வி. அதற்கு மிக எளிய பதில் “கல்வித்தகுதி அடிப்படையில் அல்ல, குடும்பத்திற்காக செலுத்து உழைப்பின் அடிப்படையிலே சம்பளம், அனைவருக்கும் ஒரே சம்பள வரையறை தான்.” என்பதே. ஆனால் கமல் இன்னொரு டிராக்கில் போய் தான் சார்ந்த சினிமாத் துறையில் எப்படி லைட் பாய்க்கு, நடிகருக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என ஒவ்வொரு அளவிலான சம்பளம் உண்டு, ஆனால் அதே நேரம் அத்தனை பேரின் பங்களிப்பும் முக்கியம் என நீண்ட ஒரு பதிலை அளித்தார். இதைக் கேட்கையில் என்னதான் சொல்ல வருகிறார் எனும் குழப்பம் ஏற்படும். ஏன் குழப்பம் என்றால் கமல் எந்த கேள்வியையும் யோசித்து புரிந்து கொண்டு பதிலளிப்பதில்லை, மாறாக அவர் சிந்தித்தபடியே பேசுகிறார். அவரது மனம் இயல்பாகவே ஒழுங்கற்று தடம் புரண்டு சிந்திப்பது. மனிதன் நிலவில் கால் பதித்ததைப் பற்றி கேட்டால் கூட அவர் அப்படியே ரைமிங்காக ஆரம்பித்து ஒரு யுடர்ன் எடுத்து தனது படங்களைப் பற்றி பேசி, பாலசந்தர், தன் அப்பா, தன் அம்மா, அண்ணா, தாத்தா என முக்கால் மணிநேரம் பேசுவார். சரி வேண்டாம், அணு விஞ்ஞானம் பற்றி கேளுங்கள். அதற்கும் அப்படியே தன் சினிமாவில் வந்த ஒரு வசனத்தில் இருந்து ஆரம்பித்து தனது பழைய நினைவுகளில் மூழ்கி விட்டு எனக்கு அணு விஞ்ஞானமும் தெரியும், அனுஹாசனையும் தெரியும் என பஞ்ச் சொல்வார். ஆனால் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என நீங்கள் மண்டையை பிய்த்துக் கொள்வீர்கள். கமல் அளவுக்கு வாசிப்போ, மொழி சாமர்த்தியமோ இல்லாத எடப்பாடியார் கூட கமலை விட சிறப்பாக எதிர்-விமர்சனக் கேள்விகளை எதிர்கொண்டு பதறாமல் குழப்பாமல் பதிலளிப்பதைக் காண்கிறோம். ஆனால் உலக மகாஞானியான கமலுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பிரச்சனை? இப்படியான ஒருவரின் பொறுப்பில் ஒரு மாநிலத்தை விட்டால் அவரால் எந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்? ஆட்சி என்பது என்ன நடிப்பா, திரைக்கதை, வசனப்படி செயல்பட?இதற்கு பதில் காண நாம் அரசியல்வாதிகளின் ஒரு பொது இயல்பை புரிந்து கொள்ள வேண்டும் – அது அனைத்து வித மக்களுடனும் சகஜமாக பேசிப் பழகுவது, எல்லாவித எதிர்வினைகளையும் போகிற போக்கில் லைட்டாக எடுத்து கொள்வது. ஆனால் கமல் இதற்கு நேரெதிரான ஆளுமை கொண்டவர்.

மிகை-நுண்ணுணர்வும், சுயமோகமும் மிக்க அவர் அடிப்படையில் ஒரு தனியரும் கூட. தான் மிக சௌகர்யமாக உணர்கிற, தன்னை தொடர்ந்து ஜால்ரா அடிக்கிறவர்களிடமே அவர் இணக்கமாக உணர்கிறார். மற்றவர்கள் தன்னை எப்படிப் பார்க்கிறார்கள் எனும் பிரக்ஞையும் அவருக்கு மிக அதிகம். கமல் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அதை பின் தொடர்ந்து பதிவு செய்ய ஒரு பத்திரிகையாளர் கூட செல்கிறார். ஒருநாள் காலையில் நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் கமலை பேட்டி எடுக்கிறார். கமல் காலையில் எழுந்து செய்கிற வேலைகளைக் காட்டி விட்டு உணவு மேஜையில் அவரது காலையுணவு விளம்பப்பட்டிருக்க கமல் பேட்டியை துவங்குகிறார். அடிப்படையான நாகரிகம் தெரிந்தவர்கள் தாம் உணவருந்தும் போது யார் பேசினாலும் அவருக்கு ஒரு கோப்பை பழச்சாறோ தேநீரோ ஆவது வரவழைத்துக் கொடுப்பார்கள், அல்லது சாப்பிடுகிறீர்களா என்றாவது கேட்பார்கள். ஆனால் இவர் கவலையே இல்லாமல் நிருபரை பார்க்க வைத்து பூரியை தன்பாட்டுக்கு உள்ளே தள்ளியபடி கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். கமல் ஒரு பொது வெளியில் சகஜமாக எல்லாருடனும் பழகும் இயல்பற்றவர். ஏனென்றால் தன் மக்களைத் தவிர பிறர் மீது ஒரு பயம் அவருக்குள் படிந்திருக்கிறது. அதனாலே அவர் முடிந்தவரையில் பொதுமக்களின் கேள்விகளை, ஊடகங்களை தவிர்க்கிறார். மாறாக – மோடி ஜியைப் போல – பதிவு செய்யப்பட்ட கருத்தாடல்களையே விரும்புகிறார். இதுவும் சுயமோகம் மிக்க சர்வாதிகாரிகளின் இயல்பே. அவர்கள் தானொரு கண்ணாடி மாளிகைக்குள் வாழ்கிறோம் எனத் தெரிந்திருப்பார்கள், அதனாலே அதில் விரிசல் ஏற்படக் கூடாது என அதீத அக்கறை காட்டுவார்கள்.

இவ்வருட பிக்பாஸில் பாலாஜி கமல் அணிந்து வந்த கூர்க்கா சீருடையை நோக்கி சிரித்து விட்டார். அதை போகிற போக்கில் எடுத்துக் கொள்ள முடியாமல் கமலின் முகம் சிவந்து விட்டது. “என்ன? என்ன?” என பாலாஜியை அழைத்து கோபமாக கேட்கிறார். பாலாஜி நிலைமையை புரிந்து கொண்டு “உங்க டிரஸ் சூப்பரா இருக்கு” என சலூட் அடித்துக் காட்டி சமாளித்து விட்டார். இதற்கு முன்பு கமல் குறித்து ஒரு கிண்டலான கருத்து சொன்னதற்காக அவர் நடிகர் சரவணனை வெளியேற்றினார் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு பேட்டியில் நடிகர் ஜெயராம் “தெனாலி” படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார் – கமலுக்கு ஜெயராம் சொல்லும் ஜோக்குகள் ரொம்ப பிடிக்கும். படத்தளத்தில் அவர் ஜெயராமை அழைத்து உட்கார வைத்து ஜோக்குகளைக் கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு காட்சி எடுக்கும் நேரம் வருகிறது. எல்லாரும் தயார். இயக்குநர் கமல் பக்கத்தில் வந்து நின்று அவரது கவனத்தைக் கவர முயன்று கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் பொறுமை இழந்து “சார்” எனக் குறுக்கிடுகிறார். அப்போது கமல் கோபமாகி அவரை நோக்கி கத்துகிறார்: “பேசிக்கிட்டிருக்கோமில்ல, ஏன் தொந்தரவு பண்றீங்க?” இயக்குநர் உடனே ஓரமாய் பதுங்கிக் கொள்கிறார். அடுத்து ஜெயராம் சொல்கிற பல ஜோக்குகளைக் கேட்டு ரசித்து சிரித்த பின்னரே அவர் காட்சிக்கு தயாராக நடிக்க வருகிறார். இது சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களுக்கு வழக்கமாக இருக்கலாம், ஆனால் கமல் 24 மணிநேரமும் இந்த மூடில் தான் இருக்கிறார்.

ஒரு இலக்கிய சம்பவம் சொல்கிறேன் – கமலின் ஒரு படத்தைக் குறித்து ஒரு முக்கியமான இலக்கிய பத்திரிகையில் சாரு நிவேதிதா ஒரு கட்டுரை எழுதி அதில் கமலை கிழித்து தொங்க விட்டு விடுகிறார். அப்பத்திரிகைக்கு சந்தா எடுத்துள்ள கமல் உடனே பத்திரிகையின் எடிட்டரை தன் வீட்டுக்கு அழைத்து கத்த ஆரம்பித்து விடுகிறார். அவர் அதற்கு சொன்ன காரணமே விசித்திரமானது – “தமிழ் சினிமா உலகில் உங்க பத்திரிகை சந்தா எடுத்துள்ள ஒரே கலைஞன் நான் தான். அப்படிப்பட்ட என்னை விமர்சித்து எப்படி அதில் கட்டுரை வரலாம்?” இதெல்லாம் ஒரு காரணமா? நீங்கள் ஒரு பத்திரிகைக்கு சந்தா எடுத்தால் பிறகு அதில் உங்கள் படைப்புகளை புகழ்ந்து மட்டுமே கட்டுரைகள் வர வேண்டுமா? இப்படி வினோதமாக நம்மில் யாராவது இதுவரை யோசித்திருக்கிறோமா? நாமெல்லாம் சந்தா எடுத்த பின் அதில் நம் படைப்புகள் வர வேண்டும் என்று கூட கோர தயங்குவோம். ஆனால் கமல் யோசிப்பார்.அவருக்கு இந்த உலகமே பணிவிடை செய்ய வேண்டும். தன்னை எப்போதும் எல்லாரும் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும். இவர் நாளை முதல்வரான எப்படியெல்லாம் நடந்து கொள்வார் யோசியுங்கள் – சட்டமன்றத்தில் துணை நடிகர்களும், அடிபொடிகளும் எழுந்து நின்று கமல் பட வசனங்களை சொல்லி, அவரது நடிப்பை பாராட்டியபடியே இருப்பார்கள். அதைத் தாண்டி அவருக்கு ஒன்றும் தெரியாது, புரியாது, அக்கறையும் இல்லை.ஆனால் தனி உரைகள் ஆற்ற சொன்னால் அதை நன்றாக எழுதி வைத்து மனனம் பண்ணி நிகழ்த்தி விடுவார். இதை அவர் எடப்பாடி மற்றும் ஸ்டாலினை விமர்சித்து அண்மையில் பேசிய காணொலி ஒன்றில் கண்டோம். திரும்ப யாராவது கேள்வி கேட்டால் அந்த நொடியே அவர் ஸ்தம்பித்து நின்று விடுவார். “டாஸ்மாக்கை மூடி விடலாம், உங்களிடம் உள்ள மாற்றுத் திட்டமென்ன எனக் கேட்டால்” குழப்பமாகி அப்படியே அதே சினிமா, பாலசந்தர், தன் குடும்பம் என ஜல்லியடிக்க ஆரம்பித்து விடுவார். ஏனென்றால் எதையும் அவர் யோசித்து வைப்பதில்லை, தன்னைச் சுற்றி வாழும் மக்களைக் குறித்த கவனமோ அக்கறையோ இல்லை.

அவர் ஒரு நல்ல சினிமாக்காரர், அதைத் தவிர வேறெதையும் யோசிக்காதவர். வாழ்க்கையை சினிமாவாக காண்கிற ஒரு ரசிகர் மட்டுமே கமலை ஒரு அரசியல் தலைவராக, முதல்வர் வேட்பாளராக ஆதரிக்க முடியும். அதனாலே சொல்கிறேன்: வரும் தேர்தலில் “மய்யத்துக்கு” கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளி விடும். நாம் சர்வாதிகாரத்துக்காக இந்த மண்ணை தயாரிக்கத் தொடங்கி விடுவோம்.

மேலே உள்ளது அபிலாஷ். இனி சாரு நிவேதிதா:

கமல் ஒரு நல்ல சினிமாக்காரரும் அல்ல. அவர் நடிப்பு ஒரிஜினல் அல்ல. அல் பச்சினோவின் நகலே கமல்.

ஒருமுறை ஒரு மிகப் பெரிய எழுத்தாளரை கமல் தன் அலுவலகத்துக்கு அழைத்தார். காலை பதினோரு மணி. ஐந்து மணி வரை கமலே பேசினார். உலக இலக்கியத்தில் நன்கு பரிச்சயம் கொண்டிருந்த எழுத்தாளரை கமல் ஒரு வார்த்தை பேச விடவில்லை. மிகக் கொடுமையான megalomania என்ற பிரச்சினை கொண்டவர் கமல். அது கூடப் பரவாயில்லை. இடையில் சாப்பாட்டு நேரம் வந்த போது ஓரிக் கோட்டானைப் போல் தானே சாப்பிட்டார். எழுத்தாளரிடம் சாப்பிடுகிறீர்களா என்று ஒப்புக்குக் கேட்க, எழுத்தாளர் கூச்ச சுபாவத்தினால் சாப்பிட்டு விட்டேன் என்று சொல்ல, அவர் எதிரிலேயே கமல் மட்டும் சாப்பிட்டார்.

யார் கமலின் படங்களை விமர்சித்தாலும் அவரை தன்னுடைய வாழ்நாள் எதிரியாக நினைப்பவர் கமல். என்னைத் தன் வாழ்நாள் எதிரியாக நினைப்பதும் அதே காரணத்தினால்தான். தன்னை அவர் உலக மகா ஜீனியஸ் என நினைக்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால், அவருக்கு எதுவுமே தெரியாது. அதை நீங்கள் அவர் ஸ்மிருதி இரானியோடு இணைந்து கொடுத்த உரையாடலில் பார்த்திருக்கலாம். காதிலும் மூக்கிலும் ரத்தம் கொட்டக் கொட்ட ஸ்ம்ருதி இரானியிடம் கமல் வாங்கிய குத்துகள் யாராலும் மறக்க முடியாதவை. ஒவ்வொரு கேள்விக்கும் கெக்கெ பிக்கே என்று முழித்தார் கமல். கூட இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அர்னாப் கோஸ்வாமியே ஒரு கட்டத்தில் கமலை நினைத்துக் கண்ணீர் சிந்தும்படி ஆகி விட்டது. கமல் ஒரு வடிகட்டின மக்கு என்பதன் நேரடி சாட்சி அந்த டிவி நிகழ்ச்சி.

ரஜினியும் கமலும் ஒன்றுதான். ரஜினிக்குத் தனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரியும். கமலோ தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். கமலின் இப்போதைய அஜெண்டா திமுக வாக்குகளைப் பிரிப்பது. கமல் ஒரு இந்துத்துவ ஸ்லீப்பர் செல். இதில் எனக்கு சந்தேகமே இல்லை. அவர் ஒரு இஸ்லாமிய வெறுப்பாளர். அவருடைய படங்களில் அந்த இஸ்லாமிய வெறுப்பு எப்படி வெளிப்படுகிறது என்பதை நான் என் விமர்சனங்களில் அக்கு வேறு ஆணி வேறாகக் கிழித்துத் தோரணம் கட்டியிருக்கிறேன்.

கமல் ஒரு சர்வாதிகாரக் கோமாளி. துக்ளக் மாதிரி. அவர் ஆட்சிக்கு வந்தால் உண்மையில் தமிழர்களுக்கு ஒரு நல்லது நடக்கும். ஒரு கொடுங்கோல் ஆட்சியில் தமிழகம் கொஞ்ச நாள் இருந்தால்தான் இந்தத் தமிழர்களுக்குக் கொஞ்சமாவது அரசியல் சுரணயுணர்வு வரும். மின் அதிர்ச்சி கொடுக்கிறார்கள் இல்லையா, அந்த மாதிரி மின் அதிர்ச்சிதான் கமல் ஆட்சி. என்னென்ன நடக்கும் என்று கற்பனையே செய்ய முடியாது. ஐஏஎஸ் அதிகாரிகளால் எதையுமே செய்ய முடியாது. ஏனென்றால், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கே நான் சொல்லிக் கொடுப்பேன் என்ற நிலைப்பாட்டை எடுப்பார் கமல். எல்லோரும் கிராமத்துக்குச் செல்லுங்கள் என்று சொன்னவர் ஆயிற்றே. திடீரென்று தமிழ்நாட்டின் தலைநகரை கோவில்பட்டிக்கோ நாகர்கோவிலுக்கோ மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கேட்டால் கோவில்பட்டியில்தான் தமிழின் தன்னிகரில்லாத எழுத்தாளர் கோணங்கி வாழ்கிறார், நாகர்கோவிலில்தான் உலக நாயகனின் நண்பரான உலக எழுத்தாளர் ஜெயமோகன் இருக்கிறார் என்று விளக்கம் சொல்வார். சிரிக்காதீர்கள். நிச்சயமாகச் சொல்வார். துக்ளக் செய்த எல்லா காரியங்களையும் செய்வார். பள்ளிக்கூடங்களில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் பெரியார் வாழ்த்து சொல்லி விட்டுத்தான் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று கூட சட்டம் போடுவார். எதுவுமே சொல்வதற்கில்லை.

ஆனால் கமல் முதல்வராக வேண்டும் என்றுதான் மனசார விரும்புகிறேன். தமிழர்களுக்கு அவர் மட்டும்தான் லாயக்கு.